Wednesday, December 12, 2007

ஆருத்ரா தரிசனம் -1


மார்கழி மாதத்தின் சிறப்புஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆகவே தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலத்திற்கு(தை மாதம்) முந்திய மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம். தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.


எல்லோரும் நினைப்பது போல மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சிவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.


தட்சாயண காலத்தின் கடைசி மாதம் மார்கழி, ருதுவில் இது ஹேமந்த ருது. தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. வேத ஞானத்தின் மணி முடியாகத் திகழும் ஸ்ரீமத் பகவத் கீதையில் "மாஸானாம் மார்கசீர்ஷோ அஹம்" அதாவது "மாதங்களில் நான் மார்கழி" என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகின்றார். இம்மாதத்தில் தான் பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிக்க அர்ஜ"னனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தார்.


மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படுகின்றது. சிவ பெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை என்னும் ஆதிரை தரிசனம் அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த நடராஜப் பெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளிகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் இன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.


பல சைவத்தலங்களில் இவ்விழா பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்றும், முப்பத்து முக்கோடி ஏகாதசியென்றும் போற்றப்படுகின்றது. பல வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அத்யயனோற்சவம் நடைபெறுகின்றது.


மார்கழி அமாவாசையன்று அனுமத் ஜெயந்தி தினம். அநுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது வடை மாலை அலங்காரம் புறப்பாடு என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. . மார்கழி மாத முதல் புதன் கிழமை குசேலர் தினமாக கொண்டாடப்படுகின்றது. மார்கழி 27ம் நாள் கூடாரவல்லி, பாவை நோன்பு வெற்றி பெற்றதால் அந்த ஆண்டவனுடன் கூடியதை கொண்டாட மூட நெய் பெய்து முழங்கை வழி வார சக்கரை பொங்கல் படைத்துக் கொண்டாடும் நாள். மார்கழி நிறை நாள் போகிப் பண்டிகை வைணவத் தலங்களில் ஆண்டாள் திருக்கல்யாணம். இந்திரனின் ஆணவத்தை அடக்க ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலைக்கு படையல் படைத்ததாக ஐதீகம்.


பாவை நோன்பை மேற்கொண்டு திருப்பாவை பாடிய ஆண்டாளுக்கு இம்மாதம் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடைபெறுகின்றது, பல்வேறு மூலிகைகள் சேர்த்து எண்ணெய் காய்ச்சப்படுகின்றது. இந்த உற்சவத்தின் போது ஸ்ரீ ஆண்டாள் தினமும் காலையில் ஸ்ரீநிவாசர், சுந்தரராஜர், பெரிய பெருமாள்,வடபத்ரசாயி பே'ன்ற கோலங்களில் எழுந்தருளுகின்றார். நீராட்டம் முடிந்து அலங்காரத்தின் போது மூக்குத்தியை பட்டர்கள் கொண்டு செல்லும் போது அது டக் என்று ஒட்டிக் கொள்ளுமாம்.


திருவண்ணாமலையில் திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகருக்கும் ஆவுடையார் கோவிலில் பத்து நாள் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.


இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்னர் பிரம்மாண்டமான கோலங்களை இடுகின்றனர் பெண்கள். மார்கழிப் பனி நாளில் அதிகாலையில் ஒஜோன் அதிகமாக இருக்கின்றதாம். அதுவும் ஒரு காரணமோ நமது முன்னோர்கள் இவ்வாறு நம்மை அதிகாலை எழுந்து இறைவழிபாடு செய்ய சொல்லியதற்கு. கொங்கு மண்டலத்தில் அந்த தெருவை அடைத்து போடப்பட்ட கோலங்களில் பசுஞ்சாணத்தினால் பிள்ளையார் வைத்து அதில் மலர்களை சொருகி வைத்து அழகு படுத்துவோம். நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் மரங்களில் ஏறி பூவரசம் பூ பறித்ததையும், தோட்டங்களில் சென்று பூசணிப் பூ பறித்ததையும், குப்பை மேட்டில் சென்று ஊமத்தை பூ பறித்ததையும், பங்களாக்களில் இருந்து செம்பருத்திப் பூ பறித்ததையும் இன்று என் பிள்ளைகள் அனுபவிக்கவில்லை, சென்னையில் பிளாட்(flat)களில் கோலமே பெரிது அதில் பிள்ளையார் எங்கே. தினமும் போட்டிதான் யார் வீட்டில் பெரிய அழகான கோலம், அதிக பிள்ளையார் என்று. அந்த பிள்ளையார்களை வீட்டின் கூரை மேல் எடுத்து போட்டு வருவோம். காணும் பொங்கலன்று அந்த பிள்ளையார்கள் அனைத்தையும் ஒரு கூடையில் பெண்கள் எடுத்து தலையில் வைத்து எடுத்து சென்று வாய்க்காலில் போட்டுவிட்டு வருவார்கள் , நாங்கள் அனைவரும் அவர்களுடன் பாட்டுப் பாடிக் கொண்டே கூடச் செல்வோம்.


அதிகாலை எழுந்து பச்சை தண்ணிரில் குளித்து விட்டு திருப்பாவை, திருவெம்பாவை புத்தகத்தை எடுத்துக் கொண்டு பிரசண்ட விநாயாகர் கோவிலுக்கு ஓடுவோம். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்புகழ், சிவ புராணம் ஆகியவற்றை பாராயணம் செய்த பின் பிரசாதம் வாங்கிக் கொண்டு இல்லம் திரும்புவோம். ஒப்புவித்தல் போட்டியும் நடைபெறும் பரிசுகளும் உண்டு. சிவ புராணம் முழுவதையும் மனப்பாடம் செய்தது அப்போதுதான். பொங்கலுன்று பரிசளிப்பு விழா நடைபெறும். அது ஒரு கனாக் காலம்.

No comments: