Wednesday, August 10, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -3

இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவில் இரண்டாம் திருநாள் மாலை சந்திர பிரபையில் ஐயன் எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.







விநாயகர்










ஒரே பிரகாரத்துடன் கூடிய சிறிய கோவில்தான் எனவே சீக்கிரம் வலம் வந்து விடலாமா அன்பர்களே? அகத்தியர் தம்பதிகளை வணங்கி வலம் சென்றால் "அதிகார நந்தி" தேவருக்கு தனி சந்நிதி, மேல் திருக்கரங்களில் ஐயனைப் போல மான் மழு தாங்கி கீழ்க்கரங்களால் அஞ்சலி செய்த வண்ணம், மனைவி சுரசையுடன் நின்ற கோலத்தில் தம்பதி சமேதராக அருட்காட்சி தருகின்றார். கயிலையில் யார் உள்ளே வரலாம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர் அதிகார நந்தி, இதனால் இவர் கையில் பொற்பிரம்பு இருக்கும். திருக்கயிலை மலையை பெயர்த்தெடுத்த அடாத செயல் செய்த இராவணனின் குலம் அழியும் என்று சாபம் தந்தவர் இவரே. பூத கணங்களில் முதன்மையானவர், ஐயனின் முதல் தொண்டர். இவரை வணங்கி அனுமதி பெற்றுக் கொண்டு எதிரே நோக்கினால் அம்மன் சன்னதி முகப்பு. அன்ன வாகனத்தில் ஒயிலாக அமர்ந்திருக்கும் அகிலாண்ட நாயகி அருள் வழங்குகின்றாள். அம்மன் சன்னதிக்கெதிரே தெற்கு வாயில் அதன் வலப்புரம், வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று பாடிய "வள்ளலார்" சன்னதி. பூசம் நட்சத்திரத்தன்று இவர் சன்னதியில் திருவருட்பா பாராயணம் நடைபெறுகின்றது.






சந்திர பிரபையில் அகத்தீஸ்வரர்










நிருதி மூலையில் வரசித்தி விநாயகர் சன்னதி. நான்கு தூண்களுடன் கூடிய முன் மண்டபம். தூண்களில் சுதை சிற்பங்களாக துவிமுக விநாயகர், த்ரிமுக விநாயகர், நர்த்தன விநாயகர் அத்தனையும் அருமை. வன்னி மர விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்று மாலை மஹா கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றது. சன்னதியின் சுவற்றில் ஸ்லோகங்கள், விநாயகர் அகவல் முதலியன பளிங்கு கற்களில் அவற்றை ஒதிக்கொண்டே தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இட்டு ஞான முதல்வனை வணங்கி எதிரே நோக்கினால் வேப்ப மரம். வேப்ப மரத்தினடியில் ரேணுகா பரமேஸ்வரி மற்றும் நாகர் சிலைகள் மஞ்சள் குங்குமத்தில் ஒளிர்கின்றனர். அன்னையையும் வணங்கி விட்டு கணபதி சன்னதியை சுறி வலம் வந்தால் கலா மண்டபம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறும் மண்டபம் முகப்பில் ஆடல் வல்லான்,







கலா மண்டபம் முகப்பு








கணபதி முருகர் சுதை சிற்பங்கள். அதையடுத்து சுப்பிரமணியர் சன்னதி. ஓராறு முகமும், ஈராறு கரங்களுடன் தேவியர் இருவரும் இருபுறமும் நின்று அருள் பாலிக்க மயில் மேல் அமர்ந்த கோலத்தில் எழிலாக காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.சுக்லபக்ஷ சஷ்டியன்று மாலை இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவர் சன்னதி சுவற்றிலும் சண்முக்க் கவசம், கந்தர் சஷ்டிக்கவசம் முதலியனப் பொறிக்கப்பட்டுள்ளன. முருகர் சன்னதியில் இருந்து பார்த்தால் ஐயனின் விமானத்தின் பின்பக்கம் தரிசனம் தருகின்றது. முருகர் சன்னதியை அடுத்து வாகன மண்டபம். இன்னும் என்ன என்ன சன்னதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? இரண்டாம் திருநாள் காட்சிகளைக் கண்டு களித்து பின்னர் வலத்தை தொடரலாமா அன்பர்களே?













இத்திருக்கோவிலில் காலையில் சந்திரசேகரரும் மாலையில் பஞ்சமூர்த்திகளும் திருவீதி வலம் வந்து சாம்பவி தீக்ஷை அருளுகின்றனர். இரண்டாம் நாள் காலை சூரியப் பிரபையில் அருட்காட்சி தருகின்றார் சந்திரசேகரர். மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு புதுமையை இங்கு கவனித்தேன். சூரிய பிரபையில் ஏழு குதிரைகளுடன் அமைந்துள்ளது. இரவு சந்திரப்பிரபையில் சோமாஸ்கந்த மூர்த்தி அருள் பாலிக்கின்றார்.











அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் எழிற்கோலம்





அழகன் முருகன் தேவியருடன்












சண்டிகேஸ்வரர்












அருமையான இயற்கை வர்ணங்களில் வரையப்பட்டுள்ள




விக்கின பிரசாத மூர்த்தி ஓவியம்



அன்னை மலைமகள் பார்வதி அமர்ந்திருக்கும் அந்த அழகைத்தன் பாருங்களேன். காலை மடித்துள்ள விதம் யோகா போல் உள்ளது.









பிடியதன் உருஉமை கொளமிகு கரியதுவடிகொடு



தனதடி வழிபடும் அவர் இடர்



கடிகண பதிவர அருளினன் மிகு



கொடைவடிவினர் பயில்வலி வலமுறை இறையே.





தன்னை வழிபடும் அன்பர்களின் இடையூறுகள் நீங்கும் வண்ணம் சிவ சக்தி செய்த திருவிளையாடல் இது. கணபதியை நமக்கு பிரசாதமாக வழங்கினர் ஆதி தம்பதிகள்.





அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

Monday, August 8, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -2

இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள்










மூஷிக வாகனத்தில் விநாயகர்








ஆதி காலத்தில் துளசி செடிகள் நிறைந்திருந்ததால் பிருந்தாரண்யபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய நுங்கம்பாக்கம், பிறகு பொம்மராஜன் என்ற மன்னன் ஆண்ட போது பொம்மராஜபுரம் என்றழைக்கப்பட்டது. ஒரு சமயம் அந்த மன்னனுக்கு தீராத சூலை நோய் ஏற்பட்டது. அந்த நோயின் தாக்கத்தை தன் அகத்தில் அடக்கிக்கொண்ட வைணவனான பொம்மராஜன் பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரமனை மனமுருகி வழிபட்டு தன் உடற்பிணி நீங்கிட வேண்டி நின்றான். அவனின் பக்திக்கு இரங்கி பெருமாள் அவன் கனவில் பிரசன்னமாகி அவனது நோயில் இருந்து விடுபட வழி கூறினார். அவ்வூரின் கண் உள்ள திருக்குளத்தில் மூழ்கி நீராடி அதன் கரையில் அமைந்துள்ள சிவபெருமானையும் அன்னை அகிலாண்டேஸ்வரியையும் உள்ளன்போடு வழிபட உன் சூலை நோய் நீங்கும் என்று வரமளித்தார். மன்ன்னும் அக மகிழ்ந்து திருமால் சொன்ன வண்ணம் திருக்குளத்தில் நீராடி சிவசக்தியை அகத்தில் இருத்தி வழிபட அவன் நோய் நீங்கியது. அவன் வாழ்வும் மலர்ந்தது. இவ்வாறு மன்னன் அகத்தில் இருத்தி வழிபட்டதால் இறைவன் அகத்து ஈஸ்வரர் என்றழைக்கப்படலானார் அதுவே பின்னர் மருவி அகத்தீஸ்வரர் என்றானது. அன்னையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. மன்னன் பின்னர் சிவபெருமானுக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும், தன் கனவில் வந்து பிரசன்னமாகிய பெருமாளுக்கும் தனித் தனி ஆலயம் அமைத்தான். பெருமாள் பத்மாவதித் தாயார் உடனுறை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்.

இந்த இரண்டு ஆலயங்களுக்கும் நடுவில் இன்று வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை செல்கின்றது. ஆயினும் இரு ஆலயங்களுக்கும் திருக்குளம் ஒன்றுதான். திருக்குளத்தின் முகப்பில் சிவபெருமான் மற்றும் விஷ்ணு முர்த்தியின் சுதை சிற்பம் உள்ளது. நீராழி மண்டபத்தின் சிவன் கோவிலை நோக்கிய பகுதியில் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்க்ஷார மந்திரமும், பெருமாள் கோவிலை நோக்கிய பகுதியில் “ஓம் நமோ நாராயணா” என்னும் அஷ்டாத்திர மந்திரமும் நியான் ஒளியில் மிளிர்கின்றன. திருக்குளம் அகத்தீஸ்வர்ர் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் எதிரிலேயே அமைந்துள்ளது.




திருக்குள முகப்பு வாயில்






தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி 18ம் நூற்றாண்டு முதல் சுப்பு தெய்வநாயக முதலியார்களின் முன்னோர்கள் தங்கள் நில புலன்களை எல்லாம் இத்திருக்கோவில்களுக்கு அர்ப்பணம் செய்து பரிபாலனம் செய்து கொண்டு வந்திருக்கின்றனர். இக்கோவிலுடன் இனைந்த கிராமத்து தேவதை கோவில் அசலாத்தம்மன் கோவில் ஆகும். இந்த அன்னையும் சுயம்புவாக திருக்குளத்தின் வடக்குப் பகுதியில் தோன்றிய அம்மன் ஆவார். இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் கனகப்ப முதலியார் வம்சாவழி வரலாறு என்னும் நூல் மூலமும் அறியக்கிடைத்துள்ளன. தற்போது அசலாத்தம்மனுக்கு புது திருக்கோயில் கட்டப்பட்டு வருகின்றது.








அசலாத்தம்மன் சிவ பூஜை செய்யும் அலங்காரம்





இட நெருக்கடி மிகுந்த தர்மமிகு சென்னையின் பல திருக்கோவில்களைப் போலவே இக்கோவிலும் இன்று சுற்றிலும் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றது. கிழக்கில் மூன்று நிலை இராஜகோபுரம் ஆனால் நாம் நேரடியாக இராஜ கோபுரத்தில் நுழைய முடியாது. வடக்கு மாட வீதியிலிருந்து திருக்கோவிலுக்கும் திருக்குளத்திற்கும் இடையில் ஒரு சிறு பாதை உள்ளது இதன் வழியாக வந்துதான் கோபுரத்தை அடைய முடியும். பிரம்மோற்சவ காலங்களில் சுவாமி புறப்பாடு இராஜ கோபுர வாசல் வழியாக நடைபெறுவதில்லை ஆனால் தெற்கு வாசல் வழியாக நடைபெறுகின்றது, அப்பக்கம் கோபுரம் இல்லை. நீராழி மண்டபத்தையும் இறைவனின் ஸ்தூல வடிவமான இராஜ கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது கொடிமரத்தடி விநாயகர்தான். அவரை வணங்கி நிமிர்ந்து நோக்கினால் கவசம் போர்த்தப்பட்ட நெடிதுயர்ந்த கொடிமரம், நான்கு பக்கங்களில் நர்த்தன விநாயகர், ரிஷபாரூட சிவசக்தி, வள்ளி தெய்வாணை சமேத மயில் முருகன், மற்றும் சூலாயுதம் எழிலாக விளங்க கொடிமரம் காட்சி தருகின்றது.






கொடி மரம்







கொடி மரத்திற்கு எதிரே அகத்தியர் மற்றும் அவர் மனைவி சக்தி உபாசகி லோபமுத்ரா இறைவனை வணங்கிய நிலையில் தரிசனம் தருகின்றனர். அகத்தியர் வழிபடுவதால் இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற திருநாமமோ? அடுத்த பதிவில் இத்திருக்கோவிலை வலம் வந்து மற்ற சன்னதிகளைக் காணலாம் அன்பர்களே.







இப்பதிவில் முதல் நாள் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை காணலாம். பிரம்மோற்சவத்தின் பூர்வமாக காலை கிராம தேவதை பூஜை. சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கும் அசலாத்தம்மன் சிறப்பு அலங்லாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முற்காலத்தில் கிராமங்களாக இருந்த போது கிராம காவல் தெய்வத்திடம் அனுமதி பெறவும் சாந்தி செய்யவும் இவ்விழா நடத்தப்பட்டது இன்றும் தொடர்கின்றது. அன்று இரவு விக்னங்களை எல்லாம் விலக்கும் முதல்வன் விநாயகர் உற்சவம். பிரம்மோற்சவத்திற்கு எந்த தடங்கலும் வராமல் இருக்க சிறப்பு அலங்காரத்தில் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து அருளுகின்றார் விநாயகப்பெருமான். அச்சமயம் வாஸ்து சாந்தி என்னும் இடத்திற்கு தேவதையான வாஸ்து புருஷனையும் அவரது அதி தேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து திருப்தி செய்து கோவிலை சுத்தம் செய்யும் சடங்கு மற்றும் மிருத்சங்கிரகணம் என்னும் புற்றுமண் ஆற்று மண், நந்தவன மண், மலையடிவாரம் முதலிய பரிசுத்தமான இடத்திலிருந்து பாலிகையிட மண் சேகரிக்கும் நிகழ்ச்சி மற்றும் அங்குரார்ப்பணம் என்னும் முளைப் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.. சிவாச்சாரியார் மஹோற்சவத்திற்காக பாலிகைகளில் நன் முளையிட்டு காலை-மாலை பஞ்சகவ்ய நீர் வார்த்து அவற்றின் முளைகளை நன்கு கவனித்து பயன்களை அறிந்து கொண்டு அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்துகின்றார். ரக்ஷாபந்தனம் என்னும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரை வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்று சிவாச்சாரியார்களுக்கும், மூல மூர்த்திக்கும் மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் அவரவருக்குரிய ஸ்தானத்தில் ரக்ஷா பந்தனம் செய்யப்படுகின்றது.












பிரம்மோற்சவத்தின் முதல் நாள் முகூர்த்த நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளி விழா கொடியேற்றம். பின்னர் பஞ்ச மூர்த்திகள் திரு வீதி உலா. இரவு சிம்ம வாகனத்தில் சிவபெருமானும் அம்பாளும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இக்காட்சிகளை இப்பதிவில் கண்ணுருகின்றீர்கள் அன்பர்களே.







முதல்வன் கணேசன் முன்னே செல்ல...


ஐயன் சிம்ம வாகனத்தில் செங்கோல் தாங்கி பின் தொடர்கிறார்








சிம்ம வாகனத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி








வள்ளி தெய்வானை சமேத முருகர்







சண்டிகேஸ்வரர்








இத்திருக்கோவிலில் அடியேனுக்கு மிகவும் பிடித்த அம்சம் இக்கோவிலில் நுழைந்தவுடன் கிடைக்கும் ஒரு மன அமைதி சுற்றிலும் வீடுகள் நெருக்கமான பகுதி என்றாலும், அருமையாக அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஏற்ற அற்புதமான கோவில் சிவசக்தியின் அருளலை தங்களை அப்படியே ஆட்கொள்ளும். மறுமறுபடியும் இந்த ஆலயத்திற்கு தங்களை இழுக்கும். மற்றொரு அம்சம் மஹா மண்டபத்தில் வரையப்பட்டுள்ள அற்புத ஓவியங்கள் பழங்கால ஓவியங்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அந்த ஓவியங்களையும் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் கண்டு இன்புறலாம் அன்பர்களே.








ரிஷபாரூடர் ஓவியம்







அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..


Sunday, July 17, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -1

ஓம் நமசிவாய


இந்த தக்ஷிணாயண புண்ணிய காலமான ஆடி மாதம் முதல் நாளில் இன்னொரு தொடர்பதிவுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன் அன்பர்களே. இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள் அடியேனுடன்.



அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர்



உற்சவம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான வைபவம் ஆகும். உத் + சவம். இதில் ஸவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையிலிருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோமல்லாவா? அது போலவே எல்லாம் வல்ல பரம்பொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறையில் மூலமுர்த்தியாக எழுந்தருளியுள்ளது. அப்படி மூல மூர்த்தமாக உள்ள இறைவனை, இறைச் சக்தியை உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருள செய்து உலக நன்மைக்காக கோவிலின் உள்ளே சென்று வழிபாடு செய்ய முடியாதவர்களுக்கும் அருளும் பொருட்டு கோயிலில் இருந்து ஸ்வாமி வீதி உலா வருகின்ற வைபவமே உற்சவம்.




தீமைகள் அழிந்து, உலகில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்வதற்காகவே உற்ஸவங்கள் அமைக்கப்பட்டதாக கூறுகின்றன ஆகமங்கள். காரணாமாகமம் என்னும் சிவாகமம் திருவீதியுலா வருகின்ற இறைவனை, பக்தியுடனும் பரிபூரண நம்பிக்கையுடனும் சரணமடைந்தால் பாவம் விலகும், மங்கலங்கள் பெருகும், "சாம்பவி தீக்ஷை" என்னும் சிவஞானத்தை எளிதில் பெறலாம் என்று கூறுகின்றது. அதாவது எந்த ஸ்பரிசமும் இல்லாமல் தனது பார்வையினாலேயே, அவ்யாஜ கருணா முர்த்தியான எம்பெருமான் தனது மாப்பெரும் கருணையினால் நமக்கு இந்த தீக்ஷையை அருளுகின்றார். எனவே எம்பெருமான் திருவீதி வலம்வரும் போது தெருக்களை சுத்தம் செய்து, நீர் தெளித்து, வண்ணக் கோலங்களால் அலங்கரித்து இறைவனை வரவேற்று நைவேத்யம் சமர்பித்து வழிபட அவர் நமது கர்மவினைகள் யாவையும் போக்கி நம் வாழ்வை வண்ணமயமாக்குவான் என்பது திண்ணம்.



திருக்குளம்










ஆலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப்படுத்தப்பட்டுள்ளன அவையாவன: 1.நித்திய கிரியைகள் 2.நைமித்திக கிரியைகள் 3.காமியக் கிரியைகள். தினம்தோறும் (குறைந்து ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்திய கிரியைகள். ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திக கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்) அதாவது சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, ஆனி உத்திரம், ஆவணி மூலம், ஆடிப்பூரம், மாசி மகம், மஹோதயம் அன்னாபிஷேகம், ப்ரமோற்ஸவம் முதலியன. ஒரு குறிப்பிட்ட பேறு பெற ஒருவரோ அல்லது பலர் ஒரு குழுவாகவோ சேர்ந்து செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள் ஆகும். உற்சவங்கள் ஒரேயொரு நாளிலும் முடியலாம் அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கலாம். அவ்வாறு 1,3,5 நாட்கள் நடைபெறும் உற்சவங்களுக்கு கொடியேற்றம் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செய்யப்படும் உற்சவங்களுக்கு கொடியேற்றம் தேவை என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. இவை மகோற்சவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும் சிவாலயங்களில் 10 நாட்களும், விஷ்ணுவாலயங்களில் 9 நாட்களும் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றன.









கிழக்கு வாயில் இராஜ கோபுரம்















பிரம்மோற்சவத்தை மஹோற்சவம் என்றும் அழைப்பர். அதாவது ’ மஹ இதி பிரம்ஹ..’ என வெதம் கூறுகின்றது. அதில் பிரம்மம் என்பது நான்முகக் கடவுள் அல்ல. இந்த பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமான பரம்பொருளையே பிரம்மம் என்கின்றது வேதம். ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாத பஞ்ச பிரம்மங்களைக் குறிக்கின்றது. இவற்றால்தான், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து காரியங்களும் நடைபெறுவதாக சொல்வர் பெரியோர்.






பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு தீர்த்தவாரி. அந்த நாளில், ஆச்சார்யர் புண்ணிய நதிகள் அனைத்தையும் தீர்த்தங்களாக ஆவாஹணம் செய்து அனைத்து ஜீவராசுகளையும் அஸ்த்ர தேவரில் எழுந்தருள செய்கின்றார். அப்போது நாம் தீர்த்த நிலையில் நீராடி கரைக்கு வரும் போது, மிக சிலிர்ப்பான இறையனுபவம் கிடைக்கும். உற்சவம் மாதத்தின் நட்சத்திரத்தில் ( அதாவது சித்திரை-சித்திரை, வைகாசி-விசாகம்) நடைபெறலாம் அல்லது குறிப்பிட்ட நாட்களில் நடைபெறலாம் என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.







கிழக்கு முகப்பு வாயில்













நமது அனைத்து கர்மாக்களுக்கும் சாட்சியாக விளங்குபவர் சூரிய பகவான் அவர் தனது செல்லும் திசை மாறும் நாள் அயன நாள் ஆகும். தெற்கு நோக்கி பயணித்த சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் தைமாத முதல் நாள் உத்தராயண புண்ணிய காலம் ஆகும். ஆறு மாதங்கள் கழித்து ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கும் நாள் தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆகும்.







2 கண்ணிமை - 1 நொடி






2கை நொடி - 1 மாத்திரை






2மாத்திரை - 1 குரு






2 குரு - 1 உயிர்






2 உயிர் - 1 சணிகம்






12 சணிகம் - 1 விநாடி






60 விநாடி - 1 நாழிகை






2 1/2 நாழிகை - 1 ஓரை






3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்






2 முகூர்த்தம் - 1 சாமம்






4 சாமம் - 1 பொழுது






2 பொழுது - 1 நாள்






15 நாள் - 1 பக்கம்






2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்






6 மாதம் - 1 அயனம்






2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு






60 ஆண்டுகள் - 1 வட்டம்






இது தான் நமது கால அளவுகள் ஆகும்,








கல்வெட்டில் கோவில் தல வரலாறு



முன்னாள் அறங்காவலர்கள்








ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது. தைமாதம் தொடங்கி ஆனி முடிய 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம், உபநயனம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது. ஆனால் இந்த மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. மேலும் நமது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம். தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் தீர்த்தங்களைப் போற்றும் ஆடிப்பெருக்கு வருகின்றது. அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம், தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் நாளன்று பாண்டிக்கொடுமுடியிலும், பவானி கூடு துறையில் ( காவிரி, பவானி, அமுத நதி கூடும் முக்கூடலில்) புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி சிவபெருமானை சகல சௌபாக்கியங்களும் அடைவர் என்பது ஐதீகம்.








பிரம்மோற்சவத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பஞ்ச மூர்த்திகள்




அசலாத்தம்மன்




இந்த தக்ஷிணாயண புண்ணிய நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ அருட் காட்சிகளை வரும் பதிவுகளில் கண்டு களியுங்கள் அன்பர்களே.

Tuesday, June 14, 2011

அன்பு உள்ளங்களுக்கு அனந்த கோடி நன்றிகள்



மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால்





அன்பு மகளின் திருமணம் 08/06/2011 அன்று சென்னையில் இனிதாக நிறைவேறியது.







மணமக்கள் வரவேற்பின் போது





பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல நேரில் காணாமலே நட்பு கொண்டிருந்தோம் நாம். ஆயினும் நேரில் சென்னை வந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் துளசி டீச்சரும் கோபால் ஐயாவும் வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். சென்னை வரவேண்டியுள்ளது கல்யாணத்தையொட்டி வரு்கின்றோம் என்று கூறியபடி அப்படியே வந்து கௌரவித்த அவர்களுக்கு முதற்கண் மிக்க நன்றி. ( துளசி டீச்சர் தங்களை முழுதுமாக கவனிக்க முடியவில்லை மன்னிக்கவும்)


துளசி டீச்சர் கோபால் ஐயாவுடன் மணமக்கள்








அடுத்து சீனா ஐயா நேரில் வரமுடியாவிட்டாலும் அருமையான ஒரு வாழ்த்து கவிதையும் அன்புடன் மதுரை மீனாக்ஷி அம்மனையும் அனுப்பி வைத்தார். அவருக்கும் மிக்க நன்றி.






அவர் அனுப்பிய கவிதை

அன்பும் அருளுமாய்
பண்பும் பயனுமாய்
தமிழும் குறளுமாய்
தரணி போற்ற வாழ்க!

பெற்றோர் மகிழ
பேறுகள் பெற்று
பெரிதும் வாழ்க!

உற்றார் உறவினர்
நட்பு அயலார்
அனைவரும் வாழ்த்த
அன்புடன் வாழ்க மணமக்கள்!

அன்புடன் சீனா










மீனாக்ஷி கல்யாணம்



அவருடைய நடு இரவு வரை காத்திருந்து அமெரிக்காவிலிருந்து தொலைப்பேசியில் நேரில் பேசி வாழ்த்த்துக்கள் தெரிவித்த KRS ஐயா அவர்களுக்கும், மற்றும் மின்னஞ்சல் மூலமும், பதிவிலும் வந்து வாழ்த்திய குமரன், Logan, Gurusaami மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் அனந்த கோடி நன்றிகள்.




வானத்தையே காகிதமாக கொண்டும், கடல் நீர் முழுவதையும் மையாகக் கொண்டும் இமய மலையை எழுது கோலாக கொண்டும் எழுதினால்தான் நன்றியை உங்கள் அனைவருக்கும் கூறமுடியும்.




நன்றியுடன் அடியேனும் இல்லாளும்

Saturday, April 30, 2011

திருஅங்க மாலை








மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வெண்டறை பொய்கையும் போன்றது
ஈசன் எந்தன் இணையடி நீழலே!
















என்று பாடிய அப்பர் பெருமான்









சித்திரை சதயம் தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் குருபூசை நாள். மூவரும் ஒவ்வொரு விதமாக இறைவனைப் பாடினர் அம்மையின் ஞானப்பால் உண்டதாலும் குழந்தை என்பதாலும் ஆளுடையபிள்ளை இறைவனை கொஞ்சு தமிழில் பாடினார். ஆதி காலத்தில் ஜைனராக இருந்து பின் இறைவனால் சூளை நோய் தீர்க்கப்பட்டதால் அப்பர் பெருமான் கெஞ்சு தமிழில் பாடினார். எம்பெருமான் தோழர் என்பதால் சுந்தரர் மிஞ்சு தமிழில் பாடினார். மூவரும் இறைவனை அடைய மூன்று வழிகளை காட்டினர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கோவில் கோவிலாக சென்று உழவாரப்பணி செய்த அப்பர் காட்டியது சரியை மார்க்கம். உழவாரப் படையைத் (புல்,பூண்டு நீக்கும் ஆயுதம்) தாங்கி, இறைத்தொண்டும் திருநாவுக்கரசர் செய்ததால் அவருடைய பாடல்கள் திருக்கோயில் தொண்டினையும், மனிதநேயத்தினையும் வலியுறுத்துவதாக உள்ளன. இவர் தாச மார்க்கத்தால் இறைவனை அடையலாம் என்று காட்டினார். திருஞானசம்பந்தர் கிரியை மார்க்கத்தையும் சுந்தரர் யோக மார்க்கத்தையும் உணர்த்தினர்.










கற்றிணைப் பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே!

என்று நமச்சிவாய என்னும் மந்திரத்தால் தண்ணீரில் மூழ்கும் கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்து வந்து கரை சேர்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள்

சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல்.
கொல்ல ஏவப்பட்ட யானையை அடக்கியது.
கட்டப்பெற்ற கல்லையே தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்து உயிர்பெற்றது.
திருநல்லூரில் இறைவனின் திருவடியைச் சூடிக்கொண்டது.
பாம்பு தீண்டப்பெற்ற அப்பூதியின் மகனின் விடத்தை நீக்கியது.
திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது.
திருமறைக்காட்டில் திருக்கோயில் கதவைத் திறக்கச் செய்தது.
பழையாறையில் உண்ணாநோன்பு இருந்து கடவுட்காட்சி பெற்றது.
இறுதியில் திருப்புகலூரில் இறைவனோடு இரண்டறக் கலந்தது.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று இறுமாப்புடன் முழங்கிய இவர், எம்பெருமானை எட்டு போற்றித்தாண்டகங்களால் பாடி மகிழ்ந்தவர் எனவே இவர் "தாண்டகவேந்தர்" என்று அழைக்கப்பட்டார். அவரது குரு பூசை நாளில் அவரது திருவங்கமாலை பதிகத்தைக் காணலாமா? அன்பர்களே.

தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.

( தலையே! நீ சிவபெருமானை வணங்கு , அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து , பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.)

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும்பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.

( கண்களே! பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.)

மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.

( மூக்கே! நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக! அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை , கௌரி, பார்வதி, உமையம்மை, மலைமகளின் மணாளன்)

வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்,

(வாயே! மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக)

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்

(நெஞ்சமே! சடைமுடியை உடையவனும்,குற்றமற்றவனும், மலைமங்கையின் துணைவருமான ஈசனை நினைத்தபடி இரு.)

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

(கரங்களே! நாகங்களை இடுப்பில் அணிந்திருக்கும் நாதனின் மேல் மலர்களைத் தூவி அவரை வணங்குங்கள்)

ஆக்கையாற் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையாற் பயன் என்?

(சிவபெருமான் வாழ்கின்ற ஆலயங்களை வலம்வந்து பூக்களைப் பறித்து அவரைப் போற்றாத உடலை வைத்துக் கொண்டு என்ன பயன்?)

கால்களாற் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்?

( கடல் நஞ்சையுண்டு கண்டம் கறுத்தவரான சிவபெருமானின் உறைகின்ற அழகான திருக்கோயில்களை அதிலும் குறிப்பாக கோகர்ண ஆலயத்தை வலம் வராத கால்களால் என்ன பயன்?)

உற்றார் ஆருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ.

( திருக்குற்றாலத்தில் நடனமாடும் ஆனந்த கூத்தன் சிவபெருமானைத் தவிர உயிர் பிரியும் தருணத்தில் நம்மோடு இருக்கவல்ல உற்றார் வேறு யார்.?)

இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ.

( இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.)

தேடிக்கண்டு கொண்டேன் - திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.

(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.)

தமிழ் கூறும் நல் உலகில் இதற்கு முன்னர் எந்தப் புலவரும் காட்டிடாத ஒப்பற்ற வழி முறைகளை கூறும் அப்பரின் திருவங்கமாலை அவரை அடையாளம் காட்டும் ஒரு அற்புத பதிகம். தலையில் தொடங்கி கண் செவி, வாய்,நெஞ்சு, கைகள், கால்கள் என்று இறைவன் கொடுத்த இந்த உடலின் அனைத்துப் பாகங்களும் எம்பெருமானின் தொண்டி செய்வதற்கே என்று பாடிய அப்பர் பெருமானின் இந்த அற்புத பதிகத்தை படித்து இன்புறுங்கள் அன்பர்களே.


சித்திரை சதய நாளன்றுதான் வட திருமுல்லை வாயிலிலே மாசிலாமணீஸ்வரருக்கு வருடத்தின் ஒரு நாள் மஹா அபிஷேகம் மற்றும் சந்தனம் சாற்றும் வைபவம் நடைபெறுகின்றது அதைப்பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லவும்

Tuesday, April 19, 2011

வாருங்கள்! வாழ்த்துங்கள்!

வாரணமாயிரம் சூழவலஞ்செய்து
நாரணநம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (1)

நாளைவதுவை மணமென்றுநாளிட்டு
பாளைகமுகு பரிசிடைப்பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தனென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன்தோழீ! நான். (2)

இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசிமந்திரித்து
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (3)

நால்திசைத்தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனசிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புணைகண்ணிப் புனிதனோடென்தன்னை
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (4)

கதிரொளிதீபம் கலசமுடனேந்தி
சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையார்மன்ன னடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன்தோழீ! நான். (5)

மத்தளங்கொட்ட வரிசங்கம்நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்தோழீ! நான். (6)

வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து
காய்சினமாகளிறன்னான் என்கைபற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன்தோழீ! நான். (7)

இம்மைக்குமேழேழ்பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன்நம்பி
செம்மையுடையதிருக்கையால் தாள்பற்றி
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்தோழீ! நான். (8)

வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (9)

குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கலவீதி வலஞ்செய்துமணநீர்
அங்கவனோடும் உடன்சென்றாங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (10)

ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல்
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர்
வாயுநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (11)
















என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் கோதை நாச்சியார் ஆயனுக்காக கனாக் கண்டது போல் கனாக்கண்ட










எங்கள் அருமை மகளுக்குத் திருமணம்








மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் திருவருள் துணை கொண்டுவரும் ஜுன் மாதம் 8ம் நாள் புதன் கிழமை
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சென்னை, அசோக் நகர்

உதயம் கல்யாண மண்டபத்தில்








உதயம் தியேட்டர் அருகில்)நடைபெறவுள்ளது.














வரவேற்பு - ஜூன் மாதம் 7ம் நாள் அன்றுமாலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும்


தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து

குறைவொன்றுமில்லாத கோவிந்தனும் அகலகில்லேன் இறையுமென்று அவன் மார்பில் உறையும் அலர்மேல் மங்கையும்
போல வாழ வாழ்த்த இரு கரம் குவித்து வேண்டுகிறோம்.


அடியோங்கள்முருகானந்தம் - அருள்வாணி











மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

















மீனாக்ஷி அம்பாள் பொன் விமானம்பொற்றாமரைத் திருக்குளம்




















ரிஷபாரூடராய் அம்மையப்பர்
















தாங்கள் தங்கள் வாழ்த்துக்களை இங்கு சென்றும் பதிவு செய்யலாம்.



நல்வாழ்த்துக்கள்



திருக்காரணி திருக்கல்யாணம்

சித்திரை மாத சித்திரை நடத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு சென்னை சைதாப்பேட்டை திருக்காரணீஸ்வரத்தில் பெருவிழா நடைபெறுகின்றது. சித்ரா பௌர்ணமியை ஒட்டி சிவ சொர்ணாம்பிகைக்கும் இந்திரனுக்கு அருளிய காரணீஸ்வரப் பெருமானுக்கும் திருக்கல்யாணம் பத்தாம் நாள் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த வருடம் அம்மையப்பரின் திருக்கல்யாணத்தையும் கைலாய வாகன சேவையையும் காணும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தரிசனம் பெற்று உய்ய வேண்டுகிறேன்.

சொர்ணாம்பிகை உடனாய காரணீஸ்வரர்
திருகல்யாணக் கோலம்


அம்மையப்பரின் அருட்காட்சி


சிவசொர்ணாம்பிகை அம்பாள்

சந்திரசேகரர்

கைலாய வாகனத்திற்கு ஆனந்தமாய்

ஆடிகொண்டு எழுந்தருளும் அம்மையப்பர்


சைதை பொற்கொடி சொர்ணாம்பிகை


வள்ளி தெய்வயாணை சமேத
முருகப்பெருமான்


கைலாய வாகனத்தில் அம்மையப்பர்
திருக்கல்யாணக்கோலத்துடன்


இலங்காபதி இராவணன். அவன் சிறந்த சிவ பக்தன் அதே சமயம் மிகுந்த உடல் பலமும் ஆணவமும் கொண்டவன் பல காலம் தவம் செய்தும் எம்பெருமான் மனம் இரங்காததால் கயிலை மலையையே தூக்க துணிந்து விடடான் மலை சிறிது ஆடியது உமையம்மை அஞ்ச எம்பெருமான் தனது இடது கால் பெருவிரலால் சிறிது அழுத்தி அவனது ஆணவத்தை அடக்கினார். அரக்கன் மலங்கி பாதாளத்தில் விழுந்தான். இதை ஆளுடையப்பிள்ளையாம், அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர், தமது தேவார பதிகத்திலே இவ்வாறு பாடுகின்றார்.

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்

நலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்

மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை

நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

பின்னர் காம்போதி இராகத்தில் சாம கானம் பாடி எம்பெருமானை மகிழ்வித்து வேண்டிய வரம் பெற்றான் இராவணன். எனவேதான் எல்லா திருக்கோவில்களிலும் கைலாய வாகனத்தில் இராவணன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அவன் தவம் செய்த போது உருவாக்கிய இராக்ஷஸ் தால் எனப்படும் ஏரி மானசரோவரின் இரட்டை ஏரியாக திருக்கயிலாய மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தர் தனது பதிகங்களின் எட்டாவது பாடலில் எம்பெருமான் அசுரன் இராவணனின் செருக்கை அழித்ததை பாடியுள்ளார்.


அம்மையின் இடகாலால் அரக்கன் தோள் நெறித்த
ஐயனின் ஆனந்த தரிசனம்

இராவணனின்பத்தாவது தலை வீணையில் இருப்பதை படத்தை பெரிதாக்கிக் காணுங்கள்

கோபுர வாயில் தரிசனம்


கோபுரத்துடன் கோடி புண்ணியம் தரும் தரிசனம்



சண்டிகேஸ்வரர்