Friday, July 21, 2017

நவ துவாரகை யாத்திரை -12

ருக்மிணி துவாரகை

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்

     1   2   3    4    5     6    7    8    9    10    11   13 

  14   15   16     17   18   19   20    21   22  23  24    25   26   27   28





துவாரகாதீசர் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது. அடியோங்கள் இவ்வாலயம் சென்ற சமயம் கருவறை திருக்கதவங்கள் மூடப்பட்டிருந்தன, ஏமாற்றத்துடன் எப்போது திறப்பீர்கள் என்று கேட்ட போது,  சிறிது நேரம் பொறுங்கள் என்றார்கள். அப்போது தான் கவனித்தோம் சுமார் பத்து பேர் முதலில் இருந்து காத்துக்கொண்டிருந்தனர். சபா மண்டபம் பக்தர்களால் நிறையும் வரை காத்திருந்த பின் அனவைருக்கும் ருக்மணி கண்ணனை மணந்த கதையைப் பற்றி கூறினார்கள். ருக்மணியின் அண்ணன் ருக்மி, ருக்மணியை சிசுபாலனுக்கு மணம் செய்ய விரும்பினான். ஆனால் ருக்மிணி,  ஸ்ரீகிருஷ்ணரை மணாளனாக வரித்து விட்டாள். எனவே புவன சுந்தரா! என்று தொடங்கி கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். கண்ணனின் ஆலோசனைப்படி காத்யாயினி ஆலயத்திற்கு பூசை செய்ய வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் தேரில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார். எதிர்த்து வந்த சிசுபாலனையும், ருக்மியையும் போரில் தோற்கடித்து துவாரகை வந்து சித்திரை மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசியன்று திருமணம் செய்து கொண்டார்.  தாயார் எழுதிய கடிதத்தை தினமும் படித்து வந்தால் எல்லா ன்மைகளும் கிட்டும், வீட்டில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும், அச்சிடப்பட்ட இக்கடிதம் இவ்வாலயத்தில் உள்ளது  ரூ 5/-க்கு விரும்பியவர்கள் வாங்கிச்சென்று தினமும் தங்கள் இல்லத்தில் பாராயணம் செய்யுங்கள் என்றனர்.



பின்னர் இவ்விடம் ருக்மிணி தாயார் வந்து தவம் செய்ய,  துர்வாசர் சாபம் கொடுத்த கதையைக் கூறினார்கள் இதோ அக்கதை. கிருஷ்ணர் ருக்மணியை திருமணம் செய்த பின்,  தவத்தில் சிறந்த துர்வாச முனிவரை அழைத்து விருந்து தர விரும்பினார். எனவே அவரை அணுகிப் பணிவுடன் இருவரும் அழைத்தனர். கிருஷ்ணரே அழைக்கும் போது அதை மறுக்க முடியுமா? ஆனாலும் ஒரு நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார் துர்வாசர். அந்நிபந்தனை அவர்  செல்லும் தேரை கிருஷ்ணரும்,  ருக்மிணியும் இழுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அது.

இருவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வழியில் கடும் வெயில். ருக்மிணிக்கு தாகம் எடுத்து நா வறள ஆரம்பித்தது. விருந்தோம்பலின் முக்கியமான விதிமுறை, விருந்தினர் திருப்தியாக உபசரிக்கப்பட்ட பிறகே விருந்தளிப்பவர் உண்ண வேண்டும். அதனால் துர்வாசரிடம் தன் தாகத்தைப் பற்றி ருக்மிணி சொல்லவில்லை. ஆனால், ருக்மிணியின் துயர் பொறுக்காத கிருஷ்ணர், துர்வாசர் அறியாதவாறு நிலத்தை  கால் நகத்தால் கீறி கங்கையை வரவழைத்து ருக்மிணியை அருந்தச் செய்தார்.



