Friday, October 16, 2020

கோலாகல நவராத்திரி - 1

                                

அங்காள பரமேஸ்வரியம்மன் 


இவ்வருடம் புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசை வந்ததாலும், சந்திரமான நாள் காட்டியின் படி அதிக மாதம் வந்ததாலும், அச்சமயத்தில் எந்த பண்டிகைகளும் கொண்டாடுவதில்லை என்பதாலும்  ஐப்பசியில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.  

மேலும் கொரோனா என்னும் தீநுண்கிருமியின் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதாலும் முந்தைய வருடம் போல அனைவரையும் அழைத்து கொண்டாட முடியாத ஒரு சூழ்நிலை. ஆலயங்களுக்கும் செல்ல முடியாத நிலை, ஆயினும் நவராத்தியின் போது அம்மனிடம் இந்த தொற்றிலிருந்து உலகத்தோரை காப்பாற்று தாயே! என்று வேண்டிக்கொள்ள  அவரவர்கள் வீட்டில் இருந்தே அம்மனை வழிபடுவோம்.

                

தங்க முலாம் கவசத்தில் உற்சவர் அம்மன்  

எனவே முந்தைய நவராத்திரிகளில் எடுக்கப்பட்ட அம்மனின் படங்கள் இவ்வருடம் இடம் பெறுகின்றன.  இப்பதிவில் அடியேனது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரியின் தரிசனம் கண்டு களியுங்கள் அன்பர்களே. பாரத தேசம் முழுவதும் நவராத்திரி பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது அதில் ஒரு விதம் பற்றி இப்பதிவில் காணலாம்.

நாம் செய்யும் எல்லா காரியங்களுமே, ஒரு காரண காரியத்துடன் தான் நிகழ்கின்றன. இதை, நான்கு சொற்களால் அடையாளப்படுத்துகிறது சனாதன தர்மம். அவை, காரியம், கரணம், கர்த்தா, காரணம் என்பன. 'கரணம் காரியம் கர்த்தா காரணம்சேதி கீர்த்திதம்' என்கிறது சிவரஹஸ்யம். காரியம் என்பது, நம் வாழ்க்கையில் அன்றாடம் செய்யும் வேலைகள். அதாவது, நம் தேவைக்காக நாம் உழைப்பது, முயற்சிப்பது போன்றவை. கரணம் என்பது, கருவி. எழுதுவது காரியம் என்றால், எழுதுகோல் கருவி. அது போன்று, நமக்காக நாம் செய்யும் வேலைகள் எல்லாவற்றிற்கும் உதவும் பொருட்கள், கரணம் எனப்படுகின்றன. உபகரணம் என்ற சொல் கூட, வழக்கில் உள்ளது. எதற்காகச் செய்கிறோம் என்பதை விளக்குவது, காரணம் என்ற சொல்லாகும்.

                               

கர்த்தா என்பது, செய்பவரைக் குறிக்கும். நாம் செய்கிறோம் என்றாலும், நம்மை ஒருவன் இயக்குகிறான் என்றாலும், இயக்குதல் என்பது, கர்த்தா என்ற சொல்லிலேயே அடங்கும். இந்த வகையில், நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் தத்துவார்த்தங்களை, எளிமையாகப் புரிந்து கொண்டால், 'நான் என்பது ஒன்றுமே இல்லை; எல்லாம் இறைவன் செயல்' என்ற உண்மை விளங்கி, மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வைப் பெற்றிடலாம். இதற்காகத் தான், ஹிந்து மதம் கூறும் வழிபாட்டு முறைகளில் கூட, இம்முறைகள் எளிமையாகப் புகுந்து, நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. ஏராளமான தெய்வ வழிபாடுகளையும், சடங்குகளையும் கூறும் ஹிந்து தர்ம சாத்திரங்களின் நோக்கம், கொண்டாட்டம் என்ற பெயரில் புத்துணர்ச்சி பெற்று, உண்மை உணர்ந்து, மனம் தளராத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதே.


                              

அம்பாளுக்கு  ஸ்ரீராஜராஜேஸ்வரி என்று ஒரு திருநாமம் உண்டு.  அதற்கு அரசர்களுக்கெல்லாம் அரசி என்று பொருள். தம் குடிமக்களுக்கு இன்னல் ஏற்பட்டால், அரசர் எப்படி தம் அமைச்சர்கள் மற்றும் சேனாதிபதிகளை கொண்டு காப்பாற்றுகிறாரோ, அதுபோல, உலக உயிர்களுக்கு எல்லாம் தாயாகிய பராசக்தியானவள், தேவர்கள், மனிதர்கள் என, யாருக்குத் துன்பம் ஏற்பட்டாலும், அதை ஏற்படுத்திய தீய சக்திகளை அழித்து, எல்லாரையும் காத்தருளுபவள்.

இதற்காக, தம் சக்தியால், துர்கை, லட்சுமி, சரஸ்வதி மற்றும் பிராம்மி முதலான சப்தமாதர்களை தோற்றுவித்து, அவர்களை அரக்கர்களுடன் போரிடச் செய்து, உலகை காக்கிறாள். அன்னையின் அமைச்சராக இருப்பவள், ஸ்ரீராஜ மாதங்கி; சேனாதிபதியாக இருப்பவள், ஸ்ரீவாராகி. இவர்கள் இருபுறமும் இருக்க, மற்ற சக்திகள் புடைச்சூழ, ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே, ஸ்ரீராஜராஜேஸ்வரி. இந்த மாதிரி அன்னை எழுந்தருளியிருக்கும் சபையை, நம் வீட்டிலும் அமைப்பதற்குத் தான் கொலு என்று பெயர். நவராத்திரியில் கொலு வைத்து வழிபடும் இல்லங்களுக்கெல்லாம் அன்னை எழுந்தருளி, அருள்பாலிக்கிறாள். நம் வீட்டிற்கு அம்பாளை அழைக்க நாம் விரும்புவது போன்று, நம் வீடுகளுக்கு வருவதற்கு அம்பிகையும் விரும்புகிறாள் என்பது தான் உண்மை.

இந்த அடிப்படையில், பெண்களுக்கு நவராத்திரி என்றதும் சந்தோஷமும், பரபரப்பும் ஏற்படுவது இயற்கை தானே! முன்பெல்லாம் வீட்டின் நடுவில் முற்றம் எனும் திறந்தவெளியும், சுற்றிலும் தாழ்வாரம் எனும் இடமும் இருக்கும். அப்போது, கொலு வைக்க இடத்துக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், தற்போது பலரது வாழ்க்கையும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே நகர்கிறது. அதற்குத் தகுந்தாற்போல், எப்படி வைப்பது என, பல சகோதரிகள் கவலைப்படுகின்றனர். கொலுப் படிகளும், 'ரெடிமேடாக' இரும்பு மற்றும் பிளாஸ்டிக்குகளிலேயே விற்பனைக்கு வந்து விட்டன.

படிகள், ஒற்றைப் படையில் இருக்க வேண்டும். ஐந்து படிகளுக்கு குறையாமல் இருந்தால் தான் அழகு. ஏழு, ஒன்பது என வசதிக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல அமைத்துக் கொள்ளலாம்.

                            


முதல் படியில்...

எண்ணிய காரியங்கள் தடைகள் இன்றி நடக்க விநாயகர், மன உறுதிக்கு முருகன் போன்ற தெய்வங்கள்.

2ம் படியில்...

படைக்கும் தொழில் புரியும் பிரம்மன், கல்வி தேவதையாகிய சரஸ்வதி மற்றும் இவர்கள் தொடர்புடைய தெய்வங்களையும், புத்தகம், பேனா முதலியனவற்றையும்.

3ம் படியில்...

காக்கும் தொழில் புரியும் ஸ்ரீமகாவிஷ்ணு - மகாலட்சுமி மற்றும் தசாவதாரங்கள், இவை சம்பந்தமுடைய பொம்மைகள்.

4ம் படியில்...

சிவ அம்சமான நடராஜர், சிவகாமி, துர்கை, காளி மற்றும் இவை தொடர்புடைய பொம்மைகள்.

5ம் படியில்...

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மையமாகவும், கயிலைக்காட்சி அரங்கன் மற்றும் இது தொடர்புடைய பொம்மைகளையும் வைக்க வேண்டும்.

இந்நிலையில், கொலு அமைப்பது பராசக்தியின் ராஜசபையை குறிப்பதாகவும், நாம் வாழும் உலகம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், நிறைவாக பேரின்பம் அளித்தல் எனும் பிரபஞ்ச ஐந்தொழில்களை உணரும் வகையிலும், நம் இல்லங்களை அலங்கரித்தால், அன்னையின் அருள்  கிடைக்கும்.

  அம்மன் அருள் வளரும் . . . . .

Tuesday, October 13, 2020

திருப்பாத தரிசனம் - 42

                                           திருக்கச்சூர்  - அமிர்த தியாகர் -2

                                                  

அடுத்து மலைக்கோவிலின் சிறப்பைப் பற்றியும் காணலாம் அன்பர்களே. மலைக்கோவில் ஊர்க்கோவிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆலக்கோவிலைப் பாடும் போது சுந்தரர் மற்றும் ஏயர்க்கோன் கலிக்காம நாயனார் இருவரும் மலைக்கோவிலையும் சேர்த்தே பாடியுள்ளனர்.

மேலை விதியே விதியின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே  மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

 பொருள் : மேம்பட்டதாகிய அறநெறியாயும், அதன் பயனாயும் உள்ளவனே, பகைவரது திரிபுரங்களை எரித்தவனே, காலையில் எழுந்து உன்னை வணங்குபவர் மனக்கவலையை அடியோடு நீக்குபவனே, நீலகண்டத்தை யுடையவனே, மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன் போன்றவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே, வயல்கள் நிறைந்த கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, அடியேன் உன்னை மறவேன் என்று மலைக்கோவிலையும் பாடியுள்ளார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் “வன்றொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்தானார்” என்றும் போற்றுகின்றார்.

                                 

இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு “ஔஷத கிரி“ எனும் பெயருண்டு. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்ற போது அதன் ஒரு துண்டு கீழே விழுந்து ஔஷத மலையானது. சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம் இம்மலையில் இறங்கி இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது. இந்திரன் தன்னுடைய தீராத நோய்  தீர  நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும்  பலை, அதிபலை என்ற மூலிகை  வேண்டி  சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம். அதனால்,  நாரதரிடம் உபாயம் கேட்க,  அன்னையை மறந்து தவம் இயற்றியதால்,  அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம், தன் தவறை உணர்ந்த இந்திரன்,  அஸ்வினி, தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம்.  பிறகு அன்னை மனம் குளிர்ந்து மூலிகையை அருளினாராம்.  இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே ”மருந்தீஸ்வரர்” என்றும்,  மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் அம்பாள் “அந்தக நிவாரணி“,  ”இருள் நீக்கி அம்மையார்” என்றும் அழைக்கபடுகிறார். அகத்தியரும், அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுமாம்.  மலைக்கோவிலின்

மூலவர்: மருந்தீசர்

அம்பாள்: அந்தக நிவாரணி, இருள் நீக்கி அம்மை

தலவிருட்சம் : வேர்ப்பலா.

தீர்த்தம்: ஔஷதி தீர்த்தம்.

கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபம்  அழகாக காட்சி தருகின்றது இராஜகோபுரம் இல்லை நுழைவாயில் மட்டுமே கற்றளியாக உள்ளது. அதை தாண்டி ”மண்ணே மருந்தான” மருந்தீசரை தரிசிக்க நுழைவாயிலை கடந்து கோவிலின் உள்புறம் நுழையும்போதே,  நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகான ஒரு கோவிலுக்குள் நாமிருப்பதை உணரலாம். இத்தலம் 108 சக்தி பீடங்களில் ஒன்றான  ”ஔஷதை” என்கிற சக்தி பீடமாகும். தெற்கு நோக்கிய வாயிலை கடந்து உள்ளே சென்றால் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம். மண்டபத்தின் தூண்களில் துவார பாலகர்கள், இலிங்கோத்பவர்,  மாவடி சேவை  பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின்  சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து. சுந்தரரை நோக்கியவாறு கையில் அமுதுடன் இறைவனின் சிற்பமும் உள்ளது.  மண்டபத்தின் நடுவில் அழகாக செதுக்கப்பட்ட தாமரை போன்ற அமைப்பில் வட்டவடிவில் சிறிய சக்கரம் காணப்படுகிறது.

சுற்றிலும் இயற்கை சூழல். மிகவும் இரம்மியான அமைதியான இடம். பச்சைப் பசேலென்று அமைதியாக உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது ஆலயம். உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி,   மேற்கு நோக்கி திருவண்ணாமலையாரை சேவித்தபடியான  அமைப்பில் வீற்றிருக்கிறார் பிள்ளையார். இங்கே வழிபட்டால் திருவண்ணாமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். கணபதியை வணங்கிய பின் வலம் வரும்போது ஐயன் சன்னதிக்கு எதிரே ஒரு சாளரம் அதன் வழியே கொடிமரம், நந்தி, பலி பீடத்தை தரிசிக்கலாம்.

எம்பெருமான் மருந்தீஸ்வரராக சிவலிங்க ரூபத்தில் எழுந்தருளி மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். சனகாதி முனிவர்கள் வழிபட்ட பெருமான். அஸ்வினி தேவர்கள் வழிபட்ட இறைவர். மருந்தீஸ்வரரை வேண்டிக் கொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.   உள்சுற்றில் சுப்பிரமணியர் சன்னதி.  இச்சன்னதி அருகில் நின்று பார்க்கும் போது கோவிலின் அழகு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அருகில் ஒரு மண்டபத்தில் நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது.   பிரம்ம தேவன் இங்கு தவம் செய்த இடம் என்பதால் இங்கு பிரம்ம தேவனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் உண்டு. சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்ம முக சண்டிகேஸ்வரராக தரிசனம் தருகின்றார். இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம்.  பைரவர் சன்னதியும். மேலும்,  விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகங்கள் அமைந்து இருப்பது இக்கோவிலின் சிறப்பு.

அம்பாள் சன்னதி வெளிப்பிரகாரத்தில் தனிக்கோவிலாக முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. மருந்தீஸ்வரர் மற்றும் இருள் நீக்கி அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பு.  அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் ஆணவம், கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், பிரம்மஹத்தி, பித்ரு தோஷங்கள் நீங்கும்,  குறைவில்லாத வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில்  அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார். அம்பாள் சன்னதிக்கு எதிரே நாக லிங்க மரம் மரத்தடியில் நாகர்கள்.




கொடி மரத்திற்கு கவசம் எதுவும் இல்லை. இதன் அடியில் உள்ள மண்ணே மருந்தாகின்றது. அடுத்து அழகாக இறங்கி செல்லும் அமைப்புடைய படிக்கட்டுகளுடன் கூடிய ”ஔஷததீர்த்த குளம்” அமைந்துள்ளது.

மாசி மகத்தில் இக்கோவிலில் திருவிழா நடைப்பெறுகிறது. இங்கு கிரிவலம் சிறப்பு,  எல்லா நாட்களிலும் எந்நேரத்திலும் கிரிவலம் வரலாம் என்றாலும்  பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலுமாம்.  மேலும். இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறட்டும் என்று   சிவபெருமான்  வரம் அருளினாராம். இம்மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

இவ்வாறாக சோழ மண்டலத்தின் சப்த விடங்கத்தலங்களின் தியாகேசர்கள் மற்றும் தொண்டை மண்டலத்தின் உப விடங்கத்தலங்களின் தியாகேசர்கள் தரிசனமும் சிறப்பாக நிறைவுற்றது.  இது வரை வந்து தரிசனம் கண்ட அனைவருக்கும் சிவசக்தியின் அருள் வேண்டி இத்தொடரை இப்பதிவுடன் நிறைவு செய்கின்றேன். அடுத்து நவராத்திரி பதிவுகளுடன் சந்திக்கின்றேன் அன்பர்களே.

சுபம்

திருப்பாத தரிசனம் - 41

                                          திருக்கச்சூர்  - அமிர்த தியாகர்



தொண்டை நாட்டு உபவிடங்கத்திருத்தலங்களில் அடுத்து நாம் தரிசிக்கும் தியாகேசர் திருக்கச்சூர் அமிர்த தியாகேசர் ஆவார்.
  எம்பெருமானது திருப்பெயரான தியாகராஜர் என்னும் பெயர் வருவதற்கான தலம் இது எனலாம். தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்த போது மலை நிற்காமல் சாய்ந்தது. அப்போது திருமால்  கூர்ம அவதாரம் எடுத்து அம்மலையை தம் முதுகில் தாங்கச்சென்றார். அதற்கு முன்னர் மலையைத் தாங்கும் வலிமை பெற இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். கச்சபம் என்றால் ஆமை, எனவே இத்தல இறைவன் கச்சபேஸ்வரர் ஆனார் இத்தலமும் திருக்கச்சூர் ஆனது. ஆதி கச்சேபம் என்றும் அழைக்கப்படுகின்றது.

                                       

பாற்கடலைக் கடையும் போது முதலில் விடம் வெளியே வந்தது. வலி தாங்க முடியாமல் வாசுகியும் நஞ்சைக் கக்கியது. ஆலமும் ஆலமும் இணைந்து ஆலாலமாகி சகல ஜீவராசிகளையும் மிரட்டியது. சகல தேவர்களும் திருக்கயிலை நாதரை சரணடைய அவரும் அனைவரையும் காக்க திருவுள்ளம் கொண்டு தனது அணுக்கத் தொண்டரான சுந்தரரை அவ்விடத்தை எடுத்து வர அனுப்பினார். சுந்தரரரும் விடத்தை ஒரு நாவல் போல் ஆக்கி கொண்டு வந்து இறைவனிடம் அளித்தார். எனவே இவர் ஆலால சுந்தரர் என்று அழைக்கப்பட்டார். பின் ஒரு சமயம் மலர் பறிக்கும் போது அங்கு மலர் பறித்துக்கொண்டிருந்த அம்பிகையின் சேடிகளைப் பார்த்து மயங்க இறைவன் அவரை பூலோகத்தில் பிறக்கப் பணித்தார்.  அவரும் பூவுலகில் நம்பி ஆருரராக அவதரித்து எம்பெருமான் தோழர் என்று சிறப்புப் பெற்றார்.

பரம கருணாமூர்த்தியான சிவபெருமானும் அவ்விடத்தை அப்படியே விழுங்கினார், அப்போது ஐயனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமையம்மை தனது தளிரன்ன கரத்தினால் ஐயனின் கண்டத்தை பிடிக்க அவ்விடம் அங்கேயே தங்கியது. விடத்தின் வீரியத்தினால் ஐயனின் கழுத்தும் நீல நிறமானது, அவரும் நீலகண்டர் என்று அழைக்கப்பட்டார். யாவரும் விரும்பாத விடத்தையும் விரும்பி உண்டதால் ஐயனுன் தியாகராஜர் எனப்போற்றப்பட்டார். பின்னர் தேவர்களும் அசுர்ர்களும் பாற்கடலைத் தொடர்ந்து கடைய ஐராவதம், உச்ச்சைரவசு, காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி, திருமகள் தோன்றினர் பின்னர் நிறைவாக அமிர்தத்துடன் தன்வந்திரி பகவான் தோன்றினார். திருமாலின் தந்திரத்தினால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை பருகி சாகாவரம் பெற்றனர். இவ்வாறு அமிர்தம் பெற திருமால் இத்தலத்தில் வழிபட்டதால் அவருக்கு நடனக் காட்சி நல்கிய தியாகருக்கு அமிர்த தியாகர் என்று திருநாமம்.


                                                   

கூர்ம ரூபத்தில் திருமால் வழிபடும் காட்சி

சனகாதி முனிவர்கள் வழிபட்ட தலம். சனகாதி முனிவர்களுக்கு நடராசப்பெருமான் உபதேசம் செய்யும் ஐதீகம் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் சிங்கபெருமாள் கோவில் எனும் ஊரில் அருகில்  அமைந்துள்ளது. திருவாரூர் போல இறைவன் கால் பதித்து நடந்த தலம்.  சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டித்தலங்களுள் 25 வது தலம் ஆகும்.  பசி என்பது ஒரு வகை பிணி(நோய்) என்பது பெரியோர் வாக்கு. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியும் பசிப்பிணியை கருத்தில் கொண்டே வழக்கில் உள்ளது. நம் வாழ்வில் என்றும் நமக்கு உணவு கிடைத்து பசியில்லாமல் இருக்க வழிபடவேண்டிய தலம் ஆகும் இத்தலம். எனவே முதலில் பசிப்பிணியை நீக்கும் அன்னதானத்தின் சிறப்பைப் பற்றி  சிறிது காணலாமா அன்பர்களே.

                                 

பண்டைய காலத்தில் திருக்கோவிலுக்கு தலயாத்திரையாக செல்பவர்களுக்கு ஆலயங்களில் உணவளிக்கப்பட்டது. இதனை சட்டிசோறு என கல்வெட்டுகள் குறிப்படுகின்றன. திருமங்கைமன்னன், இளையான்குடி நாயனார், அமர்நீதி நாயனார், அப்பூதியடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார், இடங்கழி நாயனார் ஆகியோர் அடியவர்களுக்கு அன்னம் படைத்து இறைவனருள் பெற்றவர்கள்.

திருவீழிமிழலையில் ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது இறை அருளால் பலி பீடத்தில் வைக்கப்பட்ட பொற்காசினை எடுத்து அப்பர் பெருமானும், திருஞானசம்பந்தரும் அடியவர்களுக்கு அமுது படைத்தனர்.  அனைத்து உயிர்களுக்கும் அமுதளிக்கும் இறைவனுக்கே அமுது படைத்து மங்காப்புகழ் பெற்றவர்கள் காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர் மற்றும் அரிவாட்ட நாயனார் ஆவர்.

தனது அடியவர்கள் பசியில் துன்பப்பட்ட போது இறைவன் தானே உணவு வழங்கிய வரலாறும் உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலியில் நாவுக்கரசப்பெருமானுக்கு சிவபெருமான் உணவு பெற்று அளித்தார். சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூரில் சுந்தரருக்கு இறைவன் அமுதும் நீரும் அளித்ததால் அவரைப் “பாடுவார் பசி தீர்ப்பாய்   பரவுவார் பிணி களைவாய்” என்று திருப்பதிகத்தில் போற்றியுள்ளார். இறைவன் இனி இத்தலத்தில் சுந்தரருக்கு இரந்து  விருந்திட்ட வரலாற்றைக் காணலாம்.

திருக்கழுகுன்றத்திலிருந்து இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். அவருடன் வந்த பரிசனங்கள் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் அப்படியே பசியுடன் மண்டபத்தில் படுத்துக்கொண்டிருந்தார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை பெற்று வந்து உணவு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர். அவரது கருணையை வியந்து ஒரு பதிகம் பாடி  ஈசனை போற்றுகின்றார், அதில் ஒரு பாடல்

முதுவாய் ஓரி கதற முதுகாட்  டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.

 பொருள் : பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே,  தேன்     சொரிகின்ற  கொன்றை மலரைச்    சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீர்  சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலை கொள்ளாரோ? என்று அகச்சான்றாக பாடியுள்ளார்.

                    

விருந்திட்ட ஈஸ்வரர்

ஸ்ரீதியாகராஜர் கோயில் என்றும் கச்சபேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இவ்வாலயம் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.  மற்றொரு கோயில், ஊருக்கு ஒதுக்குப் புறமாக, ஊரையொட்டி உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுவாமியின் திருநாமம் மருந்தீஸ்வரர். சுந்தரர் தமது பதிகத்தில் இம்மலைக்கோவிலையும் சேர்த்துப்பாடியுள்ளார்.  . இங்கே சிவபெருமான் ஊருக்கு நடுவிலும் மருந்தீஸ்வரர் மலை அடி வாரத்திலும் கோயில் கொண்டிருப்பதே சிறப்பானது என்றும் தெய்வாம்சம் நிறைந்த பூமி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்!   ஊர்க்கோவிலின்

மூலவர்: கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர்

அம்பாள்: அஞ்சனாட்சியம்மை, மை விழி அம்மன், கன்னி உமையாள்.

தல விருட்சம் : ஆல்

தீர்த்தம்: கூர்ம தீர்த்தம்.

பாடியவர்: சுந்தரர்

விழுதுகள் இல்லாத கல்லால மரம் தலவிருட்சமாக இருப்பதாலும், நீர் நிலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதாலும் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படும் இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு இராஜ கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்த போது இக்குளத்தை உருவாக்கியதாகக்  கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில்  ஆலயத்திற்கு வெளியே சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் மூஞ்சூறு மேல் விநாயகர், மயில் மேல் முருகர், துவார பாலகர்கள், பிச்சைத்தேவர்,  ரிஷபாரூட மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவர், வீர பத்திரர், கருடன், அனுமன், அனுமன் சேவை, காளிங்க நர்த்தனர், கல்கி அவதாரம், ஆமை வடிவில் மகா விஷ்ணு பூசை செய்யும் சிற்பம்  முதலான  அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நெடிதுயர்ந்த வெளி மதிற்சுவர் அவற்றின் மூலைகளில் நந்தியெம்பெருமான்.  கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் எதிரே உள் சுற்றின் மதிலின்  மேலே ஆமை வடிவில் மகாவிஷ்ணு சிவனை வழிபடும் சுதை சிற்பம் நம்மை வரவேற்கிறது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், விஸ்வரூப  நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. நந்தியெம்பெருமான் ஒரு தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். நட்சத்திர சாளரம் வழியாக இறைவனைப் நோக்குகின்றார். சாளரத்தின் இரு புறமும் விநாயகரும், வள்ளி தேவசேனை சமேத முருகரும் அருள் பாலிக்கின்றனர்.  பிரதோஷ தினத்தன்று இப்பெரிய நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு நந்தியெம்பெருமானின் மண்டபத்தின் மேலே மதில் சுவற்றில் ஆடல் வல்லானின் அழகிய சுதை சிற்பத்தைத் தரிசிக்கின்றோம். பிரதோஷ தினத்தன்று கூர்ம தீர்த்தத்தில் நீராடி கச்சபேஸ்வரரை தரிசனம் செய்ய எல்லா தோஷங்களும் விலகும், செல்வம், கல்வி, இன்பம் கிட்டும் என்று தல புராணம் கூறுகின்றது. 

தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது.  நட்சத்திர மண்டபத்தில் அமிர்த தியாகராஜர் சபை உள்ளது. இவர் அமிர்தவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிறகு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம், அனுமன்  மற்றும் முனிவர்  வழிபடும் சிற்பங்கள் உள்ளன. தூண்களின் பீடத்தில் யானை சிற்பங்கள் அருமையாக அமைந்துள்ளன. மேலும் இரு திருநீற்றுத்தூண்களும் அமைத்துள்ளனர். இம்மண்டபத்தின் முகப்பில்  பஞ்ச மூர்த்திகளின் சுதை சிற்பத்தை தரிசிக்கலாம்.

மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின்  சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில்  கருணையே வடிவாக அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. அஞ்சனம் என்றால் மை எனவே மை விழி அம்மன் என்று தமிழில் அழக்கின்றனர். அம்பாளுக்கு கண் மலர் சார்த்தி வழி பட கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். அம்பாள் சன்னதிக்கு செல்வதற்கு முன் வலப்பக்கம் ஸ்ரீசக்கரம் வரைந்துள்ளனர். அமாவாசை அன்று ஸ்ரீசக்கரத்திற்கு தேன் அபிஷேகமும் சிறப்பு பூசைகளும் நடைபெறுகின்றன.

அம்பாள் மஹா மண்டபக்கூரையை மீன், விருச்சிகம், கச்சபம், கௌலி, நாகம், சுறா மீன் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ஐயனின் மஹா மண்டபக்கூரையில் சக்கரம், தாமரை மற்றும் அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் வாகனங்களில் அருள் பாலிக்கும் சிற்பம் அருமையாக அலங்கரிக்கின்றது.

அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். வாயில்கள் எல்லாம் தெற்குப்புறமாக அமைந்துள்ளன. ஐயனுக்கு எதிரே நட்சத்திர சாளரம், சாளரத்திற்கு அப்புறம் கயிலாய நந்தியெம்பெருமானை தரிசிக்கின்றோம்.  திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். ஐயனை தரிசிக்கும் போது மனதில் ஒரு அமைதி.  கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்றில் பின்புறம் ஞானகணபதி, சோலீஸ்வரர், களத்தீஸ்வரர், மகேஸ்வரி, மார்கசகா ஈஸ்வரர், நாகலிங்கம், நாகராஜர், இராமநாதர், காசி விஸ்வநாதர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆகியோரை தரிசிக்கின்றோம்.  வடக்குச் சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

அம்மையப்பரை வணங்கிய பின் அமிர்த தியாகராஜரை வணங்கி வெளிப்பிரகாரத்தை வலம் வரலாம். தெற்கு நோக்கி அம்மன் சன்னதிக்கு முன்னர் நட்சத்திர மண்டபத்தில் மேலே   அம்மன் சுதை உருவமாக தரிசிக்கலாம். அம்மன் சன்னதிக்கு எதிரே நான்கு கால் மண்டபம். இப்பிரகாரம் மிகவும் விலாசமாக உள்ளது.  பச்சைப் பசேலென புல்வெளி அருமையாக உள்ளது. பல மாடுகள் கோவிலின் உள்ளே புல் மேய்ந்து  கொண்டிருப்பதைக் காண்கிறோம். மரங்களில் குரங்குகள் தாவுவதைக்  கண்ணுறலாம். கன்னி மூலையில் வேதவிநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கற்றளியாக கட்டப்பட்டுள்ள இச்சன்னதியின் முன் மண்டபத்தின் தூண்களிலும், கூரையிலும் அற்புதமான கற்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. குறிப்பாக கூரையில் அமைந்துள்ள சிறிய சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக அமைந்துள்ளன. ஆமையாக திருமால்  இத்தல இறைவனை வழிபட்ட வரலாற்றையும் மற்றும் பல அற்புத நடனக்கலைஞர்கள் சிற்பத்தையும்,  புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட பாலனை இறையருளால் வரச்செய்தது முதலான  சுந்தரர் வரலாறு ஒரு சிற்பத்தொடராக வடிக்கப்பட்டுள்ளதையும்   கண்டு களிக்கலாம்.

மூலவர் கச்சபேஸ்வரரின் விமானம் தொண்டை நாட்டுக்குரிய கஜ பிருஷ்ட அமைப்பிலும், தியாகேசர் விமானம் பிரமிட் அமைப்பிலும் உள்ளது. வடக்கில் கிழக்கு நோக்கிய சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் திருப்புகழ் வைப்புத்தலம்.  இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.

அடுத்து விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. இச்சன்னதிகள் 2009ம் ஆண்டு குடமுழுக்கின் போது  புதிதாகக் கட்டப்பட்டதாம்.  வடக்கு வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதியும் இருக்கிறது. இத்தலத்திலுள்ள இப்பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

இச்சுற்றில் நடராஜர் சபை விமானம் மற்றும் அம்பாள் விமானத்தையும் தரிசிக்கலாம். வடகிழக்கு மூலையில் யாகசாலை அமைந்துள்ளது. கிழக்கு பக்கம் திரும்பினால் நால்வர் சுதை சிற்பத்தை தரிசிக்கலாம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரம் மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்தந்த   நட்சத்திர நாளன்று இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். கடக இராசியில் பிறந்தவர்கள் வியாழன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஆலக்கோயிலை தரிசித்து  இறைவனின் கருணையை

இரந்துதாங் கொண்டு வந்து  இன்னடிசிலுங் கறியும்

அரந்தை பசி தீர அருந்துவீர்  என அளிப்பப்

பெருந் தகையார் மறையவர் தம் பேர்ருளின் திறம் பேணி

நிரந்த பெரும் காதலினால் நேர்  தொழுது வணங்கினார்  என்று பாடியுள்ளார்.  அது போலவே தனது அன்பனுக்கு பிச்சையெடுத்து விருந்தளித்த சிவபெருமானின்  அளப்பரும் கருணையை அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள்

பசியென்னும் நெருப்பை அணைப்பதே

மோட்சத்தின் திறவுகோல்

இன்றொண்டர் பசியற திருக்கச்சூரின்

மனைதொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – என்று  வியந்து பாடியுள்ளார்.

                                             

நந்தி தேவர்

 இத்தலத்தில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது.  மாசி மாதத்தில் சுந்தரருக்கு விருந்திட்ட விழா சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள் பங்கேற்றுக்கொள்ள வசதியாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் வெள்ளை யானையில் சுந்தரர் ஆலக்கோவிலில் இருந்து மலைக்கோவிலுக்கு எழுந்தருகின்றார். சமய சொற்பொழிவுகள், திருமுறை பாராயணம் நிகழ்கின்றன. பின்னர் பல்லக்கில் சுந்தரர் ஆலக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார்.

ஆடி சுவாதியன்று சுந்தரர் குரு பூசை விழா சிறப்பாக நடைபெறுகின்றது. காலையில் விருந்திட்ட ஈஸ்வரருக்கும், எம்பெருமான் தோழருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பின்னர் வெள்ளை யானையில் சுந்தரர் எழுந்தருளி திருக்கயிலாயக் காட்சி கண்டருளுகின்றார். இறைவன் சுந்தரருக்கு அன்னமிட்டதால் அன்று அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறுகின்றது.  

                                               

பிரதோஷ நாயகர்

ஒரு பிரதோஷத்தன்று இத்தலத்தில் வழிபடும் பாக்கியம் கிட்டியது. முதலில் சன்னதி  சுவருக்கு அப்பால் அமைந்துள்ள  மஹாநந்திக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அடுத்து மூலவர் கச்சபேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் பூசை. பின்னர் பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில்  திருக்கோவிலை வலம் வந்தருளுகிறார். அன்பர்கள் தேவார திருவாசகங்கள் பாராயணம் செய்து உடன் வருகின்றனர், நாதஸ்வரம், தவிலின் இன்னிசையுடன் மூன்று முறை வலம் வருகின்றார் எம்பெருமான், நிறைவாக அலங்கார தீபாராதனை. 

பெருவிழா சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி நடைபெறுகின்றது. காலை, மாலை சந்திரசேகரர் புறப்பாடு, இரவில் தியாசேசர் புறப்பாடு சிறப்பாக நடைபெறுகின்றது. தியாகேசர் பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன், பாரதி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோருக்கு தினமும் நடனக் காட்சி தந்தருளுவதாக ஐதீகம். எனவே இதை நடன வினோத பவனி என்றழைக்கின்றனர். தியாகரும் ஆடும் தியாகேசர் என்று போற்றப்படுகின்றார்.  முதல் நாள் கொடியேற்றம், மூன்றாம் நாள் காலை அதிகாரநந்தி சேவை மற்றும் ஐந்தாம் நாள் இரவு ரிஷப வாகன சேவை நடைபெறுகின்றது. ஏழாம் திருநாள் தேரோட்டம். சித்ரா பௌர்ணமியன்று காலை நடராஜர் உற்சவமும், பகலில் தீர்த்தவாரியும், இரவு தியாகேசர் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றது. பதினொன்றாம் திருநாள் இரவு திருவீதி உலா கண்டருளி அதிகாலை நான்கு மணியளவில் அஞ்சனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி தியாகேசப்பெருமான் அம்மன் ஊடலைத் தவிர்க்க, பந்தம் பறி உற்சவமாக பதினெட்டு திருநடனக் காட்சி தந்தருளுகின்றார்.

இவ்வாலயத்தில். முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தர பாண்டியன், வீர பாண்டியன், சம்புவரையர்கள், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர் ஆகிய மன்னர்களின் 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள், அமைக்கப்பட்ட நந்தவனங்கள், திருமேனிகள் ஆகியவற்றை வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் சோழ மண்டலத்து களத்தூர் கோட்டத்து செங்குன்ற நாட்டு நித்த வினோத நல்லூர் எனும் திருக்கச்சூர் என்றும் இறைவன் திருஆலக்கோயில் உடைய நாயனார் என்றும் குறிப்படப்படுகிறார்.

அடுத்து மலைக்கோவிலின் சிறப்பைப் பற்றியும் காணலாம் அன்பர்களே. 

Friday, October 2, 2020

திருப்பாத தரிசனம் - 40


திருவான்மியூர் ஐதீகம் 

மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உற்சவர் அம்பாள், ஒன்பது கோணமும் மேவி உறைகின்ற சுக்கிர வார அம்மனாக கண்ணாடி அறையிலே தினமும் நம் அனைவருக்கும் அருட்காட்சி வழங்குகின்றாள். தலையில் கரண்ட மகுடம், பாசம் அங்குசம் தாங்கி அபய வரத திருக்கரங்களுடன் அருள் பாலிக்கின்றாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் திருவிழாக் கோலமாக  திரிபுர சுந்தரி சுக்கிரவார அம்மனாக உட்புறப்பாடு கண்டருளுகிறாள்.  அம்மனின் சௌந்தர்யத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

அன்னையின் ஆலயத்தின் மஹாமண்டபத்தில் உள்ள  தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.  நரம்பு சம்பந்தமான நோய்கள், வறுமை, கடன் முதலியவற்றை நீக்கும் வல்லமை கொண்டவர். சரபேஸ்வரரின் தூணின் பின்புறம் உக்கிர நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.  வெளிப் பிரகாரத்தில் மும்முடி விநாயகர், விஜய விநாயகர், நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும், நாகர் சன்னதியும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் தெற்கு மூலையில் மடப்பள்ளியை அடுத்துக் காணப்படும் ஸ்ரீவிநாயகர் சன்னதியில் உருவத்தால் மாறுபட்ட மூன்று விநாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.

இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமியன்று தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மற்றும் பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் தியாகேசர் வசந்தோற்சவமும், பௌர்ணமியன்று 18 நடன காட்சியும், வைகாசி  விசாகமும், ஆனியில் ஆனி உத்திரமும், ஆடிப் பூரம் அம்மனுக்கும், ஆவணியில் வினாயகர் சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி சமயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள்  செய்யப்படுகின்றன. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும், கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும், கார்த்திகை தீபத்தன்று 18 வகை நடன காட்சியும்,  மார்கழி திருவாதிரையும், திருப்பள்ளியெழுச்சியும், தைப்பூசம், மகா சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பங்குனி பௌர்ணமியை இறுதி நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.  தியாகராஜ தலம் என்பதால், சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்தியாக வலம் வருவதில்லை, சந்திரசேகரரே  பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் திருஉலா வருகின்றார். பஞ்ச மூர்த்திகளில் அம்மையும் தனியாக வலம் வருவதில்லை. தியாகராஜர் இரவு பஞ்சமூர்த்திகள் திருஉலா முடிந்தபின் அம்மையுடன் உலா வருகின்றார்.

காமதேனு  ஈசனை வழிபடும்  சிற்பம் 

முதல் நாள் கொடியேற்றம் இரவில் நடைபெறுவது ஒரு சிறப்பு. கொடியேற்றத்திற்கு தியாகராஜப்பெருமானும், திரிபுரசுந்தரி அம்பாளும் எழுந்தருளுகின்றனர்.  ஒவ்வொரு நாள் வாகனமும் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றோர்களும் உடன் வலம் வருகின்றனர். இரண்டாம் நாள் காலை  சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சியளிக்கிறார் எம்பெருமான். மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை சந்திரனுக்கு அருள் பாலிக்கின்றார். இரவில் தியாகேசர் பார்த்த சாரதிக்கு அருளுகின்றார். நான்காம் நாள் காலை பிருங்கி முனிவருக்கு அருள் பாலிக்கின்றார். ஐந்தாம் காலை எமனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் பவனி. தியாகேசர் இராமருக்கு அருளுகின்றார். ஆறாம் நாள் காலை இரட்சசுவிற்கு அருளல், இரவு தியாகேசர் இந்திரனுக்கு அருளல், ஏழாம் நாள் காலை திருத்தேரோட்டம் பிரமனுக்கு அருளல், எட்டாம் நாள்  காலை நான்கு மறைகளுக்கு அருளல் மற்றும் பரிவேட்டை விழா நடைபெறுகின்றது. ஒன்பதாம் நாள் மாலை கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும், விமானக் காட்சியும், அகத்தியருக்கு கல்யாண கோலம் காட்டிய நிகழ்ச்சியும், வன்னி மர காட்சியும் நடைபெறுகின்றது, பத்தாம் நாள் காலை சந்திரசேகரர் கடலில் தீர்த்தவாரி  கண்டருளுகிறார். இரவு தியாகர் திருக்கல்யாணமும், கொடி இறக்கமும் வான்மீகி முனிவருக்கு 18 வகை நடனக் காட்சி பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணும் கண்கள் பேறு பெற்றவை என்பதில் ஐயம் இல்லை ஐயன் மட்டுமல்ல அம்மையும், காவடி சிந்து,  பாம்பு நடனக் காட்சி தருகின்றாள். பதினோராம் நாள் காலை 4 மணி அளவில் பிரம்மோற்சவத்தின் சிகரமாக தியாகேசர் திரிபுர சுந்தரி அம்மனுக்கு அருள பந்தம்பரி 18 திருநடனக் காட்சி தந்தருளுகின்றார். தான் இருக்கும் போது கங்கையை இறைவன் தலையில் ஏற்றுக்கொண்டதால் அம்மை ஊடல் கொள்ள அம்மையை சமாதானப்படுத்த ஐயன் 18 நடனகாட்சி தந்து அருளுவதாக ஐதீகம்.

கல்லிலே கலை வண்ணம் கண்டார்கள் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது இத்திருக்கோவில், தியாகராஜ மண்டபத்தில் உள்ள  தூண்களில் செதுக்கப்பட்டுள்ள கணபதி, முருகன், தண்டபாணி, ஹனுமன், மற்றும் தூண்களின் மேல் உள்ள பூ வேலைப்பாடுகள் நமது சிந்தையை கவர்கின்றன. தூண்களின் மேல் உள்ள சிங்கங்கள் எழில் பெற செதுக்கப்பட்டுள்ளன, தியாகேசரின் சன்னதியிலும் மூன்று கால்   தூண்களூம் அவற்றில் உள்ள சிங்கங்களில் யானையும் சேர்த்து செதுக்கியிருப்பதும், மேலும் சன்னதியின் முன் சுவற்றில் உள்ள மயில் முருகர் வித்தியாமாக இடக்கரத்தில் வில் ஏந்தி காட்சியளிக்கிறார். மருந்தீசர் சன்னதி முழுவதும் தூண்கள் நிறைந்துள்ளது.  அம்மனின் வெளி மண்டபத்தில் கவின் மிகு சிற்பங்கள் நம்மை உவகை கொள்ள வைக்கின்றன.அவற்றுள் சில தபசு காமாட்சி, சரபேஸ்வரர், நரசிம்மர், குபேரர் மற்றும் சடநட சித்தர் நம் சிந்தையை கவர்கின்றன. குதிரை வீரன் சிலையில் ஐந்து மனிதர்கள் மற்றும் இரண்டு புலிகளுடன் மிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது , மேலும் யாழி சிற்பங்கங்களையும் கண்டு களிக்கலாம். கிழக்கு இராஜ கோபுரத்தில் மயில் மேல் முருகன் சிற்பத்தில் மயில் வாயில் ஒரு பாம்பை ஏந்தியிருப்பது ஒரு தத்ரூபம்.

கூரையில் உள்ள ஒரு ஓவியம்

இவ்வாலயத்தின் அருகில் சற்று தொலைவில், மகான் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. மேலும் அம்மா சக்கரை பெண் சித்தர் அதிஷ்டானமும் அருகிலேயே உள்ளது. வெளிப்பிரகாரத்தில் தேவாசரிய மண்டபத்தில் வருடத்தின் அனைத்து நாட்களும் சமயச்சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.  ஒரு ஆன்மீக நூலகமும் உள்ளது.   

       ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்

       காட்டில் வேவதன் முன்னங் கழலடி

       நாட்டி  நாண்மலர்   தூவி வலஞ்செயில்     

      வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே

என்று திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற நோய்களையெல்லாம் தீர்த்தருளும் மருந்தீசரையும், ஆடும் அழகர் தியாகேசரையும் அவரது 18 வகை நடனத்தையும், திரிபுரசுந்தரி அம்பாளையும் தரிசிக்க திருவான்மியூர் வாருங்கள். அடுத்து திருக்கச்சூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக பிச்சையெடுத்து உணவிட்ட அமிர்த தியாகேசரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.