Showing posts with label எருமேலி. Show all posts
Showing posts with label எருமேலி. Show all posts

Monday, December 19, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 15

                         எருமேலியிலிருந்து காளைகெட்டி ஆசிரமம் வரை 



எருமேலியில் இருமுடிகளுக்கு பூசை செய்து
 பெருவழி யாத்திரையை துவக்குகின்றோம். 


இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    20    21     22     23     24     
 
பெருவழி  மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம்; உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்றைச் சுவாசிக்கும் பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும். ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கப தாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன. வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதா நதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடு வரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்த ரோக சமனியான மூலிகைகள் மண்டிக்கிடக்கின்றன.

  இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில்     மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும்  மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள். 

பெரிய பாதை ஐயனின் கோட்டைப் பகுதியாகும் அதில்  ஏழு கோட்டைகள் உள்ளன என்பது ஒரு ஐதீகம். முதலாவது கோட்டை எருமேலி இங்கு தர்ம சாஸ்தா அருள் பாலிக்கின்றார். இரண்டாவது  காளைகட்டி இங்கு நந்தியெம்பெருமான்  தேவனாக விளங்குகின்றார்.  மூன்றாவது  உடும்பாறைக் கோட்டை  ஐயப்பன்  அருள் பாலிக்கின்றார். நான்காவது  கோட்டை கரிமலை இங்கு கரிமலை பகவதியும் கொச்சுக்கடுத்த சுவாமியும் அருள் பாலிக்கின்றனர். ஐந்தாவது கோட்டை சபரிபீடம், இங்கு சபரி துர்கை அருள் பாலிக்கின்றாள்.  அன்னையை பரசுராமரும், ஸ்ரீராமரும் வணங்கியதாக ஐதீகம். ஆறாவது கோட்டை சரங்குத்தி, இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன்  அருள் பாலிக்கின்றான்.   ஏழாவது கோட்டை பகவான் ஐயப்பனின் பதினெட்டாம் படியாகும்.  பதினெட்டாம் படிக்கு வலப்பக்கம் கருப்ப சுவாமியும், இடப்பக்கம் கொச்சு கடுத்தசுவாமி கருப்பாயி அம்மையுடனும் அருள்  பாலிக்கின்றனர்.  இவர்களை வணங்கி அருள்பெற்று  நிறைவாக ஐயப்ப சுவாமியை தரிசித்து அவரின் அருள் பெறுகின்றோம். 

பெரிய பாதையில் பல்வேறு மலைகளை ஏறியும் இறங்கியும் செல்கின்றோம்.  இரு மலைகளுக்கிடையில் ஆறுகளையோ அல்லது சிறு வாய்க்கால்களையோ நாம் கடந்து செல்ல வேண்டும்.  மலை ஏற ஏற உயரமும் அதிகமாகின்றது அதே சமயம் செங்குத்தாகவும் ஆகின்றது எனவே கடினமாகவும் ஆகின்றது எனவே இடையில் போதிய ஓய்வு எடுத்துக்கொண்டு யாத்திரையைத் தொடர்வது நல்லது. மேலும் இருட்டில் மலையேறாமல் ஓய்வெடுப்பது உத்தமம்.

வழியில் சரியான உணவு கிட்டாது,  பாறைகள், பாதங்களைப் பதம் பார்க்கும் சிறிய கற்கள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மரங்களின் வேர்கள், முட்களைப் போலக் குத்தும் மரக் குச்சிகள் எனக் கரடுமுரடான பாதை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். ஒற்றையடிப் பாதையையொட்டி கிடுகிடு மலைச் சரிவுகள். கரணம் தப்பினால் அதலபாதாளத்தில் இழுத்துச் சென்றுவிடும். இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் ஐயனே நம்மை வழிநடத்திச் செல்வதால் காட்டுப்பாதையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதில்லை. பக்தர்கள் சொல்லும் வழிநடை சரணங்கள் காடு முழுவதும் எதிரொலிக்கின்றது. .


                              



                              


எருமேலியில் தொடங்கி பம்பை, சன்னிதானம் வரையிலான சுமார் 52 கி.மீ. நடப்பது பெரிய பாதை. அடர்ந்த காடு, மலைகளைக் கடந்து செல்லும் இந்தப் பாதையில் யாத்திரை மேற்கொள்வது எளிதானதல்ல.எருமேலியில் இருந்து நடக்கத் தொடங்கினால் பேரூர்தோடு வரை தார்ச்சாலை. அங்கிருந்துதான் ஐயப்பனின் பூங்காவனம் தொடங்குகிறது. காளைகட்டி ஆசிரமம்  வரையான பாதை சிரமமின்றி இருக்கும். அதன்பிறகு ஒற்றையடிப் பாதையாகச் செல்லும் காட்டு வழிதான.
காளைகட்டி, அழுதா நதி, அழுதா மலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் இவற்றைக் கடந்து சென்றால் பம்பையை அடையலாம். பமபையில் குளித்து களைப்பைப் போக்கி பின்னர் கன்னிமூல கணபதியை வணங்கிவிட்டு, நீலிமலை அப்பாச்சி மேடு, சபரிபீடம், சரங்குத்தி கடந்து 18 படிகளில் ஏறி சென்றால், ஐயப்பனைத் தரிசிக்கலாம். 

பெருவழிப்பாதயின் முக்கிய தாவளங்களையும் தூரத்தையும் காணலாமா அன்பர்களே : \
1. எருமேலி - பேரூர்த்தோடு (வாய்க்கால்)  தார் சாலை 3.2 கி.மீ
2. பேரூர்த்தோடு - காளைக்கெட்டி ஆசிரமம்  பகுதி தார் சாலை மிகுதி மண் சாலை 3.5 கி.மீ
3. காளைக்கெட்டி சமவெளி  7 கி.மீ
4. காளைக்கெட்டி அரியக்குடி சமவெளி -  4.2 கி.மீ
5. அரியக்குடி - முக்குழி  மலையேற்றம் 3.5 கி.மீ
6. முக்குழி - கரிவலாந்தோடு  8. கி.மீ
7. கரிவலாந்தோடு - கரிமலையேற்றம் 5 கி.மீ
8. கரிமலை இறக்கம் - பெரியானை வட்டம்  4.75 கி.மீ
9. பெரியானை வட்டம் - பம்பா சமவெளி  2.75 கி.மீ
10. பம்பா - சபரி பீடம் ஏற்றம்  2.75 கி.மீ
11. சபரி பீடம் - சன்னிதானம்  3.75 கி.மீ


பேரூர் வாய்க்கால் வரை தார்சாலை 

எருமேலியிலிருந்து பேரூர் தோடு வரை  தார் சாலை அமைத்துள்ளனர். ஆகவே நடைப்பயணம் எளிதாகவே உள்ளது. தோடு என்றால் நீர் நிலை என்று பொருள். வழியில் இரு பக்கமும் கடைகள் உள்ளன, மலையேற்றத்திற்கு உதவும் தடிகள், டார்ச் விளக்குகள் விற்கும் கடைகள் உள்ளன. அவ்வப்போது  பேருந்துகள் வருகின்றன என்பதால் கவனத்துடன் நடக்க வேண்டும்.  இருபக்கமும் அன்னாசி, இரப்பர், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பலா மரங்களையும் நிறையக் காணலாம். 

அதிகாலை சூரிய உதயக் காட்சி 


இரு புறமும் இரப்பர் தோட்டங்கள் 

பேரூர் வாய்க்கால் 



பேரூர் தோடில் மீன்களுக்கு உணவிடுவது ஒரு வழிபாடு ஆகும். பொரி கிடைக்கின்றது அதை வாங்கி மீன்களுக்கு அளிக்கின்றனர். இது மீனூட்டு என்ற்ழைக்கப்படுகின்றது. ஐயப்பனின் பூங்காவனம் இங்கிருந்துதான்  ஆரம்பமாகின்றது.  கோட்டப்படி என்றும் இவ்விடத்தை அழைப்பர்.  குமுளி செல்லும் பாதை இங்கிருந்து பிரிகின்றது.  முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.பண்டைய காலத்தில் வெளிச்சப்பாடின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரியபாதைக்குள் நுழைய முடியும்.  அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால் வீட்டுக்கு திரும்பி விட வேண்டியது தான். யாத்திரைக்கு அனுமதியில்லாத பக்தர்கள் யாத்திரைக்கு வரும் ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடைபெறுவர்.

