Thursday, November 24, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 4

                           ஐயன் புஷ்கலை பூர்ணாவை மணந்த வரலாறு 



இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    20    21     22     23     24  

சபரிமலையில் நித்ய பிரம்மச்சாரியாக யோக நித்திரையில் அமர்ந்திருக்கும் பகவானுக்கு ஐயப்பனாக அதாவது மணிகண்டனாக அவதரித்த காலத்தில் திருமணம் கிடையாது. ஆனால் ஆதிகாலத்தில் ஹரிஹரபுத்திரனாக அவதரித்து காந்தமலையில்   கொலுவிருக்கும் சாஸ்தாவுக்கு சில அவதாரங்களில் பூர்ணா மற்றும் புஷ்கலா என்று இரு தேவியர்.  வேறு சில அவதாரங்களில் சத்தியகன் என்ற செல்லப்பிள்ளை மற்றும் பிரபாவதி  என்ற தேவியருடன் உள்ளார் என்பது கர்ணபரம்பரையான வரலாறு ஆகும்.


புண்ணிய பூமியான நேபாள தேசத்தை அப்பொழுது பளிஞன் என்ற அரசன் ஆண்டு வந்தான். மந்திர சாஸ்திரத்தில் பண்டிதனாகவும்,  காளியின் வரப்பிரசாதம் பெற்றவனாகவும் இருந்த அவனுக்கு புஷ்கலை என்ற ஒரு மகளும் இருந்தாள்.   
பளிஞன் தான் என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் பெறுவதற்காக  கன்னிப்பெண்களை  காளிக்குப் பலியிடலானான். அதே தேசத்தில் பரமசிவனிடத்தில் பக்தி கொண்ட கன்னிகா”  என்ற கன்னிப்பெண்ணும் இருந்தாள். அவளையும் காளிக்கு பலியிட அரசன் முடிவு செய்தான். 


வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா ஆலயம் 
கருணாமூர்த்தியான சங்கரன் கன்னிகாவை காப்பாற்ற வேண்டி தனது குமாரனான சாஸ்தாவையும் அவரது பூத கணங்களில் ஒருவரான   கருப்பண்ணனையும் கன்னிகாவிற்கு பாதுகாப்பு கொடுக்க பணித்து மறைந்தார்.

சாஸ்த்திரத்தில் வல்லவரான ஹரிஹர புத்திரன் பளிஞனால் செய்யப்பட்ட பல சூழ்ச்சிகளையும் வென்று கன்னிகாவை காப்பாற்றியதுடன்; சாஸ்தா தான் யார் என்பதனை  மன்னனுக்கு காட்டி  உபதேசித்து, உண்மையை உணர்த்தவே பளிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, தன் மகளான புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து புஷ்கலா காந்தன் என்ற நாமத்தையும் அடைந்தார். 


 "ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா" . 

ஐயப்பனின் ஆதாரத்தலங்களுள் ஒன்றான "ஆரியங்காவில்" ஐயப்பன் புஷ்கலையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  
பூர்ணா புஷ்கலை  அவதார தத்துவம் :

சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்க வேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள்.
மற்றொருத்தியான பூரணையானவள், தற்பொழுது மலையாளம் (கொச்சி, கேரள ராஜ்ஜியம்) என்று அழைக்கப்பட்டு வரும் பிரதேசமானது அப்பொழுது பிஞ்சகன் என்ற அரசனால் ஆளப்பெற்றது. வஞ்சி மாநகரை ஆண்டு வந்த அம்மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார்.
இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந் தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம்,  அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.


கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார்.
மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார்.  பூர்ணையையும் மணந்து கொண்ட ஹரிஹராத்மஜன்  திருக்கயிலாயம்  வந்தடைந்தார்.      
திருக்கயிலையில் பரமசிவன் ஆணைக்குட்பட்டு பூதகணங்களுக்குத் தலைவராகி பூதநாதன் என்ற பெயரையும் பெற்று; பூர்ணா, புஷ்கலா  சமேதராக  எழுந்தருளினார். இவருக்கு சத்யகன் என்ற புத்திரனும் உண்டு. அப்புத்திரனைச் செல்லப்பிள்ளை என்று அழைப்பார்கள்.   


குன்னத்துபுழா சாஸ்தா -பிரபாவதி - சத்யகன்


குன்னத்துப்புழா என்ற தலத்தில் சாஸ்தா,  பிரபாவதி,  இருவருக்கும் இடையில்  மகன் சத்யகனுடன் ஒரே பீடத்தில் (சோமாஸ்கந்த மூர்த்தம் போல்) எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 


"அச்சன்கோவில் அரசே சரணம் ஐயப்பா".


அவரே அச்சன்கோவில்  திருத்தலத்தில் பூரணை புஷ்கலை சமேதராக அரசராக அருள் பாலிக்கின்றார்.  


பூர்ணா புஷ்கலா சமேத சொரிமுத்து ஐயனார்

ஐயப்பனின் மூலாதாரத் தலத்தில் பூர்ணா புஷ்கலா சமேதராக சொரி முத்து ஐயனாராக சேவை சாதிக்கின்றார்.  

பூர்ணையை ஐயன் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் புஷ்கலையின் தந்தையாகிய  பளிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது. புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க  பளிஞன் ஆத்திரம் அடைந்து சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார்.
"ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த "நீ  பூலோகத்தில்  ஜனித்து பிரம்மச்சாரியாயும், யோகியாயும் இருக்கக் கடவாய் என சபித்தான்" சாபத்தை வரமாக ஏற்றுக் கொண்ட பூதநாதன்; தான் பூலோகத்தில் அவதரிக்கும் பொழுது தன்னை வைத்துக் காப்பாற்றுவதற்காகப் பளிஞனையே பந்தள தேசத்து அரசனாகத் தோன்றும்படி அருளினார்.


ஆதி பூதநாதர் 
ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பளிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார்.  இனி ஐயப்பன் பம்பைக் கரையில் தெய்வீகக்குழந்தையாக வந்து தோன்றி சபரிமலையில் பால யோகியாக அமர்ந்த திருவிளையாடலை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.

தகழி என்ற திருத்தலத்தில் வில்வமங்களம் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுயம்பு தர்ம சாஸ்தா ஆலயத்தின் சாஸ்தா தனியாக எழுந்தருளி அருள் பாலித்தாலும், இத்தலத்திலும் ஆரியங்காவைப் போல கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. அம்பாளின் பெயர் பிரபாவதி, மகனின் பெயர் சத்யகன்.
தகழி தர்மசாஸ்தா

ஓம் ஸ்ரீதர்மசாஸ்த்ருனே நம: 

திருமாலுக்கு ஸ்ரீதேவி, பூதேவி; முருகனுக்கு வள்ளி, தெய்வானை; கணபதிக்கு சித்தி, புத்தி; ஐயனாருக்கு பூர்ணா, புஷ்கலா என்று தெய்வங்களுக்கு இரண்டு துணைவியர் இருப்பதன் தாத்பர்யம் என்னவென்று குருசாமி அவர்கள் கூறிய விளக்கம். 

ஆதி பராசக்தி இச்சா சக்தி,  கிரியா சக்தி, ஞான சக்தியாக ஐந்தொழில் ஆற்றுகின்றாள் அதில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் தேவியராக காட்டப்படுகின்றனர்.

வள்ளி குற மாது, தெய்வானையோ தேவ மாது இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆயினும் முருகன் இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை இது உணர்த்துகின்றது.

நாம் அடைய வேண்டிய புருஷார்த்தங்களை வழங்குபவர்கள் தேவிகள் என்று ஸ்ரீதேவி(செல்வம்), பூதேவி ( பொறுமை);  சித்தி ( வெற்றி), புத்தி ( அறிவு), ரித்தி (செல்வம்) என்று பெயரிட்டு குறியீடாக அழைக்கின்றனர்.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: