Showing posts with label விநாயகர் உற்சவம்.. Show all posts
Showing posts with label விநாயகர் உற்சவம்.. Show all posts

Monday, August 13, 2018

சொர்ணாம்பாள் ஆடிப்பூர உற்சவம் - 1


சென்னை பாரத்வாஜேஸ்வரம் எனப்படும் வாலீஸ்வரத்தில் சொர்ணாம்பிகைக்கு நடைபெற்ற சென்ற வருட ஆடிப்பூர பத்து நாள் உற்சவத்தின் அருட்காட்சிகளை காணலாம் அன்பர்களே தொடர்ந்து வாருங்கள். இப்பதிவில் விநாயகர் உற்சவம் மற்றும் முதல் நாள் அம்பாள் சிவ பூஜை செய்யும் கோலம் கண்டு களியுங்கள்.


 விநாயகர் உற்சவம்

நமது அனைத்து கர்மாக்களுக்கும் சாட்சியாக விளங்குபவர் சூரிய பகவான் அவர் தனது செல்லும் திசை மாறும் நாள் அயன நாள் ஆகும். தெற்கு நோக்கி பயணித்த சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் தைமாத முதல் நாள் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். ஆறு மாதங்கள் கழித்து ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கும் நாள் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆகும்.


கண்ணிமை - நொடி
2கை நொடி - மாத்திரை
2மாத்திரை - குரு
குரு - உயிர்
உயிர் - சணிகம்
12 சணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை
2 1/2 நாழிகை - ஓரை
3 3/4 நாழிகை - முகூர்த்தம்
முகூர்த்தம் - சாமம்
சாமம் - பொழுது
பொழுது - நாள்
15 நாள் - பக்கம்
பக்கம் (30 நாள்) - மாதம்
மாதம் - அயனம்
அயனம்(12 மாதங்கள்) - ஆண்டு
60 ஆண்டுகள் - வட்டம்

இது தான் நமது பண்டைய  கால அளவுகள் ஆகும்.

 மூஷிக வாகனத்தில் விநாயகர் 

ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது. தைமாதம் தொடங்கி ஆனி முடிய மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம்க்ரஹப்பிரவேசம்உபநயனம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.

அம்பாள் சிவ பூஜை செய்யும் கோலம் 







 அம்பாள் நாகலிங்க மரவடி சேவை





ஆனால் இந்த மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. (ஆவணி - விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி - நவராத்திரி, ஐப்பசி - தீபாவளி, கார்த்திகை - மஹாதீபம் ).

மேலும் நமது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம். தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் தீர்த்தங்களைப் போற்றும் ஆடிப்பெருக்கு வருகின்றது. அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம், தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் நாளன்று பாண்டிக்கொடுமுடியிலும், பவானி கூடு துறையில் ( காவிரி, பவானி, அமுத நதி கூடும் முக்கூடலில்) புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி சிவபெருமானை சகல சௌபாக்கியங்களும் அடைவர் என்பது ஐதீகம்.


அனைத்து புவனங்களையும் பூக்கும் அன்னை மஹா திரிபுரசுந்தரி, ஜகத்ஜனனி, ஜகன்மாதாவிற்கு , மானிடர்களாகிய நாம் வளைகாப்பு நடத்தும் நாள்தான் திருஆடிப்பூரம்.  இந்த ஆடி மாதத்தில் மழை நன்றாகப்பெய்து பூமித்தாய் சூல் கொள்ளும் காலம். நதியிலே புதுப்புனல் நுரையுடன் பொங்கி ஓடும் காலம். ஜகன்மாதா, ஜகத்ஜனனி அம்பிகையே சூல் கொண்டதாக கருதி பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் காலம். 


Thursday, April 19, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா -1

 அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத  திருவாலீஸ்வரர் என்றழைக்கப்படும் பாரத்வாஜேஸ்வரர் திருக்கோயில்

புலியூர் - கோடம்பாக்கம் - சென்னை

தொண்டைநாடு சான்றோர் உடைத்து என ஆன்றோரால் போற்றப்படும் பெருமை பெற்றதாகும். இநன்னாட்டில் பொலிவு பெற்று விளங்கும் இருபத்து நான்கு கோட்டங்களுள்  புலியூர் கோட்டம் இரண்டாவது கோட்டமாகும்.  இப்புலியூர் கோட்டத்தில் தற்போதைய   தருமமிகு சென்னையின் ஒரு பகுதியான  கோடம்பாக்கத்தில் சிவபெருமான்  சொர்ணாம்பிகையுடன் எழுந்தருளி அருள் பாலித்து  வருகின்றார்.  இவ்வாலயம்  திரேதா யுகத்தில் ஏற்றம்  மிகுந்த ஏழு முனிவர்களுள் ஒருவரான ஸ்ரீபாரத்வாஜ முனிவர் வழிபட்டமையால் திருபாரத்வாஜேஸ்வரம் எனவும்,  வீரம் செறிந்த மகாசிவ பூஜா துரந்தரனும் வானர அரசனுமான வாலி வழிபட்டமையால்  திருவாலீஸ்வரம் எனவும், ஸ்ரீராமபிரானும், ஸ்ரீநளமஹாராஜாவும் மற்றும் ஸ்ரீஊர்வசியும்  வழிபட்டு அருள் பெற்றுள்ளனர் என்று புகழப்படுகின்றது.

 வானர அரசன்  வாலி 

(வாலில் பத்துத்தலை இராவணனையும் , பீடத்தில் இராமன் மற்றும் அனுமனையும் கவனியுங்கள்)

பெரிய புராணம் இயற்றிய திருத்தொண்டர் சேக்கிழார் சுவாமிகள் புராணத்தை இயற்றிய உமாபதி சிவாச்சாரியர் புலியூர் கோட்டத்தின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில்

பாலாறு வளஞ்சுரந்துநல்க மல்கும்
      பாளைவிரி மணங்கமழும் பூஞ்சோலைதோறும்
காலாறு கோலிசை பாடநீடுங்
      களிமயில் நின்  றாதும் இயல் தொண்டை நாட்டுள்
நாலாறு கோட்டத்துப் புலி யூர்கோட்டம்
      நன்றிபுனை குன்றைவளநாட்டு மிக்க
சேலாறு கின்றயற் குன்றத்தூரில்
       சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே - சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

       
இத்திருக்கோயிலில்  சித்திராப்பௌர்ணமி திருக்கல்யாண வைபவம் பத்து நாள் உற்சவமாக சிறப்பாக நடைபெற உள்ளது.  அத்திருவிழாவின் அருட்காட்சிகளை  இனி வரும் பதிவுகளில் காணலாம்.

(திருவிழாவின் போது காலையும், மாலையும் சென்று அனைத்து உற்சவங்களையும் அலுவலக நிமித்தமாக காண்பது சிறிது கடினம் என்பதால் சில உற்சவங்கள் சென்ற வருடத்தின் படங்கள் ஆகும். அவற்றின் இறுதியில் *** குறி இருக்கும்)


சித்திரைப் பெருவிழாவின்  பூர்வாங்கமாக கிராமதேவதை வழிபாடும், விநாயகர் உற்சவமும் நடைபெறுகின்றது. அக்காட்சிகளை இப்பதிவில் காணலாம்.

அடியேன் ஒரு வருடம் அகஸ்மாத்தமாக திருவீதியில் சுவாமி உலா வரும் போது தரிசிக்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. அப்போது சுவாமிகளின் அலங்காரம் சற்று வித்தியாசமாக மிகவும் உன்னதமாக இருப்பதை கவனித்து இத்தலத்திற்கு செல்ல ஆரம்பித்தேன்.  பின்னர் இவ்வாலயத்தின் குருக்கள் பல ஆலயங்களுக்கு சென்று அலங்காரம் செய்து தருகின்றார் என்று தெரிந்தது. அது போலவே பூசைகளும் மிகவும் ஆத்மார்த்தமாக நடைபெறுகின்றது.

பழைய ஆலயத்தை புதிதாக மாற்றி 2015ல் திருக்குட முழுக்கு நடைபெற்றது அப்போது புதிதாக ஒரு ஐந்து நிலை இராஜ கோபுரம், உற்சவ மண்டபம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டன. மேலும் அம்மன் சன்னதி தேர் வடிவில் எழிலாக அமைக்கப்பட்டது. பல கலை நுணுக்கம் நிறைந்த  சுதை சிற்பங்கள், கல் சிற்பங்கள் . ஆகம மற்றும் புராண வரலாறுகளை விளக்கும் பல் அம்சங்கள் இக்கோவிலில்  தற்போது அமைந்துள்ளன.  அவைகளையும் இனி வரும் பதிவுகளில் காணலாம் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.


புலியூர் கிராம தேவதை வழிபாடு  ***


முப்பாத்தம்மன் 


விநாயகர் உற்சவம்   ***
(சென்ற வருடத்தியது முழுதும் எருக்கம் பூ மாலை)


இவ்வருடத்திய அலங்காரம் 



அம்புறாத் தூணியையும், அதில் இருந்து ஒரு அம்பை  லாகவகமாக உருவும்
பாங்கையும் கவனியுங்கள்.


வரும் இடையூறுகளை எல்லாம் களையும் விதமாக  வில் அம்புடன் விநாயகர் அலங்காரம். 






பெருவிழா அருட்காட்சிகள் தொடரும் . . . . . . . .

Saturday, February 16, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -1

விநாயகர் வீரபாகு தேவர் உற்சவம் 

தருமமிகு சென்னையின் மேற்கு சைதாப்பேட்டையில் வள்ளி நாயகி தெய்வ நாயகி உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மகப் பெருவிழா வெகு சிறப்பாக எப்போதும்  போல  சிறப்பாக நேற்று(15-02-2013) தொடங்கி நடைபெறுகின்றது. இப்பிரம்மோற்சவத்திம் அழகன் முருகனுக்கு செய்யப்படும் அலங்காரத்தை காணவே வருடா வருடம் இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் அநேகம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிரம்மோற்சவத்தின் சில அழகு காட்சிகளை தங்களுடன் பகிர்ந்து  கொள்ளவே இப்பதிவுகள் . 



அக்குறமகளுடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணமருள்  பெருமாளின் 
அற்புத அலங்காரம்





பிரம்மோற்சவ விழாவின் பூர்வாங்கமாக விநாயகர் மற்றும் வீரபாகுத் தேவர் திருவிழா, கொடியும் ஊர்வலம் வருகின்றது.  இத்திருக்ககோவிலின் ம்லர் அலங்கரம், நகை  அலங்காரம் மற்றும் அந்தந்த நாளுக்கான வாகனத்திற்கு ஏற்றார்ப்போல முருகருக்கு அலங்காரம் எல்லாமே மிகவும் சிறப்பு . அவற்றை ஒவ்வொன்றாக காண வாருங்கள் அன்பர்களே.    


முழு முதற் கடவுள் விநாயகர்





நவவீரர்களின் முதல்வன்
திருமுருகனின் தூதன்
வீரபாகுத்தேவர்