Saturday, December 22, 2007

ஆருத்ரா தரிசனம் - 8

திருத்தேரோட்டம்
(திருப்பல்லாண்டு பெற்ற வரலாறு)

"தானே வந்தெம்மை தலையளித்து ஆட்கொண்டருளும் வான் வார் கழல் பாடி ஆடேலோ ரெம்பாவாய்" என்று திருவெம்பாவையில் மாணிக்க வாசக சுவாமிகள் பாடுகின்றார். அதாவது நம்முடைய குற்றங்களை எல்லாம் மன்னித்து, நமது விணைகளை தானே வந்து மாற்றி நமக்கு நல்கதி அருளும் தலைவனாம் ஆனந்த நடராஜப் பெருமான் சித்சபை விடுத்து ஆனந்த தாண்டவத்துடன் திருத்தேருக்கு எழுந்தருளி, பஞ்ச மூர்த்திகளுடன் திருத்தேரோட்டம் கண்டருளும் நாள் இந்த ஒன்பதாம் திருநாள்.


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையணைத் தும்நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.


என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மம், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை இன்று காண்போம்.

கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து அருட்காட்சி அளிக்கின்றார் நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் இன்று.

தில்லையிலே எல்லாம் நடராஜர் தான் அரசனும் அவரே, (சபா) நாயகரும் அவரே, மூலவரும் அவரே, உற்சவரும் அவரே, அந்த அருட்பெருஞ்ஜோதி எளி வந்த கருணையினால் தானே திருக்கோவிலுக்கு வெளியே வந்து அவரது அருட்காட்சியை தந்தருளுகின்றார் என்பது இத்தலத்தின் சிறப்பு. வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த அற்புதம் நடக்கின்றது. திருவாதிரை மற்றும் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவின் ஒன்பதாம் நாள்.

அதிகாலை சித்சபையிலிருந்து புறப்பட்டு ஆனந்த தாண்டவத்துடன் திருத்தேருக்கு சிவானந்த வல்லியுடன் எழுந்தருளுகின்றார் கிழக்கு வாசல் வழியாக. பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் இன்றைய நாள். முதலில் சிறிய தேரில் முழுமுதற் கடவுள் விநாயகர் , அடுத்து பிரம்மாண்ட தேரில் அண்டர் நாயகன், அம்பலக் கூத்தன், ஆனந்த நடராஜர், அவருக்கு பின்னே சிவகாம சுந்தரி அம்பாள், தாயைத் தொடர்ந்து தனயன் முருகன் தன் தேவிமார்களுடன் நிறைவாக தொண்டன் சண்டிகேஸ்வரர் என்று ஐந்து ரதங்களும் ஆடி அசைந்து மக்கள் வெள்ளத்தில் அலைகடலில் படகு வருவது போல வரும் அழகை வர்ணிக்க பதஞ்சலியாக வந்து அவதரித்த ஆயிரம் நாவு கொண்ட அந்த ஆதி சேஷனுக்கே முடியாது, இந்த மானிடப் பதரால் அதை எவ்வாறு விவரிக்க இயலும்.

கிழக்கு மாடவீதி, பின் தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதியில் தொடர்கிறது எம்பெருமான் மேற்கு மாடவீதியை அடையும் போது மதியம் ஒரு மணி ஆகிவிடுகின்றது. தேரோட்டம் நடைபெறும் போது ஐயனின் திருமுன்பு லக்ஷக்கணக்கில் கூட்டம் என்பதால் நாம் ஐந்து தேர்களையும் ஒன்றாக தரிசிக்க முடியாது. ஆகவே ஐயனை முதலில் தரிசித்து விட்டு அங்கேயே நின்று விட வேண்டும். ஐயனின் தேருக்கு பின்னால் சென்றால் கிடைக்கும் ஒரு அற்புத தரிசனம் ஆம் ஐயனின் ஜடாமுடி, வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நாம் ஐயனின் ஜடாமுடி தரிசனம் பெற முடியும் எனென்றால் ஐயனின் பின்னே இருப்பதால். பின் அம்மையை, ஆத்தாளை, எங்கள் சிவகாம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவியடங்கக் காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தரிசித்து, பின் அம்மன் தேர் நம்மைக் கடந்த பின் வள்ளி நாயகி, தெய்வயாணை நாயகி சமேத முருகரை தரிசித்து, அவர் தேரும் கடந்து சென்ற பின் தன் சிவபூஜைக்கு இடையூறு செய்ய வந்த தந்தையில் காலையே மழுவால் வெட்டிய சண்டேசுரரையும் தரிசித்து அவர் தேரும் நம்மை கடந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஐந்து தேர்களையும் நாம் அருமையாக ஒரே சமயத்தில் தரிசனம் செய்யலாம்.
நாம் அனைவரும் உய்ய வெளியே வந்த எம்பெருமான் மேற்கு மாட வீதியின் முடிவில் சிறிது நேரம் தங்குகிறார். அப்போது எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் நாம் அவர் காலடியில் நின்று அவர் தரிசனம் பெறலாம். அன்பர்கள்தான் எப்படி எப்படி எல்லாம் வணங்குகின்றனர். சிவ புராணம் இசைப்போர் ஒரு பக்கம், ஓம் நமசிவாய என்று அழற்றுவோர் ஒரு பக்கம், ஸ்ரீ ருத்ரம் ஜபிப்போர் ஒரு பக்கம், தேவார திருவாசகங்களி உள்ளுருகப் பாடி உருகுவோர் ஒரு பக்கம், பல்லாண்டிசைப்போர் ஒரு பக்கம், அன்பு மிகுதியால் கீழே விழுந்து நெடுந்சாண்கிடையாக வணங்குவோர் ஒரு பக்கம், ஐயனை முழுவதுமாக தரிசித்த மகிழ்ச்சியில் கண்ணில் நீர் வழிய கை கூப்பி மரம் போல் நிற்பவர் ஒரு பக்கம், எத்தனை கோடி யுக தவமோ உன் அருட் தரிசனம் இந்தப் பிறவியில் கிட்டியது என்று மயங்கி நிற்போர் ஒரு புறம் என்று அனைவருக்குக் அருள் பாலித்த எம்பெருமான் மாலை நான்கு மணியளவில் பின் கிளம்பி தேரடி வந்து சேருகின்றார்.

இவ்வாறு நடந்த மார்கழித்திருவாதிரை தேரோட்டத்தின் போது தனக்கு களி அமுது செய்த சேந்தன் மூலம் ஐயன் திருப்பல்லாண்டு பெற்ற வரலாற்றைக் காண்போமா? ( நேற்று தொடங்கிய வரலாற்றின் தொடர்ச்சி).


இச்சமயத்தில் மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளிள் ஆடல் வல்லானின் 'ஆருத்ரா தரிசன திருவிழா' வந்தது. ஒன்பதாம் நாள் தன் பக்தர்களுக்கு அருளும் பொருட்டு சபையிலிருந்து எம் ஐயன் வெளியே திருத்தேருக்கு எழுந்தருளி அவரது தேரோட்டம் துவங்கியது. சிறிது தூரம் ஓடிய தேர் பிறகு நின்று விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் தேர் அசைந்து கொடுக்கவில்லை. அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஆட்டுவிக்க ஆனந்த கூத்தாடும் அவன் நினைக்காத போது தேர் எவ்வாறு நகரும். அனைவரும் ' ஆனந்த நடராஜப் பெருமானே, அருள் வள்ளலே, எளியோருக்கு இரங்கும் அருள் மலையே, கருனைக்கடலே இது என்ன சோதனை, ஏன் எவ்வாறு நடக்கின்றது? எங்களுடைய பிழையை பொறுத்து அருளுமய்யா என்று வேண்டி நின்றனர். அப்போது அசரிரீ ஒலித்தது, " சேந்தா எனக்கு திருப்பல்லாண்டு பாடு " என இறைவனின் ஆணைப்படியே ஆனந்த சேந்தனும்


மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே


என்று தொடங்கி திருப்பல்லாண்டைப்பாடி முடிக்கின்றார். பின் தேரும் ஓடத் தொடங்கியது. இதுவே நாம் ஆதிரை நாளன்று சபா நாயகருக்கு களி படைக்கப்படுவதற்கான காரணம் ஆகும். எனவே ஐயன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய பக்தியைத்தான் மற்றவை எல்லாம் ஒன்றுமேயில்லை. ஆகவே தான் மாணிக்க வாசக சுவாமிகளும்

சாதி ,குலம், பிறப்பு என்று கவலைப் பத்து தடுமாறும், பொருத்தமில்லாத நாயேனையும் மன்னித்து ஆட்கொண்ட வள்ளலை குலாவு தில்லை கண்டேன் என்று திருவாசகம் பாடுகின்றார்.

பின் திருத்தேரிலிருந்து இறங்கி ஆனந்த தாண்டவத்துடன் ஐயன் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் மண்டபத்தில் வந்து திருவோலக்கம் தந்து அருளுகின்றார். அவருக்கு ஒரு கால லக்ஷார்ச்சனையும் நடைபெறுகின்றது.
நாளை ஆருத்ரா தரிசனம் ஐயனின் அருமையைக் காண வாருங்கள்.

2 comments:

VSK said...

தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்!
மிக அருமையான சிவத்தொண்டு ஆற்றிவரும் உங்களைப் பணிகிறேன்.
வாழ்க பல்லாண்டு!

Kailashi said...

வாருங்கள் முருகனருள் VSK அவர்களே. வருகைக்கு நன்றி. இனியன தனியருந்தேல் என்றபடி அவர் காட்டியதை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி.