Showing posts with label புஷ்டி மார்க்கம். Show all posts
Showing posts with label புஷ்டி மார்க்கம். Show all posts

Sunday, October 8, 2017

நவ துவாரகை யாத்திரை - 24

ஸ்ரீநாத்ஜீ துவாரகை - 2


இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3   4    5     6    7    8    9    10    11    12  


13    14   15   16   17   18   19   20    21   22   23   25   26   27   28


புஷ்டி மார்க்கத்தின் படி  அனைத்து பூசையின் போதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு இசை (ராக்), அந்தந்த காலங்களுக்கு ஏற்ற இராகத்தில் பாடல்கள் இசைக்கப்படுகின்றது. நேரத்திற்கு ஏற்றவாறு பிரசாதம் (போக்),  உடை மற்றும் அலங்காரம் (வஸ்த்ர ஔர் ச்ருங்கார்) மூலம் கிரமமாக பூஜை நடைபெறுகின்றது. 


அதிகாலையின் முதல் தரிசனம் மங்களா என்றழைக்கப்படுகின்றது. அதிகாலை 5:45   மணி முதல் 6:30 மணிக்குள் இப்பூசை டைபெறுகின்றது. காலை எழுந்தவுடன் ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்வதே மங்களம் என்பதால் இப்பெயர். இப்பூசையின் போது உறங்கிக்கொண்டிருக்கும் கண்ணனை திருப்பள்ளி எழுப்பி காலைக் கடன்களை முடித்து காலைச் சிற்றுண்டி படைப்பதாக ஐதீகம்.  இப்பூசை குளிர்காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும், கோடை காலத்தில் சூரிய உதயத்திற்கு பின்னரும் நடைபெறுகின்றது. இச்சமயத்தில் முதலில் திருக்கதவங்கள்  திறக்கப்படுவதில்லை. உள்ளே சிரமப்பரிகாரம் செய்து வைத்தப் பின்னரே திருக்கதவங்கள் திறக்கப்படுகின்றன. கோபச்சிறுவர்கள் கண்ணனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதால் எழுந்தவுடன் அவர் விளையாட ஓடி விடுவார் என்று அன்னை யசோதா கதவை மூடி வைத்திருப்பதாக ஐதீகம். கோடை காலத்தில் ஒற்றை அரையாடையுடன் தரிசனம் தருவார் கோவர்த்தன கிரிதாரி. எனவே அப்போது முழு திருமேனியையும் அலங்காரம் இல்லாமல் அருமையாக தரிசனம் செய்யலாம். குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளுடன் சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது புல்லாங்குழல் கண்ணனின் திருக்கரங்களில் தருவதில்லை, ஏனென்றால் அவன் அக்குழலை ஊதி அனைவரையும் மயக்கி காலைக் கடமைகளை செய்யவிடமாட்டான் என்பதாக ஐதீகம். கண்ணனுக்கு கண்ணேறு படாமல் இருக்க இப்பூசையின் போது ஆரத்தி எடுக்கப்படுகின்றது. காலை சிற்றுண்டி நைவேத்யம் செய்யப்படுகின்றது.  இப்பூசையின் போது காலை நேரத்திற்கு உரிய இராகங்களில் பாடல்கள் இசைக்கின்றனர். அடியோங்களுக்கு முக தரிசனம் மட்டுமே கிட்டியது.

இரண்டாவது பூசை சிருங்கார் என்றழைக்கப்படுகின்றது. காலை 7:15 மணி முதல் 7:45 மணிக்குள் இப்பூசை டைபெறுகின்றது. தன் நீலமேக சியாமளனை யசோதை “இன்று நீ பிறந்த திருவோணம் அழகனே நீராட வாராய்“ என்றும்
எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யு பிரானே!
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணமழகிய நம்பீ! மஞ்சனமாடநீவாராய். (பெரி,தி 2-4-6)
இவ்வாறு பலவாறெல்லாம் சொல்லி அழைத்து நீராட்டி,  பின்னர்  தலை முதல் கால் வரை சிறப்பாக மயிற்பீலி, ஆபரணங்கள், மாலைகள் ஆகியவற்றால்  அலங்காரம் செய்து பார்க்கும் பூசை இது. கண்ணன் அலங்காரத்தை கண்டு களிப்பதற்காக கண்ணாடி சேவை சிறப்பாக நடைபெறுகின்றது..  இதற்குப் பின்னரே கண்ணனைக் காண்பதற்காக வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் கோபியர்களை தன் மகனைக் காண அனுமதிக்கின்றாள் யசோதை. கண்ணன் காலை சிற்றுண்டி உண்டு விட்டதால், இப்பூசையின் போது கோபியர்கள் கண்ணனுக்காக கொண்டு வந்த உலர் பழங்கள், இனிப்புகள் ஆகியவை மட்டுமே பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. இதற்குப்பிறகு இவர் திருக்கரத்தில் வேய்ங்குழல் தரப்படுகின்றது.
சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய் கொப்பளிப்ப
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடூதினபோது
பறவையின்கணங்கள்கூடுதிறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிக்செவியாட்டகில்லாவே.
(பெரி.தி 3-6-8) என்று பெரியாழ்வார் பாடியபடி தனது குழலின் இனிமையான கானத்தை  இராதைக்காக வாசிக்கின்றார் என்பது ஐதீகம்.

மூன்றாவது பூசை க்வால். காலை 9:15 மணி முதல் 9:30 மணிக்குள் இப்பூசை டைபெறுகின்றது. காலைச்சிற்றுண்டியை முடித்த கோபகுமார்களுடன் கிருஷ்ணர் மாடு கன்றுகளை  ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும் கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது  இலகுவாக இவருக்கு பால் இனிப்பு நைவேத்யம் செய்யப்படுகின்றது. கோ சாலை கண்காணிப்பாளர் பெருமான் முன்னர் கோ சாலையில் உள்ள பசுக்களின் லம் பற்றி விண்ணப்பிக்கின்றார் அதைக் கேட்டு மகிழ்கின்றார் பெருமாள். இப்பூசையின் போது துளசி கொண்டு சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகின்றது. 


மதிய நேரத்தில் ஸ்ரீநாத்ஜீக்கு டைபெறும் பூசை ராஜ் போக் ஆகும். காலை 11:15 மணி முதல் 12:05 மணிக்குள் இப்பூசை டைபெறுகின்றது. மதிய உணவு ஒரு அரசனுக்கு எவ்வாறு படைப்பார்களோ அது போல 56 வகையான பதார்த்தங்களுடன் உணவுண்டு மகிழ்கிறார் பெருமாள். வெற்றிலை தரித்துக் கொள்கின்றார். இப்பூசையின் போது கோவர்த்தன கிரிதாரி மிகவும்  சிறப்பான அலங்காரத்தில் சேவை சாதிக்கின்றார்.
குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லவெங்கோவே!
மடங்கொளதிமுகத்தாரை மால்செய்யவல்லவென்மைந்தா!
இடந்திரட்டிரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைகிடந்தகோவே! குருக்கத்திப்பூசூட்டவாராய்.   (பெரி.தி 2-7-7)
என்று யசோதை கண்ணனை பலவித  மலர்கள் கொண்டு அலங்கரித்த வண்ணம்,  மலர் மாலைகள்,  நவரத்தின ஆபரணங்களுடன் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியவாறு அருமையாக அலங்காரம் செய்கின்றனர். அவ்வழகைக் காணக் கண்கோடி வேண்டும்.  இப்பூசையின் போது இனிமையான றுமணப்புகை ஊட்டப்படுகின்றது.  மதிய உணவிற்குப் பின்னர் சிறிது நேரம் தனது தோழர்களுடன் சதுரங்க ஆட்டம் ஆடிய பின் உறங்க செல்கின்றார். எனவே இப்பூசைக்குப் பிறகு மூன்று மணி நேரம் டை அடைக்கப்படுகின்றது.

மதிய நேர சிறு உறக்கத்திற்குப் பிறகு மாலை உன்னி கிருஷ்ணரை சங்கொலியினால் எழுப்பும் பூசை உத்தப்பன் என்றழைக்கப்படுகின்றது. மாலை 3:45 மணி முதல் 4:00 மணிக்குள் இப்பூசை டைபெறுகின்றது.  மாடுகளை மேய்த்தபின் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடிக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இப்பூசையின் போது வீணை இசையை செவி மடுத்து மகிழ்கின்றார் பெருமாள். அந்தகக் கவியான சுர்தாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றன.

அடுத்த பூசை போக் என்றழைக்கப்படுகின்றது. மாலை 4:45 மணி முதல் 5:00 மணிக்குள் இப்பூசை டைபெறுகின்றது.
பட்டிமேய்த்தோர்காரேறு பலதேவற்கோர்கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே?
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீருட்டி
விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (நா.தி  14-1) என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் பாடியபடி,   மாடுகளை மேய்த்தபின் திரும்பி வந்த கண்ணனின் வரவை யசோதைக்கு அறிவிக்கின்றனர். பசுக்களை கறவைக்காக அழைத்து செல்ல இவ்வறிவிப்பு செய்யப்படுவதாக ஐதீகம்.  இப்பூசையின் போது லகுவான ஆகாரமே ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. கண்ணன் வெளியே சுற்றி விட்டு வந்ததால் ஏற்பட்ட கண்ணேறு விலகுவதற்காக ஆரத்தி எடுக்கப்படுகின்றது. கானகமெல்லாம் சுற்றி விட்டு வந்த  களைப்பு தீர பெருமாளுக்கு சாமரம் வீசுகின்றனர். இதற்குப்பின் அவர் கோபகுமாரர்களுடன் விளையாட செல்வதாக ஐதீகம். 

மாலை பூசை (சந்தியா) ஆரத்தி என்று அழைக்கப்படுகின்றது. மாலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள் இப்பூசை டைபெறுகின்றது. அந்தி சாயும் நேரம் என்பதால் அசுரர்கள் கண்ணனுக்கு தீங்கு விளைவிக்க காத்துக்கொண்டு இருப்பர்,  எனவே    யசோதை கண்ணனுக்கு அந்தி காப்பிடுகின்றாள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து  அழகனை அந்திக் காப்பிட அழைக்கும் பாசுரத்தின் ஒரு பாடல்  இதோ
ன்றுகளில்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்துன்னைக்கூவி நேசமொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்வெள்ளறை (நாத்துவாரா) நின்றாய்
நன்றுகண்டாயென்தன்சொல்லு நானுன்னைக் காப்பிடவாராய். (பெரி.தி  2-8-2)
ஆகவே இப்பூசை மாத்ரு பாவத்தில் டைபெறுகின்றது. கண்ணனுக்கு எளிமையான அலங்காரமே செய்யப்படுகின்றது. கண்ணனின் திருக்கரங்களில் புல்லாங்குழல் இருக்கின்றது அதன் கானத்தினால் அனைத்து கோகுல வாசிகளையும் மாயக் கண்ணன்  மயக்குகின்றான் என்பது ஐதீகம்.  இரவு ஆரம்பித்து விட்டதால் விமானத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. மாளிகையின் கொடிகள் சுருட்டப்படுகின்றன.


நாளின் நிறைவு பூசை  சயன் என்றழைக்கப்படுகின்றது. பக்தர்களுக்கு ஸ்ரீநாத்ஜீ வழங்கும் நிறைவு சேவை. சமையல்காரரை விளித்து மறு நாள் காலை சீக்கிரம் வருமாறு கூறுவதுடன் பூசை ஆரம்பமாகின்றது. மேள தாளங்கள் முழங்குகின்றன.   இரவு உணவு நைவேத்யம் செய்தபின்  வெற்றிலை(பீடா) தரிக்கின்றார் பெருமாள். கிருஷ்ணதாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றது. அவர் பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கர்ப்பகிரகத்தில் இருந்து பள்ளியறை வரை சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகின்றது. அலங்கரிக்கப்பட்ட பள்ளியறையில் பால், பழம் வைக்கப்படுகின்றது. மற்றும் இராதா இராணியின் ஆடை ஆபரணங்கள் வைக்கப்படுகின்றது. கோயிலில் பக்தர்களை முறைப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட தடுப்புகள்,  மற்றும் முற்றத்தில் கட்டிய விதானம் முதலியவை பெருமாள் தங்கு தடை இன்று சென்று வருவதற்காக   நீக்கப்படுகின்றன. சயன ஆரத்திக்குப்பிறகு திரையிடப்படுகின்றது. பெருமாள்  பள்ளி எழுந்தருளுகின்றார்.

இவ்வாறு காலம், நேரம் இவற்றிற்கேற்ப வெகு சிறப்பாக பூசைகள் மற்றும் டைபெறுகின்றது. என்ன ஒரு நாள் முழுவதும் இருந்து அனைத்து அலங்காரங்களையும் சேவிக்க வேண்டும் என்று ஆவல் பொங்குகின்றதா?  நாத்துவாரா செல்ல விழையும் போது இரு நாட்கள் அங்கு தங்கும்படி  செல்லுங்கள்.

ஸ்ரீநாத்ஜீயுடன், தவழ்ந்த கோலத்தில் ஒர் திருக்கரத்தில் வெண்ணையுடன் நீத் பிரியாஜீயும் (நீதப் பிரியன்), மதன்மோகன்ஜீ என்ற திருநாமத்துடன் இராதா கிருஷ்ணரும், விட்டல்நாத்ஜீ என்ற திருநாமத்துடன் விட்டலரும்-இரகுமாயியும் அருள் பாலிக்கின்றனர். இவர்களுக்கும் அலங்காரம் அருமையாக செய்கின்றனர். இத்தலத்திலும் துவாரகையைப் போல  கொடியேற்றத்தை ஒரு பிரார்த்தனையாக சிறப்பாக செய்கின்றனர். இத்தலத்தின் சமையலறையில் அன்பர்கள் அளிக்கும் அனைத்து காய்கறிகள் மட்டும், பால் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது ஒரு சிறப்பு.

வருடம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ள இவ்வாலயத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஹோலி மற்றும் தீபாவளி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  தீபாவளிக்கு அடுத்த நாள்  அன்னக் குவியல்’  உற்சவம். அதை ஏற்படுத்தியவர் வல்லபாச்சார்யார். அன்று 56 வகையான உணவுப் பண்டங்கள் பெருமாளுக்கு  படைக்கப்படுகின்றது. சப்பன் போக்என்று பெயர். இந்தியில் சப்பன்என்பது 56 என்ற எண்ணைக் குறிக்கும். போக்என்றால் போஜனம் அல்லது உணவு.
கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா! கோவலர்இந்திரற்கு
காட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துண்டாய்போலும்
ஊட்டமுதலிலேனுன்தன்னைக்கொண்டு ஒருபோதுமெனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா! உன்னையஞ்வனின்றுதொட்டும். (பெரி.தி 3-3-8)  என்றபடி அன்று ஆயர்கள் படைத்த உணவை பகவான் உண்டதை அன்னக்குவியல் உற்சவத்தின் போது,  இன்று உண்பித்து மகிழ்கின்றனர் பக்தர்கள். அதில் சமைக்கப்பட்டது, சமைக்கப்படாதது, சர்க்கரை சேர்த்தது, சேர்க்கப்படாதது, பாலில் செய்தது, கிழங்கு வகைகள், சில புதிய பழங்கள், உலர்ந்த பழங்கள் என்று பலவிதப் பண்டங்கள் இருக்கும். எல்லாம் அறுசுவை உணவு. அதே போல், விழுங்குபவை, கடித்துத் தின்பவை, சப்பிச் சாப்பிடுபவை, நக்கிச் சாப்பிடுபவை இப்படிப் பல விதத் தயாரிப்புகள் அடங்கியது இந்த சப்பன் போக் என்ற விழாப் படையல்.ச்சமயம் ஆயிரக்கணக்கில் வைஷ்ணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஜென்மாஷ்டமியின் போது
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே. (பெரி.தி 1-1-1)
என்று பெரியாழ்வார் அன்று கோகுலத்தில் கோபர்கள் மகிழ்ந்ததைப் பாடியது போல பாலையும் வெண்ணையும் தூவி  இன்றும் பக்தர்கள் மகிழ்வதைக் காணலாம்.
அடியோங்களுக்கு ஆரத்தி தரிசனம் சேவிக்கும்  பாக்கியம் கிட்டியது. மேவார் அரசர் அளித்த வெள்ளி மட்டும் தங்க அரைகற்களை தரிசித்தோம். அருமையான தரிசனத்திற்கு பின் வெளியே வரும் போது கடைகளில் ஸ்ரீநாத்ஜீயின் அருமையான சித்திரங்களைப் பார்த்தோம்.



கடைகளில் விசாரித்த போது “பிச்வாய்” (Pichwai) எனப்படும் சித்திர முறையில் வரையப்பட்ட படங்கள் இவை என்று கூறினார்கள்.  இச்சித்திரங்கள் உலகப்புகழ் பெற்றவை. இவை பல் வேறு வர்ணங்களில் காடா துணி போன்ற முரட்டு துணியில் வரையப்படுகின்றன.  பொதுவாக மஹாபிரபுஜீ -  ஸ்ரீநாத்ஜீ - யமுனாஜீ  மூவரும் உள்ள சித்திரங்கள், மற்றும் கிருஷ்ணரின் ராச லீலைகள் இச்சித்திரங்களின் கருவாக அமைந்துள்ளன. நாத்துவாரவை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பல்வேறு கலைர்கள் இப்பாணியில் சித்திரங்கள் வரைகின்றனர். இக்கடைகளில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வதற்கேற்ற பல்வேறு அலங்காரப் பொருட்களும் கிட்டுகின்றன.

அடியோங்கள் தரிசித்த முதல் துவாரகையான டாகோர் துவாரகையில் முதன் முதலாக ஸ்ரீநாத்ஜீ- மஹாபிரபுஜீ- யமுனாஜீ  ஓவியங்களைப் பார்த்தபோது டுவில் உள்ளது கிருஷ்ணன் மற்ற இருவரும் யார் என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது, மற்ற ஆலயங்களிலும் இதே ஓவியங்களைப் பார்த்தோம். இத்தலத்தில் அக்கேள்விக்கான பதில் கிட்டியது. புஷ்டி மார்கத்தைப் பற்றியும் அறிந்து கொண்டோம். 
அருமையான தரிசனத்திற்குப்பின் தங்கும் விடுதிக்குத் திரும்பினோம். விடுதிகளின் மையத்தில் கோவர்த்தன கிரிதாரியின் அருமையான சுதை சிற்பம் அமைத்திருப்பதை கண்டு மகிழ்ந்தோம்.
ஸ்ரீநாத்ஜீ ஆலயம் மட்டுமல்ல இன்னும் கணேசர் ஆலயம், லால் பாக் எனப்படும் பூங்கா, விருந்தாவன் பாக் எனப்படும் பூங்கா ஸ்ரீநாத்ஜீயின் கோசாலை என்று பார்ப்பதற்குரிய அம்சங்கள் இவ்வூரில் உள. 
இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த எழில்விழவில்பழநடைசெய்
மந்திரவிதியில்பூசனைபெறாது மழைபொழிந்திடத்தளர்ந்து  ஆயர்
எந்தம்மோடு இனவாநிரைதளராமல் எம்பெருமான்! அருளென்ன
அந்தமில்வரையால்மழைதடுத்தானைத் நாத்துவாரா (திருவல்லிக்கேணி) கண்டேனே. (பெ.தி 2-3-4)  என்றபடி கோவர்த்தனகிரிதாரியின் ங்களா தரிசனத்தை  மறு நாள் காலை பின் ஒரு முறை சேவித்த  பிறகு இத்தலத்திற்கு அருகில் உள்ள ங்ரோலி என்ற தலத்திற்கு சென்றோம். அத்தலத்தின் சிறப்புகள் என்ன என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

ஓகாவையும் பேட்துவாரகையையும் இணைக்கும் பாலத்திற்கான அடிக்கல் நேற்று இடப்பட்டது. இனி வரும் காலத்தில் தரைப்பாலம் மூலமாகவே தீவுத்த்துவாரகை செல்ல இயலும். 

                                          நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

Saturday, June 24, 2017

நவ துவாரகை யாத்திரை -8


திருத்துவரை -3



 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3    4    5    6    7   9    10   11    12


   13   14   15   16   17   18   19   20   21    22    23    24    25   26   27   28


துவாரகை மன்னன் 

ங்கு பூசைகள் மஹாபிரபுஜீ என்று அழைக்கப்படுகின்ற வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் பிரகாரம் பூசைகள் டைபெறுகின்றன. தினமும் துவாரகாதீசருக்கு  காலை 7.00 மணிக்கு மங்கள ஆரத்தியும்; 10.00 மணிக்கு திருமஞ்சனமும்; மாலை 6.00 மணிக்கு அலங்கார ஆரத்தியும்; இரவு 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியும்; இரவு 9.30 மணிக்கு சயன ஆரத்தியும் நடக்கிறது. டகோர் துவாரகையில் எவ்வாறு பிரசாதம் அமுது செய்யப்படுகின்றதோ அது போலவே துவாரகையிலும் டைபெறுகின்றது. அதன் விவரங்கள் என்னவென்று காணலாமா அன்பர்களே.


பொதுவாகவே குஜராத்திகள் இனிப்புப் பிரியர்கள், இவர்கள் சமைக்கும் அனைத்திலும் சாம்பார் உட்பட சர்க்கரை சேர்ப்பார்கள். இறைவனுக்கு படைக்கும் உணவிலும் இனிப்புகளே அதிகம். போக் என்றால் இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம். துவாரகாதீசனுக்கு என்னென்ன பிரசாதங்கள் அமுது செய்யப்படுகின்றன என்று காணலாம் அன்பர்களே.

பண்டா போக்:  அதிகாலையில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை துவாரகாநாதனுக்கு நைவேத்யம் செய்கின்றனர்.  வெண்ணெய் என்றால் ஸ்ரீகிருஷ்ணருக்கு கொள்ளை பிரியமல்லாவா? “வேயினன்ன தோள் மடவார் வெண்ணையுண்டான் இவனென்று ஏச நின்ற எம்பெருமானுக்கு இச்சமயம்   வெண்ணையும் அமுது செய்விக்கப்படுகின்றது.  அதன் பிறகு துவாரகநாதனின் முகத்தினை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்கின்றனர்.  ஒரு குழந்தைக்குப் பல் தேய்த்து விடுவது போல துவாரகாநாதனுக்கும் ங்கத்தால் ஆன குச்சி கொண்டு பல் தேய்க்கும் படலம் நடக்கின்றது! அதன் பிறகு மங்கள ஆரத்தி. தற்குப்பின்னர்  பக்தர்கள் துவாரகாதீசனை சேவிக்க அனுமதிக்கின்றனர்.

ஸ்நான் போக்: அதன் பிறகு குளிப்பாட்டும் படலம்! அதாவது திருமஞ்சனம். நமது ஊரில் நடப்பது போலவே இங்கேயும் விதம் விதமாக அபிஷேகம் கண்டருகிறான் குன்றால் குளிர் மாரி தடுத்துகந்தான், கானார் கரி கொம்பொசித்த களிறு, கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோ, ஸ்ரீகிருஷ்ணர்.  பிறகு சிறிது  அமுது படையல்.

ஷ்ருங்கார் போக்: திருமஞ்சனம் முடிந்த பிறகு அலங்காரம். பட்டு பீதாம்பரங்கள், வரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள்,  தலைக்கு குவே என்றழைக்கப்படும் மகுடம், கொண்டு அலங்காரம் செய்கின்றனர். துளசி மாலை, பாக்கு மாலை, மலர் மாலைகள் சூட்டுகின்றனர். பின்னர் துளசியினால் அர்ச்சனை. இதற்குப் பிறகு  ஷ்ருங்கார் போக் கண்டருளுகிறார். இச்சமயம் இனிப்புகள் அதிகமாக அமுது செய்யப்படுகின்றன.  சுவாமிக்கு மட்டுமல்ல, பொன் வெள்ளி, வரத்தினங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வண்ண வண்ண துணிகள் கொண்டு கருவறை முழுவதும் அலங்காரம் செய்கின்றனர்.

ராஜ் போக்: காய்த்த நீள் விளங்கனியுதிர்த்து எதிர்த்த பூங்குருந்து
சாய்த்து மாபிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு பின்
பேய்ச்சி பாலையுண்டு பண்டொரேன மாய வாமனான   துவாரகாதீசனுக்கு மதிய வேளையில் படைக்கப்படும் பிரசாதம். ஒரு அரசனுக்கு எப்படி உணவு சமைப்பார்களே அது போல 56 விதமான உணவு வகைகள் கொண்டு மிகவும் சிறப்பாக  நைவேத்யம் செய்கின்றனர்.   ஆண்டாள் நாச்சியார் சோலை மலைப் பெருமானுக்கு
நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்லொலோ? (நா தி : 9-6) என்று பாடியபடி ஒரு சக்கரவர்திக்கு எவ்வாறு விருந்து படைப்பார்களோ அது போல ஸ்ரீகிருஷ்ணருக்கு ராஜ விருந்து அமுது செய்விக்கப்படுகின்றது.




உத்தப்பன் போக்:  மதிய இராஜ உணவிற்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் எனவே சன்னதி அடைக்கப்படுகின்றது. சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர். மாலை எம்பெருமானை மணி அடித்து எழுப்புகின்றனர். பின்னர் அவருக்கு சந்தனம் ஜவ்வாது முதலிய  வாசனை திரவியங்கள் பூசுகின்றனர். பின்னர் தரிசனத்திற்காக டை திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் அச்சமயம் கிட்டுகின்ற கனி வகைகள் மற்றும் உலர் பழங்கள் நைவேத்யம் செய்கின்றனர்.  
ஷயன் போக்: இரவு கோவில் நடையடைக்கும் போது துவாரகாதீசனுக்கு பூசைகள் முடித்து அன்றைய தினத்திற்கான நிறைவு நைவேத்யமாக பாலும் பழமும் படைக்கின்றனர்.

பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. அடியோங்கள் அதிகாலையில் சென்றதால், வெண்ணை பிரசாதம் கிட்டியது”.

ஜென்மாஷ்டமி, இராமவமி, தீபாவளி, தசரா, அக்ஷய திருதியை, ரத யாத்திரை, வாமன ஜெயந்தி, தீபாவளி (குஜராத்தியரின் புது வருடப் பிறப்பு), தீபாவளிக்கு மறு நாள் அன்னகூட உற்சவம், துளசி திருக்கல்யாணம், மகர சங்கராந்தி ஆகிய திருவிழாக்கள் இத்தலத்தில்  மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கோகுலத்தில்
குடங்களை ஏடுத்தேறவிட்டு கூத்தாடவல்ல என் கோவே
மட ங்கொள் மாதரை மால்  செய் என்  மைந்தா -  என்று பெரியாழ்வார் பாடியபடி  ஸ்ரீகிருஷ்ணர் அன்று குரவை கூத்தாடியதை நினைவு படுத்தும் வகையில்  கோகுலாஷ்டமியன்று 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு பெண்கள் பாவன் பேடா என்ற குரவைக் கூத்து ஆடுவர்.




மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை, வல்லானை கொன்றானை மாற்றாறை மாற்றழிக்க வல்லானை, புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கர்களை கிள்ளிக் களைந்தானை திவ்யமாக சேவித்த பின் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஆம்னானாய மடங்களுள் ஒன்றான சாரதா மடத்திற்கும் சென்றோம். ஸ்வரூபானந்த தீர்த்தர் அப்போதைய சங்கராச்சார்யார். குஜராத்தில் ஏற்பட்ட நிடுக்கத்தின் போது மடம் சேதப்பட்டது, சுவர்களில் விரிசலகள் ஏற்பட்டன. அவற்றை சரி செய்ய  மராமத்து வேலைகள் ந்து கொண்டிருந்தன. மைய மண்டபத்தின் கூரையில் நான்கு பக்கமும் எழிலான ஆடல் வல்லான் மற்றும், அம்பாளின் பல்வேறு கோலங்களின்  சிற்பங்களும் அருமையாக அமைத்துள்ளனர். 




இத்தலத்தில்  த்வாஜாரோகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அரசாட்சி செய்த காலத்தில், 52 பேர் தலைமை பொறுப்பில் இருந்தார்களாம். அதனால், முக்கோண வடிவில் படபடக்கும் 52 கஜ நீளம் அதாவது சுமார் 47 மீட்டர் கொடியானது பறக்க விடப்படுகிறது. வானவில்லில் ஏழு நிங்கள் உள்ளது போல இக்கொடியிலும், சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை, பழுப்பு, ரோஜா வர்ணங்கள் இடம் பெறுகின்றன சூரிய- சந்திர உருவங்கள் பதித்த இக்கொடியை ஒரு நாளைக்கு ந்து முறை விமானத்தின் உச்சியில்  ஏற்றுகிறார்கள். ஒரு முறை ஏற்றிய கொடியை மறுமுறை உபயோகப்படுத்துவது இல்லை. தினமும், இருவர் படிக்கட்டுகள் வழியாகதளத்திலிருந்து, நூற்று இருபது அடி  உயரமுள்ள ஐந்தடுக்கு கோயிலின் உச்சியை அடைந்து கொடியை இறக்கி  ஏற்றுகிறார்கள். புது கொடி ஏற்றப்பட்ட பிறகு, இதன் பாதி உயரத்தில், சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும் அகல் விளக்கின் சமீபத்திலிருந்து ஒரு தேங்காயை கீழே போட்டு உடைக்கிறார்கள் பக்தர்கள், அதை பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். கொடி ஏற்றத்தை தரிசித்தால், சகல ரோகங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது.





  கொடியை  தலையில் சுமந்து செல்கின்றனர் 

இதை ஒரு பிரார்த்தனையாக செய்கின்றனர். ஊரையெல்லாம் அழைத்து  கொடியை தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்ட பாட்டத்துடன், ஆடம்பரமாக   ஒரு கூடையில் வைத்து தலையில் வைத்து சுமந்து கொண்டு  “ஜெய் ரண் சோட், ராஜா ரண் சோட், கோபால கிருஷ்ணா, இராதா கிருஷ்ணா”  என்று பக்தியுடன் ஜபித்துக்கொண்டே ஊர்வலமாக சென்று பலராமர் சன்னதியில்  சமர்ப்பிக்கின்றனர். அங்கு பூசாரிகள் கொடிக்கு சிறப்பு பூசைகள் செய்கின்றனர். பின்னர் கொடியேற்றத்திற்காக கொடி எடுத்துச் செல்லப்படுகின்றது. ஒரு கொடியேற்றத்திற்கு சுமார் ரூபாய் 25000/- ஆகின்றது. முன் பதிவு செய்து கொண்டு காத்திருக்கின்றனர். எவ்வளவு பக்தியுடனும், சிறப்பாகவும் துவாரகையில் இக்கொடியேற்ற வைபவம் டைபெறுகின்றது என்று  பார்த்து இரசிக்க வேண்டிய ஒன்று என்பதில் ஐயம் இல்லை.

ஆவலன்புடையார்தம் மனத்தன்றி
மேவலன் விரைசூழ் துவாராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடுகூடலே.


என்று ஆண்டாள் மங்கலாசாசனம் செய்த செங்கட்கருமுகிலை தேவகி சிங்கத்தை,  கருக்கார் கடல் வண்ணனை, குடத்தையெடுத்தேற விட்டு கூத்தாட வல்ல எம் கோவை, மாமணி வண்ணனை,  மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யான் துவாரகாதீஷனையும் கோமதியையும்   திவ்யமாக தரிசனம் செய்த பின், உடனே தீவு துவாரகைக்காக படகுத்துறைக்கு வண்டி மூலம் கிளம்பினோம். ருக்மணி துவாரகை மற்றும் நாகேஸ்வர் ஆலயம் இரவிலும் திறந்திருக்கும் ஆனால் பேட்துவாரகைக்கு மாலை 5 மணிக்கு மேல் செல்ல முடியாது என்பதால் முதலில் அங்கு செல்வோம் என்று வண்டி ஓட்டுர் கூறினார் எனவே பேட்துவாரகைக்கு பயணப்பட்டோம்.