
முழு முதற் கடவுளுக்கு முதல் வணக்கம்
முருகர் சன்னதியை அடுத்து வாகன மண்டபம் அதையடுத்து வடக்குப்புறம் முப்பெருந்தேவியர் சன்னதி கிழக்கு நோக்கி, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று நவராத்திரி நாயகியர் மூவரும் ஒரே சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். துர்கா பரமேஸ்வரி ஆணவமாம் மகிடன் தலையில் நின்ற கோலத்தில் நடுவிலும், வலப்புறம் தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் மஹாலக்ஷ்மியும், இடப்புறம் வீணையுடன் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் அருட்காட்சி தருகின்றனர். வேப்ப மரத்தடியில் அன்னையரின் சன்னதி அமைந்துள்ளது. அதற்கடுத்து காசியை நம் கண் முன் கொண்டுவரும் சன்னதிகள். கிழக்கு நோக்கி சிவலிங்க ரூபத்தில் விஸ்வநாதர் பின்புற சுவரில் சுதை ரூபத்தில் சிவசக்தி ரூபம் அன்னை வலக்காலை மடக்கி அமர்ந்திருக்கும் கோலம் அருமை. அருகில் தெற்கு நோக்கி விசாலாக்ஷி மற்றும் அன்னபூரணி அம்பாள் இருவரும் தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர்.

முப்பெருந்தேவியர் சன்னதி விமானம்
விஸ்வநாதர் சன்னதியில் மாத சிவராத்திரியன்று சமய குரவர் நால்வர் இறைபணி மன்றத்தினர் மூலமாக அபிஷேகம் நடைபெறுகின்றது. இங்கு யாக சாலையும் உள்ளது. இங்கு நின்று அம்மன் மற்றும் ஐயன் விமானம் இரண்டையும் நன்றாக தரிசனம் செய்யலாம்.

அம்மன் மற்றும் ஐயன் விமானங்கள்
(கோவில் சுவர் முழுவதும் இது போல பல்வேறு ஸ்தோத்திரங்களால் நிறைந்துள்ளன. இப்பக்கம் அபிராமி அந்தாதி எதிர்பக்கம் லலிதா சகஸ்ரநாமம், முருகர் சன்னதியில் கந்தர் சஷ்தி கவசம், மற்றும் சண்முக கவசம் )
அருகில் ஒரு சன்னதி உள்ளது. அது பைரவர் சன்னதி. தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார் பைரவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவது மிகச் சிறந்த வழிபாடாகும். மாமர நிழலில் அருள் பாலிக்கின்றார் பைரவர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சன்னதி உள்ளது. இச்சன்னதிக்கெதிரே சிறு நந்தவனம் இதில் தலமரமாம் வன்னி மரம் உள்ளது. மேலும் இராஜ கோபுரத்தின் உள்பக்கம் சூரியன் மற்றும் சந்திரன் சன்னதிகளும் உள்ளன. கொடிமரத்தை அடுத்து பலி பீடம், அதற்கடுத்து நந்திகேஸ்வரர் சன்னதி, நந்திகேஸ்வரர் சன்னதியில் “நந்தி நாமம் நமச்சிவாயவே” என்னும் வாசகம். இதையடுத்து அலங்கார மண்டபம் மற்றும் மஹா மண்டபம் இந்த மண்டபத்தில்தான் அற்புதமான ஓவியங்கள் கூரையில் வரையப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் முகப்பில் ரிஷபாரூடராய் சிவசக்தி தரிசனம் தருகின்றனர். இம்மண்டபத்திலிருந்து உள்பிரகாரம் செல்லும் நுழைவாயிலில் பிரம்மாண்டமான சுதை துவார பாலகர்கள். இவர்களிடம் அனுமதி பெற்று அம்பாளையும் ஐயனையும் தரிசிக்க உள்ளே செல்ல்லாமா? சற்று பொறுங்கள் ஐயனின் அதிகாரநந்தி சேவையை தரிசித்து விட்டு உள்ளே செல்லலாம்.

விநாயகர்

சமயக்குரவர்கள் நால்வர்
தேவார திருவாசகம் பாடி முத்தமிழால் சைவம் வளர்த்த அப்பு, சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் நால்வருக்கும் பஞ்ச மூர்த்திகள் அதிகாரநந்தி சேவை தந்தருளுகின்றனர்.

அகத்தீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில்

சிவபெருமானைப் காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி போற்றி வணங்கி, அந்த காருண்ய மூர்த்தியைப் போலவே சாரூப நிலை பெற்றவர்கள் அனேகராவர். இவர்கள் முக்கண் சுடர் விருந்தினைப் போலவே தலையில் ஜடாமகுடமும் அதில் தாரமர் கொன்றையும், ஊமத்தையும், சந்திரப்பிறையும் தாங்கும் பேறு பெற்றவர்கள். நான்கு கரங்கள் கொண்டு மேற்கரங்களில் மான், மழு ஏந்துபவர்கள். இவர்களில் முதன்மையானவர், எம்பெருமானின் முழு முதல் தொண்டரான நந்தியம்பெருமான் ஆவார். அப்போது அவர் அதிகார நந்தி என்று வழங்கப்படுகிறார். இவர் சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும், வெண்மை நிறமும் கொண்டவர். இறைவனின் ஞான வாளையும், பொற்பிரம்பையும் தாங்கி நிற்பவர். இவருடைய தேவியின் பெயர் சுயம்பிரபா என்பது ஆகும். நந்தி முகமும், மனித உடலும் கொண்டு , வலது காலை மடக்கி, இடது காலை ஊன்றி மண்டியிட்ட நிலையில் கீழ் திருக் கரங்கள் இரண்டிலும் ஐயனின் பாதங்களைத் தாங்கி, நான்கு தோள்களிலும் எம்பெருமானை சோமாஸ்கந்தராக தாங்கி வீதி வலம் வருவது " அதிகார நந்தி சேவை " எனப்படுகின்றது. அதிகார நந்தி ஞானத்தின் திருவுருவம். நந்தீ என்பதற்கு வளர்வது என்று பொருள். நமது அறிவையும் செல்வத்தையும் வளர்ப்பவராக இருப்பதால் தான் சிவபெருமானுக்கும் நந்தி என்ற பெயர் வழங்கப்படுகின்றது. நந்தி நாமம் நமச்சிவாயவே என்னும் தொடரும் இதனையே உணர்த்துகின்றது. அவர் தன் சார்பாக அறிவு செல்வம், இன்பம் ஆகியவற்றை தடையின்றி வழங்கும் அதிகாரத்தை நந்தியம்பெருமானுக்கு அளித்துள்ளார். அதிகாரம் பெற்ற வல்லமை மிக்க நந்தி தேவர் அதிகார நந்தி எனப்படுகின்றார்.
4 comments:
காலையில் அற்புதமான தரிசனம். ஓம் நம சிவாய...
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
ஓம் நம சிவாய, நன்றி குருசாமி ஐயா.
தொடருக்கும் தகவலுக்கும் நன்றி ஐயா
மிக்க நன்றி லோகநாதன் ஐயா
Post a Comment