எருமேலி சாஸ்தா
இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாபரை தொழுது
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்.
இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாபரை தொழுது
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்.
சபரிமலைக்குச் செல்ல மூன்று முக்கிய வழிகள் உள்ளன அவையாவன:
1. எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம்.
2. குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் சபரிமலையை அடையலாம்.
3.சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான் மிக எளிதான வழி. சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் சபரிமலை உள்ளது.
இவற்றுள் எருமேலி வழியாகச் செல்லும் வழி "பெரியபாதை" என்றழைக்கப்படுகின்றது. இவ்வழியில்தான் ஐயப்பன் சபரிமலை சென்றதாக ஐதீகம்.
அடுத்து ஐயப்பனின் ஆதாரத்தலங்களுள் விசுத்தித் தலமான எருமேலிக்கு செல்லலாம் வாருங்கள் அன்பர்களே. கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் எருமேலி அமைந்துள்ளது. இத்தலம் கோட்டயம் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் பம்பையாற்றின் ஒரு கிளை ஆறான மணிமாலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
எருமேலி: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் முதலில் கூடும் இடம் ஆகும்.. பெருவழிப்பாதை இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகின்றது. இத்தலத்தில் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற "கிராத சாஸ்தா" கோலத்தில் சுவாமி அருள் பாலிக்கின்றார் இக்கோவில் வலியம்பலம் என்றழைக்கப்படுகின்றது. வலியம்பலம் என்றால் பெரிய கோவில். அப்படியென்றால் சிறிய கோவிலும் உள்ளதா என்று கேட்கின்றீர்களா? ஆமாம் அன்பர்களே கொச்சம்பலம் எனப்படும் பேட்டை சாஸ்தா ஆலயம் என்னும் ஒரு சிறிய கோவிலும் . அதற்கு எதிரே ஐயப்பனின் முஸ்லிம் தோழரான வாவர் சுவாமியின் பள்ளி வாசலும் உள்ளது. இவ்வாலயத்தில் சாஸ்தா வன்புலி வாகனனாக புலியின் மேல் அமர்ந்த கோலத்தில் திருக்காட்சி தருகின்றார்.
பேட்டை தர்மசாஸ்தா முகப்பு வாயில்
பக்திபெருக்குடன் மலையேறும் பக்தர்கள் தங்களை மறந்து சரண கோஷம் முழங்க ஐயப்பனை உணர்ந்து ஆடிப்பாடுகின்ற இடம் எருமேலி. இதற்கு ஐயப்பன் வரலாற்றில் கதை ஒன்று உண்டு. தேர்வகளுக்கும், பூமியில் வாழுகின்ற மக்களுக்கும் பெரும் தொல்லைகளை கொடுத்து மக்களை மிரட்டி வந்த அரக்கி மஹிஷியை, ஐயப்பன் சம்ஹாரம் செய்து சாப விமோசனம் கொடுத்த இடம் எருமேலி என்பது ஐதீகம். அதனை நினைவுகூரும் வகையில் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. இதனால் அந்த இடம் ‘எருமை (மகிஷி) கொல்லி‘ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அது மருவி ‘எருமேலி‘யானது என்கின்றனர்.
பேட்டைதுள்ளல்: இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாவர் சந்நிதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சந்நிதி வந்தடைந்து மணி மாலா ஆற்றில் குளித்து தர்ம சாஸ்தாவிற்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பின் இருமுடியுடன் பேட்டை சாஸ்தாவையும் வாவரையும் சுற்றி வலம் வந்து வணங்கி விட்டு யாத்திரையை தொடர்கின்றனர். பேட்டை துள்ளல் ஒருவரது அகம்பாவமும், கர்வமும் நீங்குவதோடு தன்னையும் அவர்களில் ஒருவராக எண்ணும் மனோபாவமும் ஏற்படுகின்றது.-
மகர விளக்கு விழாவையொட்டி எருமேலியில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் பக்தர்கள் நடத்தும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது கருடன் வந்து காட்சி தருவார். அதைப் பார்த்து ஆனந்தமாக பேட்டை துள்ளுவார்கள், பஞ்ச வாத்தியங்கள் முழங்க அனைவரும் ஒரே மாதிரி ஆடுவதைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம். எருமேலி பேட்டை துள்ளலுக்கு மறு நாள் பந்தளத்தில் இருந்து மகரஜோதிக்கு ஐயனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் புறப்படும்.
மகர விளக்கு விழாவையொட்டி எருமேலியில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் பக்தர்கள் நடத்தும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது கருடன் வந்து காட்சி தருவார். அதைப் பார்த்து ஆனந்தமாக பேட்டை துள்ளுவார்கள், பஞ்ச வாத்தியங்கள் முழங்க அனைவரும் ஒரே மாதிரி ஆடுவதைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம். எருமேலி பேட்டை துள்ளலுக்கு மறு நாள் பந்தளத்தில் இருந்து மகரஜோதிக்கு ஐயனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் புறப்படும்.
முன்னர் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் மட்டுமே பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மகரவிளக்கு காலத்தில் மட்டும் எருமேலியில் பேட்டை துள்ளல் நடந்துள்ளது. தற்போது மண்டல மகரவிளக்கு காலம் மட்டுமின்றி மாத பூஜைகளுக்காக எப்போதெல்லாம் நடை திறக்கிறதோ அப்போதெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எருமேலியில் எல்லா சமயங்களிலும் பேட்டை துள்ளலும் நடைபெறுகிறது.
வாபர் மசூதி
இனி அடியோங்களின் அனுபவம், எருமேலியில் பேட்டை துள்ளலை, பேட்டை சாஸ்தா ஆலயத்திலிருந்து துவக்குகின்றனர். கன்னி சுவாமிகளில் முதல் வருடம் மலைக்கு செல்பவர்கள் சரம் ஏந்துகின்றனர். இச்சரத்தை பத்திரமாக கொண்டு சென்று சரங்க்குத்தி ஆலில் குத்த வேண்டும். இரண்டாம் வருட சுவாமிகள் வாள் எடுத்துச்சென்று சரங்குத்தியில் இடுகின்றனர். மூன்றாம் வருட சுவாமிகள் மணிகண்டன்கள். கழுத்தில் மணி அணிந்து செல்கின்றனர். இம்மணியை பின்னர் கன்னி மூல கணபதி ஆலயத்தில் செலுத்துகின்றனர். அனைத்து சுவாமிகளும் காட்டுவாசிகளைப் போல இலைகளைக் கட்டிக்கொண்டும், முகத்தில் சாயங்களை பூசிக் கொண்டும், காய்கறிகளை வாங்கி ஒரு கம்பியில் கட்டிக்கொண்டும் கெட்டி மேளம் கொட்டியபடி பேட்டை சாஸ்தா ஆலயத்தில் உள்ள தலப்பார மலையில் தேங்காய் உடைத்து சாஸ்தாவை வணங்கி பேட்டை துள்ளலை ஆரம்பிக்கின்றனர்.
இவ்வாலயத்தில் நுழைவு வாயிலில் வலது பக்கம் வாவர் சுவாமியும், இடது புறம் கருப்பண்ண சுவாமியும் காவல் காக்கின்றனர். வாவர் சுவாமிக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் அவரது சிம்மாசனம் மட்டுமே அங்கு தரிசிக்கலாம். அடுத்து எதிரே உள்ள வாவர் சுவாமியில் பள்ளி வாசலை சுற்றி வருகின்றோம். அங்கும் வாவர் சுவாமியின் சிம்மாசனத்தை தரிசிக்கின்றோம். அடுத்து சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று கூறிக்கொண்டே ஆடிக்கொண்டு தர்ம சாஸ்தா ஆலயத்திற்கு செல்கின்றோம். சாலையின் இரு பக்கமும் நிறைய புகைப்பட கடைகள் கன்னி சாமிகள் விரும்பியவாறு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். தர்ம சாஸ்தா ஆலயத்தை அடைந்து சன்னதியை சுற்றி வந்து இலை தலைகளை கொடிமரத்தின் அருகில் போட்டுவிட்டு மணிமாலா ஆற்றில் நீராடுகின்றனர். சாயம் பூசிக்கொண்டு வருவதால் சாஸ்தாவை தரிசிப்பதற்கு முன் நீராடி . திருநீறு, சந்தனம், குங்குமம் அணிந்து தூய ஆடை அணிந்து சாஸ்தாவை வணங்க வேண்டும்.
ஆலயத்தின் நடுவில் சதுர வடிவ ஸ்ரீகோவில், வில் அம்பு ஏந்தி நின்ற கோலத்தில் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். . சுற்றம்பலம் விளக்கு மாடத்துடன் அமைந்துள்ளது.. கொடி மரத்தை அடுத்து பலிபீட மண்டபம், கூரையில் அருமையான மர வேலைப்பாடு, பூக்கள் அருமை. நில விளக்கு. அடுத்து சிறிய நமஸ்கார மண்டபம், தூண்கள் மற்றும் ஸ்ரீகோவில் பித்தளை கவசம் பூண்டுள்ளது. இவற்றில் ஐயப்ப சுவாமியின் சரித்திரத்தை கண்டு களிக்கிறோம். . ஸ்ரீவேலி பிரகாரத்தில் பகவதிக்கு தனி சன்னதி உள்ளது பகவதி நட என்றழைக்கின்றனர் மற்றும் பிரம்மாண்ட ஆலமரம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலில் சகோதரர்கள் கணபதி, முருகன், ஐயப்பன் மூவரும் அருள் பாலிக்கின்றனர். தத்துவமஸி என்னும் மஹா வாக்கியத்தையும் அமைத்துள்ளனர்.
மாலை நேரத்தில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு ஸ்ரீவேலி யானைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு சுற்றின் போதும் கொடி மரத்தின் முன் உள்ள மண்டபத்தில் சுவாமி நிற்க பஞ்ச வாத்தியம், மேளம், பாட்டு இசைக்கப்படுகின்றது. குருவாயூர் ஆலயத்தில் சிறப்பாக ஸ்ரீவேலி நடைபெறுவதைப் போலவே இத்தலத்திலும் நடைபெறுகின்றது என்றால் அது மிகையாகாது. தர்ம சாஸ்தாவை வணங்கி பிரசாதம் பெற்று பின்னர் இருமுடியுடன் பேட்டை சாஸ்தாவையும் வாவரையும் சுற்றி வலம் வந்து வணங்கி விட்டு சரண கோஷத்துடன் பெருவழிப்பாதையில் சபரி யாத்திரையை துவக்குகின்றோம்.
எருமேலி ஆலயத்தின் அருகே பக்தர்கள், காலைக்கடனை முடிக்கவும், நீராடவும் வசதி செய்துள்ளனர், தனியாரின் பல இடங்களும் உள்ளன, பணம் செலுத்தி இவ்வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
குருசாமி திருவடிகளே சரணம்
சுவாமியே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .
1 comment:
பேட்டை துள்ளல் ஒரு உவமையும் வெளிப்பாடு என்றும் அழைக்கமுடியும். தொடருங்கள் தொடர்கின்றேன்.
Post a Comment