Friday, December 14, 2007

ஆருத்ரா தரிசனம் - 2

திருவாதிரை நட்சத்திரம்


திருவாரூர் ஆலயத்தின் அற்புத ஓவியம்
Beautiful Mural of Nataraja at Tiruvarur Temple


முதலில் மார்கழி மாதத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும் திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம். நட்சத்திரங்கள் மொத்தம் 27 அவையாவன கார்த்திகை, ரோகிணி, மிருகசீருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோண, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியன. இவற்றுள் இரண்டு நட்சத்திரத்திற்கு மட்டுமே நாம் திரு என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றோம், அவை திருவாதிரை மற்றும் திருவோணம் ஆகும். இந்த இரு நட்சத்திரங்களுக்கு மட்டும் இந்த சிறப்பு ஏன்?

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் ஓருருவம் ஓர் நாமம் இல்லாதவர் ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம். அவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம், திருவோணத்தை திருமாலுக்கு உரியதாகவும் ஆக்கினோம். எம்பெருமான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என்பது புராணம். ஆனால் இன்றும் தனுசு இராசியின் நட்சத்திர தொகுதியே மன்மதன். கீழ் வானத்தில் ஆருத்ரா நட்சத்திரம் எழுந்தால் மேற்கே தனுசு நட்சத்திரம் மறைவது இதைத்தான் உணர்த்துகின்றதோ?




திருவாதிரை அன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் எல்லா சிவத்தலங்களிலும் உண்டு, அது போலவே எம்பெருமான் உருவமாக எழுந்தருளியுள்ள எல்லா தலங்களிலும் அபிஷேகம் உண்டு ( சப்த விடங்க தலங்கள், அஷ்ட வீரட்டத்தலங்கள், தொண்டை மண்டல தியாகத் தலங்கள்). திருவாரூரில் இடது பாத தரிசனம், உத்திரகோச மங்கையில் மரகத நடராஜர் அபிஷேகம் மற்றும் நிஜ தரிசனம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

எம்பெருமான் சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. அவையாவன 1, விருச்சிக மாத ( கார்த்திகை) சோமவார விரதம், 2. கார்த்திகை பௌர்ணமி -உமா மஹேஸ்வர விரதம், 3. தனுர் மாத (மார்கழி) திருவாதிரை விரதம், 4.தைப்பூச சூல விரதம், 5. மாசி மாத மஹா சிவராத்திரி விரதம், 6. பங்குனி உத்திர கல்யாண விரதம், 7.வைகாசி அஷ்டமி ரிஷப விரதம், 8. ஐப்பசி கேதார விரதம் ஆகியவை ஆகும். இவ்வாறு ஆருத்ரா தரிசன நாள் சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியான அஷ்ட மஹா விரத நாள் ஆகும்.

நாளை காலை கொடியேற்றத்துடன் ஐயனின் ஆருத்ரா தரிசனப் பெருவிழா தில்லையில் தொடங்குகின்றது அதையொட்டி ஆருத்ரா தரிசனம் தொடர்பான பல்வேறு தகல்வகளையும் சென்ற வருடங்கள் தரிசித்த அம்மையப்பரின் அருட் கோலங்களையும் வழங்க உள்ளேன் தவறாமல் வந்து தரிசித்து விட்டு செல்லவும்.




படைக்கலமாக வுன்நாமத்
தெழுத்ததைஞ்சு என் நாவிற் கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழு பிறப்பும்
உனக்காட் செய்கின்றேன்
துடைக்கிலும் போகேன் தொழுது
வணங்கித் து‘நீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணி
தில்லைச் சிற்றலம்பலத் தரனே
.

சரணாகதி தத்துவத்தையும் கர்ம வினையின் பயனாக எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் அவனே துணை, ஐந்தெழுத்து, திருநீறு , வழிபாடு ஆகியவற்றின் பெருமை கூறும் பாடலைப் பாடி அந்த எம்பெருமான் அருள் பெறுவோமாக.

No comments: