எருமேலியிலிருந்து காளைகெட்டி ஆசிரமம் வரை
1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20 21
எருமேலியில் இருமுடிகளுக்கு பூசை செய்து
பெருவழி யாத்திரையை துவக்குகின்றோம்.
பெருவழி மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம்; உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்றைச் சுவாசிக்கும் பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும். ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கப தாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன. வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதா நதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடு வரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்த ரோக சமனியான மூலிகைகள் மண்டிக்கிடக்கின்றன.
இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும் மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள்.
பெரிய பாதை ஐயனின் கோட்டைப் பகுதியாகும் அதில் ஏழு கோட்டைகள் உள்ளன என்பது ஒரு ஐதீகம். முதலாவது கோட்டை எருமேலி இங்கு தர்ம சாஸ்தா அருள் பாலிக்கின்றார். இரண்டாவது காளைகட்டி இங்கு நந்தியெம்பெருமான் தேவனாக விளங்குகின்றார். மூன்றாவது உடும்பாறைக் கோட்டை ஐயப்பன் அருள் பாலிக்கின்றார். நான்காவது கோட்டை கரிமலை இங்கு கரிமலை பகவதியும் கொச்சுக்கடுத்த சுவாமியும் அருள் பாலிக்கின்றனர். ஐந்தாவது கோட்டை சபரிபீடம், இங்கு சபரி துர்கை அருள் பாலிக்கின்றாள். அன்னையை பரசுராமரும், ஸ்ரீராமரும் வணங்கியதாக ஐதீகம். ஆறாவது கோட்டை சரங்குத்தி, இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன் அருள் பாலிக்கின்றான். ஏழாவது கோட்டை பகவான் ஐயப்பனின் பதினெட்டாம் படியாகும். பதினெட்டாம் படிக்கு வலப்பக்கம் கருப்ப சுவாமியும், இடப்பக்கம் கொச்சு கடுத்தசுவாமி கருப்பாயி அம்மையுடனும் அருள் பாலிக்கின்றனர். இவர்களை வணங்கி அருள்பெற்று நிறைவாக ஐயப்ப சுவாமியை தரிசித்து அவரின் அருள் பெறுகின்றோம்.
பெரிய பாதையில் பல்வேறு மலைகளை ஏறியும் இறங்கியும் செல்கின்றோம். இரு மலைகளுக்கிடையில் ஆறுகளையோ அல்லது சிறு வாய்க்கால்களையோ நாம் கடந்து செல்ல வேண்டும். மலை ஏற ஏற உயரமும் அதிகமாகின்றது அதே சமயம் செங்குத்தாகவும் ஆகின்றது எனவே கடினமாகவும் ஆகின்றது எனவே இடையில் போதிய ஓய்வு எடுத்துக்கொண்டு யாத்திரையைத் தொடர்வது நல்லது. மேலும் இருட்டில் மலையேறாமல் ஓய்வெடுப்பது உத்தமம்.
வழியில் சரியான உணவு கிட்டாது, பாறைகள், பாதங்களைப் பதம் பார்க்கும் சிறிய கற்கள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மரங்களின் வேர்கள், முட்களைப் போலக் குத்தும் மரக் குச்சிகள் எனக் கரடுமுரடான பாதை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். ஒற்றையடிப் பாதையையொட்டி கிடுகிடு மலைச் சரிவுகள். கரணம் தப்பினால் அதலபாதாளத்தில் இழுத்துச் சென்றுவிடும். இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் ஐயனே நம்மை வழிநடத்திச் செல்வதால் காட்டுப்பாதையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதில்லை. பக்தர்கள் சொல்லும் வழிநடை சரணங்கள் காடு முழுவதும் எதிரொலிக்கின்றது. .
எருமேலியில் தொடங்கி பம்பை, சன்னிதானம் வரையிலான சுமார் 52 கி.மீ. நடப்பது பெரிய பாதை. அடர்ந்த காடு, மலைகளைக் கடந்து செல்லும் இந்தப் பாதையில் யாத்திரை மேற்கொள்வது எளிதானதல்ல.எருமேலியில் இருந்து நடக்கத் தொடங்கினால் பேரூர்தோடு வரை தார்ச்சாலை. அங்கிருந்துதான் ஐயப்பனின் பூங்காவனம் தொடங்குகிறது. காளைகட்டி ஆசிரமம் வரையான பாதை சிரமமின்றி இருக்கும். அதன்பிறகு ஒற்றையடிப் பாதையாகச் செல்லும் காட்டு வழிதான.
காளைகட்டி, அழுதா நதி, அழுதா மலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் இவற்றைக் கடந்து சென்றால் பம்பையை அடையலாம். பமபையில் குளித்து களைப்பைப் போக்கி பின்னர் கன்னிமூல கணபதியை வணங்கிவிட்டு, நீலிமலை அப்பாச்சி மேடு, சபரிபீடம் கடந்து 18 படிகளில் ஏறி சென்றால், ஐயப்பனைத் தரிசிக்கலாம்.
பெருவழிப்பாதயின் முக்கிய தாவளங்களையும் தூரத்தையும் காணலாமா அன்பர்களே : \
1. எருமேலி - பேரூர்த்தோடு (வாய்க்கால்) தார் சாலை 3.2 கி.மீ
2. பேரூர்த்தோடு - காளைக்கெட்டி ஆசிரமம் பகுதி தார் சாலை மிகுதி மண் சாலை 3.5 கி.மீ
3. காளைக்கெட்டி சமவெளி 7 கி.மீ
4. காளைக்கெட்டி அரியக்குடி சமவெளி - 4.2 கி.மீ
5. அரியக்குடி - முக்குழி மலையேற்றம் 3.5 கி.மீ
6. முக்குழி - கரிவலாந்தோடு 8. கி.மீ
7. கரிவலாந்தோடு - கரிமலையேற்றம் 5 கி.மீ
8. கரிமலை இறக்கம் - பெரியானை வட்டம் 4.75 கி.மீ
9. பெரியானை வட்டம் - பம்பா சமவெளி 2.75 கி.மீ
10. பம்பா - சபரி பீடம் ஏற்றம் 2.75 கி.மீ
11. சபரி பீடம் - சன்னிதானம் 3.75 கி.மீ
பேரூர் வாய்க்கால் வரை தார்சாலை
எருமேலியிலிருந்து பேரூர் தோடு வரை தார் சாலை அமைத்துள்ளனர். ஆகவே நடைப்பயணம் எளிதாகவே உள்ளது. வழியில் இரு பக்கமும் கடைகள் உள்ளன, மலையேற்றத்திற்கு உதவும் தடிகள், டார்ச் விளக்குகள் விற்கும் கடைகள் உள்ளன. அவ்வப்போது பேருந்துகள் வருகின்றன என்பதால் கவனத்துடன் நடக்க வேண்டும். இருபக்கமும் அன்னாசி, இரப்பர், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பலா மரங்களையும் நிறையக் காணலாம்.
அதிகாலை சூரிய உதயக் காட்சி
இரு புறமும் இரப்பர் தோட்டங்கள்
பேரூர் வாய்கால்
பேரூர் தோடில் மீன்களுக்கு உணவிடுவது ஒரு வழிபாடு ஆகும். பொரி கிடைக்கின்றது அதை வாங்கி மீன்களுக்கு அளிக்கின்றனர். இது மீனூட்டு என்ற்ழைக்கப்படுகின்றது. ஐயப்பனின் பூங்காவனம் இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது. கோட்டப்படி என்றும் இவ்விடத்தை அழைப்பர். குமுளி செல்லும் பாதை இங்கிருந்து பிரிகின்றது.
பேரூர் தோடில் கணபதி ஆலயம் உள்ளது அங்கு விக்னம் எதுவும் இல்லால் யாத்திரை முடிய வேண்டும் என்று கணபதியை வேண்டினோம், இங்கு சிரமப்பரிகாரம் செய்து கொண்டு சிறிது நேரம் இளைப்பாறி விட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
பேரூர் தோடிலிருந்து .......
இரப்பர் தோட்டங்கள்
காளைகெட்டி ஆசிரமம் செல்லும் பாதையின் ஒரு பகுதி தற்போது தார்சாலையாக மாறிவிட்டது. இப்பகுதியில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. பள்ளிக்குச் செல்லும் சிறார்களைக் கண்டோம். மலைப் பகுதி ஆரம்பமாகி விட்டதை கவனியுங்கள்.
சுப்பிரமணியர் ஆலயம்
மஹாதேவர்
வழியில் இரும்புண்ணிக்கோட்டை என்ற கிராமத்தில் மஹாதேவர் ஆலயத்தில் பிரம்மாண்ட ரூபத்தில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். மேலும் சுப்பிரமணியர் ஆலயத்தில் முருகர், அன்னபூர்ணேஸ்வரி, கிருஷ்ணர், சிறிய கணபதி மற்றும் ஐயப்பன் சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோவில் சார்பில் அன்னதானம் நடைபெறுகின்றது.. இக்கோவிலை ஒட்டி பெரிய பாதை யாத்திரை தொடர்கின்றது. தார் சாலை முடிந்து சிறிய கான்க்ரீட் சாலையாக மாறிய பாதையில் தொடர்கின்றோம். சிறிது தூரன் சென்ற பின் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பலபத்ரா தேவி ஆலயத்தில் அருமையான அலங்காரத்தில் பகவதியை தரிசிக்கலாம். ஸ்ரீகோவிலின் சுவற்றில் அருமையான சுதை சிற்பங்கள் அமைத்திருக்கின்றனர். மேலும் முருகருக்கும், சிவன், கணேசர், ஐயப்பன் ஆகியோருக்கு ஒரு சன்னதியுமாக மூன்று சன்னதிகள் உள்ளன. இவ்வாறு வழியில் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்து கொண்டே சரண கோஷத்துடன் நடைபயணத்தை தொடர்கின்றோம். இந்த நடைப்பயணத்தின் ஒரு சிறப்பு தலையில் உள்ள இருமுடிக்கட்டு மற்றும் தோளில் தொங்குகின்ற ஜோல்னாப்பை. சில பக்தர்கள் தங்கள் குழந்தைகளையும் சுமந்து கொண்டே மலை ஏறுகின்றனர். ஒரு சில குழுவினர் சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்களையும் சுமந்து கொண்டு மலை ஏறுகின்றனர். 18 வருடம் யாத்திரை முடிக்கும் சுவாமிகள் தென்னையை சுமந்து மலையேறுகின்றனர்.
பலபத்ரா தேவி ஆலயம்
கான்க்ரீட் சாலையும் முடிந்து மண்பாதை துவங்கி விட்டது. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதற்கேற்ப கற்கள் பாதத்தை பதம் பார்க்கின்றன. செருப்பு அணியாமல் இரு மாதம் நடக்கச்சொன்னதின் மகத்துவம் இப்போது புரிகின்றது. மனதையும் உடலையும் பதப்படுத்தவே கடுமையான விரதமுறைகள்.
நெடிதுயர்ந்த மரங்கள்
நான்கு ஐந்து பேர்கள் சேர்ந்தால்தான் கட்டிப்பிடிக்க முடியும் என்பதைப் போன்ற பிரம்மாண மரங்கள் மற்றும் மூங்கில் புதர்கள் நிறைந்துள்ளன. இமயமலையில் இருந்து தெற்கு கடற்கரை வரை நாம் மூங்கில்களைக் காணலாம். நெடிதுயர்ந்த மரங்கள் இயற்கையாகவே நிழலை வழங்குகின்றன மற்றும் குளிர்ந்த மூலிகைக் காற்றை சுவாசித்துக்கொண்டே செல்வதால் ஒரு புத்துணர்வை உணர்கின்றோம். காற்று வீசும் போது சருகுகள் விழுகின்றன. அச்சருகுகளை மிதித்து செல்லும் போது சரக் சரக் என்று ஒரு சத்தம் சரண கோஷத்திற்கு பக்க வாத்தியமாக உள்ளது. பல் வித பறவைகளின் சங்கீதத்தை கேட்கிறோம். மற்றும் வண்டுகளின் ரீங்காரமும் துணைக்கு வருகின்றது.
மூங்கில் புதர்கள்
சிறிது தூரம் சென்ற பின் மரங்களே இல்லை, வனத்துறையினர் மரங்களையெல்லாம் வெட்டி மொட்டையாக வைத்துள்ளனர். என்ன தோட்டமாக மாற்றப்போகின்றனோ தெரியவில்லை. மரங்கள் இல்லாததால் தூரத்தில் மலை முகடுகள் அருமையாக தெரிந்தன, இப்பகுதியில் வெயில் சுரீர் என்று சுட்டது.
மலை முகடுகள்
விரி
வழி நெடுக விரி என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் உள்ளன. அவற்றில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம், படுத்து தூங்கலாம், தேநீர், அன்னாசி, தர்பூசணி சாப்பிடலாம். எலுமிச்சை சாறு அருந்தலாம். சென்ற வருடம் முதல் குடிநீர் பாட்டில் விற்பனையை நீதிமன்றம் தடை செய்து விட்டதால் குடி தண்ணீருக்கு அங்கங்கே வைத்துள்ள மூலிகை நீரை மட்டுமே அருந்தும்படி ஆனது. எனவே தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது உத்தமம் கிடைக்கின்ற இடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டு உடன் எடுத்துச் செல்ல வேண்டும்..
கால்கள் கெஞ்சின, மெள்ள மெள்ள முன்னேறினோம். வறண்டு போன ஆற்றுப்படுகைகள், கற்பாறைகள், புதர்கள் நிறைந்த காட்டுப்பாதையில் தொடர்ந்து எப்போது காளைகெட்டி ஆசிரமம் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். பாதை நீண்டு கொண்டே சென்றது. இடப்பாகம் இருந்த இறக்கமும் மலைகளும் வலப்பக்கம் மாறி விட்டது. இரண்டு வறண்ட வாய்க்கால்களைக் கடந்தோம். ஒரு சமயத்தில் வெடி சத்தமும், மைக் ஒலியும் காதில் பட்டது. காளைக்கெட்டி ஆசிரமத்தை அடைந்து விட்டோம் என்பதை உணர்ந்து சற்று வேகத்தைக் கூட்டினோம் தண்ணீருடன் கூடிய ஒரு வாய்க்காலை கடந்தோம்.
காளை கெட்டி ஆசிரமத்திற்கு அருகில் உள்ள வாய்க்கால்
காளைக்கெட்டி ஆசிரமம்
மெள்ள மெள்ள நடந்து முதல் தாவளமான காளை கெட்டி ஆசிரமத்தை அடைந்தோம். தாவளம் என்றால் தங்கும் இடம் என்று பொருள். காளைக்கெட்டி ஆசிரமத்தின் சிறப்பு என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
குருசாமி திருவடிகளே சரணம்
சுவாமியே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .
No comments:
Post a Comment