Saturday, December 10, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 10

 பந்தளம்



இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19     20    21     22     23     24     
 
   

ஐயப்பனின் ஆதாரத்தலங்களில் ஐந்தை தரிசித்த நாம் சபரிமலை தரிசனத்தை தொடங்குவதற்கு முன்னர் மகிஷி சம்ஹாரம் என்ற தனது அவதார நோக்கம் நிறைவேற மண்ணுலகில் பன்னிரண்டு வருடங்கள் பந்தள ராஜாவின் மகனாக வளர்ந்த பந்தளத்தையும் தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.

சபரிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். தான் அவதாரம் என்று காட்டாமல் மானிடராக சுவாமி நடந்து புனிதப்படுத்திய தலம் பந்தளம்.   இதன் காரணமாக சபரிமலைக்கு மண்டல பூசை – மகர விளக்கு காலங்களில் வரும் பக்தர்கள்பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் தர்ம சாஸ்தாவை  பக்தியுடன் தொழுகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ஆற்றோரத்தில் அமைந்துள்ளது. மகரவிளக்கு திருவிழா நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம் ) பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

தமிழ் நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களில் சிலர் போரில் தோல்வி அடைந்ததால் ஊரை விட்டு ஓடிவந்ததாகவும், இங்கே இருந்த நில உரிமையாளர்களில் ஒருவரான கைப்புழா தம்பனிடம் இருந்து இங்கு நிலம் வாங்கியதாகவும், ஐதீகங்கள் கூறுகின்றன. மேற்கு மலைத்தொடர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த இராஜ்ஜியங்கள் பாண்டிய அரசரின் ஆட்சியில் இருந்து வந்தது. பந்தளத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் காயம்குளம் இராஜ்ஜியத்தை கைப்பற்ற உதவினார். இந்த உதவிக்கு கைமாறாக, மார்த்தாண்ட வர்மா தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய பொழுது, பந்தளத்தின் மீது படையெடுத்து அதையும் தன சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க விரும்பவில்லை. ஒரு காலகட்டத்தில் பந்தள மகாராஜாவின் தர்பார் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா என்ற இடம் வரை பரந்து விரிந்திருந்தது.


பந்தள அரச குடும்பத்தினர் பாண்டியர்கள் என்பதால் அவர்களின் குலதெய்வம்  மதுரை மீனாக்ஷியம்மன் என்று குருசாமி அவர்கள் கூறுவார்.

பந்தளம் செங்கன்னூரில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. சபரி மலையில் இருந்து சுமார் 88 கி.மீ தூரம்.

கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களில் பந்தளம் வலியகோயிக்கல் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலும் ஒன்று. ஒரு சிலர் பந்தளத்தை ஐயனின் ஒரு ஆதாரத்தலமாகவும் கருதுகின்றனர். சுமார் 3 ஏக்கரில் அமைந்துள்ள பந்தளத்தில் அமைந்துள்ள இக்கோவிலின்  கருவறையில் புலியுடன் நிற்பது போல்  தரிசனம் அளிக்கிறார் மணிகண்டன். இக்கோவில் கேரளா முறைப்படி அமைக்கப்பட்டதாகும். இதன் கூரைகள் பித்தளை உலோகத்தால் வேயப்பட்டுள்ளது. சாஸ்தாவின் சன்னதிக்கு தென் மேற்கு திசையில் மாளிகைபுறத்தம்மனுக்கும் சன்னதி உள்ளது.

 

மகர விளக்கு, ஓணம், விஷூ ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர விருச்சிகம் மற்றும் தனுர் மாதங்களில் 41 நாட்கள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடத்தப்படுகிறது. ஐயப்ப ஜயந்தி விழா மாசி உத்திரத்தன்று கொண்டாடப்பதுகின்றது.  சபரிமலையை போல் இங்கும் சர்க்கரை பாயாசம், அரவணை, உன்னி அப்பம் ஆகியன பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மணிகண்டன் வளர்ந்த பந்தள அரண்மனை    ஒரு இரண்டு மாடி கட்டிடம் ஆகும். அவர் ஆராதித்த தெய்வங்கள், அவர் படிக்க பயன்படுத்திய ஓலைகள் ஆகியவற்றை நாம் இவ்வரண்மணையில் தரிசிக்கலாம். அங்குள்ள குளமானது ஐயப்பன் நீராடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த குளத்தின் நீர் எப்போதும் வெதுவெதுப்பாக, இதமாக இருக்கும் என்பது தனிச்சிறப்பு. அரண்மனையை தரிசித்து வெளியே வரும் போது அரச குடும்பத்தினர் திருநீறு வழங்கி ஆசிர்வதிக்கின்றனர்.

பந்தளத்திற்கு அருகில் ஐயப்ப பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இரண்டு இடங்கள் உள்ளன அவையென்னவென்று பார்ப்போம் அன்பர்களே. முதலாவது புலிகுன்னூர் (புலிகுன்று) பந்தளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் புலி குன்னூர் அமைந்திருக்கிறது. தாயின் தலைவலி தீர கானகம் சென்ற ஐயப்பன் தனது அவதார நோக்கமான மகிஷியை சம்ஹாரம் செய்த பிறகு. இந்திரன் புலியாக மாற அதன் மேல் ஆரோகணித்து, மற்ற தேவர்கள் எல்லோரும் புலிகளாக மாறினர். ஐயப்பன் சுமார் ஆயிரக்கணக்கான புலிகளுடன்  பந்தளம் வந்தார்.  பின்னர் அந்தப் புலிகளைத் திரும்பக் கொண்டு சென்று விட்டபோது, ஒரு புலி இந்திரனாகவும், ஒரு புலி வாயுவாகவும் இப்படி ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தேவனாக மாறி மறைந்த இடம்தான் இந்தப் புலிகுன்னூர். மணிகண்டன், புலியுடன் வந்து கீழே இறங்கிய போது, அவரது வலது பாதமும் புலியின் பாதமும் பதிந்திருப்பதே இந்த இடத்தின் சிறப்பு

இரண்டாவது இடம் குருநாதன் முகடி.  புலிகுன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது குருநாதன் முகடி. ஒரு குருவின் மூலமாகத்தான் சபரிமலை வரவேண்டும் என்று விதித்த குருவின் குருவான சுவாமி ஐயப்பன் குருகுலத்தில் படித்துப் பல வித்யைகளைக் கற்றுக்கொண்ட இடம். முக்கியமாக, குருநாதரின் வாய் பேச முடியாத குழந்தையைப் பேச வைத்து சாஸ்தா ஆசி வழங்கிய இடம் இதுதான்.   இவ்விடதிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் வளரும் என்பது நிச்சயம். மணிகண்டனுக்குக் கல்வி கற்றுத் தருவதற்காகவே, அந்த குருநாதர் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்தளம் செல்லும் சுவாமிகள் இவ்விரு இடங்களையும் முடிந்தால் தரிசித்து வாருங்கள்.

சுவாமியின் திருவாபரணம் : சுவாமி ஐயப்பன் சிவவிஷ்ணு அம்சமான போதிலும், இராஜவம்சத்தில் வளர்ந்திருந்தாலும் அவருக்கு இராஜவாழ்க்கை பிடிக்கவில்லை. தனது அவதார நோக்கம் முடிந்தவுடன், தனக்கு இளவரசு பட்டம் சூட்டுவது அன்னைக்கு பிடிக்கவில்லை என்பதால்   அதையே  ஒரு காரணமாகக் கொண்டு சபரிமலைக்கு சென்று தவக்கோலத்தில் அமர்ந்து விட்டார்.  ஆனாலும், தந்தையின் ஆசைக்காக வருடத்தில் ஒருநாள் மட்டும் இளவரசன் கோலம் சூட்டிக்கொள்வதாக தன் தந்தைக்கு வாக்களித்தார். அந்த சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

பந்தள மன்னர் சுவாமி  ஐயப்பனுக்கு அளித்த திருவாபரணங்கள், மகர விளக்கன்று சுவாமிக்கு சார்த்தப்படுகின்றது. அத்திருவாபரணங்கள் இவ்வரண்மனையில் பாதுகாக்கப்படுகின்றது. கார்த்திகை – மார்கழி மாதங்களில் பக்தர்கள் அரண்மணைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் திருவாபரணங்களை தரிசிக்கலாம்.

திருவாபரணங்கள் மொத்தம் மூன்று பெட்டிகளில் சபரிமலைக்கு கொண்டுவரப்பதுகின்றன. அவையாவன

1. திருவாபரணப் பெட்டி

2. வெள்ளிப் பெட்டி

3. கொடிப் பெட்டி

திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.

திருவாபரணப்பெட்டி - பெட்டி 1

ஐயப்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளன.

- திருமுகம் - (சாஸ்தாவின் முகக் கவசம்)

- (மீசையுடன் ராஜ கோலத்தில் காணப்படும் முகம்)

- ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி-திருவாச்சி)

- வலிய சுரிகை (பெரிய கத்தி)

- செறிய சுரிகை (சிறிய கத்தி)

- யானை - யானை விக்ரஹம் 2

- கடுவாய் - புலி விக்ரஹம் 1

- வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு

- பூர்ணா - புஷ்கலா (நிற்கும் கோலத்தில் தேவியர் உருவம்)

- பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)

- நவரத்தின மோதிரம்

- சரப்பளி மாலை

- வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)

- மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)

- எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

 

திருவாபரணப் பெட்டிகள்

வெள்ளிபெட்டி (பெட்டி 2)

வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இப்பெட்டியில்,

தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.

இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்.

 கொடிப்பெட்டி (பெட்டி 3)

மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில், யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள் உள்ளன.

கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.

இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல.

திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.

மகர விளக்கிற்கு அடுத்த இரு நாட்கள் மாலையில் சுவாமியை திருவாபரணாங்களுடன் தரிசிக்கலாமாம்.

பந்தள மன்னர் ராஜசேகரன்ஐயப்பனுக்காக சுத்த தங்கத்தினாலான ஆபரணங்களை செய்து வைத்திருந்த ஆபரணங்கள் இவை. ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லும்போது ஐயப்பனின் தந்தை ஸ்தானத்தில் பந்தளம் ராஜக்குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாக மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்மூன்று பெட்டிகளில் இருக்கும் இவ்வாபரணங்களை  தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் மட்டுமே சபரிமலைக்கு சுமந்து செல்வர். வாழ்நாளில் ஒருமுறையாவது ஐயப்பனின் ஆபரணங்களை பார்த்துவிடமாட்டோமா என பக்தர்களை ஏங்கவைக்கும் அந்த ஆபரணங்களை சுமந்து செல்வதை அவர்கள் பெரும்  பாக்கியமாக கருதுகின்றனர். பந்தளத்திலிருந்து மலைக்கு செல்ல மூன்று நாட்களாகும். அவர்கள் அந்த ஆபரணப்பெட்டிகளை மூன்று நாட்களும் தலையில் சுமந்தே செல்வார்கள். மகரஜோதிக்காக பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணப்பெட்டி ஊர்வலம்  புறப்படும் நேரத்திலிருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் நேரம் வரை மட்டும் வானத்தில் ஒரு கருடன் தோன்றி, திருவாபரணம் செல்லும் பாதையில் பறந்தபடி இருக்கும். இது இன்றுவரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வு.

பந்தளம் இராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்தான் ஐயப்பன். ஆனாலும், பந்தள இராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரிமலைக்கு  ஆண்டுக்கு ஒருமுறை மகரஜோதியன்றைக்கு  மட்டுமே செல்வார்கள். காரணம், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என ஐயப்பன் தன் குடும்பத்தை கேட்டுக்கொண்டதாக வரலாறு.

தங்க அங்கி

மகர விளக்கன்று திருவாபரணம் சார்த்திகொள்ளும் சுவாமி ஐயப்பன் மண்டல பூசையன்று தங்க அங்கி சார்த்திக் கொள்கிறார். இந்த 453 பவுன் (3624 கிராம்) தங்க அங்கியை சபரிமலைக்கு திருவிதாங்கூா் அரச பரம்பரையில் வந்த ஐயப்பன் மீது மிகுந்த பக்தியும் பாசமும் கொண்ட  சித்திரை  திருநாள் மஹாராஜவால் கடந்த 1970-களில் காணிக்கையாக வழங்கினார். 

 இந்தத் தங்க அங்கி ஆரண்முலாவில் உள்ள பிரசித்தி பெற்ற பாா்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டு, ஆண்டு தோறும் மண்டல பூசைக்காக  சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். பக்தா்களின்சுவாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துக்கு மத்தியில், தங்க அங்கி  சபரி மலை சன்னிதானம் போன்று வடிவமைக்கப்பட்ட  இயந்திர தேரில் எடுத்துச் செல்லப்படுகின்றது.  வழியில் ஒவ்வொரு கோயிலிலும் பக்தா்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, மண்டல பூசைக்கு முந்தைய நாள்  சபரிமலையை தங்க அங்கி பம்பயை அடைகின்றது.  பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் தலையில் சுமந்து செல்லப்படுகின்றது.  அன்றும், மறு நாள் மண்டல பூசையன்றும் சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதணை நடை பெறுகின்றது.

இத்தங்க அங்கியை சுவாமிக்கு சமர்பித்த  சித்திரை திருநாள் மஹாராஜாவின் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சித்திரையன்று சபரிமலை நடை திறந்து , பந்தளம் அரண்மனையிலிருந்து வரும் நெய்யினால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவ்விழா "சித்திரை ஆட்டத்திருநாள்" என்று அழைக்கப்படுகின்றது. ஆட்டம் என்பது இங்கே கொண்டாட்டத்தை குறிக்கின்றது.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: