Monday, August 8, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -2

இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள்










மூஷிக வாகனத்தில் விநாயகர்








ஆதி காலத்தில் துளசி செடிகள் நிறைந்திருந்ததால் பிருந்தாரண்யபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய நுங்கம்பாக்கம், பிறகு பொம்மராஜன் என்ற மன்னன் ஆண்ட போது பொம்மராஜபுரம் என்றழைக்கப்பட்டது. ஒரு சமயம் அந்த மன்னனுக்கு தீராத சூலை நோய் ஏற்பட்டது. அந்த நோயின் தாக்கத்தை தன் அகத்தில் அடக்கிக்கொண்ட வைணவனான பொம்மராஜன் பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரமனை மனமுருகி வழிபட்டு தன் உடற்பிணி நீங்கிட வேண்டி நின்றான். அவனின் பக்திக்கு இரங்கி பெருமாள் அவன் கனவில் பிரசன்னமாகி அவனது நோயில் இருந்து விடுபட வழி கூறினார். அவ்வூரின் கண் உள்ள திருக்குளத்தில் மூழ்கி நீராடி அதன் கரையில் அமைந்துள்ள சிவபெருமானையும் அன்னை அகிலாண்டேஸ்வரியையும் உள்ளன்போடு வழிபட உன் சூலை நோய் நீங்கும் என்று வரமளித்தார். மன்ன்னும் அக மகிழ்ந்து திருமால் சொன்ன வண்ணம் திருக்குளத்தில் நீராடி சிவசக்தியை அகத்தில் இருத்தி வழிபட அவன் நோய் நீங்கியது. அவன் வாழ்வும் மலர்ந்தது. இவ்வாறு மன்னன் அகத்தில் இருத்தி வழிபட்டதால் இறைவன் அகத்து ஈஸ்வரர் என்றழைக்கப்படலானார் அதுவே பின்னர் மருவி அகத்தீஸ்வரர் என்றானது. அன்னையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. மன்னன் பின்னர் சிவபெருமானுக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும், தன் கனவில் வந்து பிரசன்னமாகிய பெருமாளுக்கும் தனித் தனி ஆலயம் அமைத்தான். பெருமாள் பத்மாவதித் தாயார் உடனுறை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்.

இந்த இரண்டு ஆலயங்களுக்கும் நடுவில் இன்று வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை செல்கின்றது. ஆயினும் இரு ஆலயங்களுக்கும் திருக்குளம் ஒன்றுதான். திருக்குளத்தின் முகப்பில் சிவபெருமான் மற்றும் விஷ்ணு முர்த்தியின் சுதை சிற்பம் உள்ளது. நீராழி மண்டபத்தின் சிவன் கோவிலை நோக்கிய பகுதியில் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்க்ஷார மந்திரமும், பெருமாள் கோவிலை நோக்கிய பகுதியில் “ஓம் நமோ நாராயணா” என்னும் அஷ்டாத்திர மந்திரமும் நியான் ஒளியில் மிளிர்கின்றன. திருக்குளம் அகத்தீஸ்வர்ர் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் எதிரிலேயே அமைந்துள்ளது.




திருக்குள முகப்பு வாயில்






தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி 18ம் நூற்றாண்டு முதல் சுப்பு தெய்வநாயக முதலியார்களின் முன்னோர்கள் தங்கள் நில புலன்களை எல்லாம் இத்திருக்கோவில்களுக்கு அர்ப்பணம் செய்து பரிபாலனம் செய்து கொண்டு வந்திருக்கின்றனர். இக்கோவிலுடன் இனைந்த கிராமத்து தேவதை கோவில் அசலாத்தம்மன் கோவில் ஆகும். இந்த அன்னையும் சுயம்புவாக திருக்குளத்தின் வடக்குப் பகுதியில் தோன்றிய அம்மன் ஆவார். இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் கனகப்ப முதலியார் வம்சாவழி வரலாறு என்னும் நூல் மூலமும் அறியக்கிடைத்துள்ளன. தற்போது அசலாத்தம்மனுக்கு புது திருக்கோயில் கட்டப்பட்டு வருகின்றது.








அசலாத்தம்மன் சிவ பூஜை செய்யும் அலங்காரம்





இட நெருக்கடி மிகுந்த தர்மமிகு சென்னையின் பல திருக்கோவில்களைப் போலவே இக்கோவிலும் இன்று சுற்றிலும் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றது. கிழக்கில் மூன்று நிலை இராஜகோபுரம் ஆனால் நாம் நேரடியாக இராஜ கோபுரத்தில் நுழைய முடியாது. வடக்கு மாட வீதியிலிருந்து திருக்கோவிலுக்கும் திருக்குளத்திற்கும் இடையில் ஒரு சிறு பாதை உள்ளது இதன் வழியாக வந்துதான் கோபுரத்தை அடைய முடியும். பிரம்மோற்சவ காலங்களில் சுவாமி புறப்பாடு இராஜ கோபுர வாசல் வழியாக நடைபெறுவதில்லை ஆனால் தெற்கு வாசல் வழியாக நடைபெறுகின்றது, அப்பக்கம் கோபுரம் இல்லை. நீராழி மண்டபத்தையும் இறைவனின் ஸ்தூல வடிவமான இராஜ கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது கொடிமரத்தடி விநாயகர்தான். அவரை வணங்கி நிமிர்ந்து நோக்கினால் கவசம் போர்த்தப்பட்ட நெடிதுயர்ந்த கொடிமரம், நான்கு பக்கங்களில் நர்த்தன விநாயகர், ரிஷபாரூட சிவசக்தி, வள்ளி தெய்வாணை சமேத மயில் முருகன், மற்றும் சூலாயுதம் எழிலாக விளங்க கொடிமரம் காட்சி தருகின்றது.






கொடி மரம்







கொடி மரத்திற்கு எதிரே அகத்தியர் மற்றும் அவர் மனைவி சக்தி உபாசகி லோபமுத்ரா இறைவனை வணங்கிய நிலையில் தரிசனம் தருகின்றனர். அகத்தியர் வழிபடுவதால் இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற திருநாமமோ? அடுத்த பதிவில் இத்திருக்கோவிலை வலம் வந்து மற்ற சன்னதிகளைக் காணலாம் அன்பர்களே.







இப்பதிவில் முதல் நாள் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை காணலாம். பிரம்மோற்சவத்தின் பூர்வமாக காலை கிராம தேவதை பூஜை. சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கும் அசலாத்தம்மன் சிறப்பு அலங்லாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முற்காலத்தில் கிராமங்களாக இருந்த போது கிராம காவல் தெய்வத்திடம் அனுமதி பெறவும் சாந்தி செய்யவும் இவ்விழா நடத்தப்பட்டது இன்றும் தொடர்கின்றது. அன்று இரவு விக்னங்களை எல்லாம் விலக்கும் முதல்வன் விநாயகர் உற்சவம். பிரம்மோற்சவத்திற்கு எந்த தடங்கலும் வராமல் இருக்க சிறப்பு அலங்காரத்தில் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து அருளுகின்றார் விநாயகப்பெருமான். அச்சமயம் வாஸ்து சாந்தி என்னும் இடத்திற்கு தேவதையான வாஸ்து புருஷனையும் அவரது அதி தேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து திருப்தி செய்து கோவிலை சுத்தம் செய்யும் சடங்கு மற்றும் மிருத்சங்கிரகணம் என்னும் புற்றுமண் ஆற்று மண், நந்தவன மண், மலையடிவாரம் முதலிய பரிசுத்தமான இடத்திலிருந்து பாலிகையிட மண் சேகரிக்கும் நிகழ்ச்சி மற்றும் அங்குரார்ப்பணம் என்னும் முளைப் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.. சிவாச்சாரியார் மஹோற்சவத்திற்காக பாலிகைகளில் நன் முளையிட்டு காலை-மாலை பஞ்சகவ்ய நீர் வார்த்து அவற்றின் முளைகளை நன்கு கவனித்து பயன்களை அறிந்து கொண்டு அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்துகின்றார். ரக்ஷாபந்தனம் என்னும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரை வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்று சிவாச்சாரியார்களுக்கும், மூல மூர்த்திக்கும் மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் அவரவருக்குரிய ஸ்தானத்தில் ரக்ஷா பந்தனம் செய்யப்படுகின்றது.












பிரம்மோற்சவத்தின் முதல் நாள் முகூர்த்த நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளி விழா கொடியேற்றம். பின்னர் பஞ்ச மூர்த்திகள் திரு வீதி உலா. இரவு சிம்ம வாகனத்தில் சிவபெருமானும் அம்பாளும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இக்காட்சிகளை இப்பதிவில் கண்ணுருகின்றீர்கள் அன்பர்களே.







முதல்வன் கணேசன் முன்னே செல்ல...


ஐயன் சிம்ம வாகனத்தில் செங்கோல் தாங்கி பின் தொடர்கிறார்








சிம்ம வாகனத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி








வள்ளி தெய்வானை சமேத முருகர்







சண்டிகேஸ்வரர்








இத்திருக்கோவிலில் அடியேனுக்கு மிகவும் பிடித்த அம்சம் இக்கோவிலில் நுழைந்தவுடன் கிடைக்கும் ஒரு மன அமைதி சுற்றிலும் வீடுகள் நெருக்கமான பகுதி என்றாலும், அருமையாக அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஏற்ற அற்புதமான கோவில் சிவசக்தியின் அருளலை தங்களை அப்படியே ஆட்கொள்ளும். மறுமறுபடியும் இந்த ஆலயத்திற்கு தங்களை இழுக்கும். மற்றொரு அம்சம் மஹா மண்டபத்தில் வரையப்பட்டுள்ள அற்புத ஓவியங்கள் பழங்கால ஓவியங்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அந்த ஓவியங்களையும் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் கண்டு இன்புறலாம் அன்பர்களே.








ரிஷபாரூடர் ஓவியம்







அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..


4 comments:

Sankar Gurusamy said...

அற்புதமான தரிசனம்... நீண்ட இடைவெளிக்குபிறகு... தொடருங்கள்..

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

பணி நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் தொடர்ச்சியாக பதிவிட முடிவதில்லை. மன்னிக்கவும். வந்து தரிசனம் பெற்றதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

அந்தக் காலத்திலேயே சிவாவிஷ்ணு கோவில் கட்டத் தொடங்கிவிட்டார்கள் போல. தனிச்சிறப்பான இந்தக் கோவிலைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி ஐயா.

S.Muruganandam said...

வாருங்கள் குமரன் ஐயா. அரியும் சிவனும் ஒண்ணுதானே அது புரியாமல்தான் மனிதன் தனது அறியாமையினால் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தாங்கள் வந்து பின்னூட்டம் இட்டது. இன்னும் வரும் பதிவுகளையும் காணுங்கள் ஐயா.