Sunday, December 4, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 8



                                                     ஆரியங்காவு அய்யன்



மகிஷி சம்ஹாரா மதகஜ வாகன
சரணம் சரணம் ஐயப்பா



இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    20    21     22     23     24  

ஐயப்ப சுவாமியின் ஆதாரத்தலங்களில் மணிபூரகத்தலமான ஆரியங்காவு  தலத்தை இப்பதிவில் தரிசிக்கலாம்.  கேரள மாநிலத்தில் ,  கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு  எனும் சிற்றூரில் உள்ள இக்கோவில், கொல்லத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது. திருவனந்தபுரம் -  தென்காசி  நெடுஞ்சாலையில்  இத்தலம் அமைந்துள்ளது. . தமிழக கேரள எல்லைக்கு அருகில் உள்ள  செங்கோட்டையிலிருந்து  சுமார் 23 கிமீ தூரத்தில் உள்ளது.

பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவியிருக்கிறார்.

ஐயன் என்றால் உயர்ந்தவர் என்று பொருள் அது போலவே ஆரியன்  என்றாலும் உயர்ந்தவர் என்று பொருள். காவு என்றால் சோலை என்று பொருள்.  எனவே ஆரியங்காவு என்றால் உயர்ந்தவன் வசிக்கும் சோலை ஆகும். இத்தலத்தில் ஐயன் இல்லறவசியாக புஷ்கலை என்ற  மனைவியுடன் யானை மேல் ஒரு காலை மடக்கி  ஒய்யாரமாக  அரசன் போன்று அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். எனவே ஐயன்  மதகஜ ராஜ ரூபன் என்றழைக்கப்படுகிறார்.  இவருக்கு வலப்பக்கத்தில் லிங்க வடிவில்  சிவபெருமானும், இடப்பக்கத்தில் புஷ்கலா தேவியும் அருள்பாலிக்கின்றார். இடப்புறம் காவல் தெய்வமான கருப்பசாமியும், கருப்பாயி அம்மையும் அருள் பாலிக்கின்றனர். .இண்டிலியப்பனுக்கு தனி சன்னதி உள்ளது. 




ஐயன் புஷ்கலையை மணந்த வரலாறு: 

மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவர். அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப்படி தந்தையும், மகளும் கோயிலில் தங்குகின்றனர். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள்.  
மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல புஷ்கலை மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாக பிடிவாதமாக கூறுகின்றாள், தந்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்கவில்லை. நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லினாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின்  மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளை கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.
ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த வணிகன் மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான் அந்த வேடன்.
அவனுக்குப் பரிசாக வணிகர் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, "நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான்.
இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய் ! வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார்.
"உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும் போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.   
மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்பும்போது, ஆரியங்காவு கோயிலை அடைகிறார். மகள் அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார்.
தூக்கத்தில்  ஐயப்பன் கனவில் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி.
காலையில் கோயிலை திறந்து ஐயன் சந்நிதியை பார்த்தார்கள். என்ன அதிசயம்! காட்டில் வேடனுக்கு வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் காணப்பட்டது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.
கோயில் சாலையை விட்டு கீழே அமைந்துள்ளது. தமிழக  கேரள எல்லையில் உள்ளதாலோ என்னவோ ஆலயமும், பூஜை முறைகளும் இரண்டும் கலந்தவாறே உள்ளது.  ஐயனின் ஸ்ரீகோவில்(கருவறை) கேரள பாணியில்  உள்ளது எதிரே நமஸ்கார மண்டபத்தில்  ஐயனின் குதிரை மற்றும் யானை வாகனங்களை தரிசிகின்றோம். மஹா மண்டபம் நீளமாக அமைந்துள்ளது. கருவறைக்கு பின் புறம் தமிழக பாணியில் கற்றூண்களுடன் திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. சபரிமலையைப் போல இக்கோவிலின் உள்ளே வந்து 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் உள்ளே வந்து தரிசிக்க அனுமதி இல்லை.


திருக்கல்யாண மண்டபம் 


அடியோங்கள் சென்ற சமயம்  மாலை நேரம் ஐயன் அருமையாக விபூதி அலங்காரத்தில் தரிசனம் கொடுத்ருளினார். ஐயனின் ஜடாமுடி அப்படியே தழைய தழைய தொங்குவதை   அருமையாக தரிசித்தோம். தீபாராதனையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. தினசரி பூசைகள் கேரள முறையில் நடைபெறுகின்றது. ஆனால் உற்சவங்கள் தமிழக முறையில் நடைபெறுகின்றன. 

 மண்டல பூசை காலத்தில் அதாவது மார்கழி மாதத்தில் ஐயனின் திருக்கல்யாண உற்சவம்  பத்து நாள் உற்சவமாக சிறப்பாக  நடைபெறுகின்றது. முதல் நாள் கொடியேற்றம், தினமும் சிறப்பு தீபாராதனை மற்றும் சப்பர பவனி நடைபெறுகின்றது. திருகல்யாணத்திற்கு  . பெண் வீட்டார் சார்பில் மதுரையை சார்ந்த சௌராஷ்டிர இனத்தவர்கள், மாம்பழத்துறை பகவதி ஆலயத்தில் இருந்து அம்பாளை ஜோதி வடிவாக ஆரியங்காவிற்கு மேளதாளம் முழங்க அழைத்துச் செல்கின்றனர்.  ஜோதி வடிவமான புஷ்கலா  அம்பாளை கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபடுகின்றனர். மறு நாள் இரவு  பாண்டி முடிப்பு  என்னும்   நிச்சயதார்த்தம் நடைபெறுகின்றது அன்று  தாலிப்பொலி ஊர்வலத்தில் ( மாப்பிளை அழைப்பு) ஐயன்   இராஜ அலங்காரத்தில் பவனி வந்தருளுகின்றார். 

திருக்கல்யாணக் கோலம்
திருக்கல்யாணத்தன்று காலையில் ஊஞ்சல் உற்சவம், வஸ்திரப் பொங்கல் படைப்பு, மாலை திருவிளக்கு பூசை, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நள்ளிரவு திருக்கல்யாணம், ஐயனும் அம்பாளும் திருவீதி உலா வந்தருளுகிறனர். மறு நாள் கலச பூசை, களாபிஷேகம் அலங்கார  தீபாரதனையுடன்  மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகின்றது.  சமயம் கிடைத்தால் ஐயனை சென்று தரிசித்து விட்டு வாருங்கள். 
மாம்பழத்துறை பகவதி வைபவம்:

ஆரியங்காவு திருக்கோயிலுக்கு தென்மேற்கில் சுமார் 20 கி.மீ தொலைவில் "கொறவந்தாவளம்"  என்ற ரப்பர் எஸ்டேட் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், மாம்பழத்துறை என்னும் சிறு கிராமத்தில் மாம்பழத்துறை பகவதி ஆலயம்  அமைந்துள்ளது. "மாம்பழத்தர ஸ்ரீ பகவதி க்ஷேத்திரம்" என்று மலையாள மக்களால் இத்திருக்கோவில் அழைக்கப்படுகிறது.

ஆரியங்காவில் பகவான், தன்மீது பிரேமை கொண்ட சௌராஷ்டிரா குல தேவியான ஸ்ரீ புஷ்கலா தேவிக்கு அவரது ஆத்ம பக்தியை மெச்சி அவருக்கு ஆன்ம விடுதலை வழங்கி, அவருக்கு முக்தி கொடுத்து, அவரது விருப்பப்படி, அவரை ஆரியங்காவில் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் .

அதன்பிறகு, பரசுராமரால் தமக்கு விதிக்கப்பட்ட பணியான காவல் பணிக்கு இந்த "கிரகஸ்தாஸ்ரம" நிலையால் பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேவிக்கென்று தனியாக ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்த பகவான் விரும்புகிறார். அப்படி அவர் தேர்வு செய்த தலம் தான் இந்த மாம்பழத்துறை ஆகும். அது தேவியின் மனம் கவர்ந்த இடமாக அமைந்தது.

ஆரியங்காவு தந்திரியை விளித்து பகவான் தனது நிலையை உணர்த்தி, புஷ்கலா தேவியை மாம்பழத்துறைக்கு அழைத்துச் சென்று கோவில் கொள்ள வைத்து , ஒவ்வொரு ஆண்டும், தான் தேவிக்கு முக்தியளித்த தினத்தை திருக்கல்யாண தினமாக கொண்டாட வேண்டியது. அதற்கு தாங்கள் உடன்பாடாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.



ஐயனின் ஆணைப்படி தந்திரி, ஆரியன்காவில் திருக்கல்யாண உற்ஸவம் முடிந்த பின் , புஷ்கலா தேவியை அழைத்துக்கொண்டு பகவானின் கல்யாண குணங்களைப் பற்றி கூறிக்கொண்டும், பாடிக் கொண்டும் அடர்ந்த வனத்திற்குள் அழைத்துச் செல்கிறார்.அப்படியே மாம்பழத்துறைக்கு வந்து சேர்கின்றனர்.

மாம்பழத்துறையின் ரம்மியமான சூழ்நிலை, மலர்களும் கனி மலர்களும் நிறைந்த சோலையும், அருவியும், நதியும்,மதுர மணம் வீசும் பூமியில், ஈஸ்வர சைதன்யம் நிறைந்த அத்தலத்தில் புஷ்கலா தேவியானவள் மனம் லயித்து மயங்கி நின்றாள்.

தேவிக்கு மாம்பழத்துறை தலம் மிகவும் பிடித்து விட்டதை உணர்ந்த தந்திரி, புஷ்கலையை அங்கிருந்த மண்டபம் ஒன்றில் அடைத்து விடுகிறார். இதனால் திகைத்த புஷ்கலா தேவி , தந்திரியிடம் கடுங்கோபம் கொண்டு, கதவை திறக்குமாறு கூறியும் , தந்திரி கதவை திறக்க மறுத்து விடுகிறார்.

அந்த நிலையில் புஷ்கலையிடம், பகவான் தம்மிடம் கூறிய அனைத்து விபரங்களை கூறுகிறார்."புஷ்கலை,நீ சினம் கொள்ள வேண்டாம்.ஐயனின் காவல் பணிக்கு உன்னால் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான்,நீ இங்கு இருக்கிறாய்.நீயே ஞானமும் போகமுமாக மலர்ந்து நிற்கிறாய்... ஞான ஸ்வரூபி நீ ...

ஐயன் உனக்கு முக்தியளித்து உன்னை தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்ட தினத்தை திருக்கல்யாண உற்ஸவ தினமாக கொண்டாடப்படும். அந்த திருமணமும், ஐயனின் வாக்குப்படி எனது முன்னிலையில் (தந்திரி) எனது சாட்சியாக ஆரியன்காவில் ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவமாக நடைபெறும்.

உன் சௌராஷ்டிரா குல மக்கள் அனைவரும் அன்று வருவார்கள். நீ சினம் கொள்ளாதே.அமைதி கொள். இது உறுதி" என்று தேவியிடம் சத்தியம் வாக்கு செய்கிறார் தந்திரி.

(தந்திரியின் சத்திய வாக்குப்படியே இன்றைக்கும் ஆரியன்காவு ஸ்ரீ தர்மசாஸ்தா-ஸ்ரீ புஷ்கலாதேவியின்திருக்கல்யாண வைபவம், கோகுலத்து மடம் தந்திரி, மேல்சாந்தி ஆகியோரின் முன்னிலையிலேயே நடைபெறுகிறது.)

தந்திரியின் சத்திய வாக்கிற்கு கட்டுப்பட்டு தேவியானவள் அமைதி கொண்டு சாந்தம் அடைகிறாள்.தந்திரியும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, சிறிது பொழுது கழிந்த பின் தந்திரி மண்டபத்தின் கதவை திறந்த போது, புஷ்கலை அர்ச்சாவதார ரூபத்தில் காட்சி அளித்தார். தேவியின் முக தோற்றத்தில் ஒரு தைரியமும் ஓர் தீர்மானமும் பிரகாசித்தது.

தேவியானவள் மணக்கோலத்தில், எட்டு திருக்கரங்களில் எட்டு ஆயுதங்களை ஏந்தி, வலது காலை மடித்து ஊன்றிக்கொண்டு, இடது காலை தரையில் ஊன்றிய வண்ணம் பாதத்தை கீழே முயலகன் சிரசில் வைத்தபடி "பத்ரகாளி" ரூபத்தில் "பைரவி" சங்கல்பத்தில் "சத்ய சொரூபியாக" ஜுவாலா கிரீடத்தோடு காட்சியளித்தாள்.

தனது வலதிருக்கரத்தில் திரிசூலம், பாசக்கயிறு, சூரிக்கத்தி, மற்றும் மணியை எந்திக் கொண்டும், இடதிருக்கரத்தில் சர்ப்பம், வாள், கேடயம், மற்றும் அமுத கிண்ணம் ஏந்திக்கொண்டிருந்தாள். முக்கிய அம்சமாக அவளது இடது மடியில் சர்ப்பம் ஒன்று சுருண்டு அமர்ந்து இருந்தது. இது "குண்டலினி" என்ற மஹா சக்தி மூலம் அம்பாள் ஐயனோடு ஐக்கியமாகி இருக்கிறாள் என்பதை உணர்த்துவதாக அமைந்து இருந்தது.

தேவியின் இந்த திவ்ய திருக்கோலத்தை தரித்த "தந்திரி" புஷ்கலா தேவிக்கு "மாம்பழத்துறை ஸ்ரீ பகவதி" என்று நாமகரணம் சூட்டினார். மேலும் அந்த ஷேத்திரத்திற்கு என்று ஆச்சாரங்களையும், பூஜா விதிகளையும், உத்சவாதிகளை பண்ணும் முறைகளையும், பக்தி சிரத்தையுடன் செயலாற்ற வேண்டிய வழிவகைகளையும் ஏற்படுத்தி வைத்தார்.

பொதுவாக ஒவ்வொரு வருட சபரி மலை  யாத்திரையின் போதும்  சொரி முத்தையனார், சபரி மலை, எருமேலி, அச்சன்கோவில் தரிசித்து விடுவோம், ஆறு ஆதாரத் தலங்களையும் தரிசனம் செய்து வைக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க ஒரு வருடம் ஆறு ஆதார தலங்களுக்கும்  அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.

த்ர்யம்பக புராதீசம் கணாதிப ஸமன்விதம் 
கஜாரூட மஹம்  வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்  ||

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: