ஸ்ரீநாத்ஜீ துவாரகை - 2
இத்தொடரின் மற்ற பதிவுகள்
புஷ்டி மார்க்கத்தின் படி அனைத்து பூசையின் போதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு இசை (ராக்), அந்தந்த காலங்களுக்கு ஏற்ற இராகத்தில் பாடல்கள் இசைக்கப்படுகின்றது. நேரத்திற்கு ஏற்றவாறு பிரசாதம் (போக்), உடை மற்றும் அலங்காரம் (வஸ்த்ர ஔர் ச்ருங்கார்) மூலம் கிரமமாக பூஜை நடைபெறுகின்றது.
அதிகாலையின் முதல் தரிசனம் மங்களா என்றழைக்கப்படுகின்றது.
அதிகாலை 5:45 மணி முதல் 6:30 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. காலை
எழுந்தவுடன் ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்வதே மங்களம் என்பதால் இப்பெயர். இப்பூசையின்
போது உறங்கிக்கொண்டிருக்கும் கண்ணனை திருப்பள்ளி எழுப்பி காலைக் கடன்களை முடித்து காலைச்
சிற்றுண்டி படைப்பதாக ஐதீகம். இப்பூசை குளிர்காலத்தில்
சூரிய உதயத்திற்கு முன்னரும், கோடை காலத்தில் சூரிய உதயத்திற்கு பின்னரும் நடைபெறுகின்றது.
இச்சமயத்தில் முதலில் திருக்கதவங்கள் திறக்கப்படுவதில்லை.
உள்ளே சிரமப்பரிகாரம் செய்து வைத்தப் பின்னரே திருக்கதவங்கள் திறக்கப்படுகின்றன. கோபச்சிறுவர்கள்
கண்ணனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதால் எழுந்தவுடன் அவர்
விளையாட ஓடி விடுவார் என்று அன்னை யசோதா கதவை மூடி வைத்திருப்பதாக ஐதீகம். கோடை காலத்தில்
ஒற்றை அரையாடையுடன் தரிசனம் தருவார் கோவர்த்தன கிரிதாரி. எனவே அப்போது முழு திருமேனியையும்
அலங்காரம் இல்லாமல் அருமையாக தரிசனம் செய்யலாம். குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளுடன்
சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது புல்லாங்குழல் கண்ணனின் திருக்கரங்களில் தருவதில்லை,
ஏனென்றால் அவன் அக்குழலை ஊதி அனைவரையும் மயக்கி காலைக் கடமைகளை செய்யவிடமாட்டான் என்பதாக
ஐதீகம். கண்ணனுக்கு கண்ணேறு படாமல் இருக்க இப்பூசையின் போது ஆரத்தி எடுக்கப்படுகின்றது.
காலை சிற்றுண்டி நைவேத்யம் செய்யப்படுகின்றது. இப்பூசையின் போது காலை நேரத்திற்கு
உரிய இராகங்களில் பாடல்கள் இசைக்கின்றனர். அடியோங்களுக்கு முக
தரிசனம் மட்டுமே கிட்டியது.
இரண்டாவது பூசை சிருங்கார் என்றழைக்கப்படுகின்றது.
காலை 7:15 மணி முதல் 7:45 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. தன் நீலமேக சியாமளனை யசோதை “இன்று நீ
பிறந்த திருவோணம் அழகனே நீராட வாராய்“ என்றும்
எண்ணெய்க்குடத்தையுருட்டி
இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக்
கழகண்டுசெய்யு பிரானே!
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணமழகிய நம்பீ! மஞ்சனமாடநீவாராய். (பெரி,தி 2-4-6)
இவ்வாறு பலவாறெல்லாம் சொல்லி அழைத்து நீராட்டி, பின்னர்
தலை முதல் கால் வரை சிறப்பாக மயிற்பீலி, ஆபரணங்கள், மாலைகள்
ஆகியவற்றால் அலங்காரம்
செய்து பார்க்கும் பூசை இது. கண்ணன் அலங்காரத்தை கண்டு களிப்பதற்காக
கண்ணாடி சேவை சிறப்பாக நடைபெறுகின்றது.. இதற்குப்
பின்னரே கண்ணனைக் காண்பதற்காக வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் கோபியர்களை தன் மகனைக்
காண அனுமதிக்கின்றாள் யசோதை. கண்ணன் காலை சிற்றுண்டி உண்டு விட்டதால், இப்பூசையின்
போது கோபியர்கள் கண்ணனுக்காக கொண்டு வந்த உலர் பழங்கள், இனிப்புகள் ஆகியவை மட்டுமே பெருமாளுக்கு நைவேத்யம்
செய்யப்படுகின்றது. இதற்குப்பிறகு இவர் திருக்கரத்தில் வேய்ங்குழல்
தரப்படுகின்றது.
சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய் கொப்பளிப்ப
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக்
கோவிந்தன்குழல்கொடூதினபோது
பறவையின்கணங்கள்கூடுதிறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பிட்டுக்
கவிழ்ந்திறங்கிக்செவியாட்டகில்லாவே.
(பெரி.தி 3-6-8) என்று பெரியாழ்வார்
பாடியபடி தனது குழலின் இனிமையான கானத்தை இராதைக்காக
வாசிக்கின்றார் என்பது ஐதீகம்.
மூன்றாவது பூசை க்வால். காலை 9:15 மணி முதல் 9:30 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. காலைச்சிற்றுண்டியை முடித்த கோபகுமார்களுடன் கிருஷ்ணர்
மாடு கன்றுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு
செல்லும் கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது இலகுவாக இவருக்கு பால் இனிப்பு நைவேத்யம்
செய்யப்படுகின்றது. கோ சாலை கண்காணிப்பாளர் பெருமான் முன்னர் கோ சாலையில் உள்ள பசுக்களின்
நலம் பற்றி விண்ணப்பிக்கின்றார் அதைக் கேட்டு மகிழ்கின்றார் பெருமாள்.
இப்பூசையின் போது துளசி கொண்டு சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகின்றது.
மதிய நேரத்தில் ஸ்ரீநாத்ஜீக்கு
நடைபெறும் பூசை ராஜ் போக் ஆகும். காலை 11:15 மணி முதல் 12:05 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. மதிய உணவு ஒரு அரசனுக்கு எவ்வாறு படைப்பார்களோ அது
போல 56 வகையான பதார்த்தங்களுடன் உணவுண்டு மகிழ்கிறார் பெருமாள்.
வெற்றிலை தரித்துக் கொள்கின்றார். இப்பூசையின் போது கோவர்த்தன கிரிதாரி மிகவும் சிறப்பான அலங்காரத்தில் சேவை
சாதிக்கின்றார்.
குடங்களெடுத்தேறவிட்டுக்
கூத்தாடவல்லவெங்கோவே!
மடங்கொளதிமுகத்தாரை மால்செய்யவல்லவென்மைந்தா!
இடந்திரட்டிரணியன்நெஞ்சை
இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைகிடந்தகோவே! குருக்கத்திப்பூசூட்டவாராய். (பெரி.தி 2-7-7)
என்று யசோதை கண்ணனை பலவித மலர்கள் கொண்டு அலங்கரித்த
வண்ணம், மலர் மாலைகள், நவரத்தின ஆபரணங்களுடன் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியவாறு அருமையாக அலங்காரம் செய்கின்றனர். அவ்வழகைக் காணக் கண்கோடி வேண்டும். இப்பூசையின் போது இனிமையான நறுமணப்புகை
ஊட்டப்படுகின்றது. மதிய உணவிற்குப் பின்னர்
சிறிது நேரம் தனது தோழர்களுடன் சதுரங்க
ஆட்டம் ஆடிய பின் உறங்க செல்கின்றார். எனவே இப்பூசைக்குப் பிறகு
மூன்று மணி நேரம் நடை அடைக்கப்படுகின்றது.
மதிய நேர சிறு உறக்கத்திற்குப் பிறகு மாலை உன்னி கிருஷ்ணரை சங்கொலியினால்
எழுப்பும் பூசை உத்தப்பன் என்றழைக்கப்படுகின்றது. மாலை 3:45 மணி முதல் 4:00 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. மாடுகளை மேய்த்தபின்
ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடிக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இப்பூசையின் போது வீணை இசையை
செவி மடுத்து மகிழ்கின்றார் பெருமாள். அந்தகக் கவியான சுர்தாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றன.
அடுத்த பூசை போக் என்றழைக்கப்படுகின்றது. மாலை 4:45 மணி முதல் 5:00 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது.
பட்டிமேய்த்தோர்காரேறு
பலதேவற்கோர்கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டுவிளையாடி
இங்கேபோதக்கண்டீரே?
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீருட்டி
விட்டுக்கொண்டுவிளையாட
விருந்தாவனத்தேகண்டோமே. (நா.தி 14-1) என்று சூடிக் கொடுத்த
சுடர்க்கொடியாள் பாடியபடி, மாடுகளை
மேய்த்தபின் திரும்பி வந்த கண்ணனின் வரவை யசோதைக்கு அறிவிக்கின்றனர். பசுக்களை கறவைக்காக
அழைத்து செல்ல இவ்வறிவிப்பு செய்யப்படுவதாக ஐதீகம். இப்பூசையின் போது லகுவான ஆகாரமே ஸ்ரீகிருஷ்ணருக்கு
நைவேத்யம் செய்யப்படுகின்றது. கண்ணன் வெளியே சுற்றி விட்டு வந்ததால் ஏற்பட்ட கண்ணேறு
விலகுவதற்காக ஆரத்தி எடுக்கப்படுகின்றது. கானகமெல்லாம் சுற்றி விட்டு வந்த களைப்பு தீர பெருமாளுக்கு
சாமரம் வீசுகின்றனர். இதற்குப்பின் அவர் கோபகுமாரர்களுடன் விளையாட செல்வதாக ஐதீகம்.
மாலை பூசை (சந்தியா) ஆரத்தி என்று
அழைக்கப்படுகின்றது. மாலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. அந்தி சாயும் நேரம் என்பதால் அசுரர்கள் கண்ணனுக்கு
தீங்கு விளைவிக்க காத்துக்கொண்டு இருப்பர், எனவே
யசோதை கண்ணனுக்கு அந்தி காப்பிடுகின்றாள். பெரியாழ்வார்
தன்னை யசோதையாக பாவித்து அழகனை அந்திக் காப்பிட அழைக்கும் பாசுரத்தின் ஒரு பாடல் இதோ
கன்றுகளில்லம்புகுந்து
கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்துன்னைக்கூவி
நேசமொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேல் அந்திப்போது
மதிள்வெள்ளறை (நாத்துவாரா) நின்றாய்
நன்றுகண்டாயென்தன்சொல்லு
நானுன்னைக் காப்பிடவாராய். (பெரி.தி 2-8-2)
ஆகவே இப்பூசை மாத்ரு பாவத்தில் நடைபெறுகின்றது.
கண்ணனுக்கு எளிமையான அலங்காரமே செய்யப்படுகின்றது. கண்ணனின் திருக்கரங்களில் புல்லாங்குழல் இருக்கின்றது அதன் கானத்தினால்
அனைத்து கோகுல வாசிகளையும் மாயக் கண்ணன் மயக்குகின்றான்
என்பது ஐதீகம். இரவு ஆரம்பித்து விட்டதால்
விமானத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது.
மாளிகையின் கொடிகள் சுருட்டப்படுகின்றன.
நாளின் நிறைவு
பூசை சயன் என்றழைக்கப்படுகின்றது. பக்தர்களுக்கு
ஸ்ரீநாத்ஜீ வழங்கும் நிறைவு
சேவை. சமையல்காரரை விளித்து மறு நாள் காலை சீக்கிரம் வருமாறு
கூறுவதுடன் பூசை ஆரம்பமாகின்றது. மேள தாளங்கள் முழங்குகின்றன. இரவு உணவு நைவேத்யம்
செய்தபின் வெற்றிலை(பீடா) தரிக்கின்றார் பெருமாள்.
கிருஷ்ணதாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றது. அவர் பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கான
ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கர்ப்பகிரகத்தில் இருந்து பள்ளியறை
வரை சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகின்றது. அலங்கரிக்கப்பட்ட
பள்ளியறையில் பால், பழம் வைக்கப்படுகின்றது. மற்றும் இராதா இராணியின் ஆடை ஆபரணங்கள் வைக்கப்படுகின்றது. கோயிலில் பக்தர்களை முறைப்படுத்துவதற்காக
வைக்கப்பட்ட தடுப்புகள், மற்றும் முற்றத்தில்
கட்டிய விதானம் முதலியவை பெருமாள் தங்கு தடை இன்று சென்று வருவதற்காக நீக்கப்படுகின்றன. சயன ஆரத்திக்குப்பிறகு
திரையிடப்படுகின்றது. பெருமாள் பள்ளி எழுந்தருளுகின்றார்.
இவ்வாறு காலம், நேரம் இவற்றிற்கேற்ப வெகு
சிறப்பாக பூசைகள் மற்றும் நடைபெறுகின்றது. என்ன ஒரு நாள் முழுவதும் இருந்து அனைத்து அலங்காரங்களையும் சேவிக்க வேண்டும் என்று ஆவல் பொங்குகின்றதா? நாத்துவாரா செல்ல விழையும் போது இரு நாட்கள் அங்கு தங்கும்படி செல்லுங்கள்.
ஸ்ரீநாத்ஜீயுடன், தவழ்ந்த
கோலத்தில் ஒர் திருக்கரத்தில் வெண்ணையுடன் நவநீத்
பிரியாஜீயும் (நவநீதப் பிரியன்), மதன்மோகன்ஜீ
என்ற திருநாமத்துடன் இராதா கிருஷ்ணரும், விட்டல்நாத்ஜீ என்ற திருநாமத்துடன் விட்டலரும்-இரகுமாயியும்
அருள் பாலிக்கின்றனர். இவர்களுக்கும் அலங்காரம் அருமையாக செய்கின்றனர்.
இத்தலத்திலும் துவாரகையைப் போல கொடியேற்றத்தை
ஒரு பிரார்த்தனையாக சிறப்பாக செய்கின்றனர். இத்தலத்தின் சமையலறையில் அன்பர்கள் அளிக்கும்
அனைத்து காய்கறிகள் மட்டும், பால் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது ஒரு சிறப்பு.
வருடம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ள இவ்வாலயத்தில் கிருஷ்ண
ஜென்மாஷ்டமி, ஹோலி மற்றும் தீபாவளி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தீபாவளிக்கு அடுத்த நாள் ‘அன்னக்
குவியல்’ உற்சவம். அதை ஏற்படுத்தியவர் வல்லபாச்சார்யார். அன்று 56 வகையான
உணவுப் பண்டங்கள்
பெருமாளுக்கு படைக்கப்படுகின்றது. ‘சப்பன்
போக்’ என்று பெயர். இந்தியில் ‘சப்பன்’ என்பது
56 என்ற எண்ணைக் குறிக்கும். ‘போக்’ என்றால்
போஜனம் அல்லது உணவு.
கேட்டறியாதனகேட்கின்றேன்
கேசவா! கோவலர்இந்திரற்கு
காட்டியசோறும்கறியும்தயிரும்
கலந்துண்டாய்போலும்
ஊட்டமுதலிலேனுன்தன்னைக்கொண்டு
ஒருபோதுமெனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா!
உன்னையஞ்வனின்றுதொட்டும். (பெரி.தி 3-3-8) என்றபடி
அன்று ஆயர்கள் படைத்த உணவை பகவான் உண்டதை அன்னக்குவியல் உற்சவத்தின் போது, இன்று உண்பித்து மகிழ்கின்றனர் பக்தர்கள். அதில்
சமைக்கப்பட்டது, சமைக்கப்படாதது, சர்க்கரை
சேர்த்தது, சேர்க்கப்படாதது, பாலில்
செய்தது, கிழங்கு வகைகள், சில
புதிய பழங்கள், உலர்ந்த பழங்கள் என்று பலவிதப் பண்டங்கள் இருக்கும்.
எல்லாம் அறுசுவை உணவு. அதே போல், விழுங்குபவை, கடித்துத்
தின்பவை, சப்பிச் சாப்பிடுபவை, நக்கிச்
சாப்பிடுபவை இப்படிப் பல விதத் தயாரிப்புகள் அடங்கியது இந்த ‘சப்பன் போக்’ என்ற
விழாப் படையல். அச்சமயம் ஆயிரக்கணக்கில் வைஷ்ணவர்கள் கலந்து
கொள்கின்றனர்.
ஜென்மாஷ்டமியின் போது
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே. (பெரி.தி 1-1-1)
என்று பெரியாழ்வார் அன்று கோகுலத்தில் கோபர்கள் மகிழ்ந்ததைப் பாடியது போல பாலையும் வெண்ணையும் தூவி இன்றும் பக்தர்கள் மகிழ்வதைக் காணலாம்.
அடியோங்களுக்கு ஆரத்தி தரிசனம் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. மேவார் அரசர் அளித்த வெள்ளி
மட்டும் தங்க அரைகற்களை தரிசித்தோம். அருமையான தரிசனத்திற்கு
பின் வெளியே வரும் போது கடைகளில் ஸ்ரீநாத்ஜீயின் அருமையான சித்திரங்களைப் பார்த்தோம்.
கடைகளில் விசாரித்த போது “பிச்வாய்” (Pichwai) எனப்படும் சித்திர முறையில் வரையப்பட்ட படங்கள்
இவை என்று கூறினார்கள். இச்சித்திரங்கள் உலகப்புகழ் பெற்றவை. இவை பல் வேறு வர்ணங்களில்
காடா துணி போன்ற முரட்டு துணியில் வரையப்படுகின்றன. பொதுவாக மஹாபிரபுஜீ - ஸ்ரீநாத்ஜீ - யமுனாஜீ மூவரும் உள்ள சித்திரங்கள்,
மற்றும் கிருஷ்ணரின் ராச லீலைகள் இச்சித்திரங்களின் கருவாக அமைந்துள்ளன. நாத்துவாரவை சுற்றியுள்ள பகுதியில்
உள்ள பல்வேறு கலைஞர்கள் இப்பாணியில் சித்திரங்கள்
வரைகின்றனர். இக்கடைகளில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வதற்கேற்ற
பல்வேறு அலங்காரப் பொருட்களும் கிட்டுகின்றன.
அடியோங்கள் தரிசித்த முதல் துவாரகையான
டாகோர் துவாரகையில் முதன் முதலாக ஸ்ரீநாத்ஜீ- மஹாபிரபுஜீ- யமுனாஜீ ஓவியங்களைப் பார்த்தபோது நடுவில் உள்ளது கிருஷ்ணன் மற்ற இருவரும் யார் என்ற ஒரு கேள்வி மனதில்
எழுந்தது, மற்ற ஆலயங்களிலும் இதே ஓவியங்களைப் பார்த்தோம். இத்தலத்தில் அக்கேள்விக்கான பதில் கிட்டியது. புஷ்டி
மார்கத்தைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.
அருமையான தரிசனத்திற்குப்பின் தங்கும்
விடுதிக்குத் திரும்பினோம். விடுதிகளின் மையத்தில் கோவர்த்தன கிரிதாரியின் அருமையான
சுதை சிற்பம் அமைத்திருப்பதை கண்டு மகிழ்ந்தோம்.
ஸ்ரீநாத்ஜீ ஆலயம் மட்டுமல்ல இன்னும் கணேசர்
ஆலயம், லால் பாக் எனப்படும் பூங்கா, விருந்தாவன்
பாக் எனப்படும் பூங்கா ஸ்ரீநாத்ஜீயின் கோசாலை
என்று பார்ப்பதற்குரிய அம்சங்கள் இவ்வூரில் உள.
இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த
எழில்விழவில்பழநடைசெய்
மந்திரவிதியில்பூசனைபெறாது
மழைபொழிந்திடத்தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இனவாநிரைதளராமல்
எம்பெருமான்! அருளென்ன
அந்தமில்வரையால்மழைதடுத்தானைத்
நாத்துவாரா (திருவல்லிக்கேணி) கண்டேனே. (பெ.தி 2-3-4) என்றபடி
கோவர்த்தனகிரிதாரியின் மங்களா
தரிசனத்தை மறு நாள் காலை
பின் ஒரு முறை சேவித்த பிறகு இத்தலத்திற்கு
அருகில் உள்ள கங்ரோலி என்ற தலத்திற்கு சென்றோம். அத்தலத்தின்
சிறப்புகள் என்ன என்று அறிந்து கொள்ள தொடர்ந்து
வாருங்கள் அன்பர்களே.
ஓகாவையும் பேட்துவாரகையையும் இணைக்கும் பாலத்திற்கான அடிக்கல் நேற்று இடப்பட்டது. இனி வரும் காலத்தில் தரைப்பாலம் மூலமாகவே தீவுத்த்துவாரகை செல்ல இயலும்.
நவ துவாரகை யாத்திரை தொடரும் . . .
1 comment:
மிக்க நன்றி நாகேந்திர பாரதி.
Post a Comment