மண்டல பூசை காலத்தில்  சன்னிதானத்தில் சிறப்பு பூசை செய்து பக்தர்களுக்கு    வனதேவதைகளும், பூதகணங்களும், வன்மிருகங்களும்  எவ்வித துன்பமும் செய்யாமல்  இருக்க வேண்டும்  என்று சுவாமியிடம் வேண்டுகின்றனர். எனவே   இந்த இவ்விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு  அவை பக்தர்களை  தொந்தரவு செய்வதில்லை. 




மீனூட்டு


பேரூர் தோடில் கணபதி ஆலயம்  உள்ளது அங்கு விக்னம் எதுவும் இல்லால் யாத்திரை முடிய வேண்டும் என்று கணபதியை வேண்டினோம்,   இங்கு சிரமப்பரிகாரம் செய்து கொண்டு சிறிது நேரம் இளைப்பாறி விட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம். 



பேரூர் தோடிலிருந்து .......

                              
இரப்பர் தோட்டங்கள் 


காளைகெட்டி ஆசிரமம் செல்லும் பாதையின் ஒரு பகுதி தற்போது தார்சாலையாக மாறிவிட்டது. இப்பகுதியில்  பல கிராமங்கள் அமைந்துள்ளன. பள்ளிக்குச் செல்லும் சிறார்களைக் கண்டோம். மலைப் பகுதி ஆரம்பமாகி விட்டதை கவனியுங்கள். 

                                      
  வழியில் உள்ள  சுப்பிரமணியர் ஆலயம் 


மஹாதேவர் 


வழியில் இரும்புண்ணிக்கோட்டை என்ற கிராமத்தில் மஹாதேவர் ஆலயத்தில் பிரம்மாண்ட ரூபத்தில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார்.  மேலும்    சுப்பிரமணியர் ஆலயத்தில் முருகர்,  அன்னபூர்ணேஸ்வரி, கிருஷ்ணர், சிறிய கணபதி மற்றும் ஐயப்பன் சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோவில் சார்பில் அன்னதானம் நடைபெறுகின்றது..  இக்கோவிலை ஒட்டி பெரிய பாதை யாத்திரை தொடர்கின்றது.  தார் சாலை முடிந்து சிறிய கான்க்ரீட் சாலையாக மாறிய பாதையில் தொடர்கின்றோம். சிறிது தூரன் சென்ற பின் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பலபத்ரா தேவி ஆலயத்தில் அருமையான அலங்காரத்தில் பகவதியை தரிசிக்கலாம். ஸ்ரீகோவிலின் சுவற்றில் அருமையான சுதை சிற்பங்கள் அமைத்திருக்கின்றனர்.  மேலும் முருகருக்கும், சிவன், கணேசர், ஐயப்பன் ஆகியோருக்கு ஒரு சன்னதியுமாக மூன்று சன்னதிகள் உள்ளன. இவ்வாறு  வழியில் உள்ள ஆலயங்களை  தரிசனம் செய்து கொண்டே சரண கோஷத்துடன் நடைபயணத்தை தொடர்கின்றோம். இந்த நடைப்பயணத்தின் ஒரு சிறப்பு தலையில் உள்ள இருமுடிக்கட்டு மற்றும் தோளில் தொங்குகின்ற ஜோல்னாப்பை. சில பக்தர்கள் தங்கள் குழந்தைகளையும் சுமந்து கொண்டே மலை ஏறுகின்றனர்.  ஒரு சில  குழுவினர்  சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்களையும் சுமந்து கொண்டு மலை ஏறுகின்றனர். 18 வருடம் யாத்திரை முடிக்கும் சுவாமிகள் தென்னையை சுமந்து மலையேறுகின்றனர்.

பலபத்ரா தேவி ஆலயம்


கான்க்ரீட் சாலையும்  முடிந்து மண்பாதை துவங்கி விட்டது. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதற்கேற்ப கற்கள் பாதத்தை பதம் பார்க்கின்றன. செருப்பு அணியாமல் இரு மாதம்  நடக்கச்சொன்னதின் மகத்துவம் இப்போது புரிகின்றது. மனதையும் உடலையும் பதப்படுத்தவே கடுமையான விரதமுறைகள்.  


நெடிதுயர்ந்த மரங்கள் 

நான்கு ஐந்து பேர்கள் சேர்ந்தால்தான் கட்டிப்பிடிக்க முடியும் என்பதைப் போன்ற பிரம்மாண மரங்கள் மற்றும் மூங்கில் புதர்கள் நிறைந்துள்ளன. இமயமலையில் இருந்து  தெற்கு கடற்கரை வரை நாம் மூங்கில்களைக் காணலாம்.  நெடிதுயர்ந்த மரங்கள் இயற்கையாகவே நிழலை வழங்குகின்றன மற்றும் குளிர்ந்த மூலிகைக் காற்றை சுவாசித்துக்கொண்டே செல்வதால் ஒரு புத்துணர்வை உணர்கின்றோம்.  காற்று வீசும் போது சருகுகள் விழுகின்றன. அச்சருகுகளை மிதித்து செல்லும் போது சரக் சரக் என்று ஒரு சத்தம் சரண கோஷத்திற்கு பக்க வாத்தியமாக உள்ளது. பல் வித பறவைகளின் சங்கீதத்தை கேட்கிறோம். மற்றும் வண்டுகளின் ரீங்காரமும் துணைக்கு வருகின்றது. 

மூங்கில் புதர்கள் 



சிறிது தூரம் சென்ற பின் மரங்களே இல்லை, வனத்துறையினர் மரங்களையெல்லாம் வெட்டி மொட்டையாக வைத்துள்ளனர்.  என்ன தோட்டமாக மாற்றப்போகின்றனோ தெரியவில்லை.  மரங்கள் இல்லாததால்  தூரத்தில் மலை முகடுகள் அருமையாக தெரிந்தன, இப்பகுதியில் வெயில் சுரீர் என்று சுட்டது. 

மலை முகடுகள் 



வழியில் உள்ள நீர் நிலைகள் 


விரி

வழி நெடுக விரி என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் உள்ளன. அவற்றில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம், படுத்து தூங்கலாம், தேநீர், அன்னாசி, தர்பூசணி சாப்பிடலாம். எலுமிச்சை சாறு அருந்தலாம். சென்ற வருடம் முதல்  குடிநீர் பாட்டில் விற்பனையை நீதிமன்றம் தடை செய்து விட்டதால் குடி தண்ணீருக்கு அங்கங்கே வைத்துள்ள  மூலிகை நீரை மட்டுமே அருந்தும்படி ஆனது. எனவே தண்ணீர் பாட்டில் எடுத்துச்  செல்வது உத்தமம் கிடைக்கின்ற இடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டு உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.. 




கால்கள் கெஞ்சின, மெள்ள மெள்ள முன்னேறினோம். வறண்டு போன ஆற்றுப்படுகைகள், கற்பாறைகள், புதர்கள் நிறைந்த காட்டுப்பாதையில் தொடர்ந்து  எப்போது காளைகெட்டி ஆசிரமம் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். பாதை நீண்டு கொண்டே சென்றது. இடப்பாகம் இருந்த இறக்கமும் மலைகளும் வலப்பக்கம் மாறி  விட்டது. இரண்டு வறண்ட வாய்க்கால்களைக் கடந்தோம்.  ஒரு சமயத்தில் வெடி சத்தமும்,  மைக் ஒலியும் காதில் பட்டது. காளைக்கெட்டி ஆசிரமத்தை அடைந்து விட்டோம் என்பதை உணர்ந்து சற்று வேகத்தைக் கூட்டினோம் தண்ணீருடன் கூடிய  ஒரு  வாய்க்காலை கடந்தோம். 

காளை கெட்டி ஆசிரமத்திற்கு அருகில் உள்ள வாய்க்கால் 

காளைக்கெட்டி ஆசிரமம் 

மெள்ள மெள்ள நடந்து  முதல் தாவளமான காளை கெட்டி ஆசிரமத்தை அடைந்தோம்.  தாவளம் என்றால் தங்கும் இடம் என்று பொருள். காளைக்கெட்டி  ஆசிரமத்தின் சிறப்பு என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Sunday, December 18, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 14

 எருமேலி  சாஸ்தா

இருமுடி  எடுத்து  எருமேலி வந்து 
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாபரை தொழுது 
ஐயனின்  அருள் மலை ஏறிடுவார்.



எருமேலி தர்ம சாஸ்தா ஆலய நுழைவாயில் 


இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                   10    11    12     13    14    15    16    17    18    19    20     21     22     23     24    



சபரிமலைக்குச் செல்ல மூன்று  முக்கிய  வழிகள் உள்ளன அவையாவன:

1. எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம்.


2. குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் சபரிமலையை அடையலாம்.


3.சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான் மிக எளிதான வழி. சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் சபரிமலை உள்ளது.


மேலும் குமுளி,  வண்டிப்பெரியாறு, சத்திரம், புல்மேடு வரை 30 கி.மீ தூரமுள்ள பாதை புல்மேடு பாதை என்றழைக்கப்படுகின்றது. இப்பாதையில் புல்மேட்டிலிருந்து சன்னிதானம் வரை இறக்கம்தான். மேலும் நடை தூரமும், நேரமும் குறைவு. மலை ஏற முடியாதவர்கள், சன்னிதானத்தில் இருந்து நீலிமலை வழியாக இறங்கி பம்பையை அடைகின்றனர். 

புல்மேட்டிலிருந்து மகரஜோதி தரிசனம் கிட்டும் என்பதால் ஜோதியன்று பெருமளவில் ப்க்தர்கள் இப்பாதையில் கூடுகின்றனர்.


இவற்றுள் எருமேலி வழியாகச் செல்லும் வழி "பெரியபாதை" என்றழைக்கப்படுகின்றது. இவ்வழியில்தான்  ஐயப்பன் சபரிமலை  சென்றதாக ஐதீகம். இப்பாதையில்  ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)


1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6.கல்லிடுங்குன்று
7.இஞ்சிப்பாறை – உடும்பாறை
8.முக்குழி
9.கரிவலம் தோடு
10. கரிமலை
11. வலியானை வட்டம்
12.செரியானை வட்டம்
13. பம்பா நதி

Erumeli

பெரிய பாதையின் முதல் தலமானதும்,  ஐயப்பனின்  ஆதாரத்தலங்களுள்  விசுத்தித் தலமான எருமேலிக்கு செல்லலாம் வாருங்கள் அன்பர்களே.  கேரள மாநிலத்தின் கோட்டயம்  மாவட்டத்தில் எருமேலி  அமைந்துள்ளது.   இத்தலம்  கோட்டயம் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் பம்பையாற்றின் ஒரு கிளை ஆறான  மணிமாலா ஆற்றின்  கரையில் அமைந்துள்ளது. மஹிஷியை கொன்று வீசிய இடம் – மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. 

எருமேலி: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் முதலில்  கூடும் இடம் ஆகும்.. பெருவழிப்பாதை இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகின்றது.  இத்தலத்தில்  பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற "கிராத சாஸ்தா" கோலத்தில்  சுவாமி அருள் பாலிக்கின்றார் இக்கோவில் வலியம்பலம் என்றழைக்கப்படுகின்றது. வலியம்பலம் என்றால் பெரிய கோவில். அப்படியென்றால் சிறிய கோவிலும் உள்ளதா என்று கேட்கின்றீர்களா? ஆமாம் அன்பர்களே கொச்சம்பலம் எனப்படும்  பேட்டை   சாஸ்தா ஆலயம் என்னும் ஒரு சிறிய கோவிலும் . அதற்கு எதிரே ஐயப்பனின் முஸ்லிம்  தோழரான வாவர் சுவாமியின் பள்ளி வாசலும் உள்ளது. இங்கு ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.


பேட்டை தர்மசாஸ்தா முகப்பு வாயில் 




பக்திபெருக்குடன் மலையேறும் பக்தர்கள் தங்களை மறந்து சரண கோஷம்  முழங்க ஐயப்பனை உணர்ந்து ஆடிப்பாடுகின்ற இடம் எருமேலி. இதற்கு ஐயப்பன் வரலாற்றில் கதை ஒன்று உண்டு. தேர்வகளுக்கும், பூமியில் வாழுகின்ற  மக்களுக்கும் பெரும் தொல்லைகளை கொடுத்து மக்களை மிரட்டி வந்த அரக்கி  மஹிஷியை,   ஐயப்பன் சம்ஹாரம் செய்து சாப விமோசனம் கொடுத்த இடம்  எருமேலி என்பது ஐதீகம். அதனை நினைவுகூரும் வகையில் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. இதனால் அந்த இடம் ‘எருமை (மகிஷி) கொல்லி‘ என்று  அழைக்கப்பட்டு வந்துள்ளது.  அது மருவி ‘எருமேலி‘யானது என்கின்றனர்.




பேட்டைதுள்ளல்இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாவர் சந்நிதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சந்நிதி வந்தடைந்து  மணி மாலா ஆற்றில் குளித்து தர்ம சாஸ்தாவிற்கு  தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பின் இருமுடியுடன் பேட்டை சாஸ்தாவையும் வாவரையும் சுற்றி வலம் வந்து வணங்கி விட்டு  யாத்திரையை தொடர்கின்றனர். பேட்டை துள்ளல் ஒருவரது அகம்பாவமும், கர்வமும் நீங்குவதோடு  தன்னையும் அவர்களில் ஒருவராக எண்ணும் மனோபாவமும் ஏற்படுகின்றது.-




மகர விளக்கு விழாவையொட்டி எருமேலியில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் பக்தர்கள் நடத்தும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஐயப்பன் உதயணன் என்ற கொள்ளைக்காரனை பிடிக்கச் சென்ற போது அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு அரசர்கள் அவருடன் துணையாக சென்றனர்.  கருடன் வந்து காட்சி தந்தவுடன் மதியம் அம்பலப்புழையினர் யானைகளுடன் வந்து ஆனந்தமாக பேட்டை துள்ளுகின்றனர்.  பஞ்ச வாத்தியங்கள் முழங்க அனைவரும்  ஒரே மாதிரி ஆடுவதைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம்.  மாலை நட்சத்திரத்தை பார்த்த பின்னர் ஆலங்கோட்டினர் பேட்டை துள்ளுகின்றனர். எருமேலி பேட்டை துள்ளலுக்கு மறு நாள் பந்தளத்தில் இருந்து மகரஜோதிக்கு ஐயனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் புறப்படும். அவை இவ்வாலயத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறன.



முன்னர்  மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் மட்டுமே பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை  வழக்கமாக கொண்டிருந்தனர். மகரவிளக்கு காலத்தில் மட்டும் எருமேலியில் பேட்டை துள்ளல் நடந்துள்ளது. தற்போது  மண்டல மகரவிளக்கு காலம்  மட்டுமின்றி மாத பூஜைகளுக்காக எப்போதெல்லாம் நடை திறக்கிறதோ அப்போதெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எருமேலியில் எல்லா  சமயங்களிலும் பேட்டை துள்ளலும் நடைபெறுகிறது.



வாபர் மசூதி


இனி அடியோங்களின் அனுபவம், எருமேலியில் பேட்டை துள்ளலை, பேட்டை சாஸ்தா ஆலயத்திலிருந்து துவக்குகின்றனர். கன்னி சுவாமிகளில் முதல் வருடம் மலைக்கு செல்பவர்கள்  சரம் ஏந்துகின்றனர். இச்சரத்தை பத்திரமாக கொண்டு சென்று சரங்க்குத்தி  ஆலில் குத்த வேண்டும். இரண்டாம் வருட சுவாமிகள் வாள் எடுத்துச்சென்று சரங்குத்தியில் இடுகின்றனர். மூன்றாம் வருட சுவாமிகள் மணிகண்டன்கள். கழுத்தில் மணி அணிந்து செல்கின்றனர். இம்மணியை பின்னர் கன்னி மூல கணபதி ஆலயத்தில் செலுத்துகின்றனர். அனைத்து சுவாமிகளும்  காட்டுவாசிகளைப் போல  இலைகளைக் கட்டிக்கொண்டும்,  முகத்தில் சாயங்களை பூசிக் கொண்டும்,   காய்கறிகளை வாங்கி ஒரு கம்பியில்  கட்டிக்கொண்டும்  கெட்டி மேளம் கொட்டியபடி பேட்டை சாஸ்தா ஆலயத்தில் உள்ள தலப்பார மலையில் தேங்காய் உடைத்து சாஸ்தாவை வணங்கி பேட்டை துள்ளலை ஆரம்பிக்கின்றனர்.


இவ்வாலயத்தில் நுழைவு வாயிலில் வலது பக்கம் வாவர் சுவாமியும், இடது புறம் கருப்பண்ண சுவாமியும் காவல் காக்கின்றனர். வாவர் சுவாமிக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் அவரது சிம்மாசனம் மட்டுமே அங்கு தரிசிக்கலாம். அடுத்து எதிரே உள்ள வாவர் சுவாமியில் பள்ளி வாசலை சுற்றி வருகின்றோம். அங்கும் வாவர் சுவாமியின் சிம்மாசனத்தை தரிசிக்கின்றோம்.  அடுத்து   சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று கூறிக்கொண்டே ஆடிக்கொண்டு தர்ம சாஸ்தா ஆலயத்திற்கு செல்கின்றோம். சாலையின் இரு பக்கமும் நிறைய புகைப்பட கடைகள் கன்னி சாமிகள் விரும்பியவாறு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். தர்ம சாஸ்தா ஆலயத்தை அடைந்து சன்னதியை சுற்றி வந்து இலை தலைகளை  கொடிமரத்தின்  அருகில் போட்டுவிட்டு மணிமாலா ஆற்றில் நீராடுகின்றனர். சாயம் பூசிக்கொண்டு வருவதால் சாஸ்தாவை தரிசிப்பதற்கு முன்  நீராடி . திருநீறு, சந்தனம், குங்குமம் அணிந்து தூய ஆடை  அணிந்து சாஸ்தாவை வணங்க வேண்டும். 


ஆலயத்தின் நடுவில் சதுர வடிவ ஸ்ரீகோவில், வில் அம்பு ஏந்தி நின்ற கோலத்தில் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். . சுற்றம்பலம் விளக்கு மாடத்துடன் அமைந்துள்ளது.. கொடி மரத்தை அடுத்து பலிபீட மண்டபம், கூரையில் அருமையான மர வேலைப்பாடு, பூக்கள் அருமை. நில விளக்கு. அடுத்து சிறிய நமஸ்கார மண்டபம், தூண்கள் மற்றும் ஸ்ரீகோவில் பித்தளை கவசம் பூண்டுள்ளது. இவற்றில் ஐயப்ப சுவாமியின் சரித்திரத்தை கண்டு களிக்கிறோம். . ஸ்ரீவேலி பிரகாரத்தில்  பகவதிக்கு தனி சன்னதி உள்ளது பகவதி நட என்றழைக்கின்றனர் மற்றும் பிரம்மாண்ட ஆலமரம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலில் சகோதரர்கள் கணபதி, முருகன், ஐயப்பன் மூவரும் அருள் பாலிக்கின்றனர். தத்துவமஸி என்னும் மஹா வாக்கியத்தையும் அமைத்துள்ளனர். 


மாலை நேரத்தில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு ஸ்ரீவேலி யானைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.  ஒவ்வொரு சுற்றின் போதும் கொடி மரத்தின் முன் உள்ள மண்டபத்தில் சுவாமி நிற்க பஞ்ச வாத்தியம், மேளம், பாட்டு இசைக்கப்படுகின்றது. குருவாயூர் ஆலயத்தில் சிறப்பாக ஸ்ரீவேலி நடைபெறுவதைப் போலவே இத்தலத்திலும் நடைபெறுகின்றது என்றால் அது மிகையாகாது.  தர்ம சாஸ்தாவை வணங்கி பிரசாதம் பெற்று பின்னர் இருமுடியுடன் பேட்டை சாஸ்தாவையும் வாவரையும் சுற்றி வலம் வந்து வணங்கி விட்டு  சரண கோஷத்துடன் பெருவழிப்பாதையில் சபரி யாத்திரையை துவக்குகின்றோம். 

எருமேலி ஆலயத்தின் அருகே பக்தர்கள், காலைக்கடனை முடிக்கவும், நீராடவும் வசதி செய்துள்ளனர், தனியாரின் பல இடங்களும் உள்ளன, பணம் செலுத்தி இவ்வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.  

புத்தன் வீடு



எருமேலியில் மகிஷயை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாறிய இடத்திற்கு புத்தன் வீடு என்று பெயர். இங்கு மகிஷியை வதம் செய்ய ஐயப்பன் பயன்படுத்திய வாள் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது . 


எருமேலியில் பேட்டை துள்ளி, கிராத சாஸ்தாவை தியானித்து, அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவங்குகின்றனர். அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்டுகின்றனர். கோட்டைப்படியில் மஹாகணபதியையும் பேட்டைசாஸ்தாவின் ஆலயத்தில் சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்கின்றனர் சுவாமிகள்.பெரிய பாதை பயணம் துவங்குகின்றது தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .