Friday, October 13, 2017

நவ துவாரகை யாத்திரை - 25

ங்ரோலி  துவாரகை 

இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3   4    5     6    7    8    9    10    11    12  


13    14   15   16   17   18   19   20    21   22   23   24   26   27   28

கங்ரோலி துவாரகாதீசன் 
குளிர் காலத்தில் அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதே ஒரு சுகமான அனுபவம். காற்றில் பனியின் ஈரவாடையுடன், அப்பனியின் இடையே சூரியனின் பொன் கதிர்கள் பாயும் போது அனைத்துப் பொருட்களும் பொன் மயமாக ஜொலிக்கும்  காலைப்பொழுதில் நாத்துவாராவிலிருந்து கங்ரோலிக்கு பயணம் செய்தோம். துவாரகாதீஷரின் அரண்மனை(ஹவேலி) என்றழைக்கப்படும் இவ்வாலயம் ராஜ்சமந்த் என்ற ஒரு பிரம்மாண்ட ஏரியின் கரையில் எழிலாக அமைந்துள்ளது.  இவ்வாலயத்தில் குழந்தை துவாரகாதீசன் கோயில் கொண்டுள்ளதால்  ஒரு சிலர் கங்ரோலி துவாரகை என்றும் அழைக்கின்றனர். புஷ்டி மார்க்கத்தின் மூன்றாவது பீடம் இத்தலம்.  இத்தலத்தில் வல்லபாச்சாரியாரின் பேரன் பாலகிருஷ்ணன்ஜீ பூசைகள் செய்து வந்தாராம்.


ஸ்ரீநாத்ஜீ கோவர்த்தனகிரியிலிருந்து வந்தது போல துவாரகாஷ்ஜீ மதுராவிலிருந்து 1671ம் வருடம் மஹா ராணா ராஜ் சிங் காலத்தில் இங்கு வந்தாராம். பின்னர் 1676ம் ஆண்டில் ராஜ்சமந்த் ஏரியை உருவாக்கிய சமயம் அரசர் இக்கோவிலையும் அதன் கரையில் அமைத்தார்.  ஆலயம் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது 21 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். முகப்பில் பிரம்மாண்டமாக பல வர்ண இராஜஸ்தானத்து ஓவியங்கள் இவ்வாலயத்தின் ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.இத்தலத்தில் பெருமாள், வலது  மேற்திருக்கரத்தில் கதை, இடது மேற்திருக்கரத்தில் சக்கரம், வலது கீழ்கரத்தில் பத்மம், இடது கீழ் கரத்தில் சங்கம் ஏந்தி நின்ற கோல சதுர்புஜ விஷ்ணுவாக சேவை சாதிக்கின்றார். புராணங்களில் சதுர்புஜ விஷ்ணுவாக ஸ்ரீஹரி எப்போதெல்லாம் சேவை சாதித்தார் என்பதை எழுதி வைத்திருந்தனர் இதோ அவ்விவரம்.  சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் மஹா பிரளய ஜலத்தில் பகவான் யோக நித்திரையில் இருந்த போது அவரது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா தோன்றினார்.  நான்கு பக்கமும் நீராக இருப்பதைக் கண்டு பிரம்மா திகைத்து நின்ற போது தவம் என்ற அசரீரி கேட்டு தவம் செய்தார் அவரது தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு சேவை சாதித்த கோலமே இந்த சதுர்புஜ விஷ்ணு கோலம். கர்தம் பிரஜாபதி சரஸ்வதி  திக்கரையில் தவம் செய்தபோதும் அவருக்கு பெருமாள் இக்கோலத்தில் சேவை சாதித்தார். கபில முனிவருக்கும் அவரது தாய் தேவஹூதிக்கும்  அவர்களுக்கு பக்திக்கு மெச்சி இக்கோலத்தில் தோன்றினார். இம்மூர்த்தியை கபில முனிவர் பின்னர் அவரது சீடரான தேவ சர்மா அவருக்குப்பின் அவரது புத்திரர் விஷ்ணு சர்மா இவரை ஆராதித்து வந்தனர். கலியின் முடிவில் அம்பரீஷ மஹாராஜா மற்றும் அவருக்குப் பின்னர்  ஜனமேஜயனும் இவரை பூசித்தனர். ஜனமேஜயன் சோமசர்மா என்பவரின் மூலம் இவரை அற்புதசாலத்தில் பிரதிஷ்டை செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு வல்லபாச்சாரியாரிடம் அவரது சீடரான திவான் தாமோதர் தாஸ் சம்பர்வால் என்பவரின் மூலமாக துவரகாதீஷன் வந்து சேர்ந்தார். அவரை மஹாபிரபூஜீ ஆராதித்து  வந்தார்.


பகவான் துவாரகாநாத்தை இக்கலியுகத்தில் தரிசனம் செய்பவர்கள் யோகேஸ்வரர்கள் கூட அடைய முடியாத விஷ்ணு பதமான வைகுண்டத்தை நிச்சயம் அடைவர் என்பது ஐதீகம் என்று எழுதியுள்ளனர்.  இத்தலத்தில் துவாரகாஜீயுடன்  மதுராஜீ, தாவுஜீ(பலராமர்) மற்றும் கிரிதர்ஜீ தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

புஷ்டி மார்க்கத்தின் படி காலை மங்களா முடிந்து டை சார்த்தப்பட்டிருந்தது. சிருங்கார் பூசைக்காக டை திறக்கு வரை சிறிது நேரம் காத்துக்கொண்டிருந்தோம். அப்பூசையின் ஆரத்தியை அனைத்து சன்னதிகளிலும் சேவிக்கும் பேறு பெற்றோம். வயதானவர்கள் கூட சிரத்தையுடன் ஜெய கோஷம் இட்டு சன்னதி சன்னதியாக சென்று வணங்குகின்றனர். ஆலயத்தில் நிறைய பசு மாடுகளை பராமரிக்கின்றனர். கோமாதாவிற்கு கீரை அளிக்கின்றனர்.

திரும்பி வரும் வழியில் பிரம்மாண்ட  இராஜ்சமந்த் ஏரியின் அழகை இரசித்தோம். ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவளித்தோம். இவ்வாறு கங்ரோலி துவாரகையையும் தரிசனம் செய்தபின் பெருமாள் தீர்த்த நாராயணராக அருள் பாலிக்கும் தலத்திற்கு பயணப்பட்டோம். அத்தலம் எத்தலம் என்று  அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?  தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 
                                          நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

No comments: