ஸ்ரீநாத்ஜீ துவாரகை
இத்தொடரின் மற்ற பதிவுகள் :
நவதுவாரகை யாத்திரையின் நிறைவுத் தலமான இராஜஸ்தானத்தில் உள்ள நாத்துவாரா
வந்து சேர்ந்தோம். இத்தலம் ஆரவல்லி
மலை அடிவாரத்தில், பானஸ் நதியின் கரையில், உதயப்பூரிலிருந்து சுமார் 48 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் சிறப்புகள் என்னவென்று அடியோங்கள் முதலில் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. அறிந்து கொண்ட பின் இத்தலத்தின் மகிமை புரிந்தது.
ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் பின்பற்றும்
தென்னிந்திய வைணவர்களான
நமக்கு திருவரங்கமும், திருமலையும் எவ்வாறு
புனிதமானதோ அது போல குஜராத், இராஜஸ்தான் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச வைணவர்களுக்கு,
வல்லாபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கத்தை பின்பற்றுபவர்களுக்கு இத்தலம் திருவரங்கம், திருமலை என்று உணர்ந்தோம். பாரத தேசமெங்கும் அடியோங்கள் அறிந்திருந்த ஆச்சார்யர்களை
தவிர பலர் தோன்றி மக்களை நன்னெறிப் படுத்தியுள்ளனர் என்பது புரிந்தது. இத்தலத்திற்கு எங்களை அழைத்து தரிசனம்
தந்த ஸ்ரீகிருஷ்ணருக்கு நன்றியும் கூறினோம். வாருங்கள் புஷ்டி மார்க்கத்தில்
இத்தலம் எவ்வாறு முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.
வண்டி ஓட்டுனர் ஆலயத்தின் தங்கும் அறைகளே
கிட்டும் மைய முன்பதிவு அலுவலகம் சென்று முதலில் அறைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். அது போலவே முதலில் அறைகளை பெற்றோம். அறைகளுக்கான பூட்டுகளை தாங்களே வாங்கிப் பூட்டிக்கொள்ள வேண்டும் என்பது
ஒரு புதுமையாக இருந்தது. அறைகளில்
காலையில் சுடு தண்ணீர் வருமா? என்று கேட்டோம். அறைகளில் அவ்வசதி இல்லை ஆனால் அதிகாலையில்
சிலர் வாளிகளில் கொண்டு வந்து விற்பார்கள் தாங்கள்
பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள்.
புஷ்டி மார்கத்தின் முதன்மைத்தலம் என்பதால் தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால்
அவர்கள் பல வசதிகள் செய்துள்ளனர், எனவே அறை தேவஸ்தானத்தின் மூலமாகவே எளிதாக கிட்டியது.
குறைந்த வாடகைதான். https://www.nathdwaratemple.org என்ற இணைய தளத்தின் மூலம் முன் பதிவு செய்யும் வசதியும்
உள்ளது.
முதலில் அறைகளுக்கு சென்று சிரமபரிகாரம் செய்து கொண்டு ஆலயத்திற்கு
சென்றோம். பொதுவாகவே இப்பகுதி ஆலயங்களில் நமது
ஆலயங்களைப் போல நெடிதுயர்ந்த கோபுரங்கள் கிடையாது. கர்ப்பகிரக விமானம்
மட்டுமே உயரமாக இருக்கும். இக்கோவிலில் அதுவும் கூட இருக்கவில்லை. விமானம் சிறியதாகவே
இருந்தது. அடியோங்கள் சென்ற சமயம் நடை சார்த்தப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம்
முண்டியடித்துக்கொண்டு ஆவலுடன் நேய நிலைக்
கதவம் எப்போது நீக்குவர் என்று காத்துக் கொண்டிருந்தனர். பல பக்தர்கள்
கிருஷ்ண கண்ணையா லால்
கீ ஜெய் !
கோவர்த்தன கிரி தாரிக்கீ
ஜெய் !
மோர் முகுட் வாலே கீ ஜெய் !
அம்பே மஹாராணி கீ ஜெய்!
ஆஜ் கீ ஆனந்த் கீ ஜெய்! –
என்று பக்திப் பெருக்குடன் கூறிக்கொண்டு நடை மேல் விழி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தனர். முதலில் இவர்கள் கூறிக்கொண்டிருந்த ஜெய் கோஷத்தைக் கேட்டவுடன் மனதில் ஒரு ஆனந்தம் தோன்றியது. ஏனென்றால் 2005ல் அடியேன் திருக்கயிலை யாத்திரை செய்த போது எமது குழுவில் இருந்த ஒரு குஜராத்தி அன்பர் இந்த ஜெய் கோஷத்தை விடாமல் கூறிக் கொண்டிருப்பார், அடியோங்களும் அவருடன் சேர்ந்து இக்கோஷத்தை கூறியுள்ளோம். அந்த அற்புத யாத்திரையின் நினைவுகள் மனதில் நிழலாடியது. அடியோங்களும் அவ்வடியார்கள் கூட்டத்துடன் இணைந்து கொண்டு காத்திருந்தோம். இவ்வாறு ஸ்ரீநாத்ஜீயின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் போது அவர் இத்தலத்தில் வந்து கோவில் கொண்ட வரலாற்றைப் பார்த்துவிடலாமா? அன்பர்களே.
குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தானே!
குன்றமேந்தி குளிர் மழை காத்தவன், குன்றததனால் மழைகாத்த குடமாடு
கூத்தன், குன்றமெடுத்து மழை தடுத்து இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த
மால், குன்றினால் குடை கவித்ததும், குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி! என்று
பலவாறு ஆழ்வார்கள் மங்கலாசாசனம் செய்த கோவர்த்தன கிரிதாரியாக,
7 வயது பாலகனாக நின்ற
கோலத்தில் இத்தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சேவை
சாதிக்கின்றார். இவர் கோபால் டாகூர்ஜீ, கோவர்த்தன்நாத்ஜீ, என்றும்
அழைக்கப்படுகின்றார்.
இவர் ஒரு சுயம்பு மூர்த்தி. 14ம் நூற்றாண்டில் விருந்தானத்திற்கு
அருகில் உள்ள கோவர்த்தன் மலை மேல் முதலில் சுயம்புவாகத் தோன்றினார். முதலில் இடது புஜங்கள் மட்டும் கோவர்த்தனகிரிக்கு அருகில் உள்ள ஜதிபுரம் என்ற கிராமத்தில் தோன்றின
அங்கிருந்த ஆதிவாசிகள் மாதவேந்திர பூரி என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் கோபால் என்று அவரை அப்போது பூசித்து வந்தனர். தேவ அரசனான
இந்திரன் ஆணவத்தை அடக்கிய கோலம் என்பதால் தேவதமன் என்றும்
அழைக்கப்பட்டார்.
அறுபது வருடம் கழித்து ஒரு காராம் பசு ஒன்று பாலைச் சொரிந்து அவரது திருமுகாரவிந்தத்தை அடையாளம் காட்டியது.
பின்னர் இத்திருமேனி கோவர்த்தனகிரியின் உச்சியில் கொண்டு சென்று வழிபாடு தொடர்ந்தது. பின்னர் 1549ம் ஆண்டு வல்லபாச்சாரியார் திக்விஜயம் செய்து கொண்டிருந்த போது ஸ்ரீநாத்ஜீ தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்
கொள்ளப் போவதாக உணர்த்த அவரும் தனது திக்விஜயத்தை இடையில் நிறைவு
செய்து கொண்டு கோவர்த்தனகிரி அடைந்தார். ஸ்ரீநாத்ஜீயின்
ஆணையின் படி ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் சுவாமியை எழுந்தருளச்
செய்து பூசைக்கு ஏற்பாடு செய்தார். பூஜா விதிகளையும்
வகுத்தார். அவருக்குப்பின் அவரது இரண்டாவது புதல்வர் விட்டல்ஜீ பூஜையை தொடர்ந்தார்.
1672 அவுரங்கஜீப் இவரை கைபற்ற முயன்ற போது இவரை பாதுகாத்து யமுனை வழியாக ஆக்ராவில் வைத்து ஆறு மாதம் பூசித்தனர். அங்கிருந்து பின்னர் ஒரு இரதத்தில் பின்னர் தெற்கு நோக்கி வரும் போது பல அரசர்கள் இவரை வரவேற்க தயாராக இருக்கவில்லை மேவார் பகுதியின் மகாராணா ராஜ்சிங் இவரை வரவேற்று தன் இராச்சியத்தில் கோவில் கொண்டு அருளுமாறு வேண்டினார், சிஹத் என்ற கிராமத்தை அடைந்த போது இரதத்தின் சக்கரம் பூமியில் புதையுண்டது. எவ்வளவு முயற்சி செய்தும் சக்கரத்தை விடுவிக்க முடியவில்லை. ஸ்ரீநாத்ஜீ இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து இக்கிராமத்தில் கோவில் அமைத்தனர். ஸ்ரீநாத்ஜீ கோவில் கொண்டதால் பின்னர் இவ்வூர் நாத்துவார் அதாவது ஸ்ரீநாதரின் வாயில் என்றழைக்கப்படலானது. பின்னர் இந்தூரின் ஹோல்கர்களாலும், பிண்டார்களாலும் மேவார் தாக்கப்பட்ட போது இவரை உதயப்பூருக்கும், கசியார் என்ற ஊருக்கும் எடுத்துச்சென்று காத்தனர். போர் முடிந்த பின் நாத்துவாரா திரும்பினார். பின்னர் ஒரு சமயம் இவர் கோவர்த்தனகிரிக்கு திரும்பி செல்வார் என்பது ஐதீகம்.
இவ்வாறு மஹாபிரபுஜீக்காக தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொண்ட
கிருஷ்ணர் கோயில் கொண்ட தலம் என்பதால் இத்தலம் புஷ்டி மார்க்க வைஷ்ணவர்களுக்கு முதன்மைத்தலம்
ஆகும். கோவர்த்தன கிரிதாரி இவ்விடம் வந்த கதை சுவையாக இருந்ததா? அன்பர்களே. அவர் செய்த
லீலைகள்தான் எத்தனை எத்தனை?. அவரை தரிசிப்பதற்கு
முன்னர்
இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த
எழில்விழவில்பழநடைசெய்
மந்திரவிதியில்பூசனைபெறாது
மழைபொழிந்திடத்தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இனவாநிரைதளராமல்
எம்பெருமான்! அருளென்ன
அந்தமில்வரையால்மழைதடுத்தானைத்
திருவல்லிக்கேணிகண்டேனே. (பெ.தி 2-3-4)
என்று திருமங்கையாழ்வார் பாடியபடி அன்று கோகுலத்தில்
அவர் குன்று குடையாக எடுத்து இந்திரனின் அகந்தையை
அழித்த கதையையும் காணலாமா?
கற்றுக்
கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய
செருச்செய்யும் குற்றமொன்றில்லாத ஆயர்ப்பாடியின்
கோபர்களுக்கு கோவர்த்தன கிரி மேய்ச்சல்
நிலமாக பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர்.
காலிகளை மேய்த்தனர். ஒரு நாள் அங்கே ஆயர்கள் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு
சென்று கொண்டிருந்தனர். "எங்கே போகிறீர்கள்?" என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கப், "பொங்கல்
இட, இந்திரனுக்கு
வழிபாடு செய்யச் செல்கிறோம்" என்றனர் ஆயர்கள். "சூரியன் , சந்திரன்,
மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம்; இவற்றை
விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறதே?” என்றான் கண்ணன். "மழைக்கு வருணன் தலைவன்; அவனுக்கு இந்திரன் தலைவன்; அதனால் அவனை வழிபடுகிறோம்"
என்றனர் ஆயர்கள். "பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம்; செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா? ” என்று
கேட்டான் கண்ணன். அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக்
கொண்டனர் எந்தத் தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத் தம் பசுக்களை
வழிபட்டனர். அவர்கள் படைத்த பிரசாதங்களை கண்ணனே ஏற்றுக் கொண்டு அருளினான்.
விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு
செய்திருந்த பூசையை கிருஷ்ணர் தடுத்து விட்டார்
என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன்
கோபத்தை விருந்தாவனவாசிகளின் மீது காட்டினான். பல வகையான மேகங்களின் அதிபதியான
இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான்.
விடாது கோகுலத்தை மூழ்கடித்து விடுமாறு மழை பொழியுமாறு கட்டளையிட்டான்.
இந்திரனின் கட்டளைப்படி பலவகையான, மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம்
பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து
இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசியது. கூரிய அம்புகள் போல் நீர் தாரை தாரையாக பொழிந்தது.
சற்று நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு
பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலைமை மிக
மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று
வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின.
அத்தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் கோவிந்தனின் பாத கமலங்களில்
சரணடைந்தனர். அப்போது விருந்தாவன வாசிகள் எல்லோரும் கிருஷ்ணரை நோக்கி அன்புள்ள
கிருஷ்ணா, நீர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இந்திரனின் கோபத்துக்கு ஆளாகித்
தவிக்கும் எங்களைக் காப்பாற்றுவீராக. எனப் பிரார்த்தித்தார்கள்.
இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும்
காற்று வீசியதும் தனக்குச் சேர வேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின்
செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார்.
அவனது கர்வத்தை அடக்க ஸ்ரீகிருஷ்ணர்,
ஒரு குழந்தை தரையில் இருந்து குடைக் காளானைப் பிடுங்குவது போல்,
கோவர்த்தன கிரியைத் தனது இடது திருக்கரத்தினால் தூக்கிக் கொண்டார். மலையைக் கையில் ஏந்தியவாறு தம் பக்தர்களிடம்
கிருஷ்ணர் கூறினார், எனதருமை விருந்தாவன வாசிகளே, இப்போது நீங்கள் பத்திரமாக இந்த கோவர்த்தன கிரியாகிய குடையின் கீழ்
வரலாம். என் கையிலிருந்து மலை நழுவி விழுந்து விடலாமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம்.
பலத்த மழையாலும் சூறாவளிக் காற்றாலும் நீங்கள் பெருத்த அவதிக்குள்ளாகி
இருக்கிறீர்கள். எனவே நான் இந்த மலையைத் தூக்கி அதை உங்களுக்காக குடையாகப்
பிடித்திருக்கிறேன். இந்தக் குடையின் கீழ் உங்களின் பசுக்களுடன் இப்போது
நின்மதியாக இருங்கள். என்று கிருஷ்ணர் கூறியதும் விருந்தாவன வாசிகள் அப்பெரிய
மலையினடியில் ஒன்று கூடி, தங்கள் உடைமைகளுடனும்
மிருகங்களுடனும் பத்திரமாக இருந்தார்கள்.
விருந்தாவன வாசிகளும் அவர்களது பசுக்களும் அம்மலையின்
அடியில் ஒரு வாரம் பசி, தாகம்
இன்றி, வேறு எவ்விதமான கவலையும் இல்லாமல் இருந்தார்கள்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அவ்வளவு பெரிய
மலையை ஒரு வார காலம் நிறுத்தியிருந்ததைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.
அப்போது கிருஷ்ணருக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது. கிருஷ்ணரின் அசாதாரணமான யோக
சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன், இடியால்
தாக்கப்பட்டவனைப் போல் திகைப்படைந்து உறுதி குலைந்தான். உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள்
எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றதும் பலத்த காற்று வீசுவது நின்றது. அப்போது
கோவர்த்தன கிரிதாரி என்ற பெயரைப் பெற்றார்.
கிருஷ்ணர் கூறினார்: என்னருமை ஆயர்குல மக்களே, இப்போது நீங்கள் உங்கள் மனைவியரையும், குழந்தைகளையும்,
பசுக்களையும் அழைத்துக் கொண்டு உங்கள் உடமைகளுடன் வீட்டுக்குச்
செல்லலாம். வெள்ளம் குறைந்து விட்டது. எனவே, நீங்கள் இங்கிருந்து
செல்லலாம். என்று கூறினார். எல்லா மக்களும் தத்தம் உடைமைகளை வண்டிகளில் ஏற்றிக்
கொண்டு அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் பிரபுவாகிய
கிருஷ்ணர் மெதுவாக கோவர்த்தன கிரியை கீழே இறக்கி அதன் உரிய இடத்தில்
முன்பிருந்தபடி வைத்தார்.
இறுதியில் சுவர்க்க லோகத்தில் இருந்து தேவேந்திரன்
வந்து, தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து,
கிருஷ்ணரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கி, அவரைத்
துதித்ததும் இந்தினின் கர்வம் அடங்கியது. அவரை கோவிந்தனாக அபிஷேகம் செய்வித்தான். பின் கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றுக்
கொண்டு இந்திரன் சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் சென்றான்.
இந்த லீலையைத்தான் ஆழ்வார்கள் குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி,
குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தானே, குடையா வரையொன்றெடுத்து ஆயர் கோவாய் நின்றான், குன்றமொன்றெடுத்தேந்தி மாமழை அன்று காத்த அம்மான்,
குன்றமெடுத்து மழை தடுத்து இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த மால், வெற்பை யொன்றெடுத்து
ஒற்கமென்றியே நிற்குமம்மான், குன்றமேந்தி குளிர்
மழை காத்தவன் அன்று ஞாலமளந்த பிரான், குன்றமொன்றால் மழை காத்த பிரான், ஆநிரை பாடி அங்கே
யொடுங்க அப்பன் தீ மழைகாத்துக் குன்றமெடுத்தானே!
என்று பலவாறெல்லாம் போற்றிப்பாடியுள்ளனர்
சிறப்பாக பெரியாழ்வார் ஒரு முழு பதிகம் கண்ணன் தாங்கிய கோவர்த்தனகிரியின் சிறப்பை “கோவர்த்தமென்னும் கொற்றக்குடையே“
என்று பாடியுள்ளார் அப்பதிகத்திலிருந்து ஒரு பாடல்
வழுவொன்றுமில்லாச்செய்கை வானவர் கோன் வலிப்பட்டுமுனிந்து விடுக்கப்பட்ட
மழைவந்தெழுநாள்பெய்துமாத்தடுப்ப மதுசூதனெடுத்துமறித்தமலை
இழவுதெரியாததொரீற்றுப்பிடி இளஞ்சீயம்தொடர்ந்து முடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே
– (பெரி. தி 3-5-2)
இவ்வாறு “குன்றமொன்றேந்தி குளிர்மழை காத்த” கோவர்த்தனகிரிதாரி
கோலத்தில் இத்தலத்தில் ஸ்ரீநாத்ஜீ சேவை சாதிக்கின்றார். இடது திருக்கரத்தால் கோவர்த்தன கிரியை தாங்கி வலக்கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்துக் கொண்ட அற்புதக் கோலம். இவரது
திருமேனியில் இரண்டு பசுக்கள், ஒரு நாகம், ஒரு சிங்கம், ஒரு மயில், ஒரு கிளியின் உருவங்கள் இயற்கையாகவே
அமைந்துள்ளன. ராதையும், கிருஷ்ணரும் இணைந்த
கோலம் இது. ஸ்ரீ என்பது தாயாரைக் குறிக்கும் அல்லவா எனவே இவர் ஸ்ரீநாத்
என்று திருநாமம் பெற்றார். இயற்கையாகவே இவருடைய திருமுகத்தில்
ஒரு வைரம் அமைந்துள்ளது. பக்த மீராபாயை ஆகர்ஷித்த கோலம் இந்த கோவர்த்தனகிரிதாரி கோலம் ஆகும் தன்னுடைய ஒவ்வொரு பாடலிலும் “மீராக்கீ
பிரபு கிரிதர நாதரு “
என்று பாடியருளினாள்.
பெருமாள் புண்டரீகாக்ஷன் அல்லவா? அவரது கண்களே தாமரை கண்ணழகை
பெருமாளிடம்தான் தரிசிக்க முடியும், இதை பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து காசும்
பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து மத்தினால் தயிர் கடையும்
வாச நறுங்குழலாய்ச்சியரை
விண்கொளமரர்கள் வேதனைதீர
முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்
வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்களிருந்தவாகாணீரே
கனவளையீர்! வந்து காணீரே. (பெரி.தி 1-2-16) என்று அழைத்த
மாயக்கண்ணனின் கண்கள் இத்தலத்தில் விரிந்து பரந்தனவாக இல்லாமல் பாதி மூடிய நிலையில் கீழ் நோக்கிய பார்வையாக அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். அக்கண்களின் அழகே ஒரு தனி அழகு. சர்வாங்க சுந்தரன் அல்லவா எம்பெருமான்.
சனிக்கிழமை என்பதால் அன்று சரியான கூட்டம். திருக்கதவம் திறந்த பின் ஆயிரக்கணக்கான
அன்பர்களுடன் வரிசையில் சென்று ஸ்ரீநாத்ஜீயை சேவித்தோம். திருப்பதியில் உள்ளது போல
மூன்று வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். முட்டி மோதிக்கொண்டு பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்கின்றனர். கட்டண தரிசனமும் உள்ளது
அவர்கள் பெருமாளுக்கு அருகில் சென்று தரிசிக்க இயலும். ஆலயத்தில் பல இடங்களில் ஸ்ரீநாத்ஜீ
- யமுனாஜீ – மஹாபிரபுஜீ ஓவியத்தைக் கண்ணுற்றோம்.
முன்னரே கூறியது போல இவ்வாலயம் ஹவேலி அதாவது மாளிகை போலவே அமைந்துள்ளது.
இம்மாளிகையும் நந்தாலயம்
அதாவது கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்
மாளிகை இது என்பது ஐதீகம். அதில் ரஸோயி கர் (சமையலறை), தூத் கர் (பால் சேமித்து வைக்கும்
அறை), பான் கர் (வெற்றிலை அறை), மிஸ்ரி கர் (சர்க்கரை அறை,) பேடா கர் (இனிப்புகள் அறை),
பூல் கர் (மலர்கள் அறை), கெகணா கர் (ஆபரணங்கள் அறை), அஷ்வ சாலா
(குதிரை லாயம்), கோ சாலா (மாட்டுக் கொட்டகை)
பைடக் (வரவேற்பறை) என்று பல அறைகள் கொண்டதாகவே
ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இவருக்காக மேவார் அரசன் வழங்கிய தங்க மற்றும் வெள்ளி
அரைக்கற்களையும், ஸ்ரீநாத்ஜீ ஆக்ராவில் இருந்து வந்த மாட்டு வண்டியையும் தனித்தனி அறைகளில்
தரிசிக்கலாம்.
இவ்வாறு அரண்மனையில் வசிப்பதால் இவரை தாகூர்ஜீ என்றும், பாங்கே பிஹாரிஜீ என்றும் வனமாலிஜீ என்றும் அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள். சபா பண்டபத்தில் அரை வட்டவடிவ குவி மாடம் அமைந்துள்ளது
கருவறையின் மேல் சிறு விமானம், விமானம் கூம்பூ
வடிவில் அமைந்துள்ளது. நான்கு புறமும் புலிகள் காவல் காக்கின்றன.
எளிமையாக மங்களுர் ஓடு வேயப்பட்டுள்ளது. மாடிப்படிகளில் ஏறிச் சென்று விமானத்தை தரிசனம் செய்ய முடியும். பகவானைப்
பாடிப் பரவிய பல தாசர்களின் ஓவியங்கள் ஆலயம் முழுவதும் நிறைந்துள்ளது.
புஷ்டி மார்க்கத்தின் இவருக்கு தினமும் எட்டு பூஜைகள் மிகவும்
சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது மட்டுமே பக்தர்கள் இவரை தரிசிக்க முடியும் மற்ற சமயங்களில் திரையிடப்படுகின்றது. கிருஷ்ணரைக் காண எப்போதும் கோபியர்கள்
யசோதையின் வாயிலில் காத்துக்கிடப்பதால் தனது செல்லப்பிள்ளை உரிய சமயத்தில் உணவு உட்கொள்ளவும்,
கோபச்சிறுவர்களுடன் விளையாடவும், காலிகள் பின் செல்லவும், கோபியர்களுடன் இராசலீலை ஆடவும்
யசோதை அன்று செய்தது போல இன்று வல்லபாச்சார்யர் ஏற்படுத்திய முறை இது. அதுவும் இரவு,
பகல், கோடை, குளிர், வசந்தகாலம் என்று கால நேரத்தைப் பொறுத்து இவருக்கு
செய்யும் அலங்காரமும் மாறுபடுகின்றது. அவை என்னவென்று காணலாமா அன்பர்களே.
தனது திருமகன் கிருஷ்ணரை அன்று கோகுலத்தில் யசோதை எவ்வாறு காத்தாளோ
அப்பாவனையில் இன்றும் இக்கோவிலில் ஸ்ரீநாத்ஜீயை இவர்கள் ஆராதிக்கின்றனர். அடியோங்கள்
சென்ற சமயம் குளிர் காலம் என்பதால் இவருக்கு முன்னர் குளிர் காய்வதற்கு ஏதுவாக தீக்கங்குகளை
ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து கருவறை வெப்பமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதை
பார்த்த போது என்ன ஒரு அன்பு என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அது போலவே கோடை
காலத்தில் வசந்த பஞ்சமிக்குப் பின் இரண்டு மாதங்கள் சயன ஆரத்தியின் போது பக்தர்களுக்கு
அனுமதி கிடையது. பெருமாள் விரஜவாசிகளுக்கு அருள்பாலிக்க அங்கு
செல்கின்றார் என்பது ஐதீகம். சயன ஆரத்தி கோவர்த்தனகிரியில்
நடைபெறுகின்றது. எனவே இங்கு சீக்கிரம் ஸ்ரீகிருஷ்ணரை உறங்கச்
செய்கின்றனர். வாருங்கள் தினமும் எவ்வாறெல்லாம் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூசைகள் செய்கின்றனர்
என்று காணலாம்.
No comments:
Post a Comment