விதிவசம், அச்சமயம் பார்த்து இவர்கள் பக்கம் திரும்பினார் துர்வாசர். ருக்மிணி நீர் அருந்தியதைக் கண்டு அவருக்குக் கோபம் தலைக்கேறியது. அதிதியின், அதாவது தன்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீர் அருந்தலாம் என்பதுதான் துர்வாசரின் கோபத்துக்குக் காரணம். கிருஷ்ணர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவரது முயற்சி தோல்வி அடைந்தது.



அதிதிக்கு உணவளிக்காமல் நீர் அருந்திய நீ, கிருஷ்ணனைப் பிரிந்திருக்கக் கடவாய்”. மேலும் இந்த பூமி தண்ணீர் இல்லாமல் பயிர் பச்சை விளையாமல் போகட்டும் என்று துர்வாசர் சாபமிட்டார்  பிறகு, தண்டனை பன்னிரண்டு வருட காலம்  என்று குறைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ருக்மிணி துவாரகைக்கு வெளியே தனியே வசித்து வந்தார். கிருஷ்ணர் தான் உறையும் ஒரு மூர்த்தியை அளிக்க அதை  தினமும் பூசை செய்து வந்தாள்.  அந்தக் கெடு முடிந்த பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார்.ருக்மிணி தவம் செய்த இவ்விடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சபா மண்டபத்தில் இவ்வரலாறு  எழிலான ஓவியங்களாக மிளிர்கின்றன.




பின்னர் துவாரகை வந்த  துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார். இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். மேலும் துர்வாசர் சாபத்தினால் தண்ணீர் உப்பு நீராகி விட்டதால் பக்தர்களுக்காகவும், பூசைக்காகவும் ல்ல தண்ணீர் வெளியிலிருந்து வாங்குவதால் அதற்காக விரும்பியபடி ன்கொடை அளியுங்கள் என்றார்கள். பின் எல்லாரையும் அர்ச்சனைக்காக பெயர் கேட்டார்கள் தம்பதிகளாக இருந்தால் இராதா கிருஷ்ணன், லக்ஷ்மி நாராயணன் என்பது போல மனைவி பெயரை முதலிலும் கணவன் பெயரை பின்னரும் சொல்லுங்கள் என்றது புதுமையாக இருந்தது.
பின்னர் சன்னதியின் கதவை திறந்து ஆரத்தி காண்பித்தனர். வைர கிரீடம், பிரசன்ன வதனம், அழகிய ஆபரணங்களுடன் பச்சைப் பட்டில், நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதித்தாள் பிராட்டி. செல்வத்திருமகளை வணங்கி வெளியே வந்து பிரகாரத்தை வலம் வந்தோம்.   



கட்டிடக் கலையின் சிறப்பை இக்கோயிலில் கண்டோம். நாகாரா  கட்டிட அமைப்பில் ஒற்றை நெடிதுயர்ந்த விமானத்துடன் கூடிய கருவறை, அரைக் கோள குவி மாடத்துடன் கூடிய சபா மண்டபம், சிறிய குவி மாடத்துடன் கூடிய நிருத்திய மண்டபத்துடன் கோவில் அமைந்துள்ளது.    கோவிலின் வெளிப்புறச் சுவர்களில்  அற்புதமாகச் சிற்பங்கள்  செதுக்கப்பட்டுள்ளன. சபா மண்டபத்தின் சுவர்களின் அருமையான வேலைப்பாடுகளைக் கொண்ட ஜன்னல்கள்.   இந்தக் கோயில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சிற்பங்கள் மனித உருவங்களும் தெய்வ உருவங்களும் கொண்டதாக உள்ளன. அடித்தளத்தில் கஜதரங்கள், அதாவது யானைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக பார்க்க வேண்டிய ஆலயம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவ்வாறாக அன்றைய  தினம் அதுவரை நீதமுந் திருடி உரலோடயொன்று அரி கேசவன் மாயவனின்  நான்கு துவாரகைகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. பின்னர் சோம்நாத்திற்காக கிளம்பினோம் வழியில் சில ஆலயங்களை தரிசித்தோம் அவையெவை என்பதை அறிந்து கொள்ள  ஆவலாக உள்ளதா?  தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 
                                                                                 நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .



No comments: