Wednesday, November 16, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா -1

 முன்னுரை 




இது ஒரு மீள் பதிவுத் தொடர் முதலில் 2017ல் பதிவிட்டேன். இவ்வருடமும் புதிய
செய்திகளுடனும் படங்களுடனும் பதிவிடுகின்றேன். வந்து படித்து ஐயப்பன் அருள் பெறுமாறு இரு கரம் கூப்பி அழைக்கின்றேன். 

இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

               4                       10     11     12      13     14     15     16     17     18     19     20    21     22     23     24     
 
கார்த்திகை மாதம் தொடங்குகின்றது ஐயப்பசுவாமிக்கு மண்டல பூசைக்கும், மகர விளக்கிற்கும் சுவாமியை  தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் மாலை அணியும் புண்ணிய நாள். இந்நன்னாளில்  ஐயனின் பெருவழிப்பாதையில் சுவாமியுடன் பயணம் செய்ய தங்களை அழைக்கின்றேன். 

என்னடா சுவாமியுடன் பயணம் செய்ய அழைக்கின்றேன் என்று எழுதுகின்றீர்களே என்று யோசிக்கின்றீர்களா?  முறையாக விரதமிருந்து ஐயனை தரிசிக்கச் செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தனும் சுவாமிதான்.  ஐயனின் ஆலயத்தின் முன்பு ’தத்வமஸி’ (தத் + த்வம் + அஸி) என்ற  மகா வாக்கியம் மின்னும் அதன் பொருள். நீ யாரைத் தேடிக்கொண்டு வந்தாயோ அதுவாகவே நீ இருக்கின்றாய்.  அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல ஒன்று தான் என்ற அத்வைத உண்மை அது.  


மகாவாக்கியங்கள் என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை.

இந்து மதத்தின் அனைத்து தத்வங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர்.

அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:

  1. பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) - "பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)
  2. அயம் ஆத்மா பிரம்ம (अयम् आत्मा ब्रह्म) - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
  3. தத் த்வம் அஸி(तत् त्वं असि) - "அது(பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)
  4. அஹம் பிரம்மாஸ்மி(अहं ब्रह्मास्मि) - "நான் பிரம்மன்" (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்)

மேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்(ब्रह्मन्), பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் 'பிரம்மனை' குறிக்கிறது. 

இந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும்(ஜீவாத்மா) பிரம்மனுக்கும் (பரமாத்மா) உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது. பிரம்மன் படைப்பின் அடிப்படை தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் தான் என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது அதே போல் பிரம்மனும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும்.


ஐயப்ப வழிபாட்டின் ஒரு சிறப்பு அம்சம் இதுதான், சாதி, மத, பேதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வந்து ஐயனை தரிசிக்கலாம். மாலையிட்ட அனைவரும் சாமிதான். எனவே அனைவரும்  சாமி என்றே அழைக்கப்படுகின்றனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதையும் இங்கே நோக்க வேண்டும். ஜீவாத்மா பரமாத்மாவாக மாறுவதற்குத்தான் விரத முறைகளும் சரணாகதியும். சத்தியமான பொன்னு  பதினெட்டாம் படிகளில் ஏற முறையான விரதமும், இருமுடிக் கட்டும் அவசியம்.  

அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும். ஐயன் அடியேனை தன்னிடம் அழைத்தது  முதுமைக் காலத்தில். சிறு வயதிலேயே ஈடுபாடு இருந்தாலும் அழைத்துச் செல்ல யாரும் இல்லாததால் செல்ல முடியவில்லை. கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்த பிறகும் வெளி மாநிலங்களில் அதிகமாக பணி புரிந்த காரணத்தாலும்  சபரி மலைக்கு செல்ல முடியவில்லை. தற்போது அந்த பாக்கியம் கிட்டியது.  பின்னும் சில முறை பெரிய பாதையில் செல்லும் பாக்கியம் கிட்டியது. அந்த ஆனந்த அனுபவங்களை  பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். 




அடியேனுடைய குருசுவாமி உயர்திரு. M.K.பாபு,  சென்னை  அவர்கள்  கூறுவார், சுவாமி எல்லாம் பூர்வஜென்ம கர்மாவினால் வருவது சிறு வயதிலேயே மலைக்கு வருபவர்கள்  சென்ற ஜென்மத்திலேயே ஐயனை வழிபட்டவர்களாக இருப்பார்கள் ஆகவே அவர்களுக்கு   அது உடனே  சித்திக்கின்றது.  ஐயன் அழைத்தானே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். அதுதான் உண்மை. யாருக்கு எப்போது எவ்வாறு அருள வேண்டும் என்பதை அவன் அறிவான்.

 மகர ஜோதி வரை  இனி வரும் பதிவுகளில் ஐயப்பன்  வரலாறு. ஐயனின் ஆறு ஆதாரத்தலங்கள்  இருமுடியின் தத்துவம். பதினெட்டாம் படிகளின் பெருமை, விரத முறை, பெருவழிப்பாதை யாத்திரை என்று ஐயப்பனுடன் தொடர்புடைய பல்வேறு செய்திகளை அறிந்து கொண்ட வகையில்  பகிர்ந்து கொள்கிறேன் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.






ஹரிஹரபுத்ரன் எவ்வாறு என்பதற்கு குருநாதர் தரும் விளக்கம். விளையாட்டாக உலகைப் படைத்து அருள் வயப்படுத்த பிரம்மமே சிவம்- சக்தி என்று இரு கூறுகளாக பிரிந்தது. அவ்வாறு பிரிந்த சிவமும் சக்தியும் மீண்டும் இணைந்தன. மஹாவிஷ்ணு அம்பாளின் அம்சம். ஆகவேதான் அர்த்தநாரீஸ்வரரில் அம்பாள் வாம பாகத்தில் இருப்பது போல் சங்கரநாராயணரில் விஷ்ணு இடப்பாகம். எனவேதான் அம்பாள் விஷ்ணு சகோதரி என்பது ஐதீகம். எனவே விஷ்ணு, அம்பாளின் அம்சம் என்று கூறுவார்.

சாந்தமயமாக இறைவன் எழுந்தருள்கையில் உமா,
கோபங்கொள்கையில் காளீ,
போரிடுகையில் துர்க்கா,
புருஷத்துவத்துடன் எழுந்தருள்கையில் 
விஷ்ணு என்று சிவபெருமானின் சக்திகளை நான்காகக் கூறலாம்.

இந்த வகையில் சிவபெருமானின் சக்தியாகவும் விஷ்ணு விளங்குகிறார். ‘அரியல்லால் தேவியில்லை’ என்ற அப்பர் பெருமானின் தேவார அடியும் இங்கு சிந்திக்கத்தக்கது. 

இப்பதிவை நிறைவு செய்வதற்கு முன்னர் ஒரு விடுகதை ;

மூக்கில் விரலை வைத்து முகுந்தன் மகன் சிந்திப்பதென்ன?16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மகானாகிய ஸ்ரீமத் அப்பையதீட்சிதர் ஒரு சமயம் அக்கால அரசனாகிய நரசிம்ம பூபாலன் மற்றும் அவனது அரசவைப் புலவருடன் ஒரு ஐயனார் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஐயனார் மூக்கில் ஒரு விரலை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் காட்சி தருவதைக் கண்டார்.

அவ்வூர் மக்களிடம் இது பற்றி வினவிய போது ‘ஒரு ஞானி வருவார். அவர் ஐயப்பனின் சிந்தனையைச் சொன்னவுடன் மூக்கிலிருந்து கையை எடுத்து விடுவார் எங்கள் ஐயப்பன்’ என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டனர். உடனே அரசன் அவைக்களப் புலவரைப் பார்க்க, அவர் பாட, மூக்கிலிருந்து கையை எடுக்கவில்லையாம் சாஸ்தா. அப்பையதீட்சிதரை அரசன் நோக்க, அவர்,

அன்னையாம் அரவணையான், அபிராமவல்லி, இருவரையுமே யான்
இன்சொல் பேசி அம்மே என்றுமே இன்புற்று, கைலாச நாதனாய
பொன்னார் மேனிப்பெருமானை தந்தையெனவும் விளித்ததனால், வைகுண்ட
மின்னிடு பதியுற்றால் மிளிருமெழில் ஸ்ரீதேவியை எப்படி அழைப்பேனோ?

என்று பாட  (அவர் பாடிய வடமொழி பாடலின் மொழி பெயர்ப்பு)  சாஸ்தாவின் மூக்கிலிருந்து கை எடுக்கப்பெற்று விட்டதாம்! ஐயப்பனுக்கு திருமால் அன்னை என்றால்  அவரது மனைவியான திருமகள்? இந்த வினாவின் விடையைச் சொல்ல வல்லவர் யார்?

இந்த வினாவினூடே நாம் அபரிமிதமான இறையருளின் திருவிளையாடல்களை இனங்கண்டு கொள்ளலாம். இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவு முறை பேசுவதும் அம்மூர்த்திகளிடையே பேதங்கள் பார்த்து ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும் நம் சந்தோஷத்திற்காகவும் நாம் அறிவு பூர்வமான நீதிகளைப் பெறவுமே அன்றி அம்மூர்த்திகளுள் பேதமில்லை என்ற உண்மையைக் காட்டவேயாம் என்ற உண்மை இக்கதை ஊடாகவும் வெளிப்படுகின்றது. 


லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் |

பார்வதீ ஹ்ருத்யானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||


                                                            குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

4 comments:

கோமதி அரசு said...

சுவாமியே சரணம் ஐயப்பா!
அருமையான பதிவு.

//அம்மூர்த்திகளுள் பேதமில்லை என்ற உண்மையைக் காட்டவேயாம் என்ற உண்மை இக்கதை ஊடாகவும் வெளிப்படுகின்றது. //

சொன்ன கதையும் கடைசியில் நீங்கள் கூறியதும் அருமை.

தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

அவர்கள் கூறுவார், சுவாமி எல்லாம் பூர்வஜென்ம கர்மாவினால் வருவது சிறு வயதிலேயே மலைக்கு வருபவர்கள் சென்ற ஜென்மத்திலேயே ஐயனை வழிபட்டவர்களாக இருப்பார்கள் ஆகவே அவர்களுக்கு அது உடனே சித்திக்கின்றது.//


உண்மைதான் .

பாடல்பெற்ற சிவதலங்கள் எல்லாம் நிறைவு செய்தார்கள் என் கணவர். 108 வைணவ தலத்தில் பார்க்க வேண்டியது இன்னும் சில தலங்கள்தான். அதற்குள் இறைவன் அழைத்து கொண்டான்.

என் மகனையும் கணவரையும் ஐயப்பன் கோயிலுக்கு போக சொல்ல வேண்டும் என்று ஆசை பட்டேன். ஆசை நிறைவேறவில்லை.

ஐயன் அழைக்கவில்லை. எனக்கும் போக ஆசை . ஐயன் அழைப்பாரா என்று தெரியவில்லை.

S.Muruganandam said...

தொடர்ந்து வாருங்கள் அம்மா.

S.Muruganandam said...

//பாடல்பெற்ற சிவதலங்கள் எல்லாம் நிறைவு செய்தார்கள் என் கணவர். 108 வைணவ தலத்தில் பார்க்க வேண்டியது இன்னும் சில தலங்கள்தான். அதற்குள் இறைவன் அழைத்து கொண்டான்.//

எல்லாம் அவன் செயல். ஆழ்ந்த இரங்கல்கள்.


//எனக்கும் போக ஆசை . ஐயன் அழைப்பாரா என்று தெரியவில்லை.//

நிச்சயம் அழைப்பார். உங்களுக்காக அடியேன் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.