Wednesday, December 20, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -13

காளைகெட்டி ஆசிரமம் - அழுதை ஆறு

இப்பதிவுகளையும்  காணலாமே:  

        4   5   6   7   8   9   10  11   12    14   15   16   17   18   19   20   21

காளைகெட்டி ஆசிரமம் 

பேரூர் தோட்டிலிருந்து  8 கி.மீ  தூரத்தில் அழுதை நதியின் கரையில்  காளைக்கட்டி ஆசிரமம் அமைந்துள்ளது.  இவ்விடத்தில்  சிவ-பார்வதி ஆலய வளாகம் உள்ளது. மேலும் பல குழுக்கள் அன்னதானம் நடந்து கொண்டிருப்பர். தங்கும் வசதிகளும் உள்ளது எனவே பக்தர்கள் சிறிது நேரம் இத்தாவளத்தில் தங்கிச்செல்கின்றனர்.  மணிகண்டன் மகிஷியைக் கொன்று அவளது  உடலின் மேல் ஆனந்த தாண்டவமாடியதைக் காண வந்த சிவ-பார்வதி,  நந்தியைக் கட்டிய இடம் இது என்பது ஐதீகம். எனவே இத்தலம் காளை கட்டி ஆசிரமம் என்றழைக்கப்படுகின்றது.  நந்தியைக் கட்டிய அழிஞ்சல் மரம் (Anjili Tree) இன்றும் நெடிதுயர்ந்து பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கின்றது. 

                                                       
                         காளையைக் கட்டிய மரம்                  


நந்தியெம்பெருமான்

இத்தலத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேஸ்வரன், பூதகணங்களில் முதன்மையானவர். சாஸ்தாவின் கணங்களில் ஒருவர். எனவே அவரை வணங்கி அவர் அனுமதி பெற்று யாத்திரையைத் தொடர வேண்டும். 

கணபதி சன்னதி

 சிவ-பார்வதி  ஆலய   வளாகம் 
(சிவ -பார்வதி சன்னதி திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் )

சிவ-பார்வதி ஆலய வளாகத்தில் சிவன், பார்வதி(பகவதி), கணபதி, சுப்பிரமணியர்,  மஹா விஷ்ணு, பிரம்ம ராட்சஸன், யக்ஷி சன்னதிகள் மற்றும் நாகர் மேடை சன்னதிகள் அமைந்துள்ளன. முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழிலாக அருள் பாலிக்கின்றார். சிவபெருமானுக்கு எதிரே இத்தலத்தின் தேவன் நந்தியெம்பெருமான் அருள் பாலிக்கின்றார். யாத்திரையின் போது அவர் உடன் வந்து காக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். பலர் அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்கின்றனர்.  கேரள ஆலயங்களுக்கே உரிதான வெடி வழிபாடும் இத்தலத்தில் நடைபெறுகின்றது.  சிவன் சன்னதி தொப்பிக்கூரையுடன் முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது.  அனைத்து சன்னதிகளையும் இடித்து விட்டு புதிதாகக் கட்டி கும்பாபிஷேகமும் நடந்துள்ளது.

யக்ஷி சன்னதி(நட) மற்றும் பித்ருக்கள்  நட

தங்குமிடம் 

விரி

அன்னதானம் 

காளைகெட்டி ஆசிரமத்திலிருந்து  பின்னர் இறக்கம்தான். இங்கிருந்து பம்பைக்கு வாகனங்கள் உள்ளன.  சுமார் 2 கி.மீ தூரம் இறங்கினால்  அல்சா என்றழைக்கப்படும் அழுதை நதியை அடைகின்றோம்.  பந்தள பூபாலன் கருணா வருணாலயன் அலஸையில்  விலஸும்  ஈசன்  என்று ஐயப்பன் போற்றப்படுகின்றான். ஏனென்றால்,  பூதநாதன் மகிஷியின் உடலை தூக்கி எறிந்த போது அவ்வுடல் இவ்வாற்றின் கரையில் விழுந்ததாக ஐதீகம்.  பின் அவன் உடலின் மீது நர்த்தனமாடி தத்தனின் சாபத்தை தீர்த்ததாகவும் கூறப்படுகின்றது. மணிகண்டன் அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளுடைய  தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுகிறதாம். ஐயப்ப பக்தர்கள் அழுதை நீராடுகின்றனர். இரவு நேரங்களில் தண்ணீர் மிகவும் குளிராக இருக்கும்.  சரியான படித்துறையும் கிடையாது. எனவே பார்த்து இறங்கவும்.  கன்னி சுவாமிகள் இவ்வாற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து பின்னர் கல்லிடாங்குன்றில் இடுகின்றனர். 

\
மூங்கில் புதர்கள் 


நெடிதுயர்ந்த மரங்கள்



அழுதையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளதால் ஆற்றை எளிதாக  தற்போது  கடக்க முடிகின்றது. அழுதையிலும்  அகில பாரத சேவா சங்கத்தினர் அன்னதானம் செய்கின்றனர். சிறு மருத்துவ முகாமும் உள்ளது.  அழுதை ஏற்றம் சற்று சிரமமானது என்பதால் ஆற்றில் குளித்து பின் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது. 


அழுதையில் குளியல்


ஆற்றின் மறு கரை 

அழுதை மற்றும் காளைக்கெட்டி ஆசிரமம் வரை தார் சாலை உள்ளதால் பெரிய பாதையில் நடக்க ஆரம்பித்து,  முடியாதவர்கள் அல்லது காயம் பட்டவர்கள் இங்கிருந்து  வாகனங்கள் மூலம் பம்பை செல்ல முடியும். பல பக்தர்கள் எருமேலியில் இருந்தும் அழுதை  வரை  வாகனம் மூலம் வந்து அழுதையில் குளித்து விட்டு பின் வாகனம் மூலம் பம்பை சென்று  சிறிய பாதையில் சென்று ஐயனை தரிசிக்கின்றனர்.  அடுத்து அழுதை மலையேறலாம் அன்பர்களே. 


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

2 comments:

தனிமரம் said...

அழுதா நதியில் குளிர்ப்பதும் அதிகாலை குளிரும் மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வு.

S.Muruganandam said...

சுவாமியே சரணம் ஐயப்பா.

உண்மை ஐயா. அதற்காகத்தானே இரண்டு மாதங்கள் உடலையும் மனதையும் பதப்படுத்துக்க்கின்றோம் விரதம் மூலம்.