Saturday, May 23, 2020

திருப்பாத தரிசனம் - 35

திருக்கோளிலி -  (திருக்குவளை) ஸ்ரீபிரம்ர நடன அவனி விடங்கர்



சப்தவிடங்க தலங்களின் வரிசையில் அடுத்து நாம் தரிசிக்கின்ற தலம் திருக்கோளிலி ஆகும்.

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.

பொருள் : அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருளும் இறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார் என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடைய பிள்ளை போற்றிப் பாடிய இத்தலம்  திருக்குவளை என்றும் அழைக்கப்படுகிறது.

திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள புகை வண்டி நிலையம் திருநெல்லிக்காவல். திருவாரூரிலிருந்தும், திருக்கைச்சினத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன.  கொள்ளிக்காடு – கொளப்பாடு வழியாக திருக்குவளையை அடையலாம். திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.

 திருக்குவளை மூவராலும் பாடல்பெற்ற காவிரி தென்கரைத்தலம். எட்டுக்குடிக்கு முன்பு திருக்குவளையும் எட்டுக்குடியைத் தாண்டி திருவாய்மூரும் ஆக இவ்விரு சப்தவிடங்கத்தலங்களும் அருகருகே அமைந்துள்ளன. தேவாரப்  பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 123வது தலமாகும். இவ்வாலயத்தின் வாயிலில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பிரம்மன் வெண்மணல் கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட்டுப் பேறு பெற்ற இடமாகும். சுவாமி பிரமபுரீஸ்வரர் என்றும் அம்பிகை வண்டமர் பூங்குழலாள் என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மன் சன்னதியில் முன்னர் தேனடை இருந்ததாம்.

 கோள் என்பதற்குக் குற்றங்கள் என்பது பொருள் இங்கு வழிபடும் அன்பர்களின் கோள் தன்னை இறைவன் நீக்கி அருள்பாலிப்பதால் இத்தலம் கோளிலி எனப்பட்டதென்பர். கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான் என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. வன்தொண்டர் சுந்த்ரர் திருக்கோலக்கா பதிகத்தில் “கோளிலிப் பெருங்கோயில்” என்று சிறப்பித்துப் பாடுகின்றார்.  இறைவன்  நவகிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்பாலித்ததால் இத்தலம் கோளிலி எனப்பெயர் பெற்றதென்றும் கூறுவர். கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

இத்தலத்தில் பிரமன், திருமால், இந்திரன், சந்திரன் அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலிய பலர் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர்.

காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
நீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.

பொருள்: காற்று வடிவாவனும், கடல் விடம் உண்டவனும், வெண்ணீறணிந்தவனும், நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும் , சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை, அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக  என்று திருநாவுக்கரசர் பாடிய  இத்தலத்தில் அருள் பாலிக்கும்


இறைவர் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர். 

இறைவி: வண்டமர் பூங்குழலி. 
தல மரம் : தேற்றாமரம்
 
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்.
 
வழிபட்டோர் : பிரம்மன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர்.
 

தியாகேசர்: அவனி விடங்கர்

திருநடனம்: பிரம்ர நடனம்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. நாளாய போகாமே நஞ்சணியுங்.
 
2. அப்பர் - 1. மைக்கொள் கண்ணுமை, 2. முன்ன மேநினை யாதொழிந்.
 
3. சுந்தரர் - 1. நீள நினைந்தடி யேனுமை.

கருவறைக்கு இணையாகத் தென்பகுதியில் மகாமண்டபம், திருவோலக்க மண்டபத்துடன் கூடியதான தியாகராஜரின் சபை உள்ளது.  இதில் தியாகராஜர் பெரிய விதானத்தின் கீழ் வெள்ளி சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றார். இவருடைய திருநாமம் அவனி விடங்கர் என்பதாகும். இந்த அவனியைத் தான் இருந்த இடத்தில் இருந்தே ஆட்டுவதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவரைஊழிப்பரன்எனவும், ‘செல்வத்தியாகேசர்எனவும் குறிப்பர். முன்புறம் வீர கட்கங்கள் உள்ளன. மகாமண்டபத்தில் செப்பாலான நின்ற இடபம் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பின் மீது பள்ளி கொண்டுள்ள திருமால் தனது மார்பில் தியாகராஜரை வைத்துப் பூஜிக்கும் காட்சி சுதைச் சிற்பமாக இடம் பெற்றுள்ளது. தியாகேசருக்கு எதிரே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவையாருடன் எழுந்தருளியுள்ளார். 


அவனி விடங்கர்


தேவாரத்துள் இப்பெருமான் விண்ணுளோர் தொழுதேத்தும் விளக்குஎன்று குறிக்கப்பட்டுள்ளார். இவருடைய திருநடனம் பிரம்ர நடனம் எனப்படும். மருதநிலப்பகுதி அல்லவா, எனவே தாமரை மலரில் தேன் பருகி களித்திருக்கும் வண்டின் டனமே ஐயனின் டனமானது.  பூவினில் தேனெடுக்கும் வண்டு அப்பூவைச் சுற்றிச் சுற்றி எழுந்தும் தாழ்ந்தும் பறந்தும் பிறகு பூவில் அமர்ந்து குடைந்து தேன் குடித்து ஆடுவது போல் ஆடுதலின் இந்நடனம் பிரம்ர நடனம்’ (வண்டு நடனம்) எனப்பட்டது.

இங்கு மரகத விடங்க லிங்கம் உள்ளது. இவ்விடங்கருக்கு  நாட்பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் காலை 9 மணி அளவிலும், மாலை 6 மணி அளவிலும் மரகத விடங்கருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அவனி விடங்கர் மீது “திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி உலா' என்ற நூல் பாடப்பட்டுள்ளது. சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த இந்நூலில் திருக்கோளிலியின் புராணச் சிறப்புகள் தலவரலாறுகள் யாவும் சிறப்புடன் பேசப்படுகின்றன.

இத்தலத்தில் முசுகுந்தார்ச்சனை சிறப்பாக நடைபெறுகின்றது. மார்கழியில் ஆருத்ரா தரிசனத்தன்று தியாகராஜர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிப் திருப்பாத தரிசனம் அளிக்கின்றார். சித்திரை மாதப்பிறப்பு அயன விழாக்கள் முதலிய நாட்களில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.




தல வரலாறு:  இத்தலத்திற்குப்  பிரமதபோ வனம், கதகாரண்யம் (தேற்றாமர வனம்.) புஷ்பவனம், தென்கயிலை, பாண்டவபுரம் எனப்பல பெயர்களுண்டு.  பாண்டவர்கள் சிவ பூசை செய்து வழிபட்டதால் பாண்டவபுரம். இறைவன் பார்த்தனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிய தலம்.. விநாயகர் தியாக விநாயகர், முருகன் சுந்தர வடிவேலர். சபாநாதர் தரிசனம் மிகவும்  அழகானது.

கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் இரட்டை  மதில்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. திருக்கோயில்  பூமி மட்டதிலிருந்து சற்று கீழாக அமைந்துள்ளது.  உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உட்பிராகாரத்திற்கு எதிரே வெண் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சன்னதியும், தென்புறம் தியாகேசர் சன்னதியும் உள்ளன. கோளிலி நாதர் சன்னதியும், அதன் தென்பால் அவனிவிடங்கத் தியாகராசரின் சன்னதியும் இணைப்பு பெற்ற ஒரே  மகாமண்டபத்துடன் அமைந்துள்ளன.  ஆரூர் போன்றே இங்கு  மணல் லிங்கம் மூலவராகக் கவசத்துடன் காணப் பெறுவது ஒரு சிறப்பு. மூலவர் சன்னதி, தியாகேசர் சன்னதி, மற்றும்  அம்மன் சன்னதி மூன்றும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது.

அவனி விடங்கருக்கு எதிரே இரு மண்டபங்கள்.  பிரம்மபுரீசருக்கு இடது புறம் நேரே தனி நுழை வாயிலுடன் கூடிய சபையில் டராசர் மூர்த்தம்  இல்லை. இங்கு தேவியருடன் முருகப் பெருமானின் உற்சவ மூர்த்தி தரிசனம் அளிக்கின்றார். ஆடல் நாயகன் வெளிப் பிரகாரத்தில் விமானத்துடன் கூடிய தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார். ஆனந்த தாண்டவர் வித்தியாசமாக இரு கால்களையும் மடித்தவாறு ஆடுகிறார். தியாகேசருக்கு எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிரகார வலம் வரும் போது தென்மேற்கில் தியாக விநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது இவரது திருநாமம் சுந்தர வடிவேலர். வண்டமரும் பூங்குழலி அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன.

மூலமாகிய மூவர்க்கும் மூர்த்தியைக்

காலனாகிய காலற்கும் காலனைக்

கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்

சூலபாணிதன் பாதம் தொழுமினே – என்று அப்பர் பெருமான் பாடிப்பரவிய  வெண்மணலால் ஆன  பிரம்மபுரீஸ்வரருக்கு அமாவாசை தினங்களில் அர்த்தஜாம பூஜையின் போது  மட்டும் அருகம் புல்லால் தோய்த்து சாம்பிராணி தைலம் திருமேனியில் தடவப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது.

பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது.  பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருந்தபோது வேத்திகிரகீயம் என்ற ஊரில் ஒரு அந்தணர் வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது அந்த ஊரின் அருகே அமைந்த காட்டில் இருந்த பகாசுரன் என்ற அரக்கன் தினமும் வீட்டிற்கு ஒருவரை தனது உணவாகக் கொன்று தின்று வாழ்ந்து வந்தான். அப்போது பாண்டவர்கள் தங்கியிருந்த அந்தணர் வீட்டு முறை வந்தது. அப்போது பீமன் ஒரு வண்டி நிறைய உணவுப்பண்டங்களுடன் சென்றான். பகாசுரனுக்காக கொண்டு சென்ற உணவு அனைத்தையும் பீமனே உண்டு விட, ஆத்திரமடைந்த பகாசுரன் பீமனுடன் சண்டையிட்டான். அச்சண்டையில் பகாசுரனை பீமன் கொன்றான். அக்கொலைப் பாவம் தீர பீமன் திருக்கோளிலி வந்து திருக்கோளிலியப்பரை வழிபட்டு தோஷநிவர்த்தி பெற்றான் என்பது ஐதீகம். இதன்படி பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் இத்தலம். பகாசுரன் மற்றும் பிரம்மஹத்தி உருவம் முன் கோபுரத்தில் உள்ளது.  பிரம்மன் சிவ பூசை செய்யும் காட்சி சுவற்றில் கல் சிற்பமாகவும் நுழை வாசல் முகப்பில் சுதை வடிவமாகவும் உள்ளது. தேவர்கள் சிவ பூசை செய்யும் காட்சி சுவற்றில் உள்ளது

நவக்கிரகங்கள் ஒரு முகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன. சுவாமி கருவறையின் கற்சிற்பங்கள்  மிகவும் அழகாக அமைந்துள்ளன. அவற்றின் கலை நுணுக்கம் மிகவும் அருமையாக உள்ளது.  வடபுறம் அர்த்தநாரீசுவரர், கல் மேனி நடராசர்,  ஆலிங்கன மூர்த்தி,  பிரம்மா, மகிஷாசுரன் இல்லாமல் சாந்த  துர்க்கை, எழிலாக  உமாமகேசுவரர் தென்புறம் தேவகோட்டங்களில் முறையே நடராஜர், நர்த்தன கணபதி, பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி மூர்த்தங்களும் உள்ளன. மேற்பால் சங்கு சக்கரத்துடன் திருமால் உருவமுள்ளது. பிராகாரத்தின் கீழ்ப்புறம் சந்திர சூரியர் உருவங்களும், இரண்டாம் கோபுர தென் மதிலில் பஞ்சபாண்டவர் பூஜித்து வழிபடும் கோலமும், பிரம்மன் வழிபடுவதும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் அகத்திய லிங்க சன்னதி அமைந்துள்ளது. அகத்தியர் பூஜித்த மூர்த்தி இவர். தனிக் கருவறை மற்றும், அர்த்தமண்டபத்துடன் இச்சன்னதி விளங்குகிறது. மேலும் இந்திரன், சந்திரன் வழிபட்ட மூர்த்திகளும் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கின்றனர். அவனி விடங்கர் கருவறைச் சுவற்றில்  தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும் காட்சி தருகின்றனர்.  மதுரைச் சொக்கலிங்கப் பெருமானுக்கும், திருவண்ணாமலைச் சோதி லிங்கப் பரம் பெருமானுக்கும் தனிச் சந்நிதிகளில் உள்ளன. காசி விசுவ நாதர்,  விசாலாட்சியும் தனிச் சந்நிதிகளில் உள்ளனர். சமயக்குரவர்கள் நால்வர் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.  சுந்தரருக்கு நெல் அளித்த குண்டையூர் கிழார் தனிச் சந்நிதியில் உள்ளார். கிழக்குப் பகுதியின் ஈசான மூலையில் தனி மண்டபத்தில் தெற்கு நோக்கி ஒரே வரிசையில் வக்கிரமின்றி நவக்கிரகங்கள். அடுத்து ஆடல்வல்லான், பைரவர், சந்திரன், சூரியர்களுக்கு சன்னதிகள் உள்ளன. குண்டையூர் கிழார் தனிச் சந்நிதியில் உள்ளார். ஆலயத் திருப்பதிகங்கள் பொறிக்கப்பட்ட சலவைக்கற்கள் சுவாமி சந்நிதியில் பதிக்கப் பெற்றுள்ளன.

பிரம்ம தீர்த்தம்

ஆலயத்திற்கு அருகில்  சந்திரநதி கிழக்கு நோக்கி ஒடுகிறது. கோயிலுக்கு எதிரில் பிரம்ம தீர்த்தமும், தென்புறம் இந்திர தீர்த்தமும், மேற்புறம் அகத்தியர் தீர்த்தமும் உள்ளன. அம்பாள் சந்நிதியில் கிணறு வடிவில் சத்தி தீர்த்தம் உள்ளது. புனிதமான இந்நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது.

ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) ன்னதி உள்ளது. இத்தலத்தின் வடபால் அருகில் குண்டையூரும் வலிவலமும், தென்பால் முருகன் தலமான எட்டுக்குடியும், மேற்கில் கச்சனமும், கிழக்கில் சந்திரதீர்த்தம் கடலொடு சங்கமமாகுமிடமான காமேசுரமும் உள. இது நீராடும் துறையாக விளங்குகிறது. தை, ஆடி, மஹாளய பட்ச அமாவாசைகளில் மக்கள் இத்துறையில் நீராடுகின்றனர்.

இங்கு நடைபெறும் முக்கிய விழாக்கள் - மாசிமகத்தில் 'நெல் அட்டிச் செல்லும் விழா,  மற்றும் கார்த்திகை ஞாயிறு நாட்கள், முசுகுந்த அர்ச்சனை, வசந்த உற்சவம், தைப்பூசம் முதலியன. வைகாசிபெருவிழா 24 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. வசந்த மண்டபத்தில் 10 நாட்கள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் தியாகேசர். பின்னர் தேரோட்டம் கண்டருளி வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி நடைபெற்று வலது பாத தரிசனம் தந்தருளி யதாஸ்தானம் திரும்புகிறார்.

திருஞானசம்பந்தர், தம் திருப்பதிகத்தில், கோள்களின் தீமையகலும் குறிப்பினையும், மார்க்கண்டேயன், சண்டீசர்க்கு அருள் செய்தது. பாண்டவர்கள் வழிபட்டது, பாணபத்திரர்க்கு, அருச்சுனனுக்கு, நமிநந்தியடிகளுக்கு, இராவணனுக்கு அருள் புரிந்தது போன்ற குறிப்புகள் உள்ளன. நாவுக்கரசரின் திருப்பதிகத்தில், (திருக்குறுந்தொகை) உபமன்யு முனிவர்க்கும் பாற்கடலீந்த வரலாறு சொல்லப்படுகிறது.

பரவையாருக்காக நெல்லீந்த லீலை : திருக்குவளைக்கு அருகே உள்ள தலம் குண்டையூர். இவ்வூரில் வாழ்ந்த குண்டையூர்கிழார் சுந்தரர் மேல் அன்பு கொண்டு நாள்தோறும் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து இல்லறம் இனிதே நடத்திக்கொண்டிருந்த   சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.  ஒரு சமயம் அம்பெருமாட்டியின் இல்லத்தில் நெல் இருப்பு குறைவு  பெற்றமையால், பங்குனித் திருவிழா வருகின்றதே அப்போது அடியவர்களுக்கு அமுது செய்ய முடியாதே என்று   அவள் வாடிய போது  சுந்தரர் குண்டையூர் கிழாரிடம் சென்று நிலைமையை உரைத்தார்.

சுந்தரருக்கு அனுப்புவதற்குப் போதிய நெல் இல்லாமல் தவித்த குண்டையூர் கிழார் திருச்சோற்றுத் துறை நாதனை எண்ணி சிவ பூசை செய்து வழிபட்டார். கிண்ணம் பால் கேட்ட உபமன்யு முனிவருக்காகப் பால் கடலையே அனுப்பி வைத்த பெருங் கருணைப் பராபரன் குண்டையூர் கிழாருக்கு மலை மலையாக ஊர் முழுவதும் நெல் மழை பொழிய அருளினார். குண்டையூரில் நிறைந்த நெல் மலைகளைக் கண்டு வியந்து எம்பெருமானை போற்றிய  குண்டையூர் கிழார் சுந்தரருக்கு பெருமானின் பேரருளைத் தெரியப்படுத்தினார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் வந்து நெல் மலைகளைக் கண்டார். திருக்கோளிலிப் பெருமானான இலிங்கப்பரம் பொருளையும் அவனி விடங்கரையும் வழிபட்டுத் துதித்து நெல் மலைகளைத் திருவாரூர் கொண்டு செல்வதற்கு அருள் புரியுமாறு ஆரூரர்  கோளிலிப் பெருமான் முன் சென்று பதிகம்  பாடி இறைஞ்சினார். அப்பதிக பாடலில் ஒன்றாக,

‘‘நீள நினைந்து அடியேன் உம்மை நித்தலும் கை தொழுவேன்
வாள் எனக் கண் மடவாள் அவள் வாடி வருத்தாமே
கோள் இலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆள் இல்லை எம்பெருமான் அட்டித் தரப் பணியே’’

- எனப்பாடி நெல் மலையை எடுத்துச் செல்ல ஆட்களைத் தருமாறு வேண்டினார். கோளிலி நாதர் பூத கணங்களை அருளிச் செய்தார். அவை நொடிப் பொழுதில் நெல் மலைகளைத் திருவாரூரில் கொண்டு சேர்த்தன. சுந்தரர் ஊர் முழுவதும் அறிவிக்க திருவாரூர் மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் இல்லத்தின் முன் குவிந்திருந்த நெல்லை எடுத்துக் கொண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். ஊருக்கெல்லாம் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த குண்டையூர் கிழார் சந்நிதி திருக்கோளிலியில் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர் ஆகிய  தெய்வீக நால்வர் சந்நிதியை அடுத்து அமைந்துள்ளது. திருக்குண்டையூரில் நெல் அளந்த நாதர் திருக்கோயில் உள்ளது. இவ்வரலாற்றைச் சேக்கிழார் பெருமான்  பெரியபுராணத்தில் விரிவுற எடுத்துரைத்துள்ளார்.

மாசி மகநாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நெல் அட்டித்தரும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. அப்போது பஞ்ச மூர்த்திகள் குண்டையூருக்குச் சென்று விழா காண்கின்றனர்.  குண்டையூர் சிவாலயத்தின் தென் பாரிசத்தில் சுந்தரருக்காக குண்டையூர் கிழார் நெல் அளித்த இடத்தில் நெல் அளந்த மேடை உள்ளது. அங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தின் மக நட்சத்திரத்தின் மறுநாள் திருக்குவளை  (திருக்கோளிலி) சிவாலயத்திலிருந்து சுந்தரரின் திருவுருவம் (செப்புத்திருமேனி) எடுத்துச் செல்லப் பெற்று அவன் முன்பு அம்மேடையில் நெல் அளந்து  அளிக்கும் திருவிழா நடைபெறுகின்றது.  பின்னர்  பூதகணங்களைப் போன்று வேடமிட்டவர்கள் நெல்லை திருவாரூரில் உள்ள பரவையாரின் திருமாளிகைக்கு கொண்டு வந்து சேர்க்கும் விழா நடைபெறுகின்றது.


திருக்கோளிலி சிவாலயத்தின் முக மண்டபத்தின் மேற்தளத்துப் பார்வை பகுதியில்  இந்திரனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் வணங்க திருமால் தன் மார்பில் தியாகேசப்பெருமானை வணங்கும் கோலம், பிரம்மன் பூசித்தது, மூவரும் தேவாரம் பாடியது மற்றும் சுந்தரருக்காக குண்டையூர்கிழார் அளிக்கும் நெல், நெல்  மலையாகக் காணப்பெறுவது, இடபாரூடராக சிவபெருமான் உமையோடு காட்சி நல்குவது, பூத கணமொன்று பரவை நாச்சியார் முன்பு நெல்லைத்  தலையில் கோட்டையாக வைத்துச் சுமந்து வரும் காட்சி ஆகிய அழகிய சுதை சிற்பங்களை தரிசிக்கலாம். 

இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயிலாகும். சுவாமி அம்பாளுக்கு ஏராளமான ஆபரணங்களும் தியாகராசருக்கு வெள்ளி சிம்மாசனம், விடங்கருக்கு பெட்டகம், சுவாமிக்கு நாகாபரணம் முதலியன சமர்பித்து கும்பாபிஷேகமும்  திருப்பணி செய்துள்ளனர்.

இக்கோயிலில் 19 கல்வெட்டுகள் - சோழர், பாண்டியர் காலத்தியவை, கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 'திருக்கோளிலி உடைய நாயானர்' என்றும், தியாகேசர் 'அவனி விடங்கத் தியாகர்' என்றும் குறிக்கப்படுகிறார். இக்கோவிலின் வடக்குவீதி 'திருமறைக்காடன் திருவீதி' எனப்படுகிறது.

சோழப்பெருமன்னன் ராஜராஜன் காலத்தில் அருமொழி  தேவவளநாட்டு அளநாட்டிலும், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்கள் காலத்தில் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை  அள நாட்டிலும், பாண்டியன் இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரன் காலத்தில் ராஜேந்திர சோழ வள நாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்திலும்  திருக்கோளிலி என்னும் இவ்வூர் திகழ்ந்ததாகக் கல்வெட்டுச் சாசனங்கள் குறிக்கின்றன.

மேலும் சோழ மன்னர்கள் காலத்தில் விளக்கிடவும் விழாக்கள் கொண்டாடவும் அடியவர்களுக்கு அமுது செய்விக்கவும் தானம் அளிக்கப்பட்ட செய்திகளைக் கூறுகின்றன. இதன்மூலம் இக்கோயிலில் முப்பது வட்டத்துக் காணி உடையார் என்ற சிவப்பிராமணர்கள் இருந்தனர். இவர்களிடம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்ற மன்னனின் 18வது ஆட்சியாண்டில் திருவாதிரை நாள்விழா கொண்டாட 800 பொற்காசுகளைக் கொடுத்த செய்தி ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 

 மால தாகி மயங்கும் மனிதர்காள்

காலம் வந்து கடைமுடி யாமுனம்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.

 பொருள் : மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதன் முன்னம், அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக! `யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க! என்று அப்பர் பெருமான் பாடியுள்ளார்.

 காரைக்காலில் பணி புரிந்து கொண்டிருந்த போது  ஒரு தடவை அடியேன் இவரை தரிசிக்க சென்ற போது மரகத விடங்கரின் அபிஷேகத்தைக் தரிசிக்கும் பெரும் பாக்கியத்தை அருளினார். கிராமத்து கோவில் என்பதால் குருக்கள் மதியம் 12 மணியளவில் தான் வந்தார். ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளத்தில் நீராடி ஆலயத்தை திறந்து நிர்மால்ய தரிசனம் செய்து வைத்தார். பின்னர் தியாகராசர் சன்னதியில் மரகத லிங்க அபிஷேகம் தரிசனம் செய்யும் பாக்கியம் வாய்த்தது. அத்தடவை திருக்குவளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தையும் சென்று தரிசித்தோம். கோளிலி மேவிய  அவனி விடங்கப் பெருமானை தரிசித்த நாம் அடுத்து நீல விடங்கராக பெருமான் அருள் பாலிக்கும் திருவாய்மூரை தரிசிக்கலாம்.  இது வரை சோழ மண்டலத்தின் தியாகேசப் பெருமானின் சப்த விடங்கத்தலங்கள் ஏழினையும் தரிசித்தோம். அடுத்து தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத்தலங்கள் மூன்றினையும்  தரிசிக்கலாம் அன்பர்களே.

 

                                          திருப்பாத தரிசனம் தொடரும் . . . . .

Sunday, May 17, 2020

திருப்பாத தரிசனம் - 34

திருவாய்மூர் – ஸ்ரீகமல நடன   நீல விடங்கர்




அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற தலம் திருவாய்மூர் ஆகும். எங்கும் நிறை பரபிரம்மான சிவ பரம்பொருள் பல தலங்களில் எண்ணற்ற திருவிளையாடல்கள் புரிந்துள்ளார். இவ்வாறு மண்ணுலகில் அப்பெருமான்  திருவிளையாடல் (லீலை)  புரிந்த தலமாக போற்றப்படுகிறது  லீலாஹாஸ்யபுரம் என்னும் திருவாய்மூர். வாய்மையூர் என்பதே வாய்மூர் என்று மருவியது என்பர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இத்தலம்  124ஆவது தலமாகும். திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பந்தருக்கும்  திருக்கயிலாயக் காட்சி நல்கிய தலம். கயிலாய மலை நந்தியெம்பெருமான் மற்றும் சர்ப்ப வாகனத்தில் இரண்டு தென் முகக்கடவுள் அருள் பாலிக்கும் தலம். வடக்கு நோக்கிய கல்யாண துர்க்கை அருளும் தலம். அமர்ந்த கோல முருகன், கேது  மனித ரூபத்தில் உள்ள தலம்.  இத்தலத்திற்கு அப்பர் பெருமானின் இரு பதிகங்களும், சம்பந்தப்பெருமானின் ஒரு பதிகமுமாக மூன்று பதிகங்கள் உள்ளன. சுந்தரரும் திருவாய்மூர் மணாளர் என்று பாடியுள்ளார்.

காசிப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்த புதல்வர்களில் ஒருவன் பலா மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பூசித்துப் பரமன் திருவருளால் வாயு மண்டலத்திற்கு அதிபதியாய் வாயு தேவன் ஆனதால் வாயூர் என்று பெயர் பெற்று வாய்மூர் என்று ஆயிற்று. தட்சிணா மூர்த்தியின் நெற்றிக் கண் பொறியால் திருமால் மைந்தன் மன்மதன் எரிந்து உடலும் எஞ்சாமல் பிடி சாம்பலானது கண்டு லிங்கப் பரம் பொருளை வழிபட்டுத் தொழுத இரதிதேவிக்கு அருளிச் செய்ததற்கு ஏற்ப மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைத்த மகேசுவரனின் வாய்மை காரணமாக வாய்மையூர் என்று பெயர் பெற்று வாய்மூர் என்று ஆயிற்று.

திருவாரூர் – வேதாரண்யம் பேருந்து மார்க்கத்தில் திருவாரூரில் இருந்து 25 கி.மீ தூரத்திலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து 13 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.  திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது . நாகப்பட்டினம்  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள சீரா வட்டம் பாலம் என்ற இடத்தில் இருந்து  2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சாலையோரத்தில் கிழக்கு நோக்கியவாறு திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தில் முன்புறம் பாவ விமோசன பிரசண்ட தீர்த்தம் என்ற பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரே பிராகாரம் கொண்ட இக்கோயிலில் கருவறைக்கு இணையாகத் தெற்குப் பிராகாரத்தில் தியாகராஜரின் மண்டபம் அமைந்துள்ளது.  இதில் அழகிய பெரிய  மஞ்சத்தினுள் அமைந்த இரத்தின சிம்மாசனத்தில் அல்லியங்கோதை அம்பாள் உடனுறை நீலவிடங்கர் என்ற பெயரில் தியாகராஜர் கொலு வீற்றிருக்கின்றார்.  ஐப்பசி மாதப்பிறப்பன்று இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது.

மேலும் இவருடைய சன்னதியில் அரிய நீல ரத்தினக் கல்லால் ஆன சிவலிங்கம் விடங்கராக வைத்துப் பூஜிக்கப்படுகின்றது. இவர் ஏனைய விடங்கர்களை விட அளவில் சிறியவர். உயர்ந்த வகை ஸ்படிகலிங்கம் ஒன்றும் உள்ளது.     தினமும் இரு முறை விடங்கருக்கு பால், சந்தனம், பன்னீர் முதலிய திரவியங்களினால் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது.




இவருடைய நடனம் கமல நடனம் எனப்படுகின்றது. மருத நிலப்பகுதி அல்லவா?  ஐயனும் அப்பகுதியின் இரத்தினமான தாமரை மலர் ஆடுவது போல் ஆடுