திரு ஊடல் உற்சவம்
அம்மையும் ஐயனும் (ஊடல் உற்சவம்)
கணவனிடம் மனைவி எவ்வாறு சிறு கோபம் (ஊடல்) கொள்கின்றாள் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
என்ன சார்!
தினமும் சேலைக்கும், நகைக்கும் இது வழக்கம் தானே என்கின்றீர்களா?
நாம் இப்பதிவில் காணப் போவது இறைவனிடம் இறைவி கொள்ளும் ஊடல். பல்வேறு ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தின் போது இந்த திரு ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது. வடபழனி, கோடம்பாக்கம், காளிகாம்பாள் ஆல்யம் ஆகியவற்றில் இந்த உற்சவம் நடைபெறுகின்றது. இவுற்சவத்தின் தாத்பரியம் என்ன என்று பார்ப்போம்.
கோவில் இராஜகோபுர வாயில் வழியாக ஐயன் வெளியே சென்று விட அம்மை கோவிலின் உள்ளேயே இருக்க கோவில் கதவு சார்த்தப்படுகின்றது. ஓதுவார் மூர்த்திகள் அம்மைக்கும் ஐயனுக்கும் நடைபெறும் உரையாடலை இவ்வாறு ஓதுகின்றார்.
அம்பாள் : தூர நில்லும் எந்தன் சுவாமி ! ஏன் இந்த தாமதம்?
ஐயன்: நாரிமயே! திருவாலங்காட்டில் நான் அந்த பத்ர காளி முன் நாட்டியம் ஆடி வந்தேன் மானே! தேனே!
அம்பாள்: மாதவரே! மன்னவரே! கங்கைதனை தலைக் கொண்டவரே! உமதிருகண்ணும் சிவந்ததென்னே சொல்லும் சுவாமி?
ஐயன்: நாயகியே! நான்முகியே! எந்தன் நல்ல இடம் கொண்டவளே! தத்தையார் கந்தப்பொடி கண்ணில் விழ சிவப்பாச்சே மானே!
அம்பாள்: மான் மழு கொண்டவரே! மதியினை அணிந்தவரே! மன்னவரே நின் புஜத்தில் மஞ்சளின் நிறம், சுவாமி உமக்கு மஞ்சளின் நிறமேது?
ஐயன்: சந்தனத்தில் கலாப கஸ்தூரி கலந்து தெளித்ததால் மஞ்சளாச்சே மானே! தேனே!
அம்பாள்: பொன்னார் மேனியரே! புலித்தோலை அணிந்தவரே! மெய்குறி காங்குது, மேல் மூச்சு வாங்குது இந்த விசித்திரம் என்ன சொல்லும் சுவாமி?
ஐயன்: பஸ்மாசுரனை எதிர்த்து போர் புரிந்த போது பட்டன இக்குறிகள் மானே! தேனே!
அம்பாள்: நடந்து வந்த காரணம் என்ன சொல்லும் சுவாமி?
ஐயன்: வெண்கவரி மான் மீதிருந்து தவறி விழுந்ததனால் நானே நடந்து வந்தேன் மானே! தேனே!
அம்பாள்: எந்தன் மனம் நோகுதய்யா! சஞ்சலம் தோன்றுதைய்யா! உமக்கு இதழ் குறி வந்தது ஏன் சுவாமி?
ஐயன்: தாருகாவனத்து தத்தையார் பச்சைக்கிளி முத்தமிட ஆனதடி என் மானே! தேனே!
அம்பாள்: என் உடல் பாதி கொண்டவரே நீரும் நானும் சேர்ந்த மனமல்லவே! நாம் சேர்ந்திருப்போம் நானே வாரேன் சுவாமி.
பின் கோவில் கதவுகள் திறக்கப்படுகின்றன அம்மை வந்து ஐயனுடன் சேர்ந்து காட்சி தர கற்பூரம் காட்டப்படுகின்றது. பின் கோவிலின் உள்ளே சென்று ஆருத்ரா தரிசன தீபாரதானை. பின் திருவீதி உலா.
வெளிப்பார்வைக்கு இந்த ஊடல் உற்சவம் கணவன் மனைவி உரையாடல் போல தோன்றினாலும் உண்மையில் இதனுள்ளூம் ஒரு பெரிய தத்துவார்த்தம் அடங்கி உள்ளது.
பிரம்மோற்சவ காலங்களில் இந்த ஊடல் உற்சவம் பந்தம் பரி விழாவாகவும் நடைபெறுகின்றது. முடிவில் அம்மையை சாந்தப்படுத்த ஐயன் பந்தம் பரி பதினெட்டு வகை நடனக் காட்சியும் தந்தருளுகின்றார்.
ஆசைகளில் இருந்து ஜீவாத்மா விலகி பரமாத்மாவுடன் இனையும் போது பரமானந்தம் என்னும் தத்துவமே இங்கே உணர்த்தப்படுகின்றது. இங்கே அம்பாள் ஜீவாதமா, ஐயன் பரமாத்மா. பசுவை விட்டு சென்ற கன்று திரும்பி வந்து தாயை அடைந்தவுடன் அடையும் பேரானந்த நிலை போல ஜ“வாத்மாவும், பரமாத்மாவும் இனையும் போது கிடைக்கும் நிலையே சமாதி.
காம, குரோத, லோப, மோஷ, மத, மச்சர, டம்ப, தாப, அசுயை என்னும் பத்து பந்தங்களையும் பறி என்றால் கொள்ளை கொடுக்க வேண்டும். அவ்வாறு பத்து பந்தங்களையும் பறி கொடுத்தால் மோட்சம் என்பதை உணர்த்துவதே இந்த உற்சவம். ( பந்தம்- ஆசை, பறி- கொள்ளை). எல்லா சிவாலயங்களில் பிரம்மோற்சவத்தின் போது பந்தம் பறி உற்சவம் என்றும், விஷ்ணு ஆலயங்களில் தேவ தேவி சம்வாதம் என்றும் இந்த ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.
6 comments:
மதுரை போன்ற தென் தமிழகத்தில் இவ்வாறு ஒரு விழா கேள்வி பட்டதில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.
வாருங்கள் மதுரையம்பதி அவர்களே. அங்கயற்கண்ணியின் தரிசனம் கண்டு களிப்பவரே.
தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலும் வழிபாடு முறைகள் மாறுபடுகின்றன.
கொங்கு மண்டலத்தின் சிறப்பு எல்லா தலங்களிலும் தீப ஸ்தம்பம்.
சோழ மண்டலத்தில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் தெருவடைச்சான் சப்பரம்/சகோபுர தரிசனம் சிறப்பு.
தொண்டை மண்டலத்தில் கஜபிருஷ்ட விமானம் மற்றும் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவை சிறப்பு. அதுபோலவே இந்த திருஊடல் உற்சவமும் தொண்டை மண்டலத்திற்குரியது.
திருவண்ணாமலையில் திருஊடல் உற்சவம் மூன்று நாட்கள் உற்சவமாக சிறப்பாக நடைபெறுகின்றது. அம்மை கோபித்துக் கொள்ள ஐய்ன் கிரி வலம் சென்று தன் பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்து பின் மீட்கிறார்.
"ஆசைகளில் இருந்து ஜீவாத்மா விலகி பரமாத்மாவுடன் இனையும் போது பரமானந்தம் என்னும் தத்துவமே இங்கே உணர்த்தப்படுகின்றது. இங்கே அம்பாள் ஜீவாதமா, ஐயன் பரமாத்மா. பசுவை விட்டு சென்ற கன்று திரும்பி வந்து தாயை அடைந்தவுடன் அடையும் பேரானந்த நிலை போல ஜ“வாத்மாவும், பரமாத்மாவும் இனையும் போது கிடைக்கும் நிலையே சமாதி.
காம, குரோத, லோப, மோஷ, மத, மச்சர, டம்ப, தாப, அசுயை என்னும் பத்து பந்தங்களையும் பறி என்றால் கொள்ளை கொடுக்க வேண்டும். அவ்வாறு பத்து பந்தங்களையும் பறி கொடுத்தால் மோட்சம் என்பதை உணர்த்துவதே இந்த உற்சவம். ( பந்தம்- ஆசை, பறி- கொள்ளை). எல்லா சிவாலயங்களில் பிரம்மோற்சவத்தின் போது பந்தம் பறி உற்சவம் என்றும், விஷ்ணு ஆலயங்களில் தேவ தேவி சம்வாதம் என்றும் இந்த ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது."
ஆமாம், ஆனால், ஒவ்வொரு கோயிலிலும் உற்சவம் முடிந்து இறைவன் திரும்பும் முன்னர் மட்டுமே நடைபெறுவதற்குக் காரணம் என்னனு கொஞ்சம் விளக்க முடியுமா?
மிகுந்த நன்றிங்க நல்ல கருத்தை கொண்ட பதிவு
மிக்க நன்றி அன்பரே.
//ஆமாம், ஆனால், ஒவ்வொரு கோயிலிலும் உற்சவம் முடிந்து இறைவன் திரும்பும் முன்னர் மட்டுமே நடைபெறுவதற்குக் காரணம் என்னனு கொஞ்சம் விளக்க முடியுமா?//
ஜீவாத்மா ஆகிய நம்மை உய்விக்க நடத்தும் ஒரு நாடகம் இது. எனவே சுவாமியும் அம்பாளும் பக்தர்களுக்கு ஆலயத்தை விட்டு வெளியே வந்து அருள் பாலித்த பின்னர் ஆலயம் திரும்பும் சமயம் பொதுவாக இவ்வுற்சவம் நடைபெறுகின்றது.
Post a Comment