Thursday, July 6, 2017

நவ துவாரகை யாத்திரை -10

பேட் துவாரகை அனுமன் 


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்  

   1   2   3   4   5     6    7    8    9   11    12   13 


  14   15   16   17    18   19   20    21   22  23  24    25   26   27   28



திவ்யமாக பெருமாளையும் தாயாரையும் சேவித்த பிறகு வெளியே வந்து  இத்தீவுதுவாரகையில் தரிசிக்கத்தக்க வேறு ஆலயங்கள் உள்ளனவா? என்று கடையில் விசாரித்தோம். அனுமன் தனது மகனுடன் அருள் பாலிக்கும் ஒரு  தண்டி ஹனுமன் ஆலயம்  உள்ளது வேண்டுமென்றால் ஆட்டோவில் சென்று வாருங்கள் என்று கூறினார்கள். எனவே ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம். ஒற்றையடி தார்ப்பாதை குண்டும் குழியுமாக இருந்தது.  துவாரகாதீசர் கோவிலைத் தாண்டி அதிக குடியிருப்புகளும் இருக்கவில்லை காடாகத்தான் இருந்தது. வழியில் ரி, குயில்கள் மற்றும் பல வித பறவைகள் கண்ணில் பட்டன. 

மகரத்வஜனும்  அனுமனும் 

சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்து  தண்டி ஹனுமன் ஆலயத்தை அடைந்தோம்.  அது ஒரு ஆசிரமம், ஒரு சுவாமிஜி அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார். ஆசிரமம் முழுமையும் விமானம் உட்பட  “ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்“ என்று எழுதியிருக்கின்றனர். பலர் அங்கு  அமர்ந்து இம்மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருக்கின்றனர்.  ஆசிரமத்தில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன.  ஒரு சன்னதியில் அனுமனுடன் அவருடைய மகன் மகரத்வஜன் தரிசனம் தருகின்றார். அனுமன் பிரம்மசாரியாயிற்றே அவருக்கு மகன் எப்படி வந்தான் என்று யோசிக்கிறீர்களா?  அதற்காகவும் ஒரு கதை உள்ளது.

இராம இராவண யுத்தத்தின் போது  ந்திரஜித், கும்பகர்ணன் அனைவரையும் இழந்த பின் தனி மரமாக நின்ற இராவணன், தனது மாற்றாந்தாய்  சகோதரர்களான பாதாளத்தை ஆண்டு கொண்டிருந்  அஹிராவணன் மற்றும் மஹிராவணனை எப்படியாவது இராம லக்ஷ்மணர்களை கடத்திக் கொண்டு சென்று கொல்லுமாறு வேண்டினான். அவர்கள் இரவில்  இலங்கை கடற்கரையில் வந்து பார்த்த போது அனுமன் தன் வாலினால் அமைத்த கோட்டையின் உள்ளே இராம லக்ஷ்மணர்கள் உறங்குவதையும், அவர்களுக்கு காவலாக விபீஷணரும், ஜாம்பவானும் இருப்பதையும் கண்டனர். அனுமனை ஏமாற்ற மாயத்தில் வல்ல அவர்கள் மேனி முழுதும் மணல் நிறைந்த கோலத்தில்  விபீஷணனும், ஜாம்பவானும்  போல உருமாறி அவர் முன் சென்று நின்றனர். அவர்களைக் கண்டு வியந்து எப்படி வெளியே வந்தீர்கள்? என்று வினவ புதை மணலில் மாட்டிக்கொண்டு வெளியே வந்து விட்டோம் என்று கள்ளத்தனமாகக்  கூற அனுமனும் ஏமாந்து போய் தனது வாலின் நுனியை சிறிது உயர்த்த அவர்கள் இருவரும் உள்ளே  நுழைந்து மாயத்தால் விபிஷணனையும் ஜாம்பவானையும் உறங்கச் செய்து,  இராம லக்ஷ்மணர்களை பாதாளத்திற்கு கொண்டு சென்று தங்கள் குல தெய்வத்திற்கு பலியிட அடைத்து வைத்தனர்.
 துவாரகைத்   தீவு

சிறிது நேரம் கழித்து கண்  விழித்த விபீஷணனும், ஜாம்பவானும்,  அனுமனிடம் இராம லக்ஷ்மணர்களை காணவில்லை என்றனர். அனுமன் ந்ததைக் கூறினான்.   விபீஷணனும் இது அஹிராவணன், மஹிராவணன் செயல் என்பதை உணர்ந்து அதை அனுமனிடம் கூறினார். அனுமனும் இராம லக்ஷ்மணர்களை மீட்க பாதாளத்திற்கு சென்றார்.

அவர் பாதாளத்தில் நுழைய முயன்ற போது ஒரு வானரம் அவரை தடுத்தது. இருவருக்கும் போர் மூண்டது. அவ்வானரத்தின் பலத்தைப் பார்த்து அனுமனே வியந்தார். பின் அவர் அவ்வானரத்திடம் நீ யார்? என்று வினவ அவரும் அனுமனின் புத்திரன் என்று பதிலிறுத்தான். அனுமனும் அவர் பிரம்மச்சாரியாயிற்றே அவருடைய புதல்வன் எப்படி ஆவாய் என்று வினவ, அவனும், சீதையைத் தேடி இலங்கைந்த போது இராவணன் அவர் வாலில் தீயிட அதைக் கொண்டு இலங்கை மாகரத்திற்கு தீயிட்ட பிறகு தன் வாலை கடலில் வந்து அணைத்தபோது அவரின் ஒரு வியர்வைத்துளி கடலில் விழுந்தது. அதை ஒரு மகரம்(முதலை) விழுங்கியது அதன் மூலம் தோன்றியவன் நான் என்றான். என்னை … அனுமனும் தான் யார் என்று உணர்த்தினார். மகரத்வஜனும் அனுமனை பாதாளத்தின் உள்ளே செல்ல அனுமதித்தான். 

அரபிக் கடல்
பின் மாயத்தினால் அனுமன் அஹிராவணனையும், மஹிராவணனையும் மாய்த்து, மகரத்வஜனை பாதாளத்திற்கு அரசனாக்கி விட்டு, இராம லக்ஷ்மணர்களை மீட்டு பொழுது விடிவதற்குள் போர்க்களத்திற்கு திரும்பினார் என்று கூறினார்கள்.

சன்னதியில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தம் மற்றும் இதயத்தில் மற்றொரு கரத்தை வைத்த கோலத்தில், காலடியில் ஒரு அசுரனை அழிக்கும் கோலத்தில் மகரத்வஜனும், இடுப்பு மேல் மட்டும் உள்ளவாறு அனுமனும் அருள் பாலிக்கின்றனர். இருவர் கரத்திலும் எந்த வித ஆயுதமும் இல்லாமல் அனுக்கிரக மூர்த்திகளாக அருள் பாலிக்கின்றனர். இருவருக்கும் இடையில் கதை உள்ளது.  ஆரத்தி காட்டி பிரசாதம் அளித்தனர். தசராவின் போது துவாரகாதீசர் பல்லக்கில் இராமர் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாராம்.


இவ்வாறு  தீவு துவாரகை தரிசனத்தை முடித்துக் கொண்டு படகு மூலம் ஓகா திரும்பினோம். ஓகாவில் வண்டி ஓட்டினர் காத்துக்கொண்டிருந்தார். அடுத்து ஜோதிர்லிங்கமான நாகேஸ்வரரை தரிசித்து விடலாம் என்று அழைத்துச்சென்றார். செல்லும் வழியில் நாகேஸ்வருக்கு 5 கி.மீ தூரத்திற்கு முன் உள்ள  ஒரு குளக்கரையில் வண்டியை  நிறுத்தினார்.




கோபியர்களின் குளம் 


கோபி தலாவ்: வண்டி நின்ற குளத்தின் பெயர் கோபி தலாவ் அதாவது கோபியர்களின் குளம். கரியபிரானாம் கண்ணனுடம் கன்னியர்களான கோபியர்கள் பிருந்தாவனத்தில் இராசலீலை செய்து களித்திருந்தனர். பின்னர் கோகுலம் விடுத்து வடமதுரைக்கு அரசனாகி பின்னர் துவாரகைக்கு ஓடி வந்து விட்டதால்,  கண்ணனின் பிரிவைத் தாங்க முடியாமல் விரஜ பூமியிலிருந்து துவாரகைக்கு வந்த கோபியர்கள் சரத் பூர்ணிமையன்றைக்கு இராச லீலைகளுக்குப்பின் இவ்விடத்தில் தங்களை அர்பணித்துக் கொண்டு கண்ணனுடன் ஒன்றாகக் கலந்தனர். அதனால் இக்குளம் கோபியர்களின் குளம் என்றழைக்கப்படுகின்றது. அவர்கள் அனைவரும் வழுவழுப்பான  மஞ்சள் மண்ணாக மாறி விட்டனர். எனவே  இக்குளத்தின் மண்  இன்றும் மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பாக உள்ளதாம். இதையே வடநாட்டினர் நெற்றிக்கு  கோபி சந்தனமாக இட்டுக்கொள்கின்றனர். அருகில் கோபி சந்தனம் விற்கும் கடைகள் உள்ளன. குளத்தைச்சுற்றி பல சன்னதிகள் உள்ளன.  குளம் முழுவதும் நீர்க்காக்கைகள் நிறைந்திருந்தன. நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து இக்குளம்  ஐந்து கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

                                                                               நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

No comments: