ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இந்த புவனமனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் அலகிலா விளையாட்டுடை பஞ்ச கிருத்ய பராயணனாய், எல்லா உலகங்களுக்கும் நாயகனாய் , விறகில் தீயும், பாலில் படு நெய்யும் போல எங்கும் நிறைந்துள்ள அந்த சிவப்பரம்பொருள் நாம் எல்லோரும் உய்ய அருவமும் உருவமுமாகி லிங்கத்திருமேனியும், பல்வகை திருவுருவங்களும் தாங்கி பரத கண்டம் முழுவதும் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருத்தலங்கள் அனேகம், அவற்றுள் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை. நமது தமிழ் நாட்டிலே சாக்கியர்களாலும், ஜைனர்களாலும் நமது சைவ சமயத்திற்கு இடர் வந்த போது இறையருளால் தோன்றி சைவ சமயத்திற்கு புத்துயிர் ஊட்டிய ஆளுடையப் பிள்ளை என்னும் திருஞான சம்பந்தர், அப்பர் என்னும் திருநாவுக்கரசர், மற்றும் வன் தொண்டர் என்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் தேவாரத்தலங்கள் என்றும் பாடல் பெற்ற தலங்கள் என்றும் போற்றப்படுகின்றன.
தருமமிகு சென்னையில் சென்னையில் பாடல் பெற்ற தலங்கள் மூன்று அவை மூன்றும் கடற்கரையோரம் அமைந்துள்ளன. வடக்கிலே திருவொற்றியூரும், மத்தியிலே திருமயிலையும், தெற்கிலே திருவான்மியூரும் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்கள் இவற்றுள் நடு நாயகமாக அமைந்த திருமயிலையே நாம் காணப்போகும் தலம்.
இந்த திருத்தலத்தின் பெருமைகளை எப்படித்தான் கூறுவது. அன்னை பார்வதியாரே தன் கால் பதித்து நடந்து மயில் வடிவம் கொண்டு சிவ பூஜை செய்த பரம பவித்திர பூமி இது அன்னை மயிலுருவில் பூஜை செய்ததால் மயிலாப்பூர் என்றழைக்கப்படும் தலம்.
சிங்கார வேலவர் சூரபத்மனை அழிக்க மயிலை நாதனை பூசித்து அம்மையிடம் சக்தி வேல் பெற்ற தலமானதால் கந்தபுரி என்று அழைக்கப்படும் ஸ்தலம்.சிங்கார வேலவர் அருணகிரி நாதரால் திருப்புகழ் பெற்ற தலம்.
புன்னை மரத்தடியில் அம்மை சிவபூஜை செய்ததால் புன்னை வனம்.
பிரம்மன் பூசித்து தன் இறுமாப்பு நீங்கி படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலமானதால் பிரம்மபுரி .
வேதங்கள் (மறைகள்) பூசித்து அரசு தொடுகையால் உண்டான பாவத்தைப் போக்கிய தலம் எனவே இத்தலம் வேதபுரி (வேத நகர்) என்றும் அழைக்கப்படுகின்றது.
திருமயிலை கிழக்கு இராஜகோபுரம்
இறைவன் மேற்கு முகமாய் (சத்யோஜாத மூர்த்தமாய்)கபாலீஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிப்பதால் கபாலி நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது திருமயிலை.
எலியாக இருந்த போது திருமறைக்காட்டிலே எம்பெருமானின் கருவறையின் தீபத்தை தூண்டியதால் அடுத்த பிறவியில் அசுர ராஜனாக பிறந்த பலி சக்கரவர்த்தியிடம், மஹா விஷ்ணு வாமன அவதாரத்தில் வந்து மூவடி மண் கேட்ட போது அதை தடுக்க முயன்று கண்ணை இழந்த அசுர குரு சுக்கிராச்சியார் வழிபட்டு இழந்த கண்ணைப் பெற்ற தலம் எனவே இத்தலம் சுக்கிரபுரி என்றும் அழைக்கப்படுகின்றது.
இராமர் வழிபட்டு பகைவரை வென்று மனைவியை அடைந்த தால் தானே திருவிழா நடத்திய தலம்.
அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் சிவநேச செட்டியாரின் மகள் என்பை பூம்பாவை ஆக்கிய தலம், இன்றும் அந்த நிகழ்வை அறுபத்து மூவர் திருவிழாவாக கொண்டாடும் தலம்.
திருமயிலை ஐதீகங்கள்
தன் மனதையே ஞானக் கோவிலாகக் கொண்டு வழிபட்டு முக்தி அடைந்த வாயிலார் நாயனார் வாழ்ந்த தலம்.
மாலவன் புகழ் பாடிய பன்னிரண்டு ஆழ்வார்களுள் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் அவதரித்த தலம்.
உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய வள்ளுவர் வாசுகியுடன் வாழ்ந்த தலம்.
திருமயிலை என்றும், மாமயிலை என்றும் மயிலாப்பூர் அழைக்கபடும் திருமயிலை கபாலீச்சுரம் தான் இவ்வளவு பெருமைகள் பெற்ற தலம்.
பல்லாடு தலைசடை மேலுடையான் தன்னைப்
பாய்புலித்தோ லுடையானை பகவன் தன்னை
சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனை முன் நடர்த்தான் தன்னை
ஆலின் கீழ் இருந்தானை அமுதானானைக்
கல்லாடை புனைந்தருளும் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
என்று அப்பர் பெருமான் பாடியபடி ஐயன் கபாலியாகவும் அம்மை கற்பக வல்லியாகவும் எழுந்தருளி அருள் பாலிக்கும் , "மயிலையே கயிலை, கயிலையே மயிலை" என்னும் திருமயிலையில் இன்று தொடங்கி பங்குனி பௌர்ணமி வரை பங்குனிப்பெருவிழா சிறப்பாக நடைபெறும் இச்சமயத்தில் மயிலாப்பூர் திருத்தலத்தின் பெருமைகளைப்காண்போமா அன்பர்களே?
திருமயிலையின் சிறப்பே அதன் திருவிழாக்கள் தான் இத்தலத்தின் பல்வேறு திருவிழாக்களைக் காணாமல் போதியோ? பூம்பாவாய் என்று பதிகம் பாடித்தான் திருஞான சம்பந்தர் இறந்த பின் சாம்பலும் எலும்புமாக இருந்த பூம்பாவையை அங்கத்துடன் உயிருடன் எழுப்பினார் எனவே இத்தொடரில் இத்தலத்தின் பல்வேறு திருவிழாக்களின் தரிசனங்கள் இடம் பெறும் அனைவரும் வந்து தரிசித்து அருள் பெற வேண்டுகிறேன்.
குறிப்பு: திருமயிலை என்று ஒரு வலைப்பூவையும் அடியேன் ஆரம்பித்தேன் நேரமின்மையின் காரணத்தினால் முழுவதுவதுமாக தொடர முடியவில்லை இனி மேல் திருமயிலையின் சிறப்புகள் இப்பதிவில் தொடரும்.
5 comments:
"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா"
அம்மவின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் :)
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன், குறிப்பாக 63நாயன்மார் வைபவம்
தளம் எது இருப்பின் என்ன? இறைவன் புகழ் பாடுவதற்கும் படிப்பதற்கும்....
//மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன், குறிப்பாக 63நாயன்மார் வைபவம் //
63வர் இல்லாத திருமயிலையை கனவு கூட செய்ய முடியாதே நிச்சயம் வரும்.
//தளம் எது இருப்பின் என்ன? இறைவன் புகழ் பாடுவதற்கும் படிப்பதற்கும்....//
ஆமாம் உண்மைதான்....
கற்பகமே உனை அன்றி துணை யாரம்ம ?
இந்த அற்புதத்தை விளக்க அருள் கூறு ம்மா ''
......சித்ரம்.//
//இந்த அற்புதத்தை விளக்க அருள் கூறும்மா//
எல்லாம் அவள் கருணை
Post a Comment