சீவனில் ’சீ’ யில் உள்ள கொம்பென்னும் ஆணவ மலம் நீங்கும் போது அந்த சீவனே சிவன் ஆகின்றான் என்பதை உணர்த்தும் பொருட்டே ஆருத்ரா தரிசனத்தின் போது பல்வேறு திருக்கோவில்களில் வெள்ளை சார்த்தி புறப்பாடு உற்சவம் நடைபெறுகின்றது.
ஐயன் வெள்ளை சார்த்தி புறப்பாடு
ஐயன் வெள்ளை சார்த்தி புறப்பாடு
அம்மை வெள்ளை சார்த்தி புறப்பாடு
மானிடர்களாகிய நம்மை மாயையினால் மூடியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களே வெள்ளைப் போர்வை அது மூடியிருக்கும் போது நமக்கு இறை தரிசனம் கிட்டாது. என்று அவற்றை நாம் போர்வையைக் களைவது போல் களைந்து பூரண சரணாகதி அடைகின்றோமோ அன்று தான் நமக்கு ஆருத்ரா தரிசனம் கிட்டும், அதுவே பரமானந்த நிலை, சச்சிதானந்த நிலை என்பதை உணர்த்துவதே வெள்ளை சார்த்தி புறப்படும் உற்சவம்.
தில்லையில் ஐயனும் அம்மையும் எட்டாம் நாளன்றும், வட பழனியில் காலையிலும், காரைக்காலில் இரவில் முழு வெள்ளை மலர் அலங்காரத்திலும், வைணவ தலங்களில் பிரம்மோற்சவத்தின் போது போர்வை களைதல் என்று ஏழு போர்வைகள் போர்த்தி பெருமாள் எழுந்தருளி பின் அவற்றைக் களைந்து பின் தரிசனம் தருவதும் இதே ’பூரண சரணாகதி’ தத்துவத்தையே உணர்த்துகின்றது.
பஞ்ச கிருத்திய நடனம்: நாம் எல்லோரும் உய்ய அம்பத்துள் ஆடும் ஆடல் வல்லான் தனது நடனத்தால் இந்த பிரம்மாண்டத்தையே இயக்கத்தில் வைத்துள்ளான். எனவேதான் அன்பர்கள்
ஆட்டுவித்தால் யாரொருவர் யாரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் யாரொருவர் அடங்காதாரே என்று பாடிப் பரவினர்.
ஐயனின் வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது.
தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு
சாற்றிடும் அங்கையிலே சங்காரம்-
ஊற்றமாய் ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு
என்றபடி ஐயனின் ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளலை குறித்து ஐந்து தடவை கோயிலைச் சுற்றி வலம் வருகின்றார் எம்பெருமான். முதல் சுற்றின் போது வேதம் (ஸ்ரீ ருத்ர) கோஷத்துடனும், இரண்டாவது சுற்றின் போது எம்பெருமான் தானே தன் திருக்கரங்களினால் எழுதிய திருவாசக பாராயணத்துடனும், மூன்றாவது சுற்றின் போது மூவர் பெருமக்களின் தேவார இன்னிசையோடும், நான்காவது சுற்றின் போது நாதஸ்வர மல்லாரி இசையோடும், ஐந்தாவது சுற்றின் போது ஆன எல்லாவிதமான உபசாரங்களுடன் ஆனந்த தாண்டவத்துடனும வலம் வந்து அருளிகின்றார்.
எல்லாம் அவ்ன் செயலே நடப்பதெல்லாம் அவனாலே என்பதை உணர்த்தும் இன்னொரு உற்சவம் இது. இனி நாளை ஆருத்ரா தரிசனத்தின் போது நடைபெறும் ஊடல் உற்சவத்தைப் பற்றிப் பார்ப்போம்.
7 comments:
அருமையான பதிவுக்கு நன்றி. ஐந்தொழில்களில் "மறைத்தல்" என்று கூறியுள்ளீர்கள். இதை சற்று விளக்கி கூற முடியுமா? "மறைத்தல்" என்றால் என்ன?
மாயை என்பதே மறைத்தல் தொழிலாகும்.
ஜீவான்மாக்கு எதுவும் உரிமையில்லாத போதிலும் இது என்னுடையது என்று மயங்கி இருக்கும் நிலை.
இதையே கிருஷ்ண பரமாதமா கீதையிலே எது உன்னுடையது? எதை நீ கொண்டு வந்தாய்? என்று கூறுகிறார்.
அந்த மாயையிலிருந்து விடுபட ஜீவான்மா முயற்சி செய்தால் அவனருளால் ஒரு தகுந்த குரு கிடைத்து மோக்ஷம் கிட்டும் அதுவே அருளல் ஆகும்.
அற்புதமான விளக்கங்களுடன் சிறந்த படங்களுடன் வந்த நேர்த்தியான பதிவு.முடியும்போது என்பதிவுக்கும் வருகை புரியவும்
வாருங்கள் இராமசாமி அவர்களே. தங்கள் வருகைக்கு நன்றி. தாங்கள் அடுத்த பதிவு ஆரம்பிக்கும் போது அடியேனையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஆழ்ந்த கருத்துக்களை எளிமையா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ஆழ்ந்த கருத்துக்களை எளிமையா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
நன்றி மதுரையம்பதி அவர்களே தங்களுடைய அனைத்து பின்னூட்டங்களுக்கும்.
Post a Comment