தெளிவு
குருவின் திருமேனி காண்டல்
தெளிவு
குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு
குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே – என்கிறார் திருமூலர். ஐயப்ப வழிபாட்டில் குருஸ்வாமிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு , அது என்னவென்றால் குருவின் குருவான ஐயப்பனிடம் நம்மை அழைத்துச்செல்பவர் குருஸ்வாமிதான்.
அருணகிரிநாதரும் கந்தனிடம் தான் பெற்ற அநுபூதியைப் பாடும் போது குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றுதானே அழைக்கின்றார். எனவே இப்பதிவில் குருவின் சில பெருமைகளைப் பற்றி காணலாம் அன்பர்களே.
அனைவருக்கும்
சுகம் வேண்டும், துக்கம் வேண்டாம் என்ற எண்ணமிருக்கின்றது. அதுவும் அந்த சுகம் அழியாததாய்
இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த அழியாத சுகத்தைதன் சாஸ்திரங்கள் மோட்சமென்று
கூறுகின்றன. இவ்வாறு மோட்சம் பெற விழையும் முமுக்ஷுவானவன் ஒரு சத்குருவை அடைந்து, அவருக்கு
தன்னிடத்தில் கருணையுண்டாகும்படி நடந்து கொண்டு அவருடைய அநுகிரகத்திற்கு பாத்திரனானவனுக்கே
உண்டாகும் என்பது சாஸ்திர சித்தாந்தமாகும். குருவில்லாமல் எவனும் எந்த வித்தையையும்
முறையாக கற்றுக்கொள்ள முடியாது.
எங்ஙனம்
மேகமானது கடல் நீரை அருந்தி, அதை குடிநீராக மாற்றி பொழிகின்றதோ அவ்வாறு குருவானவர்
சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்து சிஷ்யர்களுக்கு தகுதியானவற்றை உபதேசிது முடிவில்
மேலான நிலைக்கு கொண்டு வருகின்றனர்.
குருவிற்கு ஆசார்யன், ஆராத்யன், தேசிகன், ஸ்வாமி, மஹேஸ்வரன், ஸ்ரீநாதன், தேவன், பட்டாரகன், பிரபு, யோகி, ஸம்யமீ, அவதூதர் என்று பல பெயர்கள் உண்டு.
அவற்றுள் குரு என்பதன் பொருள் என்று காணலாம். ‘க3’ என்பது அஞ்ஞானம் . ‘ரு’ என்பது அதனை ஒழிப்பது. அதாவது அஞ்ஞானத்தை ஒழித்து தத்துவ ஞானத்தை
அருள்பவர் குரு.
குரு
என்னும் நாமத்திற்கு இன்னொரு பொருளும் உள்ளது.
‘கு3’ என்பது தத்துவ ஞானத்தை அருளல். ‘ரு’ என்பது அத்தத்துவஞானம் அநுபவத்திற்குவரும்படி
செய்தல் ஆகும்.
குருவின் குருவே சரணம் ஐயப்பா
நமது
சனாதன தர்மத்தில் ஆதி காலத்தில் இருந்தே குரு சிஷ்ய பரம்பரை இருந்துள்ளது. அவதாரங்களான இராமர், கிருஷ்ணர் ஆகியோரும் குருகுலம்
சென்று பயின்றனர். மணிகண்ட அவதாரத்தில் ஐயப்பனும்
குருகுலம் சென்றார்.
குருகுலத்தில் மணிகண்டன் மிகுந்த ஆற்றலும் அறிவும் உடையவராகக்
காணப்பட்டார். கலையிலும் சாஸ்திரத்திலும் சிறந்து விளங்கினார். அவருடைய அமானுஷ்ய
ஆற்றலையும் அறிவையும் கண்டு அவனது குருவே அதிசயித்துப்போனார். பந்தள நாட்டில்
அமைதியும் வளமும் செழித்தோங்கியது. “ஐயப்பன் ஒரு சாதாரணக் குழந்தை அல்ல. அவர் தெய்வத்தன்மை வாய்ந்தவர்” என்று ஐயப்பனின்
குருதேவர் அரசனுக்கு எடுத்துரைத்தார். தனது படிப்பும் பயிற்சியும் நிறைவடைந்த பின்
மணிகண்டன் குருதட்சிணை வழங்கி, ஆசி பெறுவதற்காகத் தன் குருவிடம் சென்றார்.
மணிகண்டன்
ஆசி பெற குருவின் பக்கத்தில் சென்றதும், குரு அவரைப் பற்றி ஊகித்து அறிந்தவற்றை
எடுத்துச் சொன்னார். அவரிடம் தெய்வீகத்தன்மையும் அமானுஷ்ய ஆற்றலும் இருப்பதாகக்
கூறினார். பின்னர் மணிகண்டனை நோக்கி, ஊமையும் குருடுமாக இருக்கின்ற தன் மகனுக்குப்
பேச்சாற்றலும் பார்வையும் அருளுமாறு வேண்டினார். மணிகண்டன் தனது இரு கைகளையும்
குருவின் மகன்மீது வைத்தான். என்ன ஆச்சரியம்! அடுத்த கணமே குருவின் மகனுக்குக்
கண்பார்வை கிடைத்தது, பேசவும் முடிந்தது. பின்னர் மணிகண்டன் குருவை நோக்கி, ”நடந்த
இந்த அற்புதத்தை எவரிடமும் சொல்லக்கூடாது” என்று வேண்டிக்கொண்டு, அரண்மனைக்குத்
திரும்பினார். ஐயப்பனே குருவிற்கு எவ்வாறு
மதிப்பு தர வேண்டுமென்று தானே நடந்து காட்டியுள்ளார்.
ஒவ்வொரு சுவாமியும் சபரி மலை யாத்திரையின் போது எட்டுத் தடவை நமஸ்காரம் செய்து
தட்சணை அளிக்க வேண்டும், அவையாவன
1.
முதல் தடவை யாத்திரைக்கு அழைத்து செல்கிறேன் என்று
சம்மதம் அளிக்கும் போது.
2.
குருசுவாமியின் திருக்கரங்களினால் மாலை அணிந்து கொள்ளும் போது.
3.
இருமுடி
கட்டி யாத்திரையை துவங்கும் போது.
4. எருமேலியில்
பேட்டைதுள்ளி முடித்து, எருமேலி தோட்டில் குளித்து, கிராத சாஸ்தாவை வணங்கி பின் பெருவழி
பாதையில் நடக்க ஆரம்பிக்கும் போது.
5.
அழுதா
நதியில் குளித்து அழுதை மலை ஏறும் போது.
6.
பெரியானை
வட்டத்தில் பம்பையில் குளித்த பிறகு நீலி மலை ஏறும் போது.
7.
சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி ஏறும் போது.
8. பகவானை
தரிசித்து நெய்யபிஷேகம் செய்து பிரசாதம் குருசுவாமியிடம் இருந்து பெறும் போது.
இவ்வாறு
யாத்திரையின் போது குருசுவாமியை எப்போதும் வணங்க வேண்டும்.
இனி அடியேனின் குருசுவாமியிடம் கண்டு அதிசியித்த சில அற்புத குணங்கள். அனைவரையும் அழைத்துச் செல்ல விருப்பம். விரதத்தில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது என்று கூறுவார், அதே சமயம் புதிதாக திருமணம் ஆனவர்கள் இரண்டு வருடங்கள் மாலை போட வேண்டாம் குடும்பத்தை கவனியுங்கள் என்பார். மண்டல காலத்தில் 41 நாட்களாவது மாலை போட்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வார். கன்னி சுவாமிகளிடம் கிறிஸ்துமஸ் சமயம், யாராவது கேக் கொடுத்தாலும் சாப்பிட வேண்டாம் கவனமாக இருங்கள் என்று கூறுவார். நாம் மட்டும் மாலை போடவில்லை வீட்டுக்கார அம்மாவையும் சுத்த பத்தமாக இருக்கச் சொல்லுங்கள் என்று சரியான வழி காட்டுவார்.
அடியேன்
சிவ பக்தன் என்பதால் ஐயப்பன் வடிவம் சிவலிங்கம்தான், குந்தளமிட்ட கால் பிரம்ம பாகம்,
வல திருக்கரத்தில் சின் முத்திரை சிவ அம்சம், நீட்டிய இடக்கை ஆவுடையின் தாரை. மேற்
பகுதி லிங்கம். எனவே ஐயப்ப தரிசனமும் சிவ தரிசனம் தான் என்று உணர்த்தியவர்.
மந்திரம்
சொல்லித்தான் அர்சிக்க தேவையில்லை. 108 முறை சுவாமி சரணம் என்று கோஷம் இட்டாலே போதும் என்பார்.
தமிழகத்திலும்,
கேரளத்திலும் உள்ள அனைத்து கோவில்களையும், வழிகளையும் நன்றாக அறிந்து வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த
பட்சம் பத்து கோவில்களுக்காவது தரிசனம் செய்து
வைப்பார்.
பெருவழியில்
செல்லும் போது எப்போதும் அனைத்து சுவாமிகளுக்கும் பின்னேதான் வருவார். கொச்சு சுவாமிகளுக்கு
கால் வலிக்கும் என்பதற்காக, திருநீறு பூசி அவர்களின் கால்களை பிடித்து விடுவார்.
யாருக்காவது
இடையில் முடியாமல் போனால் காளைக் கட்டியில் இருந்தோ அல்லது அழுதையில் இருந்தோ சாலை
வழியாக பம்பை செல்லவும் அனுமதிப்பார்.
கொச்சு கன்னி சாமிகள் முதல் முறை கூட்ட நெரிசலினால் சரியாக பகவானை தரிசனம் செய்ய முடியாமல் போனாலும் அவர்களிடம் சரியாக தரிசனம் கிடைத்ததா? என்று வினவி இல்லையென்றால் அவர்களை அழைத்துச் சென்று காவலர்களிடம் அனுமதி பெற்று சுவாமியின் தரிசனம் செய்து வைப்பார்.
பகவான்
தரிசனம் முடித்து, நெய்யபிஷேகம் செய்து சபரி மலையை விட்டு புறப்படும் போது அனைத்து
சுவாமிகளையும் வணங்கி தத்வமஸி என்ற மஹா வாக்கியத்தை நிர்ணயம் செய்வார்.
பொதுவாக பருந்துப்பாறையில் இருந்துதான் மகரஜோதி தரிசனத்திற்காக நிற்போம், பனியினால் பல சமயம் ஜோதி தரிசனம் கிட்டாது, சுவாமி கவலைப் படவேண்டாம், ஊனக்கண்ணால் காண்பதை விட , லட்சக்கணக்கான ஐயப்ப பக் தர்கள் ஒரே சமயத்தில் செய்கின்ற சரண கோஷத்தின் அதிர்வலைகளினால் உள்ளத்தில் ஜோதி ரூபத்தில் பகவான் ஒளிர்வார் அதை உணருங்கள் என்று கூறி மகர நட்சத்திரத்தின் தரிசனம் செய்து வைப்பார். பின்னர் குமுளி சென்று சென்னை திரும்புவோம்.
அவருடன் யாத்திரை செய்வதே ஒரு இனிய அனுபவம்.
No comments:
Post a Comment