விசாவாடா மூலதுவாரகை
இத்தொடரின் மற்ற பதிவுகள்
துவாரகையிலிருந்து கிளம்பி அரபிக்கடலோரம் தேசிய நெடுஞ்சாலையில் சோமநாத் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தோம். அகலமான பாதை, போக்குவரத்து அதிகம் இல்லை என்பதாலும் பயணம் வேகமாகவும் சுகமாகவும் இருந்தது. ஒரு பக்கம் நீல நிற கடல் கார் கடல் வண்ணனை செங்கட்கருமுகிலை தேவகி சிங்கத்தை நினைவு படுத்தியது, மறு பக்கம் பசுமையான வயல்கள் அது பார்க்கும் மரத்தில் எல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்று பாரதியார் பாடியபடி எம்பெருமானின் பச்சை மாமலை போல் மேனியை நினைவு படுத்தியது. இச்சமயத்தில் வெளி நாட்டிலிருந்து பறவைகள் அதிகம் வரும் காலம் என்பதால் வயல்களில் சோலைக் கொல்லை பொம்மைகளுக்கு பதிலாக இப்பகுதியில், பறவைகளை துரத்த ஜிகினா காகிதங்களை பறக்க விட்டிருந்தனர், வெயிலில் அவை வெள்ளி போலவும், பொன் போலவும் மின்னிக் கொண்டு தட தடவென்று சத்தத்துடன் பறந்து கொண்டிருந்தன. அவை இல்லாத பல வயல்களில் கூட்டம் கூட்டமாக பறவைகள் அமர்ந்திருந்தன. இவ்வாறாக இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே திட்டமிட்டபடி யாத்திரை சென்று கொண்டிருப்பதையும், அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக தரிசனம் கிட்டியதற்காக ஸ்ரீகிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் பயணித்துக் கொண்டிருந்தோம். சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்திருப்போம். ஓட்டுநர் திடீரென்று வண்டியை ஓர் இடத்தில் நிறுத்தி மூலதுவாரகை வந்து விட்டது தரிசனம் செய்து கொள்ளுங்கள் என்றார். அடியோங்கள் தயாரித்த அட்டவணையில் இந்த மூலதுவாரகை இடம்பெறவில்லை.
மூல துவாரகை ஆலயம்
விசாவாடா என்ற இடத்தில் உள்ள ஒரு புராதமான ஆலய வளாகத்தை இவர்கள் ஒரு மூலதுவாரகை என்றழைக்கின்றனர். காலயவனன் ஸ்ரீகிருஷ்ணரை துரத்தி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் அவனை அழைத்து முசுகுந்தரின் குகை அருகில் உள்ளது. அதற்குப்பின் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கினார் என்பது ஒரு ஐதீகம். இன்னும் இரண்டு தலங்கள் மூல துவாரகைகள் என்று கொண்டாட்டப்படுகின்றன. கொடினார் (Kodinar) என்ற இடத்தில் ஒரு கோவிலும், கஞ்சேடார் என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலும் மூலதுவாரகை என்று கருதுகின்றனர். இவ்விரண்டு இடங்களிலும் கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சியின் போது சில இடிபாடுகள் கிடைத்துள்ளன.
ரண் சோட் ராய் ஜீ
மதுராவிலிருந்து துவாரகை செல்லும் வழியில் முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் தம் பாதத்தை இவ்விடம் பதித்து தங்கினார் என்பது இரண்டாவது ஐதீகம். விஷ்ணு தன் பாதத்தை இங்கு பதித்ததால் ரண் சோட் ராய் ஜீ சன்னதியில் விஷ்ணு பாதம் உள்ளது. விஷ்ணு பாதம் என்பதே மருவி விசாவாடா ஆகிவிட்டதாம். தற்போதைய முக்கிய துவாரகை ஆலயத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் மூல துவாரகை ஆயிற்று. ஆலய முகப்பில் மூல துவாரகை ஆலயம் அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. நுழைவு வாயிலில் வாசக்காலில் அருமையான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள். வாயிலைக் கடந்து உள்ளே சென்று உள்ளே சென்றால் பஞ்சாதாயன முறையில் நீலகண்டேஸ்வரர், ரண்சோட் ராய் ஜீ, ஆகியோருக்கு முக்கிய சன்னதிகள் உள்ளன.
கிளிகள்
சங்கு டேரு மற்றும் ரண்டால் டேரு அம்பாள் என்று பல சன்னதிகள் இவ்வளாகத்தில் அமைந்திருக்கின்றன. அனைத்து சன்னதிகளும் நகாரா பாணி விமானம் மற்றும் பிரமிட் வடிவ மாடங்களுடன் எளிமையாக அமைந்துள்ளன. சன்னதிகளை வலம் வந்து வணங்கினோம். ஆலய வளாகத்தில் ஒரு பிரம்மாண்ட ஆலமரம் உள்ளது அம்மரத்தை எண்ணற்ற பச்சை கிளிகளும், புறாக்களும் இருப்பிடமாக கொண்டுள்ளன. ஆலோலம் பாடும் கிளிகளைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம்தான்.
இவ்வாலயத்தின் சிறப்பு படிக்கிணறு (Step Well) ஆகும். இக்கிணற்றை ஞான வாவி என்று இவர்கள் அழைக்கின்றனர். குஜராத்தில் இது போன்ற படிக்கிணறுகளை பல இடங்களில் அமைத்திருக்கின்றனர். இக்கிணற்றை ஞான வாவி என்று இவர்கள் அழைக்கின்றனர். ’ட’ வடிவத்தில் இக்கிணறு அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டில் இக்கிணறு அமைக்கப்பட்டதால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப் பட்டு தொல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கீழிறங்கிச் செல்ல படிகளை மூன்று நிலைகளாக அமைத்துள்ளனர். ஒவ்வோரு நிலையிலும் கோஷ்டத்தில் அருமையான சிற்பம் காணப்படுகின்றது. அருமையான கலைநயத்துடன் பிரம்மா, சூரியன், விஷ்ணு சிலைகளை தரிசித்தோம். அருகில் மற்றொரு ஆலய வளாகம் உள்ளது. அதில் சிவன், கார்த்திகேயர், தத்தாத்ரேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. ஒரு அருமையான புராதான ஆலயத்தில் எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடு மதிசய வினையுறு மலகையை வென்றும் கொன்றும் துண்டந் துண்டஞ் செயு மரி கேசவன், கருமுகில் வண்ணன், கருக்கார் கடல் வண்ணன், புயற்கரு நிறத்தானை, தரிசித்த மகிழ்ச்சியுடன் அடுத்த துவாரகையை நோக்கி புறப்பட்டோம்.
விசா வாடா கிணறு
அடுத்து அடியோங்கள் தரிசித்த தலம் சிறந்த நட்பிற்கு உதாரணமாக கூறப்படும் ஒருவரின் பெயரால் அழைக்கப்படும்
துவாரகை ஆகும். யார் அவர்? இத்துவாரகையின்
வரலாறு என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சற்றுப்
பொறுத்திருங்கள்.
குஜராத்தின் தனித்தன்மை வாய்ந்த
இஞ்சி, ஏலக்காய் மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து குழம்பு
போல சுண்டக் காய்ச்சிய தேநீர் அருந்திவிட்டு
செல்லலாம். இம்மசாலா தேநீர் குஜராத்தில் மிகவும் சுவையாக
இருக்கும், வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் அருந்திப் பாருங்கள் அன்பர்களே.
2 comments:
சிறப்பான பயணம். முந்தைய பகுதிகளையும் படிக்க வேண்டும். படித்து விடுகிறேன்.
வாருங்கள் வெங்கட் ஐயா, படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இனி மேல் இப்பயணம் மேற்கொள்ள விரும்புபவ்ர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
மிக்க நன்றி.
Post a Comment