Showing posts with label செங்குந்தக்கோட்டம். Show all posts
Showing posts with label செங்குந்தக்கோட்டம். Show all posts

Thursday, November 3, 2011

கந்தர் சஷ்டி 2011

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து பார்வதியால் ஒன்றாக இணைக்கப்பட்டு சூரர் குலத்தை கருவறுத்த அந்த பால் மணம் மாறா குமரன் முருகனின் கந்த சஷ்டி விழாவில் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற விழாக்களின் ஒரு சிறு தொகுப்பே இப்பதிவு. கண்டு முருகன் அருள் பெறுங்கள். முருகன் அருள் முன் நிற்கும்.

கந்த கோட்டம், பாரி முனை சென்னை

பராசக்தியிடம் வேல் வாங்கும் கோலம்

சிக்கலிலே அன்னை நெடுவேல் கண்ணியிடம் சிங்கார வேலவன் வேல் வாங்கியவுடன் இன்றும் அவருக்கு வியர்க்குமாம். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூர சம்ஹாரம் செய்வதாக ஐதீகம்.

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.



மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்

மநோஹாரிதேஹம் மஹச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்
மஹாதேவபாலம் பஜே லோக பாலம்

மயில் வாகனத்தில் ஏறியவரும், மஹா வாக்கியத்தின் உட்பொருளானவரும், அழகு வாய்ந்த தேகமுள்ளவரும், மகான்களின் மனதை வீடாகக் கொண்ட குஹனும், பூதேவர்களான வேத வித்துக்களால் உபாஸிக்கப்படுகின்றவரும், உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும், உலகங்களைக் காப்பவருமான தங்களை( திருச்செந்தூர் முருகனை) பூஜிக்கின்றேன்.

(சுப்பிரமணிய புஜங்கம் என்னும் 33 பாடல்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை ஆதி சங்கர பகவத்பாதாள் திருச்செந்தூரிலே பாடியருளினார். எல்லா மத தலைவர்களுக்கும் தங்கள் காலத்திலே எதிர்ப்பு இருந்தது போல ஆதி சங்கரருக்கும் இருந்தது. அதன் பயனாய் அவருக்கு தீராத வயிற்று வலி வந்தது அவர் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அவரது கனவில் தோன்றினார். "திருச்செந்தூர் செந்திலாண்டவனைத் தரிசித்தால் உன் நோய் தீரும்'' என்று அருள் புரிந்தார்.இத்தலத்தில் இந்த ஸ்தோத்திரம் பாட அந்த நோய் நீங்கியது. செந்திலாண்டவனை தரிசித்தார், மனமுருக வேண்டினார் சங்கரர்! அந்த தரிசனத்தின் போது முருகன் திருவடிகளில் ஆதிசேஷன் பூஜித்துக் கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் கண்டார் சங்கரர்! புஜங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு வளைந்து வளைந்து நகரும் பாம்பு என்று பொருள். பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல பாடப்பட்டுள்ளதால் இந்த ஸ்தோத்திரம் சுப்பிரமணிய புஜங்கம் ஆயிற்று. இந்த சுலோகங்களை தினசரி பாராயணம் செய்வோரை நோய், நொடி, வலிப்பு, பூத பைசாசங்கள் நெருங்காது! தீராத நோயெல்லாம் தீர்த்து வைப்பான் செந்திலாண்டவன். )


செங்குந்தக் கோட்டம் , சைதாப்பேட்டை, சென்னை

சிவ சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரம் செய்ய புறப்படும் அற்புதக் கோலம்






காரணீஸ்வரம், சைதாப்பேட்டை, சென்னை

சிவ சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரம் செய்ய புறப்படும் அற்புதக் கோலம்




ஆறிருதடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க; வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க; செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் னணங்கு வாழ்க;
மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீரடியா ரெல்லாம்.




வீரபாகுத்தேவர்

இராமாயணத்தில் அநுமன் போல ஸ்கந்த புராணத்தில் வீரபாகுத் தேவர். நவ வீரர்களில் மூத்தவர். பல திருக்கோவில்களில் முருகனைப் போலவே ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா வருபவர்.



சூரனுக்கு பெருவாழ்வளித்த வள்ளல் முருகப்பெருமான்.

(சூர சம்ஹாரத்திற்கு பிறகு மயில் வாகனம், சேவல் கொடி கொண்டு காட்சி தருகிறார் முருகர் )

சூரபத்மன் ஆணவ மலம், அவன் தம்பி சிங்கமுகாசுரன் கன்ம மலம், தாரகாசுரன் மாயா மலம், முருகன் தனது தாய் கொடுத்த அந்த சக்தி வேலால், ஞான வேலால் இந்த மூன்று மலங்களையும் தூய்மைப்படுத்துவதே சூர சம்ஹாரம். சூரனுக்கு அழிவில்லை அவம் சேவலாகக் முருகனுக்கு கொடியாகவும், மயிலாக அழகனுக்கு வாகனமாகவும் ஆகின்றான். இதுவே கந்தன் கருணை.




திருமயிலையில் சூரனுக்கு பெருவாழ்வளிக்க
தேரில் புறப்படும் சிங்கார வேலவர்

இவ்வாலயத்தில் சூரசம்ஹாரத்தின் போதும் முருகப்பெருமான் தன் தேவியருடன் எழுந்தருளுகின்றார், சம்ஹாரம் முடிந்தவுடன் மயில் வாகனத்திற்கு மாறி விடுகிறார், மறுநாள் திருக்கல்யாணம் முடிந்து ஐராவதத்தில் வலம் வருகிறார்.


தேரில் சிங்காரவேலவர் தேவியருடன்

இத்திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் முருகன் ஆறு முகத்துடனும், பன்னிரு கரத்துடனும் மயில் மேல் ஒயிலாக அமர்ந்திருக்கும் அழகையும், தேவியர் இருவரும் ஐராவத்தின் மேல் ஒரு காலை மடித்து மறு காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் எழிலையும் தரிசனம் செய்ய முடியும். ( வேறு எக்கோவிலிலும், தேவியர் இது மாதிரி தேவியர் அமர்ந்த கோலத்தில் தரிசனம் செய்த்தில்லை, நின்ற கோலத்தில்தான் இருப்பர்)

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவாயு யிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.




மாயையினால் பல்வேறு வடிவம் எடுத்து போர் புரிந்தும் வெற்றி பெற முடியாமல் முடிவில் சூரம் லக்ஷம் யோஜனை கொண்ட எஃகு மாமரமாக திருச்செந்தூர் கடலில் நின்றான்.


எஃகு மாமரம்

முருகன் ஞானவேலால் அம்மாமரத்தை சேவலும் மயிலுமாக மாற்றி சூரனுக்கு பெரு வாழ்வு அளித்து கருணை புரிந்தார். எனவே தான் முருகன் கொக்கறுத்த ( மாமரம் பிளந்த ) கோமான். அவன் பெயரை தினமும் நினையுங்கள் என்று அத்காலையில் சேவல் கொக்கரக்கோ, கொக்கரக்கோ என்று கூவி நமக்கு உணர்த்துகின்றது .


குக்குடமே கூவுவாய்
கொக்கறுத்த கோமானை
கொக்கரக்கோ வென்று
குக்குடமே நீ கூவுவாய்



சூரனுக்கு பெருவாழ்வளித்து மயிலாக மாறிய
அவன் மேல் சேவற் கொடியுடன்முருகன் அருட்பவனி வரும் கோலம்


குமாரேஶ ஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா-பதே
ஶக்திபாணே மயூராதிரூட |
புலிந்தாத்மஜா காந்த பக்தார்தி ஹாரிந்! ப்ரபோ!
தாரகாரே! ஸதா ரக்ஷ மாம் த்வம் ||

என்றும் இளையோய்! ஈசன் தன் திருமகனே! குகனே! கந்தவேளே! அமரர் சேனாபதியே! சக்தி வேல் முருகா! வண்ணமயில் வாகனனே! ஒய்யாய வள்ளிக் மணாளா! (தெய்வயானை லோலா) அடியார் துயர்கள் நீக்குபவா! சமரில் தாரகனைக் கொன்றவனே! சரவண பவனே! உம்மைப் பணிந்தோம் எமை காத்திடுவாய்!

வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹரோ ஹரா
ஞான தண்டாயுத பாணிக்கு ஹரஹரோ ஹரா

Monday, June 21, 2010

ஆனந்த நடராஜரின் ஆனி திருமஞ்சனம்

அம்பலத்தாடும் என் ஐயனுக்கு வருடத்தில் ஆறு திருமுழுக்குக்கள் அவற்றுள் இரண்டு பத்து நாள் பிரம்மோற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன அவையாவன ஆனித்திருமஞ்சனமும், ஆருத்ரா தரிசனமும் ஆகும். 2010 ஆனி உத்திரத்தன்று நடைபெற்ற ஆனந்த தாண்டவரின் ஆனி உத்திர தரிசனத்தின் சிலகாட்சிகள்.

முந்தைய ஆனி உத்திர பதிவுகளைக் காண சொடுக்குங்கள் இங்கே

http://natarajar.blogspot.com/2008/07/blog-post_11.html








சென்னை மேற்கு சைதாப்பேட்டை
காரணீஸ்வரர் ஆலய தரிசனம்

விநாயகப் பெருமான்


ஆனந்த கூத்தனின் அற்புத தரிசனம்

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட


கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டலமிரண்டாட
தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட


ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப்பெண்களாட

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய்

யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!


சிவகாமசுந்தரி அம்பாள்

சூரிய பிரபையில் ஆனி உத்திர தரிசனம்


கோபுரத்துடன் ஐயனின் தரிசனம்



அப்பாநான் வேண்டுதல்கேட்
டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான்
அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும்
எங்கணும்நான் சென்றே

எந்தைநின தருட்புகழை
இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேல்நிலைமேல்
சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி
செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும்
நீபொறுத்தல் வேண்டும்

தலைவநினைப்பிரியாத
நிலைமையும் வேண்டுவனே!

பல்லக்கில் கண்ணாடியில்
சிவானந்தவல்லி தரிசனம்


*******************

சென்னை மேற்கு சைதாப்பேட்டை செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்


இந்திரியவயம்மயங்கி் இறப்பதற்கே காரணம்ஆய்

அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குக்

சிந்தைதனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட

அந்தல் இலா ஆனந்தம் அணிகொள் தில்லைக் கண்டேனே!




ஆர்த்தபிறவித் துயர்கெடநாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்;
நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன்;

இவ்வானுலகும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தைகள் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டு ஆர்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொன்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!


சிவகாமவல்லி தரிசனம்



அம்பலவாணரின் பின்னழகு

"ஓடும்கவந்தியுமே உறவு" என்றிட்டு உள்கசிந்து;

"தேடும்பொருளும் சிவன் கழலே" எனத்தெளிந்து ;

கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்து: அடியேன்

ஆடும் குலாத்தில்லை ஆண்டானை
க் கொண்டு அன்றே.



Tuesday, October 28, 2008

கந்தன் கருணை -2

முத்துக்குமார சுவாமி


வைத்தீஸ்வரன் கோவில்



வள்ளி தெய்வாணையுடன் திருமுருகன்


பாரத்வாஜேஸ்வரம் சென்னை




செங்குந்தக்கோட்டம் திருக்கல்யாணக்கோலம்

கஜ வள்ளி

வன வள்ளி









திருப்போரூர் சுயம்பு முருகர் ஆலய கோபுரம்













திருப்போரூர் திருக்குளம்


சக்தி வேல் கொண்டு சூர சம்ஹாரத்திற்கு எழுந்தருளும் செங்குந்தக்கோட்ட அழகன்







மயில் வாகனம் - திருநள்ளார்



வள்ளலார் பாடிய தர்மமிகு சென்னை கந்த கோட்டத்துள் வளர் கந்த வேள் (முத்துக்குமார சுவாமி)








ஸ்கந்த சஷ்டி விழா கந்த கோட்டத்தில் ஆறு நாட்கள் வெகு சிறப்பாக கோடி அர்ச்சனையுடன் நடைபெறுகின்றது. மூலவர் கந்த சுவாமிக்கு மூலவர் சன்னதியிலும், உற்சவர் முத்துக் குமார சுவாமி ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சலிலும் , சரவணப் பொய்கை குளக்கரையிலே ஞான தண்டாயத பாணிக்கும், கல்யாண மண்டபத்தில் ஆறு முக சுவாமிக்கும் என நான்கு இடங்களில் கோடி அர்ச்சனை பெரு விழாவாக நடைபெறுகின்றது.




அப்போது ஒவ்வொரு வேளையிலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், சோடசோபசாரம். வேத பாராயணம், திருமுறை பாராயணம், ஜபம், ஹோமம் சந்தர்ப்பணை முதலிய வைபவங்களுடன் கோடி அர்ச்சனை சிறப்பாக நடைபெறுகின்றது. சமஸ்கிருதத்தில் சகஸ்ரநாமம் முடிந்த பிறகு அன்பர்கள் அனைவரும் முருகனை துதிக்க ஏதுவாக தமிழில் நூற்றியெட்டு போற்றிகள் கூறுவது வேறு எக்கோவிலிலும் இல்லாத ஒரு புதுமை.




கோடி அர்ச்சனையில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக பால சுப்பிரமணியர் குளக் கரையில் எழுந்தருளி அர்ச்சனைகளை ஏற்றுக்கொள்கிறார்.




கந்தன் கலையரங்கத்தில் ஆறு நாட்களும் ஆறு விதமான கொலு,


மஹா ஸ்கந்த ஷஷ்டி முதல் நாள் வள்ளியை மணம் புரிய யானையாக வந்து உதவிய யானை முகருக்கு சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் வைர அங்கியில் அருட் காட்சி கலச யாக பூஜை.



இரண்டாம் நாள் முருகப் பெருமான் ஈசனுடன் ஞான மொழி பேசும் கோலம்




மூன்றாம் நாள் நவ வீரர்களுடன் சூர சம்ஹார மந்திர ஆலோசனை,




நான்காம் நாள் திரு முருகன் சிவபெருமானை வழிபடும் திருக்கோலம்,




ஐந்தாம் நாள் திருமுருகன் மாறுபடு சூரரை வதைக்க சிவசக்தியிடம் சக்தி வேல் வாங்கும் திருக்கோலம்,




மஹா ஸ்கந்த சஷ்டியன்று சூர சம்ஹார திருக்காட்சி என்று நாள் ஒரு அலங்காரம்.





கந்தர் ஷஷ்டியன்று மாலை ஆறு மணியளவில் தொண்டை மண்டல வழக்கப்படி சூர சம்ஹாரத்திற்கு தங்கக் குதிரை வாகனத்தில் அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் எழுந்தருளி , ஆணவமாம் சூரர்களை சம்ஹாரம் செய்தருளுகின்றார். சூர சம்ஹாரம் பாய்க்கடைக்கு அருகில் நடைபெறுகின்றது. முருகன் கோபமாக சூர சம்ஹாரத்தை செய்ய புறப்படும் விதமாக அன்று அவருக்கு சிவப்பு அங்கி அணிவிக்கப்படுகின்றது. சூர சம்ஹாரதிற்குப்பின் மயில் வாகனத்துடனும் சேவற் கொடியுடனும் வெற்றி வீரராக தேவ சேனாபதி முத்துக் குமரன், சரவணபவன், காங்கேயன், ஸ்கந்தர், கார் மயில் வாகனன், குகன் வீதி உலா வந்து அருள் பாலித்து நள்ளிரவுக்கு மேல் திருக்கோவிலுக்கு திரும்புகிறார்.


அடுத்த நாள் காலையில் மூலவர், ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி மஹா அபிஷேகமும், மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 பன்னீர் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று மாலை தெய்வானை அம்மை திருக்கல்யாணம் பின் மயில் வாகன உற்சவம் திருவீதி உலா என வெகு சிறப்பாக நடை பெறுகின்றது ஸ்கந்தர் ஷஷ்டி பெரு விழா.


முத்துக் குமரனின் நாமங்கள் நீங்காது ஒலித்திடும் நன்னாளான இந்த ஸ்கந்த ஷஷ்டி நாட்களில் நீங்கா மனத்தினராய் வழிபடும் அன்பர்களுக்கு, நித்தம் துனையிருந்து அருள் பாலிக்கும் கந்த வேளை இத்திருநாட்களில் நாடி வந்து வணங்கும் பக்த கோடிகள் எண்ணிலடங்கர். கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும் மின்விளக்கு அலங்காரங்களையும். பிரதி தினமும் காலை முதல் திருக்கோயில் முன்பாக உள்ள முத்துக்குமரன் கலை அரங்கில் கலை நிகழ்ச்சிகள் என்று ஆறு நாட்களூம் கோலாகலம்தான் இத்திருக்கோவிலில்.


இனி வள்ளலார் பாடிய ஒரு பாடல்


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்



உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்



பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்



பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்



மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்



மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்



தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே



தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி சண்முகத் தெய்வமணியே


( எதிர்மறையாக எதுவும் கூறாமல் நேர் மறையாகவே பாடியுள்ளார் பாருங்கள் வள்ளலார் சுவாமிகள்)




வேலும் மயிலும் துணை.





கந்தன் கருணை தொடரும்.............