Wednesday, December 19, 2007

ஆருத்ரா தரிசனம் - 5

தில்லையில் ஆருத்ரா தரிசனம்பொன்னம்பலம்
மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் அவர்கள் செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான, மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும். அன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது ஐதீகம். எனவே திருவாதிரையன்று அம்பல வாணாருக்கு எனவே இந்த திருவாதிரை நாள் அவர்களின் உஷத் கால பூஜையாகும்.

தில்லை அம்பல ஆனந்த தாண்டவ நடராஜர்
எம்பெருமானின் பஞ்ச சபைகளுள் முதலாவதான கனக சபையாம் தில்லை சிற்றம்பலத்தில் இத்திருவிழா பத்து நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது . இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது. ஸ்ரீ விநாயகர் மூஷ’க வாகனத்திலும், என் அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, ஐயன் 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள்வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி சுந்தரர் கோலத்தில் கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்தி சுந்தர மூர்த்தியாக தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை எழிற் கோலம் காட்டுகின்றார். இன்றைய தினம் சித்சபையிலே நடராஜப் பெருமான் மற்றும் சிவகாம சுந்தரியின் முக தரிசனம் மட்டுமே கிட்டும். 9ம் நாள் காலை எம் கோனும் எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கண்டருளுகின்றார். மூல மூர்த்தியாக உள்ள இறைவனே உற்சவ மூர்த்தியாக வீதி உலா காண்பது சிதம்பரம் ஆலயத்தின் தனி சிறப்பு. மூலவரை தரிசிக்க முடியாதபடி உடல்குறை உள்ளவர்களும் அல்லது வயோதிகம் கொண்டவர்களும் உற்சவர் பிரம்மோற்சவ காலங்களிலும் மற்ற திருவிழாக்க்காலங்களிலும் தம் வீடு இருக்கும் தெருவழியே செல்லும் போது உற்சவரை கண்டு களிப்பது வழக்கம். அதாவது உற்சவர் கோலத்தில் மூலவரை தமது இல்லத்தில் இருந்தே கண்டு தரிசிப்பர். ஆனால் சிதம்பரத்தில் அத்தகைய பக்தர்களுக்கு மூலவரையே தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது பெறும் பேறுதானே! அதுவும் எம்பெருமானின் ஜடா முடியை இந்த இரு நாட்கள் மட்டுமே கண்டு தரிசனம் செய்ய முடியும். தினமும் மாலையில் தேவ சபையிலிருந்து மாணிக்க வாசகர் சித்சபைக்கு எழுந்தருளி திருவெம்பாவை பதிகங்களை விண்ணப்பித்து அருளுகின்றார் அப்போது ஓதுவார்கள் பாராயணம் செய்ய அனைத்து பக்தர்களும் கூடவே திருவெம்பாவையை பாராயணம் செய்கின்றனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அண்டர் நாயகனுக்கு தீபாராதனை காட்டப்படுகின்றது. பின் மாணிக்க வாசகர் தேவ சபைக்கு திரும்புகிறார். காலை உற்சவத்தில் மாணிக்க வாசகரும் எழுந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன் மாணிக்க வாசகருக்கும் தீபாராதாணை காட்டப்படுகின்றது. சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் முடிந்தத்ற்கு அடுத்த நாள் மாணிக்கவாசகருக்கு விடையாற்றி விழா நடைபெறுகின்றது.


பத்தாம் நாள் திருவாதிரையன்று அருணோதய காலத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன அய்யனுக்கும் அம்மைக்கும். அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம் துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம் பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித் சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது. பின் தீர்த்த வாரி கண்டருளிய பஞ்ச மூர்த்த்’களுடன் ஆருத்ரா மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்கு கூடும் மக்கள் கூட்ட்ம் தான் எத்தனை கோவிலின் உள்ளே நிற்பதற்க்கு கூட இடம் இருக்காது. 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது. ஆனி உத்திரமும் பத்து நாள் பெருவிழா என்றாலும் மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாராயணமும், பின்னர் சித்சபைக்கு திரும்பும் போது கோவிலுக்குள் சிறப்பு நடனமும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே நடைபெறுகின்றது.

No comments: