Wednesday, July 12, 2017

நவ துவாரகை யாத்திரை -11


நாகேஸ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 
    
  1    2   3   4   5     6    7    8    9    10   12   13 

  14   15   16   17   18   19   20    21   22  23  24    25   26   27   28   கோபிகைகளின் குளத்தை தரிசித்த பின்னர் அடியோங்கள் தரிசனம் செய்தது ஒரு சிவஸ்தலம் அதுவும் ஜோதிர்லிங்கஸ்தலம். வாருங்கள் நாகேஸ்வரரை தரிசிக்கலாம். 

பிரம்மாண்ட சிவபெருமான் சிலை 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான சிவப்பரம்பொருள் இப்பாரத தேசமெங்கும் எண்ணற்ற ஆலயங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருமாலும் பிரம்மனும் அடி முடி தேடியும் காண முடியா ஜோதி ஸ்வரூபமாக சிவபெருமான் நின்ற ஜோதிர்லிங்ங்கமாக பன்னிரு ஆலயங்களில் அருள் பாலிக்கின்றார். இத்தலங்கள் ஜோதிர்லிங்கத்தலங்கள் என்று சிறப்பாக போற்றப்படுகின்றன.  சிவபுராணத்தில் சிவபெருமானே நான் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்திருந்தாலும் பன்னிரு தலங்களில் ஜோதிர்லிங்கமாக சிறப்பாக அருள் பாலிக்கின்றேன் என்று அருளியுள்ளார்.

அவற்றுள் இரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் இக்குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளன. முதலாவது சோமநாதம் இரண்டாவது இந்நாகேஸ்வரம். துவாரகையிலிருந்து பேட் துவாரகை செல்லும் வழியில் துவாரகையிலிருந்து சுமார் 12 கி.மீ  தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

இன்னும் இரண்டு தலங்களில் பெருமான் நாகேஸ்வர ஜோதிர் லிங்கமாக வணங்கப்படுகின்றார்.  இமயமலையில் அமைந்துள்ள பாகேஸ்வர்  ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஒரு சன்னதியில் நாகேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். “தாருகாவனே து நாகேசம்’ என்றபடி  தேவதாரு வனமானதால் இப்பெருமானே நாகேஸ்வரர் என்பது இவர்கள் ம்பிக்கை. அது போலவே மஹாராஷ்டிரத்தில்  பூமிக்கு கீழே உள்ள சன்னதியில் அருள் பாலிக்கும் ஐயனே நாகேஸ்வரர் என்பது அவர்கள் ம்பிக்கை.

நாகேஸ்வர ஜோதிர்லிங்க ஆலயம் 

சிவபெருமான் தன் பக்தனுக்காக நாகேஸ்வரராக எழுந்தருளிய ஐதீகத்தைப் பார்ப்போம் அன்பர்களே. அடர்ந்த வனமாக இருந்த பிரதேசத்தில்  தாருகன் தாருகை என்ற அரக்க தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பரமேஸ்வரரின் பக்தர்கள். பரமனை வணங்கி தவம் செய்து  பல அரிய வரங்களைப் பெற்றனர். வரங்களைப் பெற்ற மமதையால் எளியோரையும் பக்தர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தனர். ரிஷிகளையும், பக்தர்களையும் சிறையிலிட்டு துன்புறுத்தினர்.  ஒரு முறை சுப்ரி என்ற  சிவபக்தனையும் அவ்வாறு சிறையிலடைத்தனர். சுப்ரியோ சிறையிலேயே சிவலிங்கம் அமைத்து சிவபூஜையை தொடர்ந்தான். சிறைச்சாலையில் இருந்தவர்கள் அனைவருக்கும்
 காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
 ஓதுவார் தம்மை ன்னெறிக்குய்ப்பதும் 
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதும்
நாதன் நாமம் மச்சிவாயவே - என்னும்   ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவித்தார். சிரையெங்கும் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து எதிரொலித்தது.

இதை அறிந்த அரக்க தம்பதியினர் சுப்ரிக்கு சொல்லொணாத துன்பங்கள் தந்தனர். வேதனை தாங்காத அவர் சுந்தரேஸ்வரரை நினைத்து மனமாற பிரார்த்தித்தனர். சிறையில் அடைத்தாலும் சுப்ரி தனது சிவபூசையை கை விடவில்லை. ஒரு சமயம் சிறைக்கு வந்த தாருகன் சிவபூசை செய்து கொண்டிருந்த சுப்ரியை கொல்ல வாளை ஓங்கி விரைந்தான். “நாமார்க்கும் குடியல்லோம் மனை அஞ்சோம் என்று சுப்ரி அஞ்சாமல் பூசையை தொடர,  அக்கணம் அங்கே தோன்றி சுப்ரியை கொல்ல துணிந்த தாருகனை சுப்ரி வழிபட்ட லிங்கத்திலிருந்து சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றி சுட்டெரித்து சாம்பலாக்கினார்.

      
விமானத்தின் தோற்றங்கள்  

தாருகை தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினாள். தாருகையை மன்னித்த சிவபெருமான் அத்தலத்தில் ஜோதிர்லிங்கமாக கோவில் கொண்டார். அப்பகுதி தாருகவனம் என்றழைக்கப்படவும் செய்தார்.

இன்னொரு ஐதீகமும் உள்ளது அது முற்றும் துறந்தவர்களே ஆனாலும் இறைவனை வழிபட மறந்தால் அது  தவறு என்று இறைவன் காட்டிய அருமையான  வரலாறு அது. தாருகாவனத்து இருடிகள் தமது தவ வலிமை மற்றும் அவர்களது மனைவிகளின் பதிவிரதத்தன்மை குறித்தும் மிக கர்வம் கொண்டிருந்தனர். தவத்தை விட மேன்மையானது எதுவுமில்லை இறைவன் என்பதே இல்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.

அது மட்டுமன்றி ஈசனை மதியாமல், அவரை அவமரியாதையாகவும் பேசி செய்யும் செயலில் நாத்திகம் பாராட்டி வந்தனர். தம் பத்தினிகளின் கற்பு நெறி குறித்து கர்வமுற்று, மனைவியின் மாண்பே கொண்டவனுக்கு பலத்தையும், புகழையும் தந்திடும் என்றுரைத்து இறைவனையும் நிந்தித்திருந்தனர்.

முற்றும் துறந்த முனிவர்களின் கர்வத்தை அழித்து அவர்களை நல்வழிப்படுத்த  திருக்கயிலைநாதன் திருவுளம் கொண்டார். அற்புதமொன்று நிகழ்த்த அழகிய ஆண்மகன் வடிவம் கொண்டார். முனிவர்கள் வசித்த தாருவாவனத்திற்கு முற்றும் துறந்த திகம்பரராக சென்றார். உடன் கண்டோர் வியக்கும் மோகினியாக உருமாறி மஹாவிஷ்ணுவும் சென்றார்.
சபா மண்டபத்தின் கூரையில் உள்ள அற்புத வேலைப்பாடு 

பிச்சை தேவராக வந்த எம்பெருமான்  ஒவ்வொரு முனிவரின் பர்ணசாலை வாயில் தோறும் சென்று ’பிக்ஷாம் தேஹி என்று பிச்சை கேட்டார். பிச்சையிட வந்த  முனிபத்தினிகள் தம் நிலையிழந்தனர், பிச்சாடன மூர்த்தியின் மோகனத்தையும், பிரகாசத்தையும் கண்டு கருத்திழந்து அவர் மேல் மோகம் கொண்டனர். தம்மையறியாமல் அவர் பின்னே சென்றனர்.
தாருகாவனத்து முனிவர்கள் அனைவரும் மோகினியின் பின்னர் பித்தாகி ஓடினர். சிறிது காலம் சென்ற பின் தங்களது தவறை உணர்ந்து தங்களது பத்தினிகளை மயக்கிய சுந்தரரை அழிக்க அபிசார வேள்வி நடத்தினர் அதில் இருந்து வந்த மதம் கொண்ட யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக நின்றார். அடுத்து வந்த  நாங்களை ஆபரணமாக அணிந்து கொண்டார்,’யாக குண்டத்திலிருந்து வந்த ஆயுதங்களை மழுவாக்கி ஒரு கரத்தில் ஏந்தினார்,  அடுத்த வந்த கலைமானை அதன் கொம்பை உடைத்து மறு கரத்திலே  ஏந்திக்கொண்டார், அடுத்து வந்த வன் புலியின் தோலை உரித்து அதை தன் இடையில் ஆடையாக அணிந்து கொண்டார். இறுதியாக யாககுண்டத்தை அழித்து யாகத்தீயையே அனலாக ஒரு கரத்தில்  ஏந்தி மோகினியும் ரிஷி பத்தினிகளும் கண்டு களிக்க  நடராஜராக ஆனந்தத் தாண்டவம் ஆடினார். 

இதைக் கண்ட மோகத்தின் உச்சிக்கு சென்ற  முனி பத்தினியர் சுந்தரர் பின் ஓடினர், அவரோ அவர்களுக்கு போக்குக் காட்டிக்கொண்டே ஓடினார்.   தத்தம் மனைவிகளை அழைத்தவாறே  ரிஷிகள் அவர்கள்  பின்னே ஓடினர். 

சிவலீலையின் முன்னே யார் தான் எம்மாத்திரம்? கணவர்களின் கூக்குரல்கள் அவர்களின் காதில் விழவில்லை. முனிவர்கள் தத்தம் மனைவியரை தொடர, அவர்களை தம்மை மறந்து சுந்தரை தொடர அவரோ சிவ மந்திரம் ஜெபித்தபடி நடுக்காட்டில் அமைந்திருந்த குளத்தின் கரையில் இருந்த ஒரு நாகப்புற்றில் நுழைந்து மறைந்தார்.

ரிஷி பத்தினிகள் அப்புற்றையே சுற்றி வந்தனர்.  தாருகாவனத்து  முனிவர்கள் கெஞ்சி அழைத்தும் அவர்கள் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. அப்பொழுது சதாசிவன் நுழைந்த புற்றில் இருந்து கண்களை குருடாக்கும் பிரகாசம் தோன்றியது. ரிஷிகளும் அவர்தம் பத்தினிகளும் புற்றினுள்ளே ஜோதிர்லிங்கமாக பரமனைக் கண்டனர். அவருக்கு ஐந்து தலை நாகம் குடைப் பிடித்துக் கொண்டிருந்தது.

இக்காட்சியைக் கண்ட அனைவரும் பிச்சாடனராக வந்தது ஆதி சிவனே என்று உணர்ந்தனர். தங்கள் ஆணவத்தை விட்டொழித்து அகிலாண்டேஸ்வரரை புகழ்ந்து பணிந்தனர். புற்று இருந்த இடத்தில் பிற்பாடு நாகநாதர் ஆலயம் எழுந்தது.

சிவபெருமான், பிச்சாடனராக லீலை புரிந்து நடராஜராக ஆனந்த தாண்டவமாடி முனிவர்களின் கர்வத்தைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்தி, நாகப்பாம்பின் புற்றுக்குள் நாகக்குடையுடன் தரிசனம் தந்ததால் இத்தலம் நாகநாதம் என்று பெயர் பெற்றது. அவர் ஜோதியாக உமையொருபாகன்  தோன்றியதால் இத்தலம் ஜோதிர்லிங்கத்தலமாயிற்று.

ஆலயத்தை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே அமர்ந்த கோல பிரம்மாண்ட  சிவபெருமானின் தரிசனம் கிட்டியது.. பரவசத்துடன் ஆலயத்தை அடைந்தோம். முதலில் பிரம்மாண்ட 85 அடி உயர,  40 அடி அகலச் சிவன் சிலையை தரிசித்தோம். T-Series குல்ஷன் குமார் அவர்கள் புதிதாக இச்சிலையை அமைத்தாராம். புலித்தோல் ஆசனத்தில் ஆதி யோகியாக அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார் சிவபெருமான். மறக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  அருகினில் ஒரு புறாக்கூண்டு அமைத்துள்ளனர். ஆலயம் முழுவதும் ஆயிரக்கணக்கான புறாக்கள்.  புறாக்களுக்கு கம்பு வாங்கி அளிக்கின்றனர் பக்தர்கள்.

அலங்கார நுழைவாயில் 

அலங்கார வளைவுடன் கூடிய நுழைவு வாயில் அதில் விநாயகர் அருள் பாலிக்கின்றார். இப்பகுதியில் உள்ள காரா அமைப்பில் நெடிதுயர்ந் விமானம். துவாரகாசிலா எனப்படும் ஒரு வகை கல்லால் உருவான் விமானம் மூன்று முக ருத்ராட்சம் வடிவில் உச்சியில் சக்கரத்துடன் எழிலாக அமைந்துள்ளது.   சபா மண்டபத்தில் மேல் புறாக்கூண்டுகள் அமைப்பில் மாடம் புதுமையாக இருந்தது. ஒரே பிரகாரம். பிராகரத்தை வலம் வரும் போது பிரம்மாண்ட ஆலமரத்தை தரிசிக்கின்றோம், அதன் அடியில் சனீஸ்வரன் சன்னதி அமைந்துள்ளது.  மேலும் பிரம்மாண்ட அரசமரமும் அமைந்துள்ளது. பிரகார வலம் வந்து ஆலயத்தில் நுழைந்தோம். கர்ப்பகிரகத்தில் அம்மையுடன் சிவன் ஜோதிர்லிங்கமாக  எழுந்தருளியுள்ளார்.


  சிவன் சிலையின் முழு தோற்றம் 

கர்ப்பகிரகத்தில் உள்ளே சென்று சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்ய அனுமதிக்கின்றனர். ஆனால் ங்குள்ள கடையில் அர்ச்சனை தட்டு வாங்கியவர்களுக்கு மட்டுமே அப்பேறு கிட்டுகின்றது. அவர்கள்  கர்ப்பகிரகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர், மற்றவர்கள் வெளியிருந்தவாறே சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வர வேண்டியதுதான். அடியோங்கள் மானசரோவர் தீர்த்தம் கொண்டு வந்திருந்ததால், அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்று  ஸ்ரீருத்ரம் ஓதி அத்தீர்த்தத்தால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்து அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வந்தோம்.

ஐயன் உஜ்ஜயினியில் மஹாகாளேஸ்வரர் போல தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோமுகி கிழக்கு நோக்கி உள்ளது. நாமதேவருக்காக இவ்வாறு ஐயன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் என்று ஒரு ஐதீகம் உள்ளது.  அடியோங்கள் சென்ற சமயம் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.  எம்பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள் வெள்ளி நாகம் சார்த்தி சிவபெருமானை வழிபடுகின்றனர்.

புறாக்கூண்டு 

வெளிப் பிரகாரத்தில் பன்னிருஜோதிர்லிங்களையும் தரிசனம் செய்யலாம். சுதையில் மாதிரி ஆலயங்கள் மற்றும் சந்திரன் தவம்,  சோமேஸ்வரர் சந்திரனுக்கு அருளும் கோலம், மற்றும் சிவ பார்வதி திருக்கல்யாணக்கோல சுதை சிற்பங்களை மிகவும் அற்புதமாக அமைத்துள்ளனர். அனைத்து லிங்ங்களையும் அத்தலத்தில் உள்ளது போலவே தத்ரூபமாக அமைத்துள்ளனர். பெருமானுக்கு சார்த்தப்பட்டுள்ள தாமரை வில்வம் அனைத்துமே அருமையாக அமைத்துள்ளனர். சோமநாத தலத்தின் ஐதீகமாக சந்திரன் தட்சன் கொடுத்த சாபம் தீர பெருமானை பூசிக்கும் கோலத்தில் அமைத்துள்ளனர். ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனருடன், அம்மையப்பரிடம் இருந்து   ஞானப் பழத்தைப் பெற ந்த போட்டியில் முருகர் மயில் வாகனத்தில்  உலகை வலம் வர விநாயகர்  அம்மையப்பரை வலம் வரும் காட்சியை அமைத்துள்ளனர். பார்லி வைத்யநாத சுவாமியுடன்  மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் தனது பிறங்கு தாளால் உதைத்து முனி மைந்தனுக்கு அருளிய கோலத்தை அமைத்துள்ளனர். பீமாசங்கர தல ஐதீகத்திற்காக பீமன் என்னும் அரக்கனை வதம் செய்ய சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய கோலத்தை சித்தரித்துள்ளனர். திர்யம்பகேஸ்வரின் ஐதீகத்திற்காக திரிபுரம் எரித்த காட்சியை அற்புதமாக அமைத்துள்ளனர். இராமேஸ்வரத்திற்காக கடற்கரையில்  இராமர் சிவலிங்க பூசை செய்யும் காட்சியை கண்டு களிக்கலாம். உஜ்ஜயினி மஹாகாளேஸ்வருடன் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கின்றோம். இமயமலையில் உள்ள கேதாரத்தலத்திற்காக அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற கோலத்தை அருமையாக அமைத்துள்ளனர். இந்நாகேஸ்வரத்தலத்திற்காக மிக்கார் அமுதுண்ண தான் யாரும் விரும்பாத காய்சின ஆலமுண்டு, நீலகண்டனாக விளங்கும் தியாகராஜ கோலத்தை தரிசிக்கின்றோம். க்ருஷ்ணேஸ்வர் தலத்திற்காக குளத்தில் மூழ்கி இறந்த பிராமணச்சிறுவன் சிவபெருமானின் அருளினால் உயிருடன் வரும் காட்சியைக் காண்கின்றோம். முக்தித்தலமான காசியில் யோகிகள் கங்கைக் கரையில் தவம் செய்ய அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து சிவபெருமான் தரிசனம் தந்த காட்சியை கண்டு மகிழ்கின்றோம். ர்மதை திக்கரையில் ஐயன் ஓங்கார ரூபமாக ஓங்காரேஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகை கண் குளிரக் காணலாம். இவ்வாறு பன்னிரு ஜோதிர்லிங்ங்களையும்

சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்
 உஜ்ஜய்ன்யாம் மஹாகாலம் ஓங்காரம் அமலேச்வரம் |
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம்
 சேதுபந்தே து இராமேசம் நாகேசம் தாருகாவனே |
வாராணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே
 ஹிமாலயே து கேதாரம் குஷ்மேசம் ச சிவாலயே |
ஏதானி ஜ்யோதிர்லிங்கானி சாயம் ப்ராத: படே நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி |
ஏதேஷாம் தர்ஷனாதேவ பாதகம் நைவ திஷ்டதி
 கர்மக்ஷயோ பவேத் தஸ்ய யஸ்ய துஷ்டோ மகேச்வர: ||    
                      
என்று ஸ்லோகம் ஓதி  தரிசினம் செய்த மகிழ்ச்சியுடன் அடுத்து ருக்மிணிப் பிராட்டியாரை தரிசனம் செய்ய புறப்பட்டோம். அடுத்த பதிவில்  ருக்மிணி துவாரகையை தரிசிக்கலாம் அன்பர்களே.

                                                                                 நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

No comments: