தொண்டை நாட்டுத் தேவாரத்தலங்களுள் இத்தலம் 25வது தலம்
ஆகும். இன்று கான்க்ரீட் காடாக இருக்கும்
திருவான்மியூர் அக்காலத்தில் ஒரு பக்கம் கடல் சூழ , ஒரு பக்கம் வயல்கள் சூழ
நெய்தலும், மருதமும் இணைந்து காட்சியளித்த அழகை ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின்
ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் இவ்வாறு பதிகம் பாடியுள்ளார்
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்
வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு
வான்மியூர் – என்றும் திருவான்மியூரின்
கீழ்திசையில் கடல் இருப்பதால் கடலிலிருந்து முத்துக்களும்,
பவளங்களும் வந்து உப்பங்கழிகளில் ஒதுங்கும் அழகுடையதாகவும் கடல் மீன்கள் துள்ளி
வந்து கரையில் கிடந்து உகளும் சிறப்புடையதாகவும், கடல் சூழ்ந்த நெய்தல்
நிலத்திற்குரிய மலர்கள் தேன் சொரியும்படி பூத்திருக்கும் அழகுடையதாகவும் இருந்திருக்கின்றது என்றும்
கானயங்கிய தண்கழி சூழ்
கடலின் புறம்
தேனங்கிய பைம்பொழில் சூழ்
திருவான்மியூர் –
என்றும் புகழ்ந்து பாடி இத்திருவான்மீயூர் இறைவனை வழிபடுபவர்கள் யாவரும் தேவர்
உலகத்தினையும் ஆளும் வல்லமை உடையவர்கள் ஆவார்கள் என்று பலன் கூறியுள்ளார்.
மனதில் ஆயிரமாயிரம் கவலைகள்,
எத்தனையோ துன்பங்கள், குடும்ப பாரம், வேலையின்மை, உடல்நோய் எத்தனையோ சஞ்சலங்கள்
இருந்தும் அதற்கு விடைகிடைக்காமல் திணறும் நேரத்தில் இத்தலத்து இறைவனை சம்பந்தப்பெருமான் பாடியபடி
திரையார் தென்கடல் சூழ்
திருவான்மீயூர் உறையும்
அரையா உன்னை அல்லால்
அடையாது எனது ஆதரவே –
என்று பாடி சரணடைய உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீயினில் தூசாகும்.
வாழ்வினில் எத்தனை துன்பம் வந்தாலும் பரவாயில்லை, ஒரு முறை இத்திருவான்மீயூர் தலம் வந்து ஈஸனை வலம் வந்து வழிபடுங்கள் “வாட்டம் தீர்த்திடும் வான்மீயூர் ஈசன் என்று அப்பர் பெருமானும் ஒரு பதிகம் பாடியுள்ளார். சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில் திருவான்மியூர் தலப் பெருமை குறித்தும் பாடியுள்ளார்.
அதிகார நந்தி சேவை |
.... திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பண
சிவநார் ஆலமயில் - அமுதேசர
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர
திருவான்மி யூர்மருவு - பெருமாளே!
என்று திருப்புகழ்
பாடியுள்ளார். அக்காலத்திலேயே மாட மாளிகைகள் திருவான்மீயூரில் நிறைந்திருந்தது என்பதை
இப்பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம்.
அப்பைய தீக்ஷிதர், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்
மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
ஸ்தல புராணம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் பாடியுள்ளார்.
கிழக்கில்
ஏழு நிலை மற்றும் ஐந்து நிலை இராஜ கோபுரங்கள், மேற்கில் ஐந்து நிலை கோபுரம்.
கிழக்கு கோபுரம் வழியாக நாம் கோவிலின் உள்ளே நுழைந்தால் நேர் எதிரே அருணகிரியாரால் பாடல் பெற்ற முருகர்
வள்ளி, தேவ சேனா சமேதராக அழகிய தூண்களுடன் கூடிய தனி சன்னதியிலே காட்சியளிக்கிறார்.
வலப்பக்கம் முழுமுதற் கடவுளான விஜய கணபதியை தனி சன்னதியில் கண்டு வணங்கலாம். அம்மன்
சன்னதி எதிராக நான்கு தூண் ஊஞ்சல்
மண்டபம் அமைந்துள்ளது.
அவருக்கு வலப்பக்கம் அற்புத சிற்பங்கள்
நிறைந்த தூண்கள் நிறைந்த தியாகராஜ மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தூண்களில் பல எழிலான சிற்பங்கள். ஒரு தூணில் அனுமனும் அவருக்கு எதிரே
தண்டபாணியும் எழுந்தருளியுள்ளனர். தனி
சன்னதியில் கிழக்கு நோக்கி எம்பெருமான் மான், மழு
ஏந்தி அபய, வரத ஹஸ்ததுடனும், வலக்காலை தொங்கவிட்டு
அமர்ந்த நிலையிலும், நடுவில் ஸ்கந்தன் நின்ற நிலையிலும்,
இடப்புறம் அம்மை கையில் மலர் ஏந்தி இடது காலை தொங்கவிட்ட நிலையிலும்
சோமாஸ்கந்தராக, இருந்தாடும் அழகராக, தியாகராஜராக
அருள் பாலிக்கிறார் அம்மையும் திரிபுர சுந்தரியும் தனி காட்சி தருகின்றார்.
பௌர்ணமி மற்றும் சிறப்பு நாட்களில் தியாகராஜரின் திருவீதியுலாவும் மற்றும்
18 திருநடனக் காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணப்பெற்றோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை.
தியாகராஜர் இத்தலத்தில் ஆடும் நடனம் அஜபா நடனமாகும்.
அனைத்து தியாகவிடங்க
தலங்களிலும் தியாகராஜர் சன்னதி மூலவரின் வலப்பக்கம்,
மூலவர் நோக்கும் திசையை நோக்கியவாறு அமைந்திருக்கும்
ஆனால் இத்தலத்தில் மாறாக, எதிரே மூலவரை பார்த்தவாறு அமைந்துள்ளது.
இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் அப்பைய தீக்ஷிதர். ஒரு காலத்தில் திருவான்மீயூர் ஆலயம் மங்கள ஏரியின்
பெரு வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது இங்கு வந்த அப்பைய தீக்ஷிதர் மூலவரை தரிசிக்க
முடியாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.
தியாகராஜர் மண்டபத்திலுள்ள
நுழைவாயில் வழியாக நுழைந்தால் மருந்தீசர் சன்னதியை அடையலாம். சன்னதி கருவறை மற்றும் அர்த்த மண்டபம்
என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. மூலஸ்தானத்தில் ஆலமுண்ட
நீலகண்டர், சுயம்புவாக, அருவுருவ லிங்க
ரூபமாக, மருந்தீசராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
இமண்டபத்தின் தெற்குப்பகுதியில் வினாயகருடன் துவங்கி 63நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அடுத்து தாமரை மலரை
ஏந்திய கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். பின் சைவ சமய குரவர்கள்,
அதையடுத்து வீரபாகு, அருணகிரிநாதர் இருபுறமும் கைகூப்பி நிற்க முத்துக்
குமார சுவாமி இரு தேவியருடன்
எழிற்காட்சி தருகின்றார்.
வடக்கில் உற்சவ திருமேனிகள் அனைத்தும்
அமைந்துள்ளன. அதையடுத்து சிவகாம
சுந்தரி சமேத நடராஜர் சன்னதி உள்ளது. அதையடுத்து 108 சிவலிங்கங்கள் பன்னிரெண்டு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் இறுதியில் கால பைரவர் காட்சியளிக்கிறார்.
இம்மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் பஞ்சலிங்கங்கள்
நிறுவப்பட்டுள்ளன, இவற்றுள் முதலாவதாகப்
பெரிய அளவில் உள்ளவர் கேதாரீஸ்வரர். தீபாவளி சமயத்தில் கேதார கௌரி விரதம் இருப்போர் இவரை
பூசிப்பது வழக்கம். தீபாவளியன்று (ஐப்பசி அமாவாசை) கேதாரீஸ்வரரை வழிபட
பித்ரு சாபம் தீரும், அன்று பல வட மாநிலத்தவர்களும் வந்து சிறப்பாக வழிபடுகின்றனர். உண்ணாமுலையம்மை சமேத அண்ணாமலையாரும்,
நின்ற கோலத்தில் சூரியனும் உள்ளனர். ருத்ராக்ஷ
மண்டபத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
தெற்கிலே அறுபத்து மூவர் தொடர்கின்றனர்.
வடக்கு கோஷ்டத்தில் துர்க்கையம்மனும், பிரம்மாவும்
அருட்காட்சி தருகின்றனர். கிழக்கு கோஷ்டத்தில் திருமால் காட்சியளிக்கிறார். தெற்கு கோஷ்டத்தில் ஆலமர் கடவுளும், நர்த்தன விநாயகரும் அருட்காட்சி தருகின்றனர்.
சுவாமி சன்னதியை விட்டு வெளியே வந்து
தியாகர் மண்டபத்தைக் கடந்து வெளியே வந்து வலம் வந்தால் கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். மிகவும் பழமையான
கோவில் என்பதை உணர்த்தும் வகையில்
நந்தீஸ்வரரின் திரு முகம் நேராக உள்ளது. அவரை வணங்கி
மேற்கு கோபுரத்தையும் வணங்கி திரும்பினால் தல விருட்சமான வன்னி மரத்தை காணலாம் அதன் அடியில் நின்றாலே மெய் சிலிர்க்கின்றது எம்பெருமான் சுயும்புவாக இருந்த இடமல்லவா அங்கிருந்தே அனைத்து விமானங்களையும்,
கோபுரங்களையும் தரிசித்து
பாப விமோசனம் அடையலாம். பின் யாக சாலையை கடந்து வலம் வந்தால்
அம்மனின் சன்னதியை அடையலாம்.
அம்பாள் சன்னதி கருவறை, அர்த்த
மண்டபம், முன் மண்டபம், வெளி மண்டபம் ஆகியவற்றைக்
கொண்டு தனி பிரகாரத்துடன்
தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் நின்ற கோலத்தில் நம்மை
எல்லாம் காக்க அம்மை அஞ்ச வேண்டாம் என்று அபய கரத்துடனும், என்னை
சரணடை என்று இடது கரத்தால் தனது திருவடியைக் காட்டும் வரத கரமாகவும், பக்தர்களை காப்பதோடு மட்டுமல்லாமல் துஷ்டர்களை அழிக்கவும் என்பதை உணர்த்தும்
விதமாக மேற்கரங்களில் அங்குச பாசமும் ஏந்தி நளினமாக சாய்ந்த நிலையில் எழிற்காட்சி தருகின்றாள்.
அந்த ஜகத்ஜனனியை கண்டவுடன் நம் கவலைகள் எல்லாம் ஓடுகின்றன. என்னே நம் தாயின் எழில் பிறவி எடுத்ததின் பயனை நாம் அடைந்து விட்டதாக உணரலாம்.
அம்மையைக்காண பல கோடி தவம் செய்திருக்க வேண்டும். அம்மையின்
சன்னதிக்கு முன் சிம்ம வாகனமுள்ளது, அம்பாள் ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும்
மேவி உறையும் ஸ்ரீசக்ரமும் நிறுவப்பட்டுள்ளது.
உட்பிரகார சுவர்களிலே அபிராமி அந்தாதி ஒவ்வொரு பாடலுக்கும் தனித் தலைப்புடன் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளன. “சோதி
மாதவமே! யோகச் சுடரொளி விளக்கே! ஞான போகமே!
அகங்கனிந்த புனிதமே! நிறைவே! அன்பே! தீதிலாது உயிர்கள் ஓங்கு
திருவான்மியூருள் மேவு நாதநாதாந்த சொக்க நாயகி” என்று துவாதாசாந்த முனிவர்
இத்தல அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார்.