Sunday, December 24, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -15

இஞ்சிப்பாறைக் கோட்டை  முதல்  கரிவிலாந்தோடு  வரை 


இப்பதிவுகளையும்  காணலாமே: 

         4   5   6   7   8   9   10  11   12   13   14   16   17   18   19   20   21



முக்குழி வரை இறக்கம்

இஞ்சிப்பாறைக் கோட்டையிலிருந்து  முக்குழி வரைக்கும் இறக்கம், அதற்குப்பின் கரிவலாந்தோடு வரை நீண்ட சமவெளி. இரு பக்கமும் விரிகள் உள்ளன.  நடந்து கொண்டே இருப்பதால்  வியர்க்கும் என்பதால் இடை இடையே  தண்ணீர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி, கப்ப கஞ்சி, மூலிகை நீர்  என்று சிறிது சிறிதாக அருந்திக்கொண்டு செல்வது நல்லது. 


வேர்கள் 

வழியெங்கும் வேர்கள் பாதங்களை பதம் பார்க்கின்றன. "சுவாமியே ஐயப்பா,  ஐயப்பா சுவாமியே,  பாத  பலம் தா தேக பலம் தா என்று சரண கோஷமிட்டுக்கொண்டே ஐயனை நெருங்குகிறோம்  மெல்ல மெல்ல மலை இறங்குகிறோம்,. முக்குழியை அடைய சுமார் பத்து செங்குத்தான படிகளில் இறங்க வேண்டும். 


முக்குழி 




முக்குழி மாரியம்மன் சன்னதி

இஞ்சிப்பாறைக்கோட்டையில் இருந்து இறங்கியவுடன் நாம் முக்குழி தீர்த்தத்தை அடைகின்றோம். இங்கு மாரியம்மன் சன்னதி அமைந்துள்ளது. அம்மனை அருமையான மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காக்கும் திரிச்சூலத்துடன் அம்மனை  சேவித்தோம், பொதுவாக பக்தர்கள் இங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு செல்கின்றார். இங்கு பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக தகர கூரைகள் அமைத்துள்ளனர். மூலிகைத் தண்ணீர் வழங்குகின்றனர்.

எருமேலி வழியாக வராமல், அரியக்குடி வழியாக வரும் பக்தர்கள் பெரிய பாதையில் வந்து சேருகின்ற இடம் முக்குழி ஆகும். 


முக்குழியில்  சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொண்டு கிளம்பினால் அடுத்த தாவளம் கரிவிலாம்தோடு.  தூரம்  சுமார் 8 கி.மீ, அதிகமான தூரம்  என்பதால்  பாதை நீண்டு கொண்டே செல்கின்றது. அதுவும் இவ்வளவு தூரம் நடந்து அழுதை ஏறி  இறங்கிய பின் நடப்பதால் தூரம் அதிகமாக தோன்றுகிறது. அடர்ந்த காடு இரு பக்கமும் விரிகள் உள்ளன.  வேண்டுமென்றால் ஓய்வெடுத்துக்கொண்டு நடக்கலாம்.  கானகம் என்பதால் பறவைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம், மணிகண்டன்மார்கள்  அணிந்திருக்கும் மணிகளின் விதவிதமான மணிகளின் ஓசை, சுவாமிகளின் சரண கோஷம் ஆகிய ஒரு கலவை ஒலியினை இரசித்துக்கொண்டே  மெல்ல மெல்ல நடக்கிறோம்.  இடை இடையே  பல சிறு ஒடைகளைக் கடந்து செல்கின்றோம். 


வெள்ளைச் சேட்டன் சத்திரம், புதுச்சேரி   தாவளம் என்று பல இடங்கள்,  நான்கைந்து ஏற்ற இறக்கங்களுக்குப்பின் கரிவிலாந்தோட்டை அடைகின்றோம். ஏற்றத்தில் மூச்சிரைக்கும், இறக்கத்தில் முழங்கால் வலிக்கும், மெல்ல மெல்ல பார்த்து பார்த்துதான் இறங்க  வேண்டும். கரி என்றால் யானை, கரி மலை என்பது  யானைகள் நிறைந்த மலை என்பது பொருள் இம்மலையின் ஒரு புறம் பம்பையாறு மறுபுறம் கரிவிலாந்தோடு என்னும் இவ்வாய்க்கால் அமைந்துள்ளது. யானைகள் வந்து நீர் அருந்தும் வாய்க்கால் என்பதால் இப்பெயர். இந்நீரில் நீராடுவது சிறப்பு.மேலும் கரி மலை ஏற்றத்திற்கு முன் ஓய்வும் தேவை என்பதால்  பக்தர்கள் இங்கு தங்கிச் செல்கின்றனர்.  இத்தோட்டின் குறுக்கே பாலம் எதுவும் இல்லை  கற்களை போட்டு வைத்துள்ளனர். கவனமாகத்தான் ஆற்றைக் கடக்கவேண்டும்.  வாய்க்காலின் இரு புறமும், குளிக்க மற்றும் மல ஜலம் கழிக்க வசதிகள் செய்துள்ளனர். 

இரவில் கானகத்தில் செல்வது ஆபத்து என்றாலும் பல பக்தர்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். அடுத்து கரிமலையேற்றம் கடினம் கடினம் என்பதால்  சற்று கரிவிலாந்தோட்டில் ஓய்வெடுத்துகொண்டு செல்லலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: