கயிலையே மயிலை, மயிலையே கயிலை
இனி இவ்வளவு சிறப்புகள் இத்திருக்கோவிலை வலம் வருவோமா? திருமயிலையின் நடுவே பரந்து விரிந்த மாடவீதிகளுடனும், ஐயன் நோக்கும் மேற்குப்பக்கத்தில் திருக்குளத்துடனும் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிழக்கு இராஜ கோபுரம் நெடிதுயர்ந்து நம்மை வரவேற்கின்றது இந்த ஏழு நிலைக் கோபுரம். பஞ்ச வர்ணங்களால் வர்ணம் தீட்டப்பட்டு, புராண நிகழ்ச்சிகளை விளக்கும் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்த 120 அடி உயர கோபுரம். கோபுரத்தில் சிவ சிவ என்னும் நாமமும், அன்னை சிவபூஜை செய்யும் கோலம் நியான் விளக்கில் இரவில் ஒளிரும் வண்ணம் அமைந்துள்ளது.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் அந்த கோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால் நர்த்தன வினாயகர் சன்னதி, ஐயனைப் போல கூத்தாடும் பிள்ளையாரைக் கண்டவுடன் ஒரு ஆனந்தம், தானாகவே கைகள் தலையில் குட்டிக்கொள்கின்றன, தோப்புக்கரணம் போடுகின்றோம். வினாயகர் சன்னதிக்கு வலப்புறம் உண்ணாமுலை அம்மை சமேத அண்ணாமலையார் சன்னதி ஐயன் கிழக்கு நோக்கிய முக மண்டலம் அம்மை தெற்கு நோக்கிய முக மண்டலம். பௌர்ணமியன்று இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது. நாகாபரணத்துடன் சிறப்பு அலங்காரத்துடன் பௌர்ணமியன்றும் சிறப்பாகவும், மற்ற நாட்களில் தினந்தோறும் அன்பர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று தேவாரம், திருவாசகம் பாடியும் வழிபடும் போது நாமும் இவரை வழிபடுவது ஒரு ஆனந்தம்.
எதிரே பசு மடம். அண்ணாமலையார் சன்னதியை அடுத்து சிங்கார வேலவர் சன்னதி. சக்தி வேல் பெற்ற சண்முகரும் ஐயனைப் போலவே மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வள்ளி தேவசேனா சகிதம் காட்சி தருகின்றார் ஆறுமுகங்களுடன் மயிலின் பன்னிரண்டு கரங்களுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுஅமர்ந்த கோலத்தில் தேவியர்கள் இருவரும் யானை வாகனத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை கார்த்திகை மைந்தனை கண்டு கண்கள் குளமாகின்றன. இம்முருகன் மீது அருணகிரிநாதர்
அறமி லாவதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம நஞ்சற் திளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித் த்தருள் கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே
விறல்நி சாரர் சேணைகளஞ்சப் பொரும் வேலா
விமல மாதபி ராமித ருஞ்செயப் புதல்வோனே
மறவல் வாணுதல் வேடைக் கொளும் பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவியக் கந்தப் பெருமாளே
என்று திருப்புகழ் பாடியுள்ளார். சிங்கார வேலவர் சன்னதி முன்னர் 16 தூண்கள் கொண்ட முன் பண்டபம் உள்ளது மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகன் சுதைச் சிற்பம் அற்புதம் தேவியர் இருவரும் நின்ற கோலம் அற்புதம், மேலும் வீரபாகுவும், சவுந்திர சண்டிகேஸ்வரரும் சிங்கார வேலரை வணங்கிய நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிங்கார வேலருக்கு தனி கொடி மரம் உள்ளது. ஸ்கந்தர் சஷ்டி திருவிழாவின் போது கொடியேற்றத்துடன் விழா நடைபெறுகின்றது. அங்குரார்ப்பணம், கொடியேற்றம் விடையாற்றி என்று ஒரு திருவிழாவிற்க்கே உரிய அனைத்து அம்சங்களுடன் சிறப்பாக நடைபெறுகின்றது மஹா கந்த சஷ்டி விழா. முதல் நாள் மயிலுடன் நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் சிங்கார வேலவர் யதாஸ்தானம் விடுத்து நவராத்திரி மண்டபத்திற்கு எழுந்த்ருளுகிறார். சிறப்பு அபிஷேகம் கண்டருளி பின் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை விநாயகர், வீரபாகு, சவுந்திர சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் வீதி இரண்டாம் பிரகாரம் உலா வருகின்றார். கந்தர் சஷ்டியன்று வடக்கு மாட வீதியில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகின்றது. சூர சம்ஹாரத்திற்கு முருகன் திருத்தேரில் எழுந்தருளும் போது அன்னையரும் எழுந்தருளுகின்றார். சூரசம்ஹாரத்திற்கு தேரில் எழுந்தருளும் சுவாமி, சூரசம்ஹாரம் முடிந்த உடனே வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஏழாம் நாள் சிங்கார வேலவருக்கு ஏக தின லக்ஷார்ச்சனை, மாலை திருக்கல்யாணம். திருக்கல்யாணம் முடிந்த பின் ஐராவதாமாம் வெள்ளை யானை வாகனத்தில் மாட வீதி உலா வந்து அருள் புரிகின்றார் சிங்கார வேலவர், அடுத்த 6 நாட்கள் விடாயாற்றி உற்சவம். உற்சவ களைப்பு நீங்கிய பின் யதாஸ்தானம் திரும்புகின்றார். சிங்கார வேலவரின் சன்னத்திற்கெதிரே இவரை திருப்புகழால் பாடிப்பரவிய அருணகிரி நாதர் சன்னதியும் உள்ளது.
சிங்கார வேலவரைத் தவிர மேலும் பழனி ஆண்டவருக்கும் ஒரு தனி சன்னதியுள்ளது. வடக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார் ஞான தண்டாயுத சுவாமி அருகிலேயே இத்தலத்திலே பிறந்து , வாழந்து
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்
மாறா அருள் அரன் தன்னை மன ஆலயத்து இருத்தி
ஆறா அறிவாம் ஒளி விளக்கு ஏற்றி அகமலர்வாம்
வீறா மலர் அளித்து அன்பு எனும் மெய் அமிர்தம் கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவதே
என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமாள் பாடிய படி மனத்தையே செம்பொன் கோவிலாக்கி , அதில் உயர் ஞானத்தை விளக்கேற்ற ஆனந்த திருமஞ்சனம் ஆட்டி அன்பாகிய அமுதை நிவேதனமாக செய்து முக்தியும் அடைந்த 63 நாயன்மார்களுக்குள் ஒருவரான வாயிலார் நாயனார் சன்னதி. வாய் பேசாமல் மவுன விரதம் பூண்டு தியானம் செய்து வந்தார், "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் எனவே வாயிலார் நாயனார் என்று திருப்பெயர் பெற்றார். வேளாளர் வகுப்பை சார்ந்தவர். மறவாமை என்னும் தியானத்தினால் மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றவர். மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று இறைவனின் திருவடி அடைந்தார்.
வாயிலார் நாயனாரின் பெருமையை எம்பிரான் தோழர், வண்தொண்டர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது 'திருத்தொண்டர் தொகையில்' போற்றி உருகிப் பாடும் போது கூறுகிறார்.
" துறைக் கண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென் மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்"
அதாவது 'கடற்கரையில் மலிந்து விளைந்திருக்கும் செந்நிறப் பவளங்களின் ஒளியால் இருளகன்று சோதிச்சுடராய் திகழும் மயிலாப்பூரில் அவதரித்த வாயிலார் நாயனாருக்கும் அடியேன் - என்றார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். வாயிலார் நாயனார் அன்னை கற்பகவல்லியை வணங்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் இவர் சன்னதி அமைந்துள்ளது.
வாயிலார் நாயனார் சன்னதிக்கு இடப்பக்கம் நவராத்திரி மண்டபம், கொடி மண்டபம் என்று அழைக்கப்படும் மண்டபம். அம்மை மயிலுருவாய் இறைவனை பூசிக்கும் சிற்பம் முதலான பல அழகான சிற்பங்கள் பஞ்ச மூர்த்திகளின் சிற்பங்கள் கொண்ட தூண்களை உடைய இந்த மண்டபத்தில் தான் அம்மை விரைமலர் குழல்வல்லி மறைமலர்ப்பதவல்லி, கற்பகவல்லி, நவராத்திரி கொலு தரிசனம் அருளுகின்றாள். பங்குனிப் பெருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்தின் போது பஞ்ச மூர்த்திகள் இம்மண்டபத்தில் தான் எழுந்தருளி கொடியேற்றம் காண்கின்றனர். கார்த்திகை ஐந்தாம் வாரம் (மார்கழியில் வந்தால் கூட) 1008 சங்குகள் இம்மண்டபத்தில் வைத்து இரண்டு காலம் பூசை நடை பெற்று கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற வாரங்கள் 108 சங்காபிஷேகம், சங்குகள் மஹா மண்டபத்தில் நந்திக்கு முன் வைத்து பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. பிரதோஷத்தன்று பிரதோஷ நாயகர் இம்மண்டபத்தில் எழுந்தருளி பின் கோவில் வலம் கண்டருளுகின்றார். கந்தர் சஷ்டி விழாவன்று சிங்கார வேலவர் பூஜை கண்டருள்வதும் இம்மண்டபத்தில்தான். கச்சேரிகள் மற்றும் சொற்பொழிவுகள் இம்மண்டபத்தில் தான் நடைபெறுகின்றது. இம்மண்டபத்தின் வலப்பக்கம் சமய நூல் நிலையம் உள்ளது. மண்டபத்தின் முன்னே அன்பர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய ஒரு பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இம்மண்டபத்தின் இடப்பக்கம் அம்மன் சன்னதிக்கு எதிரே 4 கால் ஊஞ்சல் மண்டபம். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து அன்னையை அற்புதமாக தரிசனம் செய்யலாம். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியன்று இம்மண்டபத்தில் தான் ஆதி பராசக்தி, ஜகத் ஜனனி, ஜகதாம்பாள், மஹா திரிபுர சுந்தரி, லலிதாம்பாள், அம்பிகை கற்பகாம்பாள் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றாள். சிங்கார வேலவர் சன்னதிக்கு எதிரே அருணகிரி நாதர் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதிக்கு இடப்புறம் மேற்கு இராஜ கோபுரம். இக்கோபுரம் மூன்று நிலை கோபுரம். இக்கோபுரத்தில் நுழைந்தால் கொடி மரம், பலிபீடம். மேலே சுதை சிற்பத்தில் கற்பகாம்பாள் மயிலாய் சிவபூஜை செய்யும் கோலமும், அம்பாளது பூஜைக்கு மனம் மகிழ்ந்த மகேஸ்வரன் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்து ஏற்றுக் கொள்ளும் சிற்பங்கள் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. இராஜ கோபுரத்தின் இடப்புறம் ஞானசம்பந்தர் என்பை பெண்ணுருவாக்கிய அங்கம் பூம்பாவை சன்னதி, திருஞானசம்பந்தரும் இச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். அடுத்து மேற்கிலும் வடக்கிலும் வாகன மண்டபம் பல்வேறு பக்தர்கள் வடமேற்கு மூலையில் நின்றால் ஒரே சமயத்தில் அம்மன் கோபுர கலசங்களையும், இராஜ கோபுரத்தையும் தரிசிக்கலாம் எனவே பக்தர்கள் பலர் அங்கு நின்று கோபுர தரிசனம் செய்வதைக் காணலாம்.
திருக்கோவில் வலம் தொடரும் ............
5 comments:
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற் கதி அருள்வாய் அம்மா ....
.அருமையான தொகுப்பு
..
.
.சித்ரம் .//
மிக்க நன்றி
//" துறைக் கண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென் மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்"
அதாவது 'கடற்கரையில் மலிந்து விளைந்திருக்கும் செந்நிறப் பவளங்களின் ஒளியால் இருளகன்று சோதிச்சுடராய் திகழும் மயிலாப்பூரில் அவதரித்த வாயிலார் நாயனாருக்கும் அடியேன் - என்றார் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.//
அருமையான விளக்கம்,
//மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றவர்//
சில தருணங்களில் கோவில் செல்ல மனம் இருப்பின் வேலை மற்றும் பிற சூழல் காரணமாக செல்ல முடியாத தருணம் ஏற்படும் பொழுது வாயிலரையும் பூசலாரையும் மனதில் நினைத்து கொள்வேன்....
//வாயிலரையும் பூசலாரையும் மனதில் நினைத்து கொள்வேன்.//
மனமே கோவில் அதில் இறைவமை இருத்தி மஞ்சனமாட்டி அற்புதமாக பூஜை செய்த இருவரையும் சரியாக உதாரணம் காட்டியுள்ளீர்கள் நன்றி.
Post a Comment