அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
*******
தீபாவளியன்றுதான் (அமாவாசை) கேதாரகௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வருடம் அமாவாசை நாளை 19.10.2017 வருவதால் நாளை விரதம் அனுஷ்டிப்பது உத்தமம்.
கேதாரகௌரி விரத மகிமையைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்
அகமதாபாத் சுற்றுலா -2
பாலாஜி ஆலயம்
இத்தொடரின் மற்ற பதிவுகள்
மறு நாள் மாலை விமானம் என்பதால் காலை பாலாஜி மந்திர் என்றழைக்கப்படும் திருவேங்கடவன் ஆலயம் சென்றோம். திருப்பதியில் உள்ளது போலவே விமானம், விமான வெங்கடேஸ்வரர், பிரம்மாண்ட கருடன் மற்றும் அனுமன் சிலைகள் என்று எழிலாக அமைந்திருந்தது ஆலயம். பிரம்மாண்ட விஸ்வரூப விஷ்ணு சிலையும் ஆலயத்திற்கு மெருகூட்டியது. ஆலயத்தில் திருப்பதியில் உள்ளது போலவே பூசைகள் நடைபெறுகின்றனவாம். உற்சவர், வாகனங்கள் உள்ளன, பிரம்மோற்சவமும் நடைபெறுகின்றது என்றார்கள். வேங்கடவனின் சன்னதியின் இரு புறமும் அலர் மேல் மங்கைத் தாயாருக்கும், ஆண்டாளுக்கும் சன்னதிகள் உள்ளன. விசாரித்த போது திருப்பதிக்கும் இக்கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஒரு தனியார் அமைப்பின் மூலம் திருப்பதி போலவே ஆலயம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய அன்பர்கள் சிலர் இணைந்து பொது மக்களின் நன்கொடை மூலம் இவ்வாலயத்தை கட்டி பராமரித்து வருகின்றனர் என்றனர். திருப்பதியில் நடைபெறுவது போலவே பூசைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்திற்கான வாகனங்களும் உள்ளன.
அருகிலேயே வித்தியாசமாக டெல்லியில் உள்ள
தாமரை ஆலயம் போல ஒரு கட்டிடம் இருந்தது அது என்ன என்று கேட்ட போது ஒரு யோகா பல்கலைக் கழகம் என்றார்கள். உள்ளே சென்று பார்க்கலாம
என்று வினவிய போது செல்லலாம் என்று ஒரு அரங்கத்திற்கு அழைத்துச்
சென்றார்கள். நமது உடலில் உள்ள சக்கரங்கள், பல்வேறு யோகாசனங்களை பற்றிய விளக்கங்கள்,
யோகாவின் பலன்கள் என்று பல உபயோகமான தகவல்களை பகிரும் பாதாகைகள் அவ்வரங்கில் இருந்தன. அவற்றை பார்த்துவிட்டு வந்தோம்.
விமான வெங்கடேஸ்வரர்
யோகா பல்கலைக்கழகம்
அடுத்து படிக்கிணறு செல்லலாம் என்று வண்டி
ஓட்டுனர் கூறினார். ஆகவே அகமதாபாதிற்கு அருகில் உள்ள அடலெஜ் (Adalej Step Well)
என்ற ஊரில் உள்ள படிக்கிணற்றை பார்க்கச்
சென்றோம். வருடத்தில் தென்கிழக்கு பருவமலை சமயத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் என்பதால் வருடம் முழுவதற்குமாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டி குளங்களை அழகிய வேலைப்பாடுகள் கொண்ட படிக்கிணறுகளாக இப்பகுதியில் அமைத்தனர்.
பாலைவனம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள குஜராத் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளில் இவ்வாறு
சுமார் 120 படிக்கிணறுகள் அமைந்துள்ளன. இக்கிணறுகளை இவர்கள் வாவ்(Vav)
என்றழைக்கின்றனர். (தமிழில் வாவி என்றழைப்பதுடன் ஒத்துச் செல்கின்றதா?) முதலில்
விசவாடா மூலதுவாரைக்கு அருகில் ஒரு ஞான வாவியைப்
பார்த்தோம் அல்லவா? அன்பர்களே.
இக்கிணறுகளின் அருகாமையில் அக்காலத்தில் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன..
இக்கிணற்றை ஒட்டியும் ஒரு கதை உள்ளது அது
என்னவென்று காணலாமா? இக்கிணறு உருவாகக் காரணமாக
இருந்தவர் ருடா பாயி என்ற ஒரு அரசி என்வே இக்கிணறு ருடாபாய் வாவ் என்றும்
அழைக்கப்படுகின்றது. பதினைந்தாம் நூற்றாண்டில், தந்தாய் தேசம்
இப்பிரதேசத்தை இராணா வீர் சிங் என்ற வகேலா வம்ச இந்து அரசன் ஆண்டு வந்தான் அவனே 1498ம் ஆண்டில் இக்கிணற்றை வெட்ட ஆரம்பித்தான். இடையில் அண்டைய தேசத்தை சேர்ந்த முகமது பெகாதா என்ற அரசன் படை எடுத்து வந்தான்
போரில் வீர் சிங் வீர மரணமடைந்தான். பேரழகியான அரசியின் அழகில் மயங்கிய முகமது அவளை மணந்து கொள்ள விரும்பினான். அரசியும் ஒரு என்
கணவர் கட்டத் துவங்கிய கிணற்றை முடித்தால் பின்னர் மணம் செய்து கொள்கிறேன் என்று
நிபந்தனை விதித்தாள். அரசனும் வெகு சீக்கிரத்தில் கிணற்றின் கட்டுமானத்தை
முடித்தான். ஆனால் கிணற்றின் கட்டுமானம் முடிந்த பின்னர் அரசி தன்னுயிரை தானே எடுத்துக்கொண்டாள். முகமதுவும்
அரசியின் கனவான கிணற்றை நாசம் செய்யாமல் சென்று
விட்டதால் அருமையாக வேலைப்பாடுகளுக்கு உதாரணமான இக்கிணறு இன்றும் சிறப்பாக விளங்குகின்றது.
அட்லெஜ் படிக்கிணறு
இந்த அடலெஜ் கிணறு
சோலங்கி பாணியில் எண்கோண அமைப்பில் ஐந்து நிலை கிணறாக எழிலாக அமைந்துள்ளது. சிற்பக்
கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இக்கிணறு. காற்று வரவும், மக்கள் கூடவும் ஏதுவாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்படி
ஆழமாகவும் அதே சமயம் நீரின் மட்டம் உயரும்
போதும் மக்கள் தண்ணீர் சுமந்து செல்ல ஏதுவாக ஐந்து நிலைகளை அமைத்துள்ளனர்.
ஒவ்வொரு நிலையிலும் காற்று வர அருமையான சாளரங்களும், மக்கள் கூட முற்றங்களும் அமைந்திருப்பது இக்கிணற்றின்
சிறப்பு. ஒரு அருமையான கலை பொக்கிஷத்தை பார்த்த திருப்தியுடன் விடுதிக்கு திரும்பினோம். வண்டி ஓட்டுனரிடம்
குஜராத் இனிப்புகளுக்கு பெயர் போனதல்லவா?
எக்கடையில் நல்ல இனிப்புகள் கிடைக்கும் என்று கேட்டு
அக்கடைக்கு சென்று இல்லத்தில் உள்ளவர்களுக்காக இனிப்புகள் வாங்கிக் கொண்டு மாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தோம்.
அவனருளால் இந்த
யாத்திரை ஒரு அருமையான பரிபூரண யாத்திரையாக அமைந்தது. எந்த வகையிலும் சிறு குறைபாடும் ஏற்படவில்லை. தரிசிக்க நினைத்த அனைத்து ஆலயங்களில் அனைத்திலும்
அருமையான தரிசனம் கிட்டியது. பல ஆலயங்களில் ஆரத்தி தரிசனமும்
கிட்டியது. வண்டியில் சென்றதால் எங்கும் அதிகமாக காக்க வேண்டி
இருக்கவில்லை. நவதுவாரகைகள் தவிர அதிகப்படியாக சில ஆலயங்களையும் சேவித்தோம். மேலும் புஷ்டி மார்க்கம், வல்லபாச்சார்யார்,
ஸ்வாமி நாராயண், ஜலாராம் பாபா முதலிய குஜராத்தின் ஆச்சார்யர்களைப்
பற்றி அறிந்து கொண்டோம். புஷ்கர் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. இதைப் படிக்கும் அன்பர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்ண்டுகிறேன். இத்துடன் இநத யாத்திரையின் பதிவுகள் நிறைவு பெறுகின்றன. வந்து படித்த அன்பர்கள் மற்றும் பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் ஒரு யாத்திரையுடன் பின்னர் சந்திப்போம் அன்பர்களே.
*************************
3 comments:
மிக்க நன்றி
மிக மிக விரிவாக எழுதி உள்ளீர்கள்
அடியேன் யாத்திரை செல்ல உதவும் நன்றி
பதிவிட்டதற்கான பயனை அடைந்து விட்டேன். மிக்க நன்றி வெங்கி ஐயா.
Post a Comment