Showing posts with label கிராத சாஸ்தா. Show all posts
Showing posts with label கிராத சாஸ்தா. Show all posts

Sunday, December 18, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 14

 எருமேலி  சாஸ்தா

இருமுடி  எடுத்து  எருமேலி வந்து 
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாபரை தொழுது 
ஐயனின்  அருள் மலை ஏறிடுவார்.



எருமேலி தர்ம சாஸ்தா ஆலய நுழைவாயில் 


இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                   10    11    12     13    14    15    16    17    18    19    20     21     22     23     24    



சபரிமலைக்குச் செல்ல மூன்று  முக்கிய  வழிகள் உள்ளன அவையாவன:

1. எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம்.


2. குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் சபரிமலையை அடையலாம்.


3.சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான் மிக எளிதான வழி. சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் சபரிமலை உள்ளது.


மேலும் குமுளி,  வண்டிப்பெரியாறு, சத்திரம், புல்மேடு வரை 30 கி.மீ தூரமுள்ள பாதை புல்மேடு பாதை என்றழைக்கப்படுகின்றது. இப்பாதையில் புல்மேட்டிலிருந்து சன்னிதானம் வரை இறக்கம்தான். மேலும் நடை தூரமும், நேரமும் குறைவு. மலை ஏற முடியாதவர்கள், சன்னிதானத்தில் இருந்து நீலிமலை வழியாக இறங்கி பம்பையை அடைகின்றனர். 

புல்மேட்டிலிருந்து மகரஜோதி தரிசனம் கிட்டும் என்பதால் ஜோதியன்று பெருமளவில் ப்க்தர்கள் இப்பாதையில் கூடுகின்றனர்.


இவற்றுள் எருமேலி வழியாகச் செல்லும் வழி "பெரியபாதை" என்றழைக்கப்படுகின்றது. இவ்வழியில்தான்  ஐயப்பன் சபரிமலை  சென்றதாக ஐதீகம். இப்பாதையில்  ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)


1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6.கல்லிடுங்குன்று
7.இஞ்சிப்பாறை – உடும்பாறை
8.முக்குழி
9.கரிவலம் தோடு
10. கரிமலை
11. வலியானை வட்டம்
12.செரியானை வட்டம்
13. பம்பா நதி

Erumeli

பெரிய பாதையின் முதல் தலமானதும்,  ஐயப்பனின்  ஆதாரத்தலங்களுள்  விசுத்தித் தலமான எருமேலிக்கு செல்லலாம் வாருங்கள் அன்பர்களே.  கேரள மாநிலத்தின் கோட்டயம்  மாவட்டத்தில் எருமேலி  அமைந்துள்ளது.   இத்தலம்  கோட்டயம் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் பம்பையாற்றின் ஒரு கிளை ஆறான  மணிமாலா ஆற்றின்  கரையில் அமைந்துள்ளது. மஹிஷியை கொன்று வீசிய இடம் – மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. 

எருமேலி: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் முதலில்  கூடும் இடம் ஆகும்.. பெருவழிப்பாதை இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகின்றது.  இத்தலத்தில்  பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற "கிராத சாஸ்தா" கோலத்தில்  சுவாமி அருள் பாலிக்கின்றார் இக்கோவில் வலியம்பலம் என்றழைக்கப்படுகின்றது. வலியம்பலம் என்றால் பெரிய கோவில். அப்படியென்றால் சிறிய கோவிலும் உள்ளதா என்று கேட்கின்றீர்களா? ஆமாம் அன்பர்களே கொச்சம்பலம் எனப்படும்  பேட்டை   சாஸ்தா ஆலயம் என்னும் ஒரு சிறிய கோவிலும் . அதற்கு எதிரே ஐயப்பனின் முஸ்லிம்  தோழரான வாவர் சுவாமியின் பள்ளி வாசலும் உள்ளது. இங்கு ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.


பேட்டை தர்மசாஸ்தா முகப்பு வாயில் 




பக்திபெருக்குடன் மலையேறும் பக்தர்கள் தங்களை மறந்து சரண கோஷம்  முழங்க ஐயப்பனை உணர்ந்து ஆடிப்பாடுகின்ற இடம் எருமேலி. இதற்கு ஐயப்பன் வரலாற்றில் கதை ஒன்று உண்டு. தேர்வகளுக்கும், பூமியில் வாழுகின்ற  மக்களுக்கும் பெரும் தொல்லைகளை கொடுத்து மக்களை மிரட்டி வந்த அரக்கி  மஹிஷியை,   ஐயப்பன் சம்ஹாரம் செய்து சாப விமோசனம் கொடுத்த இடம்  எருமேலி என்பது ஐதீகம். அதனை நினைவுகூரும் வகையில் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. இதனால் அந்த இடம் ‘எருமை (மகிஷி) கொல்லி‘ என்று  அழைக்கப்பட்டு வந்துள்ளது.  அது மருவி ‘எருமேலி‘யானது என்கின்றனர்.




பேட்டைதுள்ளல்இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாவர் சந்நிதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சந்நிதி வந்தடைந்து  மணி மாலா ஆற்றில் குளித்து தர்ம சாஸ்தாவிற்கு  தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பின் இருமுடியுடன் பேட்டை சாஸ்தாவையும் வாவரையும் சுற்றி வலம் வந்து வணங்கி விட்டு  யாத்திரையை தொடர்கின்றனர். பேட்டை துள்ளல் ஒருவரது அகம்பாவமும், கர்வமும் நீங்குவதோடு  தன்னையும் அவர்களில் ஒருவராக எண்ணும் மனோபாவமும் ஏற்படுகின்றது.-




மகர விளக்கு விழாவையொட்டி எருமேலியில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் பக்தர்கள் நடத்தும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஐயப்பன் உதயணன் என்ற கொள்ளைக்காரனை பிடிக்கச் சென்ற போது அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு அரசர்கள் அவருடன் துணையாக சென்றனர்.  கருடன் வந்து காட்சி தந்தவுடன் மதியம் அம்பலப்புழையினர் யானைகளுடன் வந்து ஆனந்தமாக பேட்டை துள்ளுகின்றனர்.  பஞ்ச வாத்தியங்கள் முழங்க அனைவரும்  ஒரே மாதிரி ஆடுவதைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம்.  மாலை நட்சத்திரத்தை பார்த்த பின்னர் ஆலங்கோட்டினர் பேட்டை துள்ளுகின்றனர். எருமேலி பேட்டை துள்ளலுக்கு மறு நாள் பந்தளத்தில் இருந்து மகரஜோதிக்கு ஐயனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் புறப்படும். அவை இவ்வாலயத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறன.



முன்னர்  மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் மட்டுமே பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை  வழக்கமாக கொண்டிருந்தனர். மகரவிளக்கு காலத்தில் மட்டும் எருமேலியில் பேட்டை துள்ளல் நடந்துள்ளது. தற்போது  மண்டல மகரவிளக்கு காலம்  மட்டுமின்றி மாத பூஜைகளுக்காக எப்போதெல்லாம் நடை திறக்கிறதோ அப்போதெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எருமேலியில் எல்லா  சமயங்களிலும் பேட்டை துள்ளலும் நடைபெறுகிறது.



வாபர் மசூதி


இனி அடியோங்களின் அனுபவம், எருமேலியில் பேட்டை துள்ளலை, பேட்டை சாஸ்தா ஆலயத்திலிருந்து துவக்குகின்றனர். கன்னி சுவாமிகளில் முதல் வருடம் மலைக்கு செல்பவர்கள்  சரம் ஏந்துகின்றனர். இச்சரத்தை பத்திரமாக கொண்டு சென்று சரங்க்குத்தி  ஆலில் குத்த வேண்டும். இரண்டாம் வருட சுவாமிகள் வாள் எடுத்துச்சென்று சரங்குத்தியில் இடுகின்றனர். மூன்றாம் வருட சுவாமிகள் மணிகண்டன்கள். கழுத்தில் மணி அணிந்து செல்கின்றனர். இம்மணியை பின்னர் கன்னி மூல கணபதி ஆலயத்தில் செலுத்துகின்றனர். அனைத்து சுவாமிகளும்  காட்டுவாசிகளைப் போல  இலைகளைக் கட்டிக்கொண்டும்,  முகத்தில் சாயங்களை பூசிக் கொண்டும்,   காய்கறிகளை வாங்கி ஒரு கம்பியில்  கட்டிக்கொண்டும்  கெட்டி மேளம் கொட்டியபடி பேட்டை சாஸ்தா ஆலயத்தில் உள்ள தலப்பார மலையில் தேங்காய் உடைத்து சாஸ்தாவை வணங்கி பேட்டை துள்ளலை ஆரம்பிக்கின்றனர்.


இவ்வாலயத்தில் நுழைவு வாயிலில் வலது பக்கம் வாவர் சுவாமியும், இடது புறம் கருப்பண்ண சுவாமியும் காவல் காக்கின்றனர். வாவர் சுவாமிக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் அவரது சிம்மாசனம் மட்டுமே அங்கு தரிசிக்கலாம். அடுத்து எதிரே உள்ள வாவர் சுவாமியில் பள்ளி வாசலை சுற்றி வருகின்றோம். அங்கும் வாவர் சுவாமியின் சிம்மாசனத்தை தரிசிக்கின்றோம்.  அடுத்து   சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று கூறிக்கொண்டே ஆடிக்கொண்டு தர்ம சாஸ்தா ஆலயத்திற்கு செல்கின்றோம். சாலையின் இரு பக்கமும் நிறைய புகைப்பட கடைகள் கன்னி சாமிகள் விரும்பியவாறு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். தர்ம சாஸ்தா ஆலயத்தை அடைந்து சன்னதியை சுற்றி வந்து இலை தலைகளை  கொடிமரத்தின்  அருகில் போட்டுவிட்டு மணிமாலா ஆற்றில் நீராடுகின்றனர். சாயம் பூசிக்கொண்டு வருவதால் சாஸ்தாவை தரிசிப்பதற்கு முன்  நீராடி . திருநீறு, சந்தனம், குங்குமம் அணிந்து தூய ஆடை  அணிந்து சாஸ்தாவை வணங்க வேண்டும். 


ஆலயத்தின் நடுவில் சதுர வடிவ ஸ்ரீகோவில், வில் அம்பு ஏந்தி நின்ற கோலத்தில் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். . சுற்றம்பலம் விளக்கு மாடத்துடன் அமைந்துள்ளது.. கொடி மரத்தை அடுத்து பலிபீட மண்டபம், கூரையில் அருமையான மர வேலைப்பாடு, பூக்கள் அருமை. நில விளக்கு. அடுத்து சிறிய நமஸ்கார மண்டபம், தூண்கள் மற்றும் ஸ்ரீகோவில் பித்தளை கவசம் பூண்டுள்ளது. இவற்றில் ஐயப்ப சுவாமியின் சரித்திரத்தை கண்டு களிக்கிறோம். . ஸ்ரீவேலி பிரகாரத்தில்  பகவதிக்கு தனி சன்னதி உள்ளது பகவதி நட என்றழைக்கின்றனர் மற்றும் பிரம்மாண்ட ஆலமரம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலில் சகோதரர்கள் கணபதி, முருகன், ஐயப்பன் மூவரும் அருள் பாலிக்கின்றனர். தத்துவமஸி என்னும் மஹா வாக்கியத்தையும் அமைத்துள்ளனர். 


மாலை நேரத்தில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு ஸ்ரீவேலி யானைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.  ஒவ்வொரு சுற்றின் போதும் கொடி மரத்தின் முன் உள்ள மண்டபத்தில் சுவாமி நிற்க பஞ்ச வாத்தியம், மேளம், பாட்டு இசைக்கப்படுகின்றது. குருவாயூர் ஆலயத்தில் சிறப்பாக ஸ்ரீவேலி நடைபெறுவதைப் போலவே இத்தலத்திலும் நடைபெறுகின்றது என்றால் அது மிகையாகாது.  தர்ம சாஸ்தாவை வணங்கி பிரசாதம் பெற்று பின்னர் இருமுடியுடன் பேட்டை சாஸ்தாவையும் வாவரையும் சுற்றி வலம் வந்து வணங்கி விட்டு  சரண கோஷத்துடன் பெருவழிப்பாதையில் சபரி யாத்திரையை துவக்குகின்றோம். 

எருமேலி ஆலயத்தின் அருகே பக்தர்கள், காலைக்கடனை முடிக்கவும், நீராடவும் வசதி செய்துள்ளனர், தனியாரின் பல இடங்களும் உள்ளன, பணம் செலுத்தி இவ்வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.  

புத்தன் வீடு



எருமேலியில் மகிஷயை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாறிய இடத்திற்கு புத்தன் வீடு என்று பெயர். இங்கு மகிஷியை வதம் செய்ய ஐயப்பன் பயன்படுத்திய வாள் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது . 


எருமேலியில் பேட்டை துள்ளி, கிராத சாஸ்தாவை தியானித்து, அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவங்குகின்றனர். அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்டுகின்றனர். கோட்டைப்படியில் மஹாகணபதியையும் பேட்டைசாஸ்தாவின் ஆலயத்தில் சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்கின்றனர் சுவாமிகள்.பெரிய பாதை பயணம் துவங்குகின்றது தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Monday, November 21, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 3


ஸ்ரீதர்ம சாஸ்தா



இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    20    21     22     23     24  

பூதநாதன், சாஸ்தா, ஐயன், ஐயப்பன், மணிகண்டன், அய்யனார் என்று, ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு திருநாமங்கள். பல ஆலயங்களில் அவர் பல விதமான கோலங்களிலும் அருள் பாலிக்கின்றார். அடியேன் படித்த சாஸ்தாவின் பல்வேறு கோலங்களை இப்பதிவில் காணலாம் அன்பர்களே. 

சாஸ்தா என்றால் ஆளுபவர் என்று பொருள். தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தாதர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீபூதநாத உபாக்கியானத்தில் மகிஷியை சம்ஹாரம் செய்வதற்காக ஐயப்பன் அவதரித்த வரலாறு  முழுமையாக  கூறப்பட்டுள்ளது.  சபரி மலையைப் பற்றி கூறும் ஆதி நூல் இது என்று பெரியோர்கள் கொண்டாடுகின்றனர். மணிகண்ட அவதார காலத்தில், பகவான் பூதநாதனால் தன் வளர்ப்புத்தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத நூலே `ஸ்ரீ பூதநாத கீதை.

சாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராமத்தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மஹாவிஷ்ணுவுக்கோ திருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபடும்  போது ஊரின் நாற்புறத்தும் கிராமத்தேவதைகளாக மாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள்.

கச்சியப்ப சிவாச்சார்யர் கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.நாவலந்தீவில் தேக்க மர நீழலில் நடந்த கூடலில் அரிகரபுத்திரர் அவதரித்தார். லோகரட்சகராக இறைவனால் உடனேயே பணி நியமனமும் மேற்படி ஐயப்ப தேவருக்கு வழங்கப்பெற்றதாகவும் கந்தபுராணத்தின் ‘மகா சாத்தாப்படலம்’ சொல்லும். கந்தபுராணம் இப்பெருமானின் தோற்றப்பொலிவைக் காட்டும் போது,

மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான்
என்று கூறும்.

மேலும் கந்தபுராணம் சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான், போன்றோருக்கு இளவலாக தம்பியாக இக்கடவுள் கொள்ளப்படுவார் என்கிறது. தேவர்களையும் யாவரையும் காக்கும் பொறுப்பில் ஐயனார் என்ற இக்கடவுள் என்றும் ஈடுபட்டிருப்பதாகக் காட்டுகிறது.சூரபத்மனால் வருந்திய இந்திரன் சீர்காழியில் இந்திராணியுடன் மறைந்து வாழலானான். அப்பொழுது தேவர்களுக்காக இறைவனை வேண்ட திருக்கைலைக்கு அவன் செல்ல நேரிட்டது. அப்போது தனித்தவளாயிருந்த இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்கு காவலாக நியமித்தார்.

இந்திரன் எதிர்பார்த்தது போலவே சூரனின் தங்கை அசமுகி இந்திராணியைக் கண்டு அவளின் அழகைப் பார்த்து ‘இவளை நாம் கொண்டு போய் நம் அண்ணனிடம் கொடுப்போம்’ என்று துணிந்து அவள் சிவபூஜை செய்து கொண்டிருந்த சோலையை அடைந்து, இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள். இவ்வமயம் அஞ்சிய இந்திராணி தன் காவல் நாயகராகிய ஐயனாரை நோக்கி தன் அபயக்குரலை வெளிப்படுத்தி அழுதாள்.

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!

இந்த அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த ஐயனாரின் சேனாபதியாகிய வீரமஹாகாளர் அசமுகியின் இழுத்த கையை அறுத்தெறிந்தார். இவ்விடம் இன்றும் சீர்காழியில் ‘கைவிடான் சேரி’ என்று வழங்கப்பெறுவதுடன் அங்கு ஐயனாருக்கு திருக்கோயிலும் அமைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆக, இந்திராணியின் திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிய முருகக் கடவுளுக்கு இளையவரான ஐயனாரின் பெருமையும் முருகனின் புகழ் சொல்ல வந்த கந்தபுராண காவியம் தெளிவுறக் காட்டுகிறது எனலாம்.

பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தம் வாழ்வின் நிறைவில் திருக்கைலாசத்திற்குச் சென்ற போது அவருடன் கைலாசத்திற்கு எழுந்தருளிய சேரமான் பெருமாள் நாயனார் ‘திருக்கைலாச ஞான உலா’ என்ற பிரபந்தத்தை பாடினார். அதனை கைலாசத்திலிருந்து கேட்டு தமிழகத்தின் திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து வெளிப்படுத்தி தமிழ்த் தொண்டாற்றியவராகவும் ஐயனார் பெருமானைக் காட்டுவர். பேரம்பலூருக்கு அருகிலுள்ள திருப்பிடவூர் என்ற இவ்வூரிலுள்ள ஐயனார் இன்றும் கையில் புத்தகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். இவரை ஊர் மக்கள் ‘அரங்கேற்றிய சாமி’ என்று அழைக்கிறார்களாம். தற்போது இத்தலம் திருப்பட்டூர் என்று அறியப்படுகிறது.

சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.

இந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின் பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் தியான ரத்னாவளி காட்டுகிறது. அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர் ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது. இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர் என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது. பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும் கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும் கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே இருக்கிறது.

மஹா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். மகாவிஷ்ணு வின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தாபால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே. இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் என்று அழைத்தார்கள். இவற்றுள் அருள்மிகு பொன் சொரிமுத்து ஐயனார் ஆலயமே பிரதானமானது.

கா சாஸ்தாவை வழிபடுவதால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; யம பயம் விலகும்.

பா சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிவில் காட்சி தருபவர். ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர். நோய்களையெல்லாம் நீக்கும் இவரைதந்வந்த்ரி சாஸ்தாஎன்றும் அழைப்பர். தகழி, திருப்பிரயார் இராம க்ஷேத்ரம் முதலான பல தலங் களில் இவர் அருள் பாலிக்கின்றார்.

ம்மோஹன சாஸ்தா சகலவிதமான செளக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.

ர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்குப்ரபாஎன்ற மனைவியும் `ஸத்யகன்என்ற மகனும் உண்டு. இவர் குழந்தை பாக்கியமும் தரக்கூடியவர்.

திருகுன்னபுழை எனும் க்ஷேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஸ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவைத் தரிசிக்கலாம். இவரது திருக்கோயிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோயில் என்பார்கள்.

கிராத சாஸ்தா,  கவான் வேட்டைக்காரனாக காட்சிதரும் திருக்கோலமாகும். எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடிவில் சாஸ்தாவைக் காணலாம்.

புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனாவர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது.

மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீதர்மசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம். இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன்.

இனி சாஸ்தா சிறப்பு கோலங்களில் அருள் பாலிக்கும் சில தலங்களைப் பற்றி காணலாம்

திருச்சி நீதி மன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.

கையில் பூச்செண்டுடனும், இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணுல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இத்தலத்திலும் பதினெட்டாம் படி உள்ளது. இருமுடியுடன் வருபவர்கள் மட்டுமே இப்படிகளில் ஏற அனுமதிக்கின்றனர். இவ்வாலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய்மூடி நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.

சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணி பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.

சொரி முத்தையனார்

பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.

சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன்விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும், விநாயகப்பெருமானும் அருள்கிறார்கள்.

விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.

அடியேன் படித்த பல செய்திகளின் தொகுப்பே இப்பதிவு. ஏதேனும் செய்தி  தவறாக இருந்தால் தெரிவிக்கவும் திருத்தி வெளியிடுகிறேன்.

ஐயப்பன் தரிசனம் அருமை.ஐயப்பன் விவரங்கள் அருமை. எங்கள் குலதெய்வம் களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா. பூர்ண புஷ்கலையுடன் இருக்கிறார், மடவார் விளாகம் என்ற இடத்தில் அம்பா சமுத்திரம் அருகே. நோய்களையெல்லாம் நீக்கும் ‘தந்வந்த்ரி சாஸ்தா’ அனைவரையும் மனநோய், உடல் நோயிலிருந்து காக்க வேண்டும். மக்கள் இப்போது இரண்டு நோய்களாலும் கஷ்டபடுகிறார்கள்,  என்று பின்னூட்டமிட்டு, ஒரு புது தகவலையும் கொடுத்து, அனைவருக்காகவும் வேண்டிக்கொண்ட  கோமதி அரசு அம்மா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
 


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .