பூதநாதன், சாஸ்தா, ஐயன், ஐயப்பன், மணிகண்டன், அய்யனார் என்று, ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு திருநாமங்கள். பல ஆலயங்களில் அவர் பல விதமான கோலங்களிலும் அருள் பாலிக்கின்றார். அடியேன் படித்த சாஸ்தாவின் பல்வேறு கோலங்களை இப்பதிவில் காணலாம் அன்பர்களே.
சாஸ்தா என்றால் ஆளுபவர் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ – தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.
பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீபூதநாத உபாக்கியானத்தில் மகிஷியை சம்ஹாரம் செய்வதற்காக ஐயப்பன் அவதரித்த வரலாறு முழுமையாக கூறப்பட்டுள்ளது. சபரி மலையைப் பற்றி கூறும் ஆதி நூல் இது என்று பெரியோர்கள் கொண்டாடுகின்றனர். மணிகண்ட அவதார காலத்தில், பகவான் பூதநாதனால் தன் வளர்ப்புத்தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத நூலே `ஸ்ரீ பூதநாத கீதை’.
சாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராமத்தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மஹாவிஷ்ணுவுக்கோ திருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபடும் போது ஊரின் நாற்புறத்தும் கிராமத்தேவதைகளாக மாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள்.
கச்சியப்ப சிவாச்சார்யர் கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.நாவலந்தீவில் தேக்க மர நீழலில் நடந்த கூடலில் அரிகரபுத்திரர் அவதரித்தார். லோகரட்சகராக இறைவனால் உடனேயே பணி நியமனமும் மேற்படி ஐயப்ப தேவருக்கு வழங்கப்பெற்றதாகவும் கந்தபுராணத்தின் ‘மகா சாத்தாப்படலம்’ சொல்லும். கந்தபுராணம் இப்பெருமானின் தோற்றப்பொலிவைக் காட்டும் போது,
மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான் - என்று கூறும்.
மேலும் கந்தபுராணம் சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான், போன்றோருக்கு இளவலாக தம்பியாக இக்கடவுள் கொள்ளப்படுவார் என்கிறது. தேவர்களையும் யாவரையும் காக்கும் பொறுப்பில் ஐயனார் என்ற இக்கடவுள் என்றும் ஈடுபட்டிருப்பதாகக் காட்டுகிறது.சூரபத்மனால் வருந்திய இந்திரன் சீர்காழியில் இந்திராணியுடன் மறைந்து வாழலானான். அப்பொழுது தேவர்களுக்காக இறைவனை வேண்ட திருக்கைலைக்கு அவன் செல்ல நேரிட்டது. அப்போது தனித்தவளாயிருந்த இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்கு காவலாக நியமித்தார்.
இந்திரன் எதிர்பார்த்தது போலவே சூரனின் தங்கை அசமுகி இந்திராணியைக் கண்டு அவளின் அழகைப் பார்த்து ‘இவளை நாம் கொண்டு போய் நம் அண்ணனிடம் கொடுப்போம்’ என்று துணிந்து அவள் சிவபூஜை செய்து கொண்டிருந்த சோலையை அடைந்து, இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள். இவ்வமயம் அஞ்சிய இந்திராணி தன் காவல் நாயகராகிய ஐயனாரை நோக்கி தன் அபயக்குரலை வெளிப்படுத்தி அழுதாள்.
பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!
இந்த அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த ஐயனாரின் சேனாபதியாகிய வீரமஹாகாளர் அசமுகியின் இழுத்த கையை அறுத்தெறிந்தார். இவ்விடம் இன்றும் சீர்காழியில் ‘கைவிடான் சேரி’ என்று வழங்கப்பெறுவதுடன் அங்கு ஐயனாருக்கு திருக்கோயிலும் அமைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆக, இந்திராணியின் திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிய முருகக் கடவுளுக்கு இளையவரான ஐயனாரின் பெருமையும் முருகனின் புகழ் சொல்ல வந்த கந்தபுராண காவியம் தெளிவுறக் காட்டுகிறது எனலாம்.
பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தம் வாழ்வின் நிறைவில் திருக்கைலாசத்திற்குச் சென்ற போது அவருடன் கைலாசத்திற்கு எழுந்தருளிய சேரமான் பெருமாள் நாயனார் ‘திருக்கைலாச ஞான உலா’ என்ற பிரபந்தத்தை பாடினார். அதனை கைலாசத்திலிருந்து கேட்டு தமிழகத்தின் திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து வெளிப்படுத்தி தமிழ்த் தொண்டாற்றியவராகவும் ஐயனார் பெருமானைக் காட்டுவர். பேரம்பலூருக்கு அருகிலுள்ள திருப்பிடவூர் என்ற இவ்வூரிலுள்ள ஐயனார் இன்றும் கையில் புத்தகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். இவரை ஊர் மக்கள் ‘அரங்கேற்றிய சாமி’ என்று அழைக்கிறார்களாம். தற்போது இத்தலம் திருப்பட்டூர் என்று அறியப்படுகிறது.
சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம்
ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி
சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப்
பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா,
மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.
இந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின்
பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி,
தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் தியான ரத்னாவளி காட்டுகிறது.
அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர்
ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது. இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர்
என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது.
பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை
பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும்
கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும்
கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று
கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே
இருக்கிறது.
மஹா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். மகாவிஷ்ணு வின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.
ஆதி
சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா
என்ற இரு
மனைவியர் உண்டு.
அச்சன்கோவில் முதலான
தலங்களில் உள்ள
திருவடிவம் இதுவே.
இந்த ஆதி
சாஸ்தாவையே தமிழகத்தில்
ஐயனார் என்று
அழைத்தார்கள். இவற்றுள்
அருள்மிகு பொன்
சொரிமுத்து ஐயனார்
ஆலயமே பிரதானமானது.
கால சாஸ்தாவை
வழிபடுவதால் எதிரிகளால்
ஏற்படும் தொல்லைகள்
நீங்கும்; யம
பயம் விலகும்.
பால சாஸ்தா
பால் கிண்ணத்தைக்
கையில் ஏந்தி,
குழந்தை வடிவில்
காட்சி தருபவர்.
ஞானத்தையும் வெற்றியையும்
தரக்கூடியவர். நோய்களையெல்லாம்
நீக்கும் இவரை
‘தந்வந்த்ரி சாஸ்தா’
என்றும் அழைப்பர்.
தகழி, திருப்பிரயார்
இராம க்ஷேத்ரம்
முதலான பல
தலங் களில்
இவர் அருள்
பாலிக்கின்றார்.
சம்மோஹன சாஸ்தா சகலவிதமான செளக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.
ஆர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு ‘ப்ரபா’ என்ற மனைவியும் `ஸத்யகன்’ என்ற மகனும் உண்டு. இவர் குழந்தை பாக்கியமும் தரக்கூடியவர்.
திருகுன்னபுழை எனும் க்ஷேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஸ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவைத் தரிசிக்கலாம். இவரது திருக்கோயிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோயில் என்பார்கள்.
கிராத சாஸ்தா, பகவான் வேட்டைக்காரனாக
காட்சிதரும் திருக்கோலமாகும். எருமேலி
முதலான தலங்களில்
இந்தத் திருவடிவில்
சாஸ்தாவைக் காணலாம்.
புவன சாஸ்தாவாக
அவதரித்த வேளையில்
மதனா – வர்ணினீ
என்ற இரு
மனைவியரைக் கொண்டதாக
சுப்ரபேத ஆகமம்
கூறுகிறது.
மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீதர்மசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம். இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன்.
இனி சாஸ்தா சிறப்பு கோலங்களில் அருள் பாலிக்கும் சில தலங்களைப் பற்றி காணலாம்
திருச்சி நீதி மன்ற வளாகம்
அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன;
இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.
கையில் பூச்செண்டுடனும், இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.
கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணுல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.
சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இத்தலத்திலும் பதினெட்டாம் படி உள்ளது. இருமுடியுடன் வருபவர்கள் மட்டுமே இப்படிகளில் ஏற அனுமதிக்கின்றனர். இவ்வாலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய்மூடி நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.
சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு
சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணி பிரியாமல் காத்ததால் இவர்
கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.
பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.
சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன்விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும், விநாயகப்பெருமானும் அருள்கிறார்கள்.
விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.
அடியேன் படித்த பல செய்திகளின் தொகுப்பே இப்பதிவு. ஏதேனும் செய்தி தவறாக இருந்தால் தெரிவிக்கவும் திருத்தி வெளியிடுகிறேன்.
2 comments:
ஐயப்பன் தரிசனம் அருமை.ஐயப்பன் விவரங்கள் அருமை.
எங்கள் குலதெய்வம் களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா. பூர்ண புஷ்கலையுடன் இருக்கிறார், மடவார் விளாகம் என்ற இடத்தில் அம்பா சமுத்திரம் அருகே.
நோய்களையெல்லாம் நீக்கும் ‘தந்வந்த்ரி சாஸ்தா’ அனைவரையும் மனநோய், உடல் நோயிலிருந்து காக்க வேண்டும்.
மக்கள் இப்போது இரண்டு நோய்களாலும் கஷ்டபடுகிறார்கள்.
தொடர்கிறேன்.
அடியேனும் அனைவருக்கும் நோய் நிவர்த்திற்காக வேண்டிக்கொள்கிறேன் அம்மா.
Post a Comment