Showing posts with label சிங்கார வேலவர். Show all posts
Showing posts with label சிங்கார வேலவர். Show all posts

Saturday, May 14, 2016

திருமயிலை திருக்குடமுழுக்கு -3


 
நர்த்தன விநாயகர் விமான சுதை சிற்பங்கள்


கி.பி 7-ஆம் நூற்றாண்டில் இந்தத் தலம், 'மயிலாப்பில்' 'மயிலாப்பு' என அழைக்கப்பட்டது. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திருமயிலை, 'மயிலாபுரி' என்று வழங்கப்பட்டதை, நந்திக் கலம்பகம் தெரிவிக்கிறது. சமணர்கள், இந்தத் தலத்தை பத்மநாதபுரம், வாமநாதபுரம் எனும் பெயர்களால் அழைத்தனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில், ஜயங் கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப்பரணி 'பண்டை மயிலை' என்று குறிப்பிடுகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த வெனிஸ் வணிகர் மார்கோபோலோ, 'மயில்கள் நிறைந்த பகுதி' என திருமயிலையைக் குறிப்பிடுகிறார்.

சிங்கார வேலவர் சன்னதி

சிங்காரவேலவர் விமானம் 

திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன ஸ்ரீகபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.


சிங்காரவேலவர் விமான சுதை சிற்பங்கள்


கற்பகவல்லியம்மை பதிகம்திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம்கற்பகவல்லி மாலைகற்பகவல்லியார் பஞ்சரத்தினம்ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள்கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம்திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலைதிருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள்.

திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ்திருமயிலைக் கோவைசிங்கார வேலர் மாலைதிருமயிலைக் குகன் பதிகங்கள்மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலைஅருட்புகழ்மயிலைச் சிங்காரவேலர்இரட்டை மணிமாலைதிரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்டவை.


தவிரதிருமயிலைப் பிள்ளைத் தமிழ்திரு மயிலைக் கோவைதிருமயிலை உவமை வெண்பாதிருமயிலை வெண்பாவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள்திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள்தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள்கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும். அதாவது சிவனாரையும் உமையவளையும் முருகக் கடவுளையும் போற்றிக் கொண்டாடியதற்கு ஏராளமான நூல்களே சான்றுகளாகத் திகழும் மிகப் புராதனமான திருத்தலம்மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்!

Saturday, May 7, 2016

திருமயிலை திருக்குடமுழுக்கு -1


கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியன்று "கயிலையே மயிலை  - மயிலையே கயிலை" என்றழைக்கப்படும் திருமயிலைப்பதியின்   திருக்குடமுழுக்கு மிகவும் சிறப்பாக நடைந்தேறியது. "அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும்" எனவே   அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரின் மாப்பெருங்கருணையினால் அந்த வைபவத்தை கண்ணுறும் பாக்கியம் கிட்டியது.  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றபடி அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். 


                                   
 உமையம்மை(கற்பகாம்பாள்) மயில் உருவில்
 இறைவனை வணங்கும் காட்சி 

                                     

நீதியரசர்கள், அமைச்சர்கள் என்று முக்கியப்பிரமுகர்கள் கலந்து  கொண்டதால் பாதுகாப்பு மிகவும் பலமாக இருந்தது.  குடமுழுக்கு நாளன்று   A அனுமதி சீட்டு (Pass) உள்ளவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்கள் மட்டுமே குடமுழுக்கு நிறைவு பெற்ற பிறகு சுவாமி அம்பாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.  மற்ற அனுமதி சீட்டுக்காரர்கள்( B, C)  திருக்கோவிலின் மண்டபங்களின் மேல் இருந்து குடமுழுக்கை மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். ஆலயத்தின் உள்ளே பக்தர்களை விட காவல்துறையினரே அதிகமாக இருந்தது போல தோன்றியது.   


                                     
சந்திரசேகரர் 

பல ஆயிரம் பக்தர்கள் திருக்கோவிலின் வெளியே நின்றுதான் குடமுழுக்கை தரிசித்தனர். மாலை அடியேன் சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது பக்தர் வரிசை கிழக்கு மாடவிதி நிறைந்து, தெற்கு மாத வீதியில் வெள்ளீஸ்வரர் ஆலயம் வரை நீண்டிருந்தது.  

                                     
நர்த்தன விநாயகர் முகப்பு 

உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

பூம்பாவையே! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி ( குடமுழுக்கு) விழாவைக் காணாது செல்வது முறையோ  என்று ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் பதிகம் பாடி அங்கமான( எலும்பு) பூம்பாவையை உயிருடன் வரச்செய்து கபாலிப்பெருமான் அருளால் அற்புதம் புரிந்த வரலாற்றை மனதில் கொண்டு இந்த குடமுழுக்குக் காட்சிகளைக் காணுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். 

சிங்காரவேலவர் முகப்பு



அண்ணாமலையார் சன்னதி முகப்பு 


கிழக்கு இராஜகோபுரம் 



தொடரும்...............

Tuesday, March 29, 2011

திருமயிலை அறுபத்து மூவர் திருவிழா -2

இந்த பதிவிற்காக தாங்கள் LOGAN ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும். என்ன ஆயிற்று கடந்த மூன்று மாதங்களாக பதிவுகள் ஒன்றும் வரவில்லையே என்று பின்னூட்டம் இட்டிருந்தார் அவர்.


செப்டெம்பர் மாதம் யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத் யாத்திரை, பின்னர் டிசம்பர் மாதம் நவ பிருந்தாவனம், மந்திராலயம் யாத்திரை பின் வீட்டில் ஒரு விஷேசம் என்று இருப்பதாலும், இமயமலையின் இனிய பயணத்தைப் பற்றிய கட்டுரையை எழுதி வருவதாலும் சமயம் குறைவாக இருப்பதால் பதிவிட முடியவில்லை.


பதிவிடுதலை நிறுத்தி விடும் எண்ணம் இல்லை. முடிந்த அவனருளால் அவன் தரும் தரிசனங்களை அன்பர்களாகிய தங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள அவன் அருள் புரியட்டும்.



வரம் தரும் திருமயிலையின் கற்பகாம்பாள்




கபாலீஸ்வர சுவாமியின் பின்னழகு




அம்பாளின் முன்னழகும் பின்னழகும்



இந்தப் பதிவின் ஒரு சிறப்பு அம்சம் இப்படங்கள் அனைத்தும் இரவில் எடுக்கப்பட்டவை. எப்போதும் அறுபத்து மூவர் திருவிழாவை இதுவரை பகலில் தரிசனம் செய்யும் பாக்கியம்தான் கிட்டியுள்ளது சிவசக்தியின் அருளால் இந்த வருடம் இரவில் வடக்கு மாட வீதியில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. மின்னொளியில் பஞ்ச மூர்த்திகளும் மற்ற தெய்வங்களும் அற்புத காட்சி தங்கள் முன்னே.


வள்ளி தெய்வாணை உடனுறை சிங்கார வேலவர்





அழகன் முருகனின் பின்னழகு


இந்த அறுபத்து மூவர் திருவிழாவின் ஒரு சிறப்பு கபாலீச்சுர தெய்வ மூர்த்தங்கள் மட்டுமல்ல திருமயிலையின் பல்வேறு ஆலயங்களின் மட்டும் அல்ல சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து முத்துக் குமரனும் இத்திருவிழாவில் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி தருகின்றனர். அதனால் தானோ என்னவோ அறுபத்து மூவர் என்றவுடன் திருமயிலைதான் எல்லாருக்கும் நினைவுக்கு வருகின்றது. வருடா வருடம் கூட்டம் அதிகமாகிக்கொண்டுதான் செல்கின்றது. இந்த வருடம் அடியேன் இரவு சுமார் 9 மணிக்கு திருக்கயிலை நாதனாம் கபாலியை தரிசனம் செய்யும் போது அவர் அப்போது தான் வடக்கு மாட வீதிக்கு எழுந்தருளியிருந்தார்.



பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர்


திருமயிலையில் கபாலீஸ்சுரம், வெள்ளீச்சுரம், வாலீஸ்வரம், காரணீஸ்வரம், முதலிய ஏழு சிவாலயங்கள் அமைந்துள்ளன.



சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன்



முத்துக்குமரன் பின்னழகு



வள்ளுவரும் வாசுகியும்



மயிலையிலே கோயில் கொண்டாய் முண்டக கண்ணியம்மா


மயிலை நாதர் நாயகியே முண்டக கண்ணியம்மா

Wednesday, March 24, 2010

திருமயிலை கபாலீச்சுரம் -4

கயிலையே மயிலை, மயிலையே கயிலை

இனி இவ்வளவு சிறப்புகள் இத்திருக்கோவிலை வலம் வருவோமா? திருமயிலையின் நடுவே பரந்து விரிந்த மாடவீதிகளுடனும், ஐயன் நோக்கும் மேற்குப்பக்கத்தில் திருக்குளத்துடனும் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிழக்கு இராஜ கோபுரம் நெடிதுயர்ந்து நம்மை வரவேற்கின்றது இந்த ஏழு நிலைக் கோபுரம். பஞ்ச வர்ணங்களால் வர்ணம் தீட்டப்பட்டு, புராண நிகழ்ச்சிகளை விளக்கும் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்த 120 அடி உயர கோபுரம். கோபுரத்தில் சிவ சிவ என்னும் நாமமும், அன்னை சிவபூஜை செய்யும் கோலம் நியான் விளக்கில் இரவில் ஒளிரும் வண்ணம் அமைந்துள்ளது.



கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் அந்த கோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால் நர்த்தன வினாயகர் சன்னதி, ஐயனைப் போல கூத்தாடும் பிள்ளையாரைக் கண்டவுடன் ஒரு ஆனந்தம், தானாகவே கைகள் தலையில் குட்டிக்கொள்கின்றன, தோப்புக்கரணம் போடுகின்றோம். வினாயகர் சன்னதிக்கு வலப்புறம் உண்ணாமுலை அம்மை சமேத அண்ணாமலையார் சன்னதி ஐயன் கிழக்கு நோக்கிய முக மண்டலம் அம்மை தெற்கு நோக்கிய முக மண்டலம். பௌர்ணமியன்று இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது. நாகாபரணத்துடன் சிறப்பு அலங்காரத்துடன் பௌர்ணமியன்றும் சிறப்பாகவும், மற்ற நாட்களில் தினந்தோறும் அன்பர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று தேவாரம், திருவாசகம் பாடியும் வழிபடும் போது நாமும் இவரை வழிபடுவது ஒரு ஆனந்தம்.

மூஷிக வாகனத்தில் நர்த்தன விநாயகர்

எதிரே பசு மடம். அண்ணாமலையார் சன்னதியை அடுத்து சிங்கார வேலவர் சன்னதி. சக்தி வேல் பெற்ற சண்முகரும் ஐயனைப் போலவே மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வள்ளி தேவசேனா சகிதம் காட்சி தருகின்றார் ஆறுமுகங்களுடன் மயிலின் பன்னிரண்டு கரங்களுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுஅமர்ந்த கோலத்தில் தேவியர்கள் இருவரும் யானை வாகனத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை கார்த்திகை மைந்தனை கண்டு கண்கள் குளமாகின்றன. இம்முருகன் மீது அருணகிரிநாதர்

அறமி லாவதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம நஞ்சற் திளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித் த்தருள் கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே
விறல்நி சாரர் சேணைகளஞ்சப் பொரும் வேலா
விமல மாதபி ராமித ருஞ்செயப் புதல்வோனே
மறவல் வாணுதல் வேடைக் கொளும் பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவியக் கந்தப் பெருமாளே

என்று திருப்புகழ் பாடியுள்ளார். சிங்கார வேலவர் சன்னதி முன்னர் 16 தூண்கள் கொண்ட முன் பண்டபம் உள்ளது மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகன் சுதைச் சிற்பம் அற்புதம் தேவியர் இருவரும் நின்ற கோலம் அற்புதம், மேலும் வீரபாகுவும், சவுந்திர சண்டிகேஸ்வரரும் சிங்கார வேலரை வணங்கிய நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிங்கார வேலருக்கு தனி கொடி மரம் உள்ளது. ஸ்கந்தர் சஷ்டி திருவிழாவின் போது கொடியேற்றத்துடன் விழா நடைபெறுகின்றது. அங்குரார்ப்பணம், கொடியேற்றம் விடையாற்றி என்று ஒரு திருவிழாவிற்க்கே உரிய அனைத்து அம்சங்களுடன் சிறப்பாக நடைபெறுகின்றது மஹா கந்த சஷ்டி விழா. முதல் நாள் மயிலுடன் நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் சிங்கார வேலவர் யதாஸ்தானம் விடுத்து நவராத்திரி மண்டபத்திற்கு எழுந்த்ருளுகிறார். சிறப்பு அபிஷேகம் கண்டருளி பின் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை விநாயகர், வீரபாகு, சவுந்திர சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் வீதி இரண்டாம் பிரகாரம் உலா வருகின்றார். கந்தர் சஷ்டியன்று வடக்கு மாட வீதியில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகின்றது. சூர சம்ஹாரத்திற்கு முருகன் திருத்தேரில் எழுந்தருளும் போது அன்னையரும் எழுந்தருளுகின்றார். சூரசம்ஹாரத்திற்கு தேரில் எழுந்தருளும் சுவாமி, சூரசம்ஹாரம் முடிந்த உடனே வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஏழாம் நாள் சிங்கார வேலவருக்கு ஏக தின லக்ஷார்ச்சனை, மாலை திருக்கல்யாணம். திருக்கல்யாணம் முடிந்த பின் ஐராவதாமாம் வெள்ளை யானை வாகனத்தில் மாட வீதி உலா வந்து அருள் புரிகின்றார் சிங்கார வேலவர், அடுத்த 6 நாட்கள் விடாயாற்றி உற்சவம். உற்சவ களைப்பு நீங்கிய பின் யதாஸ்தானம் திரும்புகின்றார். சிங்கார வேலவரின் சன்னத்திற்கெதிரே இவரை திருப்புகழால் பாடிப்பரவிய அருணகிரி நாதர் சன்னதியும் உள்ளது.


சிங்கார வேலவர்

சிங்கார வேலவரைத் தவிர மேலும் பழனி ஆண்டவருக்கும் ஒரு தனி சன்னதியுள்ளது. வடக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார் ஞான தண்டாயுத சுவாமி அருகிலேயே இத்தலத்திலே பிறந்து , வாழந்து

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்




மாறா அருள் அரன் தன்னை மன ஆலயத்து இருத்தி
ஆறா அறிவாம் ஒளி விளக்கு ஏற்றி அகமலர்வாம்
வீறா மலர் அளித்து அன்பு எனும் மெய் அமிர்தம் கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவதே

என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமாள் பாடிய படி மனத்தையே செம்பொன் கோவிலாக்கி , அதில் உயர் ஞானத்தை விளக்கேற்ற ஆனந்த திருமஞ்சனம் ஆட்டி அன்பாகிய அமுதை நிவேதனமாக செய்து முக்தியும் அடைந்த 63 நாயன்மார்களுக்குள் ஒருவரான வாயிலார் நாயனார் சன்னதி. வாய் பேசாமல் மவுன விரதம் பூண்டு தியானம் செய்து வந்தார், "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் எனவே வாயிலார் நாயனார் என்று திருப்பெயர் பெற்றார். வேளாளர் வகுப்பை சார்ந்தவர். மறவாமை என்னும் தியானத்தினால் மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றவர். மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று இறைவனின் திருவடி அடைந்தார்.

வாயிலார் நாயனாரின் பெருமையை எம்பிரான் தோழர், வண்தொண்டர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது 'திருத்தொண்டர் தொகையில்' போற்றி உருகிப் பாடும் போது கூறுகிறார்.

" துறைக் கண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென் மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்"

அதாவது 'கடற்கரையில் மலிந்து விளைந்திருக்கும் செந்நிறப் பவளங்களின் ஒளியால் இருளகன்று சோதிச்சுடராய் திகழும் மயிலாப்பூரில் அவதரித்த வாயிலார் நாயனாருக்கும் அடியேன் - என்றார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். வாயிலார் நாயனார் அன்னை கற்பகவல்லியை வணங்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் இவர் சன்னதி அமைந்துள்ளது.


நவராத்திரி மண்டபத்தூணில் அமைந்துள்ள சில அற்புத சிற்பங்கள்

வாயிலார் நாயனார் சன்னதிக்கு இடப்பக்கம் நவராத்திரி மண்டபம், கொடி மண்டபம் என்று அழைக்கப்படும் மண்டபம். அம்மை மயிலுருவாய் இறைவனை பூசிக்கும் சிற்பம் முதலான பல அழகான சிற்பங்கள் பஞ்ச மூர்த்திகளின் சிற்பங்கள் கொண்ட தூண்களை உடைய இந்த மண்டபத்தில் தான் அம்மை விரைமலர் குழல்வல்லி மறைமலர்ப்பதவல்லி, கற்பகவல்லி, நவராத்திரி கொலு தரிசனம் அருளுகின்றாள். பங்குனிப் பெருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்தின் போது பஞ்ச மூர்த்திகள் இம்மண்டபத்தில் தான் எழுந்தருளி கொடியேற்றம் காண்கின்றனர். கார்த்திகை ஐந்தாம் வாரம் (மார்கழியில் வந்தால் கூட) 1008 சங்குகள் இம்மண்டபத்தில் வைத்து இரண்டு காலம் பூசை நடை பெற்று கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற வாரங்கள் 108 சங்காபிஷேகம், சங்குகள் மஹா மண்டபத்தில் நந்திக்கு முன் வைத்து பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. பிரதோஷத்தன்று பிரதோஷ நாயகர் இம்மண்டபத்தில் எழுந்தருளி பின் கோவில் வலம் கண்டருளுகின்றார். கந்தர் சஷ்டி விழாவன்று சிங்கார வேலவர் பூஜை கண்டருள்வதும் இம்மண்டபத்தில்தான். கச்சேரிகள் மற்றும் சொற்பொழிவுகள் இம்மண்டபத்தில் தான் நடைபெறுகின்றது. இம்மண்டபத்தின் வலப்பக்கம் சமய நூல் நிலையம் உள்ளது. மண்டபத்தின் முன்னே அன்பர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய ஒரு பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.


ஊஞ்சல் சேவை சாதிக்கும் கற்பகவல்லி

இம்மண்டபத்தின் இடப்பக்கம் அம்மன் சன்னதிக்கு எதிரே 4 கால் ஊஞ்சல் மண்டபம். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து அன்னையை அற்புதமாக தரிசனம் செய்யலாம். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியன்று இம்மண்டபத்தில் தான் ஆதி பராசக்தி, ஜகத் ஜனனி, ஜகதாம்பாள், மஹா திரிபுர சுந்தரி, லலிதாம்பாள், அம்பிகை கற்பகாம்பாள் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றாள். சிங்கார வேலவர் சன்னதிக்கு எதிரே அருணகிரி நாதர் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதிக்கு இடப்புறம் மேற்கு இராஜ கோபுரம். இக்கோபுரம் மூன்று நிலை கோபுரம். இக்கோபுரத்தில் நுழைந்தால் கொடி மரம், பலிபீடம். மேலே சுதை சிற்பத்தில் கற்பகாம்பாள் மயிலாய் சிவபூஜை செய்யும் கோலமும், அம்பாளது பூஜைக்கு மனம் மகிழ்ந்த மகேஸ்வரன் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்து ஏற்றுக் கொள்ளும் சிற்பங்கள் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. இராஜ கோபுரத்தின் இடப்புறம் ஞானசம்பந்தர் என்பை பெண்ணுருவாக்கிய அங்கம் பூம்பாவை சன்னதி, திருஞானசம்பந்தரும் இச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். அடுத்து மேற்கிலும் வடக்கிலும் வாகன மண்டபம் பல்வேறு பக்தர்கள் வடமேற்கு மூலையில் நின்றால் ஒரே சமயத்தில் அம்மன் கோபுர கலசங்களையும், இராஜ கோபுரத்தையும் தரிசிக்கலாம் எனவே பக்தர்கள் பலர் அங்கு நின்று கோபுர தரிசனம் செய்வதைக் காணலாம்.

திருக்கோவில் வலம் தொடரும் ............

Friday, October 31, 2008

கந்தன் கருணை -4

சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம்
முருகப்பெருமான்



வடபழனி திருக்கோவில் இராஜகோபுரம்



வடபழனி ஆண்டவர் - மூலவர்

அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனை ஆள் புனிதா சரணம் சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம்



வடபழனி ஆண்டவர் குதிரை வாகனம்


திருமயிலை சிங்கார வேலவர் எழிற்கோலம்

சிங்கார வேலவர் கந்தருவன் வாகனத்தில்

செங்குந்தக் கோட்டம் சிவ சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனம்


சைதை திருக்காரணீஸ்வரம்
முருகர் போர்க் கோலம்


சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலையில் கண்ட கந்தர் சஷ்டி நினைவுகள். பிரசண்ட விநாயகர் திருக்கோவிலில் தினமும் காலையில் முருகருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை. மாலை மெரவணை. ஆறாம் நாள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தவர்கள் தண்டு சாறு பருகி விரதம் முடிப்பர் மாலை விசாலாக்ஷி அம்பாளிடம் சக்தி வேல் வாங்குதல், பின் சூர சம்ஹாரம் ஆரம்பம். காப்பு கட்டியவர்கள் வேல் ஏந்தி வருவார்கள் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும். முதலில் கோவிலின் முன்னர் கஜமுகாசுரன் சம்ஹாரம், பின் ஊர்வலம் தொடரும் பெரிய கடை வீதியில் சிங்கமுகாசுரன் சம்ஹாரம், பின்னும் ஊர்வலம் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் பானு கோபன் சம்ஹாரம் நிறைவாக சூரபத்மன் சம்ஹாரம், சேவலும் மயிலும் பொம்மையாக வைக்கப்படும் சூரன் தலை இருந்த இடத்தில் வேப்பிலை வைக்கப்படும். பின் வெற்றி வீரராக முருகன் கோவிலுக்கு திரும்புவார். அடுத்த நாள் காலை வெகு சிறப்பாக வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் மாலை மயில் வாகனத்தில் மெரவணை என்று கந்தர் சஷ்டியை கண்டு களித்ததை இன்றும் மறக்க முடியவில்லை முருகா.

சண்முகக் கடவுள் போற்றி! சரவணத்துதித்தோய் போற்றி!

கண்மணி முருகா போற்றி! கார்த்திகை பாலா போற்றி!

தண்மலர்க் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி!

விண்மதி மதன வள்ளி வேலவா போற்றி! போற்றி !

வேலும் மயிலும் துணை.





கந்தன் கருணை தொடரும்.............