Saturday, February 23, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -5

மூன்றாம் திருநாள் காலை தாராகாசுர வாகன சேவை 

தாரகாசுர வாகன சேவை -1

வாருங்கள் சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த சிவ சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க செல்லலாம். வாரியார் சுவாமிகள் மிகவும் வேடிக்கையாக சொல்லுவார், முருகர் ஒருவர் தான் ஆண் பிள்ளை ஏஎனென்றால் தாயின் கலப்பு இல்லாமல் அவதாரம் செய்தவர் அவர் ஒருவர்தான். அந்த சுவாமியைத்தான் நாம் இப்போது தரிசனம் செய்கின்றோம்  இச்சா சக்தியாகிய வள்ளி நாயகி, ஞான சக்தியாகிய  தெய்வநாயகி ஆகிய  தேவியர் இருவருடன் நின்ற கோலத்தி   ஞான சக்தியாகிய சக்தி வேல் தாங்கி, சக்தியாயுதம், வஜ்ராயுதம், அபய வரத கரங்களுடன் மந்தகாசப்புன்னகையுடன் ஓங்கார ரூபனாய்  நமக்கு எல்லாம் அருளை வாரி வழங்க எழிலாக நின்றிருக்கிறான் அருட்குமரன். முருகன் அருள் முன்னிற்கும் என்பதை அவன் முன் நின்றால் தாங்கள் உணரலாம் அவ்வளவு அலைகள். ஆகவே தான் எப்போதும் இவ்வாலயத்தில் கூட்டம் அலை மோதுகின்றது. அவன் அருளில் சிறிது நேரம் கலந்து நிற்கின்றோம். உற்சவர் முகப்பு போல மூலவர் முகப்பும் பித்தளை கவசம் பூண்டுள்ளது. இவருக்கு 1994ம் ஆண்டு பக்தர்களால் தங்கக் கவசம் சமர்பிக்கப்பட்டது.

மூஷிக வாகனத்தில் விநாயகர் 
சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் இந்த கருணை வள்ளலிடம் ஒரு துர்மார்க்கன் திருட வந்தான். ஐயனை நெருங்கியவுடன் அவன் ஒலமிட்டு அலறி வெளியே வந்து விழுந்தான். அவனது கண்கள் இரண்டும் பறி போயின. கோயில் சொத்தை திருட நினைப்பவருக்கெல்லாம் இது ஒரு பாடமாக அமைந்தது.  


அழகன் முருகனை
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் – தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையம் சூரனும் வெற்பும் – அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
  என்று துதித்து வணங்குகிறோம்.



                       
கந்தருவி வாகனத்தில் தேவியர் -1

சிவ சுப்பிரமணிய சுவாமியின் பிரகாரத்தில் உற்ச  மூர்த்தங்களுக்கான சன்னதிகளும் உள்ளன.சிவ சுப்பிரமணிய சுவாமி உற்சவர் பிரம்மோற்சவ காலங்கள் மற்றும் கார்த்திகையன்று வீதி உலா வந்தருளுகின்றார்.    உற்சவர் சன்னதிக்கு வலப்பக்கம், பிரதோஷ நாயகர், சைவ சமயக் குரவர் நால்வர் பெருமக்கள் மற்றும்  சேக்கிழார் பிரான் உற்சவ மூர்த்தங்கள். ஆங்கில வருடப்பிறப்பன்று நால்வர் விழா நடைபெறுகின்றது. சுவாமிகள் மாட வீதி வலம் வந்து பின்னர் நடராஜப் பெருமான் திருமுன்பு இவர்கள் எழுந்தருளி திருமுறைகள் ஓதப்படுகின்றன. இவர்களுக்கு நேர் எதிரே  ஒரு சன்னதியில் சிவகாமி சுந்தரி உடனுறை ஆடல் வல்லான் அருள் பாலிக்கின்றார். ஐயனின் குஞ்சித பாதத்தின் கீழ் திருமுரைக்கோயில் உள்ளது. இவர் ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம் மற்றும் மாசி மக நாள் ( பிரம்மோற்சவ தீர்த்த வாரியன்று) காலை திருவீதி உலா வந்து அருளுகின்றார். இவருடன் ஆறுமுகப் பெருமானும் உடன் வந்து அருளுகின்றார். ஐயனுக்கு இடப்பக்கம் உள்ள சன்னதியில் தேவியருடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் அற்புதமான தரிசனம் தருகின்றார் சண்முகர். இச்சன்னதியிலேயே பழனி ஆண்டவர் உற்சவரும், பால சுப்பிரமணியரும் எழுந்தருளியுள்ளார். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்தன்று பழனி ஆண்டவர் உற்சவம் கண்டருளுகின்றார். மயில் மேல் அமர்ந்த கோல பால சுப்பிரமணியர் மஹா கந்தசஷ்டி உற்சவம் கண்டருளுகின்றார்.  

அற்புத அலங்காரத்தில் சிவசுப்ப்ரமணிய சுவாமி  

உற்சவருக்கு இடப்புறம்  துறவுக்கோல அருணகிரி நாதர் உற்சவ மூர்த்தம். இவர் இக்கோவிலின் சிறப்பு ஆகும்   அருணகிரி நாதரின் சன்னதியை அடுத்து நவ வீரர்கள் சன்னதி. வீர பாகு, வீர கேசரி, வீர சிம்மம், வீர தீரன், வீர மார்த்தாண்டன், வீராந்தகன், வீரராட்சஷன், வீர புரந்தரன், மற்றும் வீர பரமேஸ்வரன்   ஆகிய நவ வீரர்கள் விநாயகப்பெருமானுடன் எழுந்தருளியுள்ளனர் . சன்னதி வலத்தை பின்னர் தொடரலாம் தற்போது மூன்றாம் திருநாள் காலை தாராகாசுர வாகன சேவையை கண்டு களிக்கலாமா அன்பர்களே. தொண்டை நாட்டின் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் காலை சிறப்பு உற்சவம் ஆகும். இத்திருக்கோவிலில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், சிவ சுப்பிரமணிய சுவாமி பிரம்மாண்ட தாராகசுர வாகனத்திலும், தேவியர் இருவரும் கந்தர்வ ஸ்த்ரி( கந்தருவி) வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா வருகின்றனர் அந்த அற்புத காட்சிகளைத்தான் இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே.   

தாரகாசுர வாகன சேவை -2

தாரகன் என்பது ஆணவ மலம், சிங்கமுகாசூரன் கன்ம மலம், சூரபத்மன் என்பது மாயா மலம், இந்த மூன்று மலங்களும் ஜீவான்வாமை அஞ்ஞான கடலில் தள்ளி துன்புறுத்துகின்றன. முருகப்பெருமான் இந்த மூன்று மலங்களையும் தமது ஞான வேல் கொண்டு சம்ஹாரித்து அருளுகின்றார் என்பதே இந்த தாரகாசுர வாகனத்தின் தாத்பரியம். நாமும் அந்த சிவ குமாரனை சரணமடைந்து  மும்மலம் நீக்கப்பெற்று முக்தியடைவோமாக. 



 கந்தருவி வாகனத்தில் தேவியர் -2




ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் 

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பரிபூரண தரிசனம் கிடைத்தது... நன்றி...

மாதேவி said...

பெருவிழாவில் கண்கொள்ளாக் காட்சிகள்.

S.Muruganandam said...

வாருங்கள் திண்டுக்கல் தனபாலன். எஅழில் கொஞ்சும் அழகனின் தரிசனம் பெற தொடர்ந்து வாருங்கள்.

S.Muruganandam said...

வெற்றி வேல் முருகனின் அழகில் மயங்கித்தான் இத்தொடரை ஆரம்பித்தேன். இன்னும் வரும் வந்து சேவியுங்கள் மாதேவி.

S.Muruganandam said...

இப்பதிவில் உள்ள இரு படங்களி வேண்டுபவர்கள் பிரிண்ட போட ஏதுவாக கொடுத்துள்ளேன். வேண்டுபவர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் high ர்resolution படம் அனுப்பி வைக்கிறேன்.

Test said...

அருமையான பதிவு ஐயா. இப்பதிவில் இடம் பெற்றுள்ள வாகனங்களை தற்போது தான் முதன்முறையாக தரிசிக்கின்றேன் ஐயா.

S.Muruganandam said...

முருகனுக்கு உரிய வாகனங்கள் இவை. சில கோவில்களில் சூர பத்மன் வாகனம் உண்டு. ஆட்டி கிடா வாகனம் தகடு என்றும் அழைக்கப்படுகின்றது. தஞ்சை மாவட்டத்தில் சூர சம்ஹாரத்தின் போது முருகர் மேஷ வாகனத்தில்தான் எழுந்தருளுவார். சிக்கலில் தங்க மேஷ வாகனம் மிகவும் அருமையாக இருக்கும்.

Test said...

தகவல்களுக்கு நன்றி ஐயா