Saturday, December 17, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 13

 பள்ளிக்கட்டு 


 இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் 
திருவடியைக் காண வந்தோம் 


இப்பாடல்தான் பெரிய பாதையில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு  அருமையான பாடல். இதன்  வரிகளை   இனி வரும்  பதிவுகளிலும் காண்போம். 


இருமுடிக் கட்டுகள் 

இத்தொடரின் மற்ற பதிவுகள்:                4                  10    11    12     13    14    15    16    17    18    19    21     22     23     24     
 
கார்த்திகை மாதம் மாலையணிந்து  நேர்த்தியாக   விரதம் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை பூர்த்தி செய்வது ஐயப்ப தரிசனத்திற்குப்பின்னரே. சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி ஏறிச் சென்று  ஐயன் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதே  உத்தமமானது.  பதினெட்டாம் படி ஏற  குறைந்தது 41 நாட்கள் விரதமும், பள்ளிக்கட்டு என்னும் இருமுடிக் கட்டும் அவசியம். எனவே இப்பதிவில்  இருமுடியின் சிறப்புகளைக் காணலாம் அன்பர்களே. 

தாயின் தலைவலியைத் தீர்க்க மணிகண்டன் பம்பையாற்றின் காட்டிற்கு சென்ற போது பந்தளராஜா மணிகண்டனுக்கு வழியில் வேண்டிய உணவை இருமுடியாக கட்டி அனுப்பி வைத்தார் என்பது ஐதீகம். எனவே முதன் முதலில் இருமுடி சுமந்தவர் ஐயப்ப சுவாமிதான். அவரைப் பின்பற்றி நாம் இன்றும் ஐயனைக்காண செல்லும் போது இருமுடி சுமந்து செல்கிறோம். 

தற்போது நாம் சுமந்து செல்கின்ற இருமுடியில்   முன்முடியில் பசு  நெய் நிறைத்த முத்திரை தேங்காயும், பூஜைப்பொருட்களான காணிப்பொன்,  மஞ்சள் பொடி, மஞ்சள், பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, அச்சு வெல்லம்,  அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, வளையல், கண்ணாடி சீப்பு, ரவிக்கைத்துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.


பின் முடியில்  யாத்திரையின் போது நமது சமையலுக்குத்தேவையான  பொருட்கள் இடம்பெறும்.  எனவே முன்முடி புண்ணிய முடி என்றும், பின் முடி பாவ முடியென்றும் கூறுவர். யாத்திரையின் போது பாவம் குறைந்து கொண்டே வரும்.   முத்திரையில் தேங்காயில் நிறைக்கப்படுவது நமது ஆத்மா என்பது ஐதீகம்.  அந்த நெய்  ஐயப்ப சுவாமிக்கு  அபிஷேகம் ஆகும் போது அது அவருக்கு  ஆத்ம சமர்ப்பணம் ஆகின்றது.  பின்னர் அதுவே நமக்கு பிரசாதமாக திரும்பி வருகின்றது. அதை நாம் இல்லம் எடுத்து வருகின்றோம். ஐயனை தரிசனம் செய்து வரும் போது பின் முடியில் எதுவும் இருக்காது. முன் முடியில் ஐயனின் அருட்பிரசாதம் மட்டுமே இருக்கும்  எனவே நமது பாவங்கள் அனைத்தும் கரைவதை  இது உணர்த்துகின்றது. 

பாலிலிருந்து தயிர், பின் தயிரிலிருந்து மோர், மோரில் இருந்து வெண்ணெய், வெண்ணையை உருக்கினால் நெய். நெய் என்பது தூய்மையைக் குறிக்கின்றது. இது  ஆத்மா, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களில் இருந்து தூய்மையாவதை குறிக்கின்றது.  ஆகவே ஐயனுக்கு நெய் அபிஷேகம் என்பது ஆத்ம சமர்ப்பணம் என்பதை உணர்ந்து மாலையணியும் பக்தர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

தேங்காயின் மென்மையான பகுதி மனிதனுடைய ஆன்மீக அறிவைக் குறிக்கின்றது. நெய் ஆன்மாவையும், தேங்காய் உடலையும்  குறிக்கின்றது. எனவேதான் நெய்யபிஷேகம் அதாவது ஆத்ம நிவேதனம் ஆன பின் உடலான தேங்காய் ஹோமகுண்டத்தில் பஸ்பமாகின்றது.

குருசாமியுடன் அடியேன் 


முக்கண் உள்ளதால் முத்திரைத்தேங்காய் சிவ அம்சம், ஆவின்(பசுவின்)  நெய்,  மஹா விஷ்ணுவின் அம்சம் எனவே ஹரிஹர புத்ரனான ஐயப்ப சுவாமிக்கு அந்த ஹரிஹரர்களின் அம்சமான நெய் நிறைந்த தேங்காயை எடுத்துச் செல்கின்றோம். 

மிருகங்களில் சிறந்தது  கோ மாதா எனச்சிறப்பிக்கப்படும் பசு, அப்பசுவின் நெய்யையும், தாவரங்களில் சிறந்தது கற்பகத்தரு எனப்படும் தென்னை மரம் அத்தென்னையின் தேங்காயையும், சிறந்தவைகளை ஐயப்ப சுவாமிக்கு சமர்பிக்க சுமந்து செல்கின்றோம். 

இருமுடி சுமந்து மலையேறும் போது நம்மையறியாமலே எண்ணம் அனைத்தும் ஆக்ஞா சக்கரத்தில் குவிகின்றது, என்று  குருசாமி அவர்கள் கூறுவார் அது உண்மை என்பதை அனைத்து ஐயப்ப பக்தர்களும் உணரலாம்.


இருமுடி கட்டும்போதுதான் சபரி யாத்திரை துவங்குகின்றது. குருசாமியின் ஆலோசனைப்படி, வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ இருமுடிக் கட்டை நிறைக்கலாம். முத்திரைத்தேங்காய் நாரெல்லாம் நீக்கப்பெற்று வளுவளுப்பாக செய்யப்படுகின்றது அதில் ஒரு கண் திறக்கப்பெற்று அதில் உள்ள இளநீர் வெளியேற்றப்பட்டு நெய் நிறைக்க ஏதுவாக தயார் செய்கின்றனர்.

கட்டு நிறை

நெய் நிறைக்கும் போது ஆத்ம சமர்ப்பண பாவத்துடன் என்ன வேண்டுதல்கள் உண்டோ அதை மனத்தில் கொண்டு நெய்யை நிறைக்க வேண்டும். பொதுவாக கணவர் விரதம் இருக்கும் போது மனைவியும் அவருடன் ஒத்துழைப்பதால் அவரும் விரதம் இருந்ததாக ஆகின்றது, எனவே மனைவிக்காக (எதாவது வேண்டுதலுடன்) ஒரு முத்திரை தேங்காயை எடுத்துச் செல்லலாம்.  மற்ற குடும்பத்தினர்களுக்கு  அவர்கள் விரதம் கடைப்பிடிப்பவர்களாக இருந்தால் மட்டுமே முத்திரை தேங்காய்  எடுத்துச் செல்ல வேண்டும்.  வேறு யாருக்காவும் முத்திரைத் தேங்காய் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.

யாத்திரையின் போது கன்னி சாமிகள் இருமுடிக்கட்டை ஏற்றவோ இறக்கவோ கூடாது, குருசாமிகள் மூலமே ஏற்றி இறக்கவேண்டும். தங்கும் தாவளங்களில்  சுத்தமான இடத்தில் இருமுடிக்கட்டுகளை பத்திரமாக வைக்க வேண்டும். குருசாமி அவர்கள் கற்பூரம் காட்டி இருமுடிகளை மறுபடியும் ஏற்றிவிடுவார்.

விரதமிருந்து இருமுடியும் சுமந்து விட்டோம் வாருங்கள் இனி எருமேலி செல்வோம் பெரிய பாதை யாத்திரையை துவக்கலாம்.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .


No comments: