Monday, March 22, 2010

திருமயிலை கபாலீச்சுரம் -3

திருமயிலையூர் கபாலீசனே உன் பாதம் சரணம்



அக்காலத்திலேயே சென்னையில் இட நெருக்கடி இருந்திருக்கும் போல தோன்றுகிறது. தஞ்சை, திருச்சி மாவட்ட ஆலயங்களைப் போல பிரம்மாண்டமாக இல்லாமல் சிறிதாகவே உள்ளது கோவில் அம்மன் ஐயன் சன்னதியை சுற்றி ஒரு உள் பிரகாரம், மதில் சுவற்றைச் சுற்றியும் குளத்திற்கும் திருக்கோவிலுக்கும் இடையிலான இரண்டாவது பிரகாரம். ஐயன் திருவீதி விழா வரும் மாடவீதி மூன்றாவது பிரகாரம். இந்த மாட வீதி திருக்குளத்தையும் சுற்றி வருகின்றது. இந்த மாட வீதிகளின் அழகை இவ்வாறு கூறுவர்,

வைத்தீஸ்வரன் கோயில் விளக்கழகு;
மாயூரம் கோபுரம் அழகு;
திருவாரூர் தேரழகு;
மயிலாப்பூர் மாடவீதிகள் அழகு.

கபாலி தீர்த்தமும் இராஜ கோபுரங்களும்

இந்த மாடவீதிகளில் "காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாபநாசம் சிவன் பாடிய கபாலீஸ்வரரும், கற்பக வல்லியும், சிங்கார வேலவரும் விநாயகரும் சண்டிகேஸ்வரரும் திருவீதி வலம் வருகின்றனர். பங்குனிப் பெருவிழாவின் போது மக்கள் கூட்டத்தின் இடையில் பஞ்ச மூர்த்திகள் உலா வரும் அழகைக் கண்டோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை.

கிழக்கு இராஜகோபுரம்

தல விருட்சம்: புன்னை, தீர்த்தம்- கபாலி தீர்த்தம். 1)கபாலி தீர்த்தம், 2)கடவுள் தீர்த்தம், 3)வேததீர்த்தம், 4)வாலி தீர்த்தம், 5)கங்கை தீர்த்தம் ,6) வெள்ளி தீர்த்தம், 7)இராம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உள்ளனவாக புராணங்கள் கூறுகின்றன. அதில் இப்போது கபாலி தீர்த்தம் மட்டும் தான் கபாலீச்சுரத்து அடுத்து மேற்கு பக்கத்தில் விளங்குகிறது. நடுவில் நீராழி மண்டபத்துடனும், மேலும் கரையில் நான்கு பக்கமும் மண்டபங்களுடன் கூடிய இக்குளத்திற்கும் ஒரு சுவையான வரலாறு உள்ளது.


கபாலி தீர்த்தம்

ஆதி காலத்தில் இந்த குளம் முகம்மதிய பக்கீர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. ஒரு சமயம் அந்த பக்கீர்கள் வெளியூர் சென்றிருந்த போது நவாபின் ஒரு பிராமண அமைச்சர் இத்திருக்குளத்தை வெட்டுவித்தார், திரும்பி வந்த பக்கீர்கள் நவாபிடம் முறையிட அவர் இந்துக்களும், முஸ்லிம்கள் இருவரும் இந்த குளத்தைப் பயன்படுத்துமாறு ஆனையிட்டார். மேலும் முகரம் மாதத்தின் பத்தாம் நாள் முஸ்லிம்கள் இந்த குளத்தைப் பயன்படுத்த அனுமதித்தார். இன்றும் நீதி மன்ற உத்தரவுப்படி முகரம் மற்றும் கோவில் பண்டிகை ஒரே நாளில் வந்தால் முதலில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை தரப்படுகின்றது. இத்திருக்குளத்தின் படிகளை கட்டியவர் மயிலை முத்தாலப்ப முதலியார்.




ஐயனின் திருநாமம் கபாலீஸ்வரர் . கபாலி என்று அன்புடன் அன்பர்களால் அழைக்கப்படுகின்றார். சகள மூர்த்தியாக லிங்க ரூபத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சத்யோஜாத மூர்த்தமாய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தை தன் நகத்தால் கிள்ளி எடுத்த அஷ்ட வீரட்ட நாயகர், திருஞான சம்பந்த சுவாமிகளால் நற்றாமரை மலர்மேல் நான்முகனும், நாராயணனும், முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி என்று சிறப்பிக்கப்பட்டவர். மயிலுருவாய் வழிபட்ட அம்மைக்கு மயிலுருவத்தை மாற்றி அருளியவர். பிரமன், மறைகள், இராமர், சிங்கார வேலர் ஆகியோர் வழிபட்ட பெருமான்.

கற்பகாம்பாள்

இவருக்கு கபாலீஸ்வரர் என்னும் பெயர் வர இரு ஐதீகங்கள் உள்ளன. முதலாவது பிரளய காலத்தில் சகல ஜீவராசிகளும் சிவபெருமானது காலடியிலே ஒடுங்குகின்றது. ஊழிக் காலம் முடிந்த பின் ஐயன் கையில் கபாலமேந்தி அண்ட சராசரங்களையும், சகல ஜீவராசிகளையும் மறுபடியும் உயிர்பிப்பார். அவரே எல்லாமாயும், எல்லா சக்திகளும் பெற்று எங்கும் நிறைந்த ஜோதியாக உள்ள ரூபமே கபாலீஸ்வரர் என்பது முதல் ஐதீகம்.

இரண்டாவது ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு தலையை எம்பெருமான் கொய்தார். இது எம்பெருமானின் அஷ்ட வீரச்செயல்களுள் ஒன்று. எனவே சிவபெருமான் பிரம்மசிரச்சேத மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். அவ்வாறு கொய்த பிரம்ம கபாலம் ஐயன் கையிலேயே ஒட்டிக் கொண்டது ஐயனும் பிரம்ம கபாலத்தை கையில் ஏந்தி பிக்ஷாடணராய் அலைந்தார் இந்த கோலமே கபாலி. அன்னை கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் கற்பகமாய் அருள் பாலிக்க ஐயன் பிக்ஷடணராய் அருள் பாலிக்கின்றார்.

சைவர்களின் ஒரு பிரிவினரான கபாலிகர்கள் வழிபட்டதாலும் ஐயன் கபாலி என்ற நாமம் பெற்றிருக்கலாம். முற்காலத்தில் திருமயிலையிலும், திருவொற்றியூரிலும் கபாலிகர்கள் வழிபட்டிருக்கின்றனர்.

இந்த கபாலி நாதன் மேல் மெய்யன்பர்கள் வைத்திருக்கும் பக்திக்கு ஒரு எல்லையே இல்லை. இது அடியேனது அனுபவம். மாசி கடலாட்டு விழாவன்று அனைத்து திருக்கோவில்களில் இருந்தும் சுவாமி நீர் நிலைகளுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பது வழக்கம் சென்னையின் மயிலையில் அமைந்துள்ள சைவத்திருத்தல தெய்வங்கள் எல்லாம் கலங்கரை விளக்கத்திற்கருகில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுவர். மயிலையில் 7 சிவத்தலங்கள் உள்ளன. அதல்லாமல் அம்மன் கோவில்களும் அனேகம். வைணவத் திருத்தலங்களின் மூர்த்திகள் சீரணி அரங்கத்திற்கருகில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுவர். ஒரு வருடம் மாசித் தீர்த்தவாரி கண்டருள சென்றிருந்தேன், காலை 9 மணிக்கே சென்று விட்டேன், வாலீசர், காரணிஸ்வரர், அப்பர் சுவாமிகள், அங்காள பரமேஸ்வரி என்று ஒவ்வொரு கோவிலில் இருந்தும் தெய்வ மூர்த்தங்கள் கடற்கரைக்கு எழுந்தருளினர், தீர்த்தவாரி நடைபெற்றது, ஒவ்வோரு தடவையும் குழுமியுள்ள பக்தர்கள் கடலில் குளித்தனர், ஆனால் யாரும் அங்கிருந்து நகரவில்லை. மணி 11 நெருங்கியது அனைவரும் ஆவலுடன் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர், அப்போது வந்தவர்களின் வாயில் ஒரே கேள்வி, "கபாலி வந்து விட்டாரா?" என்பதுதான்.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

அடலானே றூரும் அடிகள் அடிபரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!

பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்போடு கபாலீச்சுரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ரிஷப வாகனத்தில் ஊர்ந்து வருபவனும், ஆகிய பெருமான் புகழ் பரவி அப்பெருமான் உலா வரும் அந்த அழகைக் காணாது செல்வது முறையோ? என்று சம்பந்தப்பெருமான் பாடியபடி, பக்தர்கள் அனைவரும் கபாலிக்காக காத்திருந்து, தீர்த்தவாரி கண்டு கடலில் அப்பெருமானுடன் மூழ்கினர். கபாலி அங்கிருந்து புறப்பட்ட நிமிடம் அங்கு ஒருவரும் இல்லை. அவ்வளவு பக்தியா? அன்பா? பித்தா? மதிப்பா? கபாலியிடம், எல்லாம் கலந்த ஒன்று, இதுதான் கபாலியின் மகிமை. அடியார்கள் அனைவரும் கபாலி என்று ஒரு அந்நியோன்யத்துடன் அழைக்கும் அந்த அழகை என்னவென்று சொல்ல.





இராஜ கோபுரம் உள்புறம் - புன்னை வன நாதர் விமானம்

தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற 32 தலங்களுள் இது 24வது தலம். திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தர் இத்தலத்தைப்பற்றி பாடியுள்ளனர். இத்தலத்தின் புகழ் நந்தி கலம்பகம், கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் ஆகியவற்றிலும் பேசப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களைப் பாடியுள்ளார். மயிலையில் பல காலம் தங்கி வாழந்த இசை வித்தகர் பாபநாசம் சிவன் வித்யா ரத்னா சத்வானந்தா போன்றோர், தமிழில் கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளைப் பற்றியும் தேனான கீர்த்தனைகளை பாடியுள்ளார். தாச்சி அருணாசல முதலியார் கற்பகாம்பாளின் மேல் பதிகம் பாடியுள்ளார்.

விண்களார் தொழும் விளக்கிணைத்
துளக்கிலா
விகிர்தனை விழவாரும்
மண்களார்துதித் தன்பரா யின்புறும்
வள்ளலை மருவித்தம்

கண்களார்தரக் கண்டு நங்
கடிக்குளத்
துறைதரு கற்பகத்தைப்
பண்களார்தரப் பாடுவார்
கேடிலர்
பழியிலர் புகழாமே. என்பது திருஞான சம்பந்தர் தேவாரம்

2 comments:

Test said...

இப் பதிகத்தை/தொடரை படிக்கும் பொழுது, சிங்கையில் உள்ளோம் என்றே உணர்வே இல்லாமல், மயிலையில் உள்ளோம் என்ற உணர்வே உள்ளது.

நன்றி

S.Muruganandam said...

எல்லாம் கற்பகவல்லி உடனுறை கபாலீஸ்வரர் அருள்.