Monday, November 17, 2008

கார்த்திகை சோம வார விரதம் -1

வேங்கீஸ்வரம் சந்திரசேகரர்



சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த வருடம் ஐந்து சோமவாரங்கள் வருகின்றன. ஐந்து வாரங்களிலும் இவ்விரதம் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆண்டவன் உத்தரவு.

முதல் வாரமான இவ்வாரம் கார்த்திகை மாதத்தின் சிறப்பு மற்றும் கார்த்திகை சோமவார விரதம் தோன்றிய வரலற்றைக் காணலாம்.

இரண்டாம் வாரம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி காணலாம்.

மூன்றாம் வாரம் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பற்றி காணலாம் .

நான்காம் வாரம் பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதை காணலாம்.

நிறை வாரம் 1008 சங்காபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருக்கடையூர் தலவரலாறும் சங்காபிஷேக உற்சவம் பற்றியும் காணலாம். வந்து தரிசியுங்கள் அன்பர்களே.

திருவான்மியூர் சந்திரசேகரர்
சூரியபிரபை ஸேவை



கார்த்திகை மாதத்தின் சிறப்பு:

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா இராசியில் நீச்சம், கார்த்திகை மாதத்தில் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் எனவே தான் அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவ பெருமானின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், தத் புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம் இவற்றுடன் கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை 'அக்னி'. கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கிருத்திகை முதலாவதாக கூறப்படுள்ளது. அந்த மாதத்தின் கார்த்திகை மற்றும் பௌர்ணமி இனைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம். கிருத யுகத்தில், மலையரசன் தன் பொற்பாவை உமையம்மையுடன் பரமேஸ்வரன் "திருக்கயிலையில்" அக்னி ரூபமாகத்தான் மகரிஷ’களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்ததாகவும், உமா மஹேஸ்வரர்களின் உண்மையான திவ்ய தரிசனத்தைக் காண்பதற்காக , அம்மாமுனிவர்கள் கடும் தவமியற்றியதாகவும், அப்போது அவர்கள் தவத்திற்காகப் பிரம்மதேவரால் தனது மனதிலிருந்து படைக்கப்பட்டதே மானசரோவரம் என்னும் தெய்வீகத்தடாகம் என்றும் புராண நூல்கள் கூறுகின்றன.

திருவான்மியூர் சந்திரசேகரர்


காஞ்சி வரதராஜப் பெருமாளும் பிரம்ம தேவர் இயற்றிய அஸ்வமேத வேள்வியின் அக்னியிலிருந்து தோன்றியவர்தான். பகவான் ஸ்ரீமந்நாராயணின் பத்து அவதாரங்களில் அளவற்ற வீரியம் கொண்ட ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த மாதமும் கார்த்திகையே. எனவேதான் சோளிங்கரில் எழுந்தருளியுள்ள யோக நரசிம்மரை கார்த்திகை ஞாயிறன்று வழிபட அந்த ஸ்ரீ நரசிம்மன் கேட்டவற்றை எல்லாம் பக்தர்களுக்குத் தந்தருள் புரிவான் என்பது காலம் காலமாக கண்டுவரும் அனுபவமாகும். இவை தவிர நாம் புண்ணிய காலங்களிலும், திதி தினங்களிலும் செய்யும் பித்ரு பூஜையின் பலனைப் பித்ரு தேவதைகளின் மூலமாக, நமது முன்னோர்களிடம் சேர்ப்பிப்பவரும் அக்னிதேவரே ஆவார், ஆதலால் தான் கார்த்திகை மாதத்தில், தினமும் அக்னியை மானžகமாக பூஜித்து, வீடுகளில் விடியற்காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வரும்படி மகரிஷ’கள் அருளியிருக்கின்றனர், முக்கியமாக பரணி தீப தினம் அன்றும், கார்த்திகை தீபம் அன்றும் நம் இல்லங்களில் மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்து, இறைவனை வழிபட வேண்டும், இது மட்டுமன்றி, அவரவர் ஊர்களிலுள்ள திருக்கோவில்களிலும் தங்கள் கையினால் தீபம் எற்றி வைப்பது அவசியமாகும்.

வட திருமுல்லைவாயில் சந்திரசேகரர்

இவ்வாறு கார்த்திகை மாதம் அக்னியின் மாதமாகும். நெருப்புக்கோள் (அக்னி கிரகம்) செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில், மற்றொரு நெருப்புக் கோளான சூரியன் சஞ்சரிக்கும் காலமே, விருச்சிக மாதம் எனப் புராதான நு‘ல்களில் விவரிக்கப்பட்டுள்ள கார்த்திகை மாதமாகும். விருச்சிக மாதத்தின் கார்த்திகை மற்றும் பௌர்ணமி இனைந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம், அந்த கார்த்திகை மாதத்தில் திங்கட் கிழமைகளில் சோம வார விரதமும் இருக்கின்றோம். இவ்வாறு இந்த கார்த்திகை(விருச்சிக) மாதத்தில் இரண்டு விரதங்கள் வருகின்றன அவையாவன கார்த்திகை சோம வார விரதம் மற்றும் கார்த்திகை பௌர்ணமி உமா மகேஸ்வர விரதம் ஆகும்.

வேங்கீஸ்வரம் சந்திரசேகரர்

சோமவார விரதம் தோன்றிய வரலாறு:

சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித்தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான , கார்த்திகை, ரோகிணி, மிருகžருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.

சந்திர சேகரர் சூரிய பிரபை சேவை




இவ்வாறு சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான். இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான் சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சசிதரர் , சோம சுந்தரர், சசி மௌலீஸ்வரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிசேகரர் என்றும் புகழப்பட்டார். இந்த கார்த்திகை விரதம் சோமன் என்னும் சந்திரனின் பெயரால் (உமையம்மையுடன் கூடிய சிவபெருமானின் ஒரு நாமமும் சோமன்) சோமவார விரதம் என்று வழங்கப்படலாயிற்று. சந்திரன் வேண்டுதலுக்கு இணங்கி கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட அவ்வாறே அருள் பாலித்தருளினார் ஐயனும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் ஆகும். இங்கு தான் சோமனாகிய சந்திரன் சோமனாகிய எம்பெருமானுக்காக சோம வார விரதம் இருந்து அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.

மேலே செங்குந்தகோட்டம் சந்திர சேகரர் பௌர்ணமி புறப்பாட்டின் போது ரிஷப வாகன சேவை. சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்று சந்திரசேகரர் ஆகும், ஐயன் அம்மையுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். ஜடா முடியில் சாப விமோசனம் பெற்ற சந்திரன் இளம் பிறையாக விளங்குகின்றான், மேல் கரங்களில் மானும் மழுவும் விளங்குகின்றன. கீழ்க்கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். அம்மைமையும் இரு கரங்களுடன் நின்ற கோலம். அம்மையுடன் அருள் பாலிப்பதால் இது போக மூர்த்தம்.

பிறை சூடிய பெம்மானான இவர்தான் பலி பேரர், அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு நாட்களில் பவனி வருபவர் இவரே. பல் வேறு தலங்களில் பெருவிழாக்களின் போது காலை சந்திர சேகரரே பவனி வருகின்றார், தியாகத்தலங்களில் சோமாஸ்கந்தர் தியாகராஜராக எழுந்தருளியிருப்பதால் பஞ்சமூர்த்தியாக பவனி வருபவர் சந்திரசேகரரே. பல்வேறு ஆலயங்களில் எம்பெருமான் பரம கருணாமூர்த்தி பவனி வரும் அழகை கண்டு களித்தீர்கள் அன்பர்களே. நிறைவாக பரத்வாஜேஸ்வர சந்திரசேகரர் சூரியவட்ட சேவையை கண்டு களியுங்கள்.


கார்த்திகை சோமவார விரத மகிமை தொடரும்..........

Wednesday, November 12, 2008

கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்

”அப்பா! சாமி வெள்ளையா மாறீட்டாரு ” ன்னு ஒரு நாள் காரைக்காலில், சௌந்தராம்பிகை சமேத கயிலாச நாதர் ஆலயத்தில் என் மகள் ஓடி வந்து என்று படபடப்பாக கூறினாள், என்னடா இது சுவாமி கூட Fair and lovely போட்டு வெள்ளையாகிவிட்டாரோ? ன்னு சந்தேகத்தோட உள்ள போயி பார்த்தால் சுவாமி அன்னாபிஷேகத்தில் அற்புதமாக அருட்காட்சி தந்துகிட்டு இருந்தார். பின் சுவாமி நிறம் மாறவில்லை அன்னாபிஷேகம் கண்டருளுகிறாருன்னு மகளுக்கு விளக்கினேன், வாங்களேன் நீங்களும் அன்னாபிஷேகம்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்க.




அன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி



சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.

முதல் முதலில் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது "மயிலையே கயிலை" ஆன திருமயிலையில், அன்று ஏதோ தோன்றியது கபாலீச்வரரையும், கற்பகவல்லி அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும் என்று, அலுவகத்திலிருந்து நேராக திருக்கோவில் சென்றேன். எப்போதும் 4.30 மணிக்கே திறந்து விடும் கபாலீஸ்வரர் சன்னதியில் அன்று மட்டும் திரை போடப்பட்டிருந்தது. 6:30 மணியளவில்தான் தரிசனம் கிடைத்தது ஆனால் அற்புதமான தரிசனம் எப்போதும் கருநிறமாக இருக்கும் எம்பெருமானின் திருமேனி அன்று மட்டும் வெண்ணிறமாக இருந்தது. விபூதி அலங்கரம் போல் தோன்றவில்லை அர்ச்சகரிடம் விசாரித்த போது இன்று எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்துள்ளோம் என்று கூறினார்.

இரண்டாவது முறை அன்னாபிஷேகம் தரிசித்தது.  காரைக்காலில். அக்கோவிலில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்த விதமே மிக அருமையாக இருந்தது, எம்பெருமானின் மேனி முழுவதும் சாதம், ஐந்து முகங்கள் அமைக்கப்பட்டிருந்தன, கண்களுக்கு கருப்பு திராட்சை, காதிலே குண்டலமாக முறுக்கு, இரண்டு பக்கமும் புடலங்காய், ஆவுடையாரின் மீது அன்னாசிபழங்கள்், மற்ற இனிப்பு வகைகள், அந்த தரிசனத்திலே மயங்கி அன்றே மற்ற அண்ணாமலையார், பார்வதீஸ்வரர், சோமேஸ்வரர் ஆலயங்களிலும் அன்னாபிஷேக அலங்காரங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அழகில் மயங்கி அன்னாபிஷேகம் பற்றி படித்து, விசாரித்து அறிந்து கொண்டவைகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

எந்தப் பொருளை நாம் தானம் செய்தாலும் போதும் என்று யாரும் சொல்லமாட்டார்கள் ஆனால் அன்னதானத்தில் மட்டுமே போதும் என்று சொல்வார்கள் எனவே தானத்தில் எல்லாம் சிறந்தது அன்னதானம் ஆகும். அது போலவே எண்ணற்ற திரவியங்களினால் நாம் அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தாலும் அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. 

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப்
பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் சாற்றுதல் நடைபெறுகின்றது சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளா ல் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.

ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.

சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திரிபுர சுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களை குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர், ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களை குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர், ஒரு வருடம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர்.

அசோக் நகர் சித்தி விநாயகர் சொர்ணபுரீஸ்வரர் ஜடாமுடியிலிருந்து கங்கை பாய, நாகம் கழுத்தில் ஆட திருக்கயிலை நாதராக முக்கண்களுடன் எழிற்கோலம் காட்டுகின்றார்.

வடபழனி வேங்கிரீஸ்வரர் ஆலயத்தில் கையிலாய மலையையே அன்னாபிஷேகதன்று தரிசனமாக காட்டினர்.

மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பால முருகனுக்கும் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. முழுவதும் அன்னம் சார்த்தப்பட்டு அழகன் முருகன் அன்று சிவ பெருமானாக அருட்காட்சி தருகின்றார். உத்திராட்ச மலைக்கு கறுப்பு திராட்சைப்பழங்களும், காதுக்கு குண்டலமாக அப்பிள் பழமும் அருமை.

காஞ்சியில் காமாக்ஷ’யம்மன் ஆலயத்தில்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது,


வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து

கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக்
கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து நன்மையடைவோமாக.

* * * * *

Monday, November 3, 2008

கந்தன் கருணை -7

சிக்கல் சிங்கார வேலவர்
சிக்கலிலே ஐந்தாம் நாள் திருத்தேரோட்டம் கண்டருளி சிங்கார வேலவர் அன்னை பார்வதி, வேற் நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. சக்தி வேலின் வீரியத்தினால் சிங்கார வேலருக்கு அப்படியே வியர்வை பொங்குகின்றது. அர்ச்சகர்கள் அப்படியே பட்டுத்துண்டால் ஒற்றி எடுக்கின்றனர். சிக்கலில் வேல் வாங்கி அடுத்த நாள் திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் செய்ததாக ஐதீகம்.

சென்னை திருமயிலை சிங்கார வேலவர்


தெய்வாணை திருக்கல்யாணத்திற்கு பிறகு திருமயிலையில் முருகர் ஐராவதத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருப்போரூரிலும் இவ்வாறே சூரசம்ஹாரம் முடிந்ததும் தங்க மயில் வாகனத்திலும், திருக்கல்யாணத்திற்க்கு பின் யாணை வாகனத்திலும் அருட்காட்சி தருகின்றார் முருகர்.

சென்னை சைதை செங்குந்தக்கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி
சென்னை புலியூர் கோட்டம்
பாரத்வாஜேஸ்வரம்











சென்னை சைதை காரணீஸ்வரம்
சிவசுப்பிரமணிய சுவாமி



கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி
( மேல் உள்ள முத்துக்குமார சுவாமி படத்தின் மீது கிளிக்கி முழுப்படத்தையும் கண்டால் நிச்சயமாக அதை உங்கள் Desktopல் screensavsr ஆக வைத்துக்கொள்வீர்கள்)


சென்னை திருமயிலை
வெள்ளீ்ச்சுரம்



திருவான்மியூர் முருகர்


வடபழனி வேங்கீஸ்வரம் முருகர்



வேலும் மயிலும் துணை.

( இப்பதிவிடுவதில் ஒரு நாள் கால தாமதமாகிவிட்டது )

Saturday, November 1, 2008

கந்தன் கருணை -6

சூர சம்ஹாரம்

ஏறுமயிலேறி விளை யாடு் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

கூறுமடியார்கள் விணை தீர்க்கு்முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே


ஆறுமுக மான பொருள் நீயருள வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.
-----------------

சூரர் குலம் கருவறுக்க புறப்படுகின்றார்
சிவ சுப்பிரமணிய சுவாமி ( செங்குந்தக் கோட்டம்)

(ஐயனுக்கு செய்யப்பட்டுள்ள அலங்காரம் எவ்வளவு அருமை பாருங்கள்
அப்படியே அம்பு எய்வது போல் உள்ளது அல்லவா?)



அஞ்ஞானத்தை அழிக்கப்புறப்பட்ட
சிவ சுப்பிரமணியர் - காரணீஸ்வரம்



கந்த கோட்டம் கந்தசுவாமி போர்க்கோலம்

திருமுருகன் உடையும் சிவப்பு, செங்கடம்பு மாலையும் சிவப்பு, அவரது வேலும் சிவப்பு பகைவரை கொல்வதால் இரத்தம் தோய்ந்து, அவர் மேனியும் சிவப்பு செந்தமிழில் தோன்றியதால், அவரது திருமுகமோ விரியும் செங்கதிர் இளஞாயிறு போன்ற சிவப்பு என்றவாறு கந்த கோட்ட கந்தன் தங்கக்குதிரை வாகனத்தில் சிவப்பு உடை அணிந்து சூரசம்ஹாரம் செய்ய வரும் அற்புத கோலம்.


வில்லுடன் போருக்கு செல்கின்றார் ....


வெற்றி வேலாயுதப்பெருமாளாய்
திரும்பி வருகின்றார்.
சூரனை வதம் செய்யவில்லை அவனை சேவலாகவும் மயிலாகவும் மாற்றி ஆட்கொண்டார் கருணைக்கடலாம் கந்தன்.


தேவ சேனாபதி



இசைத்த ஏறுங் கரியுரி போர்வையும்
எழிழ்நீறும்
இலங்குநூலும் புலியதன் ஆடையும்
மழுமானும்


அசைத்த தோடுஞ் சிரமணி மாலையும்

முடிமீதே
அணிந்தஈசன் பரிவுடன் மேவிய
குருநாதா

உசத்தசூரன் கிளையுடன் வேரற
முனிவோனே

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் தனியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில்


வரவேணும்
அமைத்த வேலும் புயமிசை மேவிய
பெருமாளே.



சூரனை வென்ற ஜெயந்தி நாதர்
துய்யதோர் மறைகளாலும் துதித்திடற்கு
அரிய செவ்வேள்
செய்ய பேரடிகள் வாழ்க!
சேவலும் மயிலும் வாழ்க!

வெய்ய சூர் மார்பு கீண்ட
வேல் படை வாழ்க! அன்னான்
பொய்யில் சீர் அடியார் வாழ்க!
வாழ்க இப்புவனம் எல்லாம்.



வேலும் மயிலும் துணை.

(நாளை தேவசேனை திருக்கல்யாணம்)


கந்தன் கருணை தொடரும்.............

Friday, October 31, 2008

கந்தன் கருணை -5

வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி


சைதை காரணீஸ்வரம்
காலை தொட்டி உற்சவம்



முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா?

கந்தா என்றழைக்கவா? கதிவேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்.

கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமியின் அருட்கோலம்


காமதேனு வாகனத்தில் தேவ குஞ்சரி

கந்த கோட்ட இரண்டாம் நாள்
ஈசனுடன் ஞான மொழி பேசும் கோலம்



ஐந்தாம் நாள் நவ வீரர்களுடன் மந்திராலோசனை

சூரபதமன் கொடுமையை அழித்து தேவர்களையும் அனைவரும் காக்க திருவுளம் கொண்ட சிவபெருமான் தன் ஐந்து முகத்டோடு அம்மையின் அம்சமான கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் முகமும் கொண்ட ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணில் இருந்தும் ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அப்போது வெப்பம் தாங்காமல் அன்னை மலை மகள் கௌரி ஓடிய போது பார்வதி தேவியின் பாதச்சிலம்பிலிருந்து தெறித்த நவரத்தினங்களில் இருந்து நவ வீரர்கள் தோன்றினர். ஐயனின் நெற்றிக்கண்ணில் இருந்த வந்த பொறிகளை அக்னி தாங்கி கங்கையிலே சேர்க்க ஆறும் குழந்தைகளாயின.கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்த இக்குழந்தைகளை அன்னை பார்வதி ஒன்றாக்கி ஸ்கந்தனாக்கினார்.

மாணிக்கவல்லி் - வீரபாகு

தரள வல்லி - வீர கேசரி


புஷ்பராக வல்லி - வீர மகேந்திரர்

கோமேதகவல்லி - வீர மகேசர்

வைடூரியவல்லி - வீரபுரந்தரர்

வச்சிரவல்லி - வீரராக்கதர்

மரகதவல்லி - வீர மார்த்தாண்டர்

பவளவல்லி - வீராந்தகர்

நீலவல்லி - வீரதீரர்.

மேலும் நவ சக்திகளின் வியர்வையிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர் முருகப்பெருமானின் படைவீரர்களாக.



கந்த கோட்டம் விமானம் மற்றும் கோபுர தரிசனம்

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே

ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

வேலும் மயிலும் துணை.

(நாளை சூர சம்ஹாரம்)


கந்தன் கருணை தொடரும்.............

கந்தன் கருணை -4

சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம்
முருகப்பெருமான்



வடபழனி திருக்கோவில் இராஜகோபுரம்



வடபழனி ஆண்டவர் - மூலவர்

அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனை ஆள் புனிதா சரணம் சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம்



வடபழனி ஆண்டவர் குதிரை வாகனம்


திருமயிலை சிங்கார வேலவர் எழிற்கோலம்

சிங்கார வேலவர் கந்தருவன் வாகனத்தில்

செங்குந்தக் கோட்டம் சிவ சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனம்


சைதை திருக்காரணீஸ்வரம்
முருகர் போர்க் கோலம்


சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலையில் கண்ட கந்தர் சஷ்டி நினைவுகள். பிரசண்ட விநாயகர் திருக்கோவிலில் தினமும் காலையில் முருகருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை. மாலை மெரவணை. ஆறாம் நாள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தவர்கள் தண்டு சாறு பருகி விரதம் முடிப்பர் மாலை விசாலாக்ஷி அம்பாளிடம் சக்தி வேல் வாங்குதல், பின் சூர சம்ஹாரம் ஆரம்பம். காப்பு கட்டியவர்கள் வேல் ஏந்தி வருவார்கள் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும். முதலில் கோவிலின் முன்னர் கஜமுகாசுரன் சம்ஹாரம், பின் ஊர்வலம் தொடரும் பெரிய கடை வீதியில் சிங்கமுகாசுரன் சம்ஹாரம், பின்னும் ஊர்வலம் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் பானு கோபன் சம்ஹாரம் நிறைவாக சூரபத்மன் சம்ஹாரம், சேவலும் மயிலும் பொம்மையாக வைக்கப்படும் சூரன் தலை இருந்த இடத்தில் வேப்பிலை வைக்கப்படும். பின் வெற்றி வீரராக முருகன் கோவிலுக்கு திரும்புவார். அடுத்த நாள் காலை வெகு சிறப்பாக வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் மாலை மயில் வாகனத்தில் மெரவணை என்று கந்தர் சஷ்டியை கண்டு களித்ததை இன்றும் மறக்க முடியவில்லை முருகா.

சண்முகக் கடவுள் போற்றி! சரவணத்துதித்தோய் போற்றி!

கண்மணி முருகா போற்றி! கார்த்திகை பாலா போற்றி!

தண்மலர்க் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி!

விண்மதி மதன வள்ளி வேலவா போற்றி! போற்றி !

வேலும் மயிலும் துணை.





கந்தன் கருணை தொடரும்.............