Thursday, December 15, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 12

                                                             ஐயப்ப விரதம் 






இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    20    21     22     23     24     
 
டுத்து நாம் தரிசிக்கவேண்டிய தலம் எருமேலி ஆகும். எருமேலியிலிருந்து  பெரிய பாதை துவங்குகின்றது. ஐயப்பன் மகிஷியைக் கொன்று  தேவர்களின் குறை தீர்த்தபின் ஐயன் அவள் உடல் மேல் நடனமாடிய தலம்.  ஐயப்பனின் முதல் கோட்டை என்பார்கள். தர்ம சாஸ்தாவின் இரண்டு ஆலயங்களும், ஐயப்பனின் தோழரான வாவர் சுவாமியின் மசூதியும் எருமேலியில் அமைந்துள்ளன.  எருமேலி சாஸ்தாவை தரிசிப்பதற்கு முன்,  ஐயப்ப சுவாமிக்கு மாலை அணியும் போது கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகளைப் பற்றி முதலில் காணலாம் அன்பர்களே பின் பெரிய பாதை யாத்திரையை ஆரம்பிக்கலாம்.  

நாம் எல்லோரும் உய்ய ஐயப்பசுவாமி தானே தவத்தில் அமர்ந்திருப்பதாலும்  சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள் தலையில் இருமுடிக் கட்டு அவசியம் என்பதாலும் ஐயப்பசுவாமியின் விரதம் கடுமையானது. நம்மிடம் இருக்கும் தீய குணத்தை அழித்து நல்ல எண்ணங்களை விதைத்து ஒழுக்கமான வாழ்வுக்கு வழிவகுப்பதே ஐயப்பன் விரதம். மனித வாழ்க்கையை நெறிமுறைகளோடும் மனத் தூய்மையோடும் வாழ வழிகாட்டியாக இருக்கிறது கலியுக தெய்வமாக விளங்கும் ஐயன் ஐயப்பனின் விரத முறை. ஒரு மண்டலம் விரதத்தின்போது மனிதனின் மனம் பக்குவப்பட்டிருக்கும். விடியற்காலையில் நீராடுதலில் தொடங்கும் ஒழுக்கம், புலால் உண்ணாமல், பொய் பேசாமல் எல்லாரிடத்திலும் அன்புடன் பழகுவதில் மேன்மையடையும் சபரிமலை யாத்திரைப் பயணம்.

மாலை அணியும் நாள்:  சபரி மலைக்கு செல்ல விழையும் அன்பர்கள் முதலில் மாலை அணிய வேண்டும்.கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள் கிழமை பார்க்க வேண்டியதில்லை. அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். குறைந்தது 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டியது அவசியம்.  41 நாள் விரதத்திற்கு முன்னர் சபரிமலை செல்ல நேர்ந்தால் ஊர் திரும்பிய பின் மகர விளக்கு முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். பெண்கள் என்றால் 10 வயதிற்கும் குறைவானவர்கள் அல்லது 50 வயதினருக்கு அதிகமானவர்கள் மட்டுமே மாலை அணியலாம்.

ஐயப்பன் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, காயம் (எண்ணம், சொல், செயல்) தூய்மையுடன் இருக்க வேண்டும். இதை திரிகரண சுத்தி என்பர்.   






 மாலை அணியும் முறை:  108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது 54  மணிகள் ருத்திராட்ச மாலையை ஐயப்ப சுவாமியின் டாலருடன் சேர்த்து அணிய வேண்டும். துணை மாலை ஒன்றையும் அணிந்து கொள்ளலாம்.  தாய் தந்தையர் இருந்தால் அவர்கள் கையால் மாலை அணிந்து கொள்வது உத்தமம். இல்லாதவர்கள் பல முறை சபரிமலை சென்று வந்த  குருசாமி கையால் மாலை அணிந்து கொள்ளலாம். இல்லையென்றால் குருசாமியின் அனுமதி பெற்று கொண்டு கோவிலிலோ, விளக்கின் முன்போ அல்லது குருநாதரை வணங்கி அணிய வேண்டும்.

 கடை பிடிக்க வேண்டிய விரதங்கள்: (1) நாள் தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் நீராடி பஜனை,  வழிபாடு செய்ய வேண்டும். (2) பிரம்மச்சரிய விரதத்தை கட்டுப்பாடாக கடை பிடிக்க வேண்டும். (3) காலை மாலை 108 சரணங்கள் துளசி, நாட்டுச் சக்கரை, பால் இவற்றுள் ஒன்றைச் சிறிது வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.


 கன்னி சுவாமிகள் அதாவது முதல் தடவை சபரி மலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கருப்பு உடைகளை அணிய வேண்டும். பழமக்கார சுவாமிகள் நீல நிற ஆடையும், காவி உடையும் அணியலாம். 

மாலை அணிந்த பின் கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக் கூடாது. அனைவருடனும் அன்புடன் பழக வேண்டும், இயற்கையின் படைப்புகள் அனைத்தையுமே இறைவனின் சொரூபமாக நினைக்க வேண்டும். மாலை அணிந்த சுவாமிகள் அனைவரையும் ஐயப்பனாகவே கருதவேண்டும், பேசும் போது சுவாமி சரணம் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.  பார்க்கும் பெண்களை மாளிகைப்புரத்து அம்மனாகவே பாவிக்க வேண்டும்.




தவிர்க்க வேண்டிய பொருட்கள், காரியங்கள்:

 (1) குடைப்பிடிப்பது (2) காலணிகள் உபயோகிப்பது (3) சவரம் செய்து கொள்வது, நகம் வெட்டுவது (4) புலால் உண்பது, மது அருந்துவது (5) பொய்  களவு, சூதாடுதல், போதை வஸ்துகள் கூடாது.

பகல் நேரத்தில் உறங்கக்  கூடாது. இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.

துக்க காரியங்களில் ஜயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது அப்படி கலந்த கொள்ள நேரிட்டால்தான் அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அவ்வருடம் மலைக்கு செல்லக்கூடாது. குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது.


கன்னிசாமிகள் தங்களின் வசதிற்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி  ஐயப்பன்மார்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.     

ஆதி காலத்தில் முழுவதும் கரடு முரடான காட்டுப் பாதையில் மிகவும் கடினமான யாத்திரை  குளிர்ச்சி மிக்க பனி காலத்தில், நினைத்த இடத்தில் படுத்து தூங்கி செல்ல வேண்டியிருந்ததாலும், காட்டு விலங்குகளின்  அபாயம் கருதியும், மன அடக்கத்திற்காகவும்  விரதத்தில் கடுமையான இவ்விதிமுறைகள் காட்டப்பட்டுள்ளன. 





இரு முடி கட்டும் முறைகள்:

இரு முடிக்கட்டும் பூஜையை வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ நடத்த வேண்டும்.  இரண்டு அறை கொண்ட நீளமான பை ஒன்று செய்த அதில் பூஜை சாமான்கள், கற்பூரம் அபிஷேக, நைவேத்திய சாமான்கள், காணிக்கைப் பணம் இவைகளை முன் கட்டிலும் யாத்திரையின் போது தேவையான உணவுப் பண்டங்கள் பின் கட்டிலும் வைத்துக் கொண்டு பையைத் தலையில் எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் இரு முடி எனப்படும். முன்னால் இருப்பது புண்ணிய முடி, பின்னால் இருப்பது பாவமுடி என்பது ஐதீகம். 

ஐயப்பனின் அபிஷேகத்திற்காக  பசுவின் நெய்யை உருக்கி ஒரு தேங்காயின் கண்ணைத்திறந்து இளநீரை எடுத்து விட்டு அதற்குள் காய்ச்சிய நெய்யை நிரப்பிக் கார்க்கினால் இறுக மூட வேண்டும்.



யாத்திரை செல்லும் முறை:
சாஸ்தா பூஜை அன்னதானம் செய்து யாத்திரை புறப்பட வேண்டும். இரு முடிச் சுமந்து வீட்டை விட்டுப் புறப்படும் போது எவரிடமும் விடை பெறக் கூடாது. திரும்பிக் கூடப் பார்ப்பது கூடாது. அனைத்து பொறுப்புகளையும் ஐயப்பன் மேல் போட்டு விட்டு புறப்படவேண்டும்.  வீட்டில் சிதறு காய் உடைத்து கருப்பன் வீட்டில் உள்ளோரை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டி புறப்பட வேண்டும்.

கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்டதிலிருந்து சன்னிதானம் அடையும் வரை தானே தலையிலிருந்து இரு முடியை இறக்கி வைக்கவோ ஏற்றி கொள்ளவோ கூடாது.  குருநாதர் மூலமே இறக்க வேண்டும். ஏற்ற வேண்டும். எருமேலியில் பேட்டை துள்ள வேண்டும், பம்பை நதிக்கரையில் சக்தி பூசை செய்ய வேண்டும். பம்பையில் நீராடும் போது மறைந்த தம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடனளை செய்ய வேண்டும்.   


யாத்திரை முடித்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் அருள் பிரசாத கட்டினைத் தலையில் எந்தியபடியே வீட்டு வாசல் படியில் விடலைத் தேங்காய் உடைத்து பின்னர் இல்லத்தினுள் செல்ல வேண்டும். 

வீட்டினுள் பூஜை அறையில் பூஜை செய்து கட்டினைப் பிரித்து பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும். 

யாத்திரை இனிய முறையில் நிறைவு பெற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் மந்திரத்தை கூறி கழற்றி சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு முன்னால் வைத்து தீபாரதணை காட்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நடுவழியில் எங்கும் மாலைகளைக் கழற்றக்கூடாது. வரும் வருடங்களில் அதே மாலைகளை பயன் படுத்தவேண்டும். 


இவ்வளவு கட்டுப்பாடுகள் எதற்காக என்றால் யாத்திரையின் நோக்கம் ஜீவாத்மாவான பக்தர்களும் பரமாத்மாவான பகவானும் ஒன்றாக ஆகவே, எனவே பக்தனின் மனமும், உடலும் பதப்படவேண்டும், தூய்மையடைய வேண்டும், மேலும் கடுமையான காடு, மலை  பயணத்திற்கு மனமும், உடலும் தயாராக வேண்டும் அதற்காகவே இந்நியமங்கள் என்பார் குருசாமி. விரத காலத்தில் அனவரதமும் ஐயனை மனதில் நினைத்துக்கொண்டிருப்பது உத்தமம்.  


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: