Friday, October 31, 2008

கந்தன் கருணை -5

வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி


சைதை காரணீஸ்வரம்
காலை தொட்டி உற்சவம்



முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா?

கந்தா என்றழைக்கவா? கதிவேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்.

கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமியின் அருட்கோலம்


காமதேனு வாகனத்தில் தேவ குஞ்சரி

கந்த கோட்ட இரண்டாம் நாள்
ஈசனுடன் ஞான மொழி பேசும் கோலம்



ஐந்தாம் நாள் நவ வீரர்களுடன் மந்திராலோசனை

சூரபதமன் கொடுமையை அழித்து தேவர்களையும் அனைவரும் காக்க திருவுளம் கொண்ட சிவபெருமான் தன் ஐந்து முகத்டோடு அம்மையின் அம்சமான கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் முகமும் கொண்ட ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணில் இருந்தும் ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அப்போது வெப்பம் தாங்காமல் அன்னை மலை மகள் கௌரி ஓடிய போது பார்வதி தேவியின் பாதச்சிலம்பிலிருந்து தெறித்த நவரத்தினங்களில் இருந்து நவ வீரர்கள் தோன்றினர். ஐயனின் நெற்றிக்கண்ணில் இருந்த வந்த பொறிகளை அக்னி தாங்கி கங்கையிலே சேர்க்க ஆறும் குழந்தைகளாயின.கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்த இக்குழந்தைகளை அன்னை பார்வதி ஒன்றாக்கி ஸ்கந்தனாக்கினார்.

மாணிக்கவல்லி் - வீரபாகு

தரள வல்லி - வீர கேசரி


புஷ்பராக வல்லி - வீர மகேந்திரர்

கோமேதகவல்லி - வீர மகேசர்

வைடூரியவல்லி - வீரபுரந்தரர்

வச்சிரவல்லி - வீரராக்கதர்

மரகதவல்லி - வீர மார்த்தாண்டர்

பவளவல்லி - வீராந்தகர்

நீலவல்லி - வீரதீரர்.

மேலும் நவ சக்திகளின் வியர்வையிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர் முருகப்பெருமானின் படைவீரர்களாக.



கந்த கோட்டம் விமானம் மற்றும் கோபுர தரிசனம்

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே

ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

வேலும் மயிலும் துணை.

(நாளை சூர சம்ஹாரம்)


கந்தன் கருணை தொடரும்.............

கந்தன் கருணை -4

சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம்
முருகப்பெருமான்



வடபழனி திருக்கோவில் இராஜகோபுரம்



வடபழனி ஆண்டவர் - மூலவர்

அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனை ஆள் புனிதா சரணம் சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம்



வடபழனி ஆண்டவர் குதிரை வாகனம்


திருமயிலை சிங்கார வேலவர் எழிற்கோலம்

சிங்கார வேலவர் கந்தருவன் வாகனத்தில்

செங்குந்தக் கோட்டம் சிவ சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனம்


சைதை திருக்காரணீஸ்வரம்
முருகர் போர்க் கோலம்


சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலையில் கண்ட கந்தர் சஷ்டி நினைவுகள். பிரசண்ட விநாயகர் திருக்கோவிலில் தினமும் காலையில் முருகருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை. மாலை மெரவணை. ஆறாம் நாள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தவர்கள் தண்டு சாறு பருகி விரதம் முடிப்பர் மாலை விசாலாக்ஷி அம்பாளிடம் சக்தி வேல் வாங்குதல், பின் சூர சம்ஹாரம் ஆரம்பம். காப்பு கட்டியவர்கள் வேல் ஏந்தி வருவார்கள் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும். முதலில் கோவிலின் முன்னர் கஜமுகாசுரன் சம்ஹாரம், பின் ஊர்வலம் தொடரும் பெரிய கடை வீதியில் சிங்கமுகாசுரன் சம்ஹாரம், பின்னும் ஊர்வலம் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் பானு கோபன் சம்ஹாரம் நிறைவாக சூரபத்மன் சம்ஹாரம், சேவலும் மயிலும் பொம்மையாக வைக்கப்படும் சூரன் தலை இருந்த இடத்தில் வேப்பிலை வைக்கப்படும். பின் வெற்றி வீரராக முருகன் கோவிலுக்கு திரும்புவார். அடுத்த நாள் காலை வெகு சிறப்பாக வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் மாலை மயில் வாகனத்தில் மெரவணை என்று கந்தர் சஷ்டியை கண்டு களித்ததை இன்றும் மறக்க முடியவில்லை முருகா.

சண்முகக் கடவுள் போற்றி! சரவணத்துதித்தோய் போற்றி!

கண்மணி முருகா போற்றி! கார்த்திகை பாலா போற்றி!

தண்மலர்க் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி!

விண்மதி மதன வள்ளி வேலவா போற்றி! போற்றி !

வேலும் மயிலும் துணை.





கந்தன் கருணை தொடரும்.............

Wednesday, October 29, 2008

கந்தன் கருணை -3

பழனி முருகன்





சென்னை சைதை காரணீஸ்வரர் ஆலயம் திருமுருகன் அருட்கோலம்




சென்னை சைதை சிவசுப்பிரமணிய சுவாமியின் கருணைக் கோலங்கள்
மேலே வில் கொண்டு சூர சம்ஹாரம் செய்ய புறப்படும் கோலம்
தேவியருடன் பௌர்ணமி புறப்பாடு



கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி

மேஷ ( ஆட்டுக்கிடா) வாகனத்தில்
முத்துக்குமார சுவாமியின் எழிற் கோலம்

முருகனுக்கு சூரனான மயில் மட்டுமா வாகனம் இல்லை , இல்லை தெய்வாணை அம்மையின் தந்தையான இந்திரன் அளித்த ஐராவதமாம் வெள்ளை யாணையும் திருமுருகனுக்கு ஒரு வாகனம். நாரதர் செய்த ஒரு வேள்வியின் போது மந்திர மாறுதல் காரணமாக ஒரு ஆட்டுக்கிடா தோன்றியது அது விண்ணையும் மண்ணையும் கதி கலங்கச்செய்தது. தேவர்கள் தேவ சேனாபதியாம் முருகனிடம் முறையிட வீரபாகுவை அனுப்பி முருகன் முன் கொண்டு வரச்செய்து அதன் திமிரை அடக்கி வாகனமாக கொண்டார். எனவே எங்கள் கொங்கு மண்டலத்தில் முருகன் சூர சம்ஹாரத்திற்கு சப்பரத்தில் வர வீரபாகுத்தேவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளுவார். அதே தஞ்சை மண்டலத்தில் சூர சம்ஹாரத்திற்க்கு முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளுவார். சிக்கல் சிங்கார வேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளுவதைக்காண கண் கோடி வேண்டும்.
தொண்டை மண்டலத்தில் பல ஆலயங்களில் சூர சம்ஹாரத்திற்க்கு முருகன் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றார்.

-------------------------------------------------------------

இன்று சென்னை சைதை செங்குந்த கோட்டத்தில் கந்தர் சஷ்டி உற்சவம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று பார்ப்போமா? தினமும் காலை தொட்டி உற்சவம், வீரபாகுவுடன் வீதி வலம் வருகின்றார் கந்த வேள், காலையிலும் மாலையிலும் லட்சார்ச்சனை. மூலவர் சிவ சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், உற்சவர் சிங்காரவேலவர் ஆகியோருக்கு ஏக காலத்தில் அர்ச்சனைகள் நடைபெறுகின்றது. அர்ச்சனை முடிந்த பின் குமரஸ்தவம், பின் தீபாரதனை. மாலையில் சிவிகை உற்சவம். கந்தர் சஷ்டியன்று பகலில் 108 பாற்குட அபிஷேகம், பின் இளங்காளியம்மனிடம் சக்தி வேல் வாங்குதல், மாலை புஷ்பத்தேரில் சூர சம்ஹாரத்திற்கு எழுந்தருளுகின்றார் கந்த சுவாமி, போருக்கு செல்லும் போது வில் தாங்கி எழுந்த்ருலுகின்றார். தண்ணீர் தொட்டியருகில் சூர சம்ஹாரம், முருகன், நாரதர், வீரபாகு, நவ வீரர்கள், சூரன் வேடத்துடன் அன்பர்கள் கந்த புராணத்தை நாடமாக நடிக்க ஒவ்வொரு சூரனாக முருகம் சம்ஹாரம் செய்கின்றார். பின் சூரபத்மனை முருகன் சக்தி வேலால் சம்ஹாரம் செய்ய அவன் மயிலாகவும் சேவற் கொடியாகவும் மாற முருகன் திருக்கரத்தில் இருந்த வில் மரைந்து சேவற்கொடி தாங்கி மயில் வாகனத்துடன் தீபாராதனை . மறு நாள் தெய்வயாணை அம்மை திருக்கல்யாணம், அப்போது அன்பர்களுக்கு அன்னதானம் நடைபெறுகின்றது. பின் மயில் வாகனத்தில் புறப்பாடு, விழா நிறைவாக கந்தப்பொடி உற்சவம் என்று கோலாகலமாக ஸ்கந்த சஷ்டி உற்சவம் நதைபெறுகின்றது சிவ சுப்பிரமணிய சுவாமிக்கு.

***********

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும் கனலோப முழு மூடனும் கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம் அறு மாச்சரிய விழனனும் கொலை என்றியம்புபா தகனுமாம் இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும் எனைப்பற்றிடாமல் அருள்வாய்

சேமமிகு மாமறியின் ஓம் எனும் அருட்பதத்திரள் அருள் மலய முனிவன்
சிந்தனையின் வந்தனை வந்தமெய்ஞ் ஞானசிவதேசிக சிகா ரத்னமே.

தாமம் ஒளிர் சென்னையில்கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி சண்முகத் தெய்வமணியே


ஆசை என்னும் உட்பகைவனும்,
சினம் என்னும் பொல்லாதவனும்..
உலோபம் என்னும் அறிவீனனும் ( ஈயாமை)
பெண்ணாசை என்ற பயனற்றவனும்
செருக்கு என்னும் குருட்டுத்தனமான ஆங்காரியும்
மாச்சர்யம் என்னும் இழிந்தவனும் (பொறமை)
என்னை வந்து அணுகாமல் அருள் வாய் கீர்த்திமிகு சென்னைப்பதியில் உரைகின்ற கந்த கோட்ட வேலவனே என்று வேண்டுகிறார் வள்ளலார் சுவாமிகள் .


வேலும் மயிலும் துணை.





கந்தன் கருணை தொடரும்.............

Tuesday, October 28, 2008

கந்தன் கருணை -2

முத்துக்குமார சுவாமி


வைத்தீஸ்வரன் கோவில்



வள்ளி தெய்வாணையுடன் திருமுருகன்


பாரத்வாஜேஸ்வரம் சென்னை




செங்குந்தக்கோட்டம் திருக்கல்யாணக்கோலம்

கஜ வள்ளி

வன வள்ளி









திருப்போரூர் சுயம்பு முருகர் ஆலய கோபுரம்













திருப்போரூர் திருக்குளம்


சக்தி வேல் கொண்டு சூர சம்ஹாரத்திற்கு எழுந்தருளும் செங்குந்தக்கோட்ட அழகன்







மயில் வாகனம் - திருநள்ளார்



வள்ளலார் பாடிய தர்மமிகு சென்னை கந்த கோட்டத்துள் வளர் கந்த வேள் (முத்துக்குமார சுவாமி)








ஸ்கந்த சஷ்டி விழா கந்த கோட்டத்தில் ஆறு நாட்கள் வெகு சிறப்பாக கோடி அர்ச்சனையுடன் நடைபெறுகின்றது. மூலவர் கந்த சுவாமிக்கு மூலவர் சன்னதியிலும், உற்சவர் முத்துக் குமார சுவாமி ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சலிலும் , சரவணப் பொய்கை குளக்கரையிலே ஞான தண்டாயத பாணிக்கும், கல்யாண மண்டபத்தில் ஆறு முக சுவாமிக்கும் என நான்கு இடங்களில் கோடி அர்ச்சனை பெரு விழாவாக நடைபெறுகின்றது.




அப்போது ஒவ்வொரு வேளையிலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், சோடசோபசாரம். வேத பாராயணம், திருமுறை பாராயணம், ஜபம், ஹோமம் சந்தர்ப்பணை முதலிய வைபவங்களுடன் கோடி அர்ச்சனை சிறப்பாக நடைபெறுகின்றது. சமஸ்கிருதத்தில் சகஸ்ரநாமம் முடிந்த பிறகு அன்பர்கள் அனைவரும் முருகனை துதிக்க ஏதுவாக தமிழில் நூற்றியெட்டு போற்றிகள் கூறுவது வேறு எக்கோவிலிலும் இல்லாத ஒரு புதுமை.




கோடி அர்ச்சனையில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக பால சுப்பிரமணியர் குளக் கரையில் எழுந்தருளி அர்ச்சனைகளை ஏற்றுக்கொள்கிறார்.




கந்தன் கலையரங்கத்தில் ஆறு நாட்களும் ஆறு விதமான கொலு,


மஹா ஸ்கந்த ஷஷ்டி முதல் நாள் வள்ளியை மணம் புரிய யானையாக வந்து உதவிய யானை முகருக்கு சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் வைர அங்கியில் அருட் காட்சி கலச யாக பூஜை.



இரண்டாம் நாள் முருகப் பெருமான் ஈசனுடன் ஞான மொழி பேசும் கோலம்




மூன்றாம் நாள் நவ வீரர்களுடன் சூர சம்ஹார மந்திர ஆலோசனை,




நான்காம் நாள் திரு முருகன் சிவபெருமானை வழிபடும் திருக்கோலம்,




ஐந்தாம் நாள் திருமுருகன் மாறுபடு சூரரை வதைக்க சிவசக்தியிடம் சக்தி வேல் வாங்கும் திருக்கோலம்,




மஹா ஸ்கந்த சஷ்டியன்று சூர சம்ஹார திருக்காட்சி என்று நாள் ஒரு அலங்காரம்.





கந்தர் ஷஷ்டியன்று மாலை ஆறு மணியளவில் தொண்டை மண்டல வழக்கப்படி சூர சம்ஹாரத்திற்கு தங்கக் குதிரை வாகனத்தில் அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் எழுந்தருளி , ஆணவமாம் சூரர்களை சம்ஹாரம் செய்தருளுகின்றார். சூர சம்ஹாரம் பாய்க்கடைக்கு அருகில் நடைபெறுகின்றது. முருகன் கோபமாக சூர சம்ஹாரத்தை செய்ய புறப்படும் விதமாக அன்று அவருக்கு சிவப்பு அங்கி அணிவிக்கப்படுகின்றது. சூர சம்ஹாரதிற்குப்பின் மயில் வாகனத்துடனும் சேவற் கொடியுடனும் வெற்றி வீரராக தேவ சேனாபதி முத்துக் குமரன், சரவணபவன், காங்கேயன், ஸ்கந்தர், கார் மயில் வாகனன், குகன் வீதி உலா வந்து அருள் பாலித்து நள்ளிரவுக்கு மேல் திருக்கோவிலுக்கு திரும்புகிறார்.


அடுத்த நாள் காலையில் மூலவர், ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி மஹா அபிஷேகமும், மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 பன்னீர் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று மாலை தெய்வானை அம்மை திருக்கல்யாணம் பின் மயில் வாகன உற்சவம் திருவீதி உலா என வெகு சிறப்பாக நடை பெறுகின்றது ஸ்கந்தர் ஷஷ்டி பெரு விழா.


முத்துக் குமரனின் நாமங்கள் நீங்காது ஒலித்திடும் நன்னாளான இந்த ஸ்கந்த ஷஷ்டி நாட்களில் நீங்கா மனத்தினராய் வழிபடும் அன்பர்களுக்கு, நித்தம் துனையிருந்து அருள் பாலிக்கும் கந்த வேளை இத்திருநாட்களில் நாடி வந்து வணங்கும் பக்த கோடிகள் எண்ணிலடங்கர். கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும் மின்விளக்கு அலங்காரங்களையும். பிரதி தினமும் காலை முதல் திருக்கோயில் முன்பாக உள்ள முத்துக்குமரன் கலை அரங்கில் கலை நிகழ்ச்சிகள் என்று ஆறு நாட்களூம் கோலாகலம்தான் இத்திருக்கோவிலில்.


இனி வள்ளலார் பாடிய ஒரு பாடல்


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்



உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்



பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்



பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்



மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்



மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்



தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே



தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி சண்முகத் தெய்வமணியே


( எதிர்மறையாக எதுவும் கூறாமல் நேர் மறையாகவே பாடியுள்ளார் பாருங்கள் வள்ளலார் சுவாமிகள்)




வேலும் மயிலும் துணை.





கந்தன் கருணை தொடரும்.............

Thursday, October 23, 2008

கந்தன் கருணை -1

"சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் ", இது அனைவரும் அறிந்த பழமொழி இதன் உண்மையான விளக்கம் - ஸ்ரீ கந்தர் சஷ்டியில் அழகன் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கருப்பையில் (அகப்பையில்) குழந்தை தோன்றும். ஆம குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறந்த உபாயம்

"கந்தர் சஷ்டி விரதம்" .






மூவிரு முகங்கள் போற்றி


முகம் பொழி கருணை போற்றி


ஏவரும் துதிக்க நின்ற


ஈராறு தோள் போற்றி


காஞ்சி மாவடி வைகும்


செவ்வேள் மலரடி போற்றி


அன்னான் சேவலும் மயிலும்


போற்றி; திருக்கை வேல்


போற்றி; போற்றி
என்றபடி நாம் அனைவரும் உய்ய கருணை பொழியும் கநத வேளின் கந்தர் சஷ்டி புனித நாட்களில் அவரது அற்புத திருக்கோலங்கள், (பல் வேறு ஆலயங்களில் பதியப்பட்டவை) கண்டு அவரின் கருணை மழைக்கு பாத்திரமாகுங்கள் அன்பர்களே.




சென்னை கந்தசுவாமி கோவிலென்று அழைக்கப்படும் முத்துகுமார சுவாமி தேவஸ்தானம்
முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்தில்


















திருச்செந்தூரில் போர் புரிந்து சினம் எல்லாம் தீர்ந்த கந்தன் அலங்காரம்



















ஜெயந்தி நாதர்











அருணகிரிநாதர் பாடிய



திருமயிலை சிங்கார வேலவர்











திருமுருகனுடன் பவனி வரும் வீரபாகு தேவர்



சண்டிகேஸ்வரர்


கந்தர் சஷ்டி நாளில் திருமயிலையில் கொடியேற்றத்துடன் விழா சிறப்பாக நடைபெறுகின்றது, தினமும் மாலை சண்டிகேஸ்வரர், வீரபாகு தேவருடன் புறப்பாடு சூர சம்ஹாரம், ஒரு நாள் ஏக தின லட்சார்ச்சனை, திருக்கல்யாணம், பின் யானை வாகனப்புறப்பாடு (மயில் அல்ல , தேவ யாணைக்கு இந்திரன் சீதனமாக அளித்த ஐராவதம் என்பது ஐதீகம், கருவறையில் தேவியர் இருவரும் யாணை மீது அமர்ந்த கோலத்தில்தான் திருக்காட்சி அளிக்கின்றனர். சிங்கார வேலவர் ஆறு திருமுகங்கள் பன்னிரு கரங்களுடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் ) என கோலாகலமாக கந்தர் சஷ்டி உற்சவம் நடைபெறுகின்றது திருமயிலையில் சிங்கார வேலவருக்கு.





சென்னை சைதை செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணியசுவாமி







முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யவில்லை, அவனது அஞ்ஞானத்தை அகற்றி அவனுக்கு வாழ்வளித்தார். அவன் ஆணவம் அகன்றவுடன் மயிலாகவும் சேவலாகவும் மாறினான், மயில் முருகருக்கு வாகனம் ஆனது சேவல் அவரது கொடியானது எனவேதான் கந்தப்பெருமான் கருணைக்கடல் எனப்படுகின்றார்.










கருணை மழை பொழியும் கந்த வேள் தங்க மயில் வாகனத்தில் பவனி வரும் கண்கொள்ளாக் காட்சி.




சித்தி சுந்தரி கௌரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பர

சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாகத விலாச விமலி

குத்து திரிசூலி திரிகோணத்தி ஷட்கோண
குமரி கங்காளி ருத்ரி

குலிச வோங்காரி ரீங்காரி யாங்காரி யூங்
காரி ரீங்காரி யம்மா

முத்தி காந்தாமணி முக்குண துரந்தரி
மூவர்க்கும் முதல்வி ஞான


முதுமறைக்கலைவாணி அற்புத புராதனி
மூவுலகும் ஆன சோதி

சக்தி சங்கரி நீலி கமலை பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினாரைக் குத்தி எதிர்
ஆடிவரும் சத்ரு சங்கார வேலே.

வேலும் மயிலும் துணை.
கந்தன் கருணை தொடரும்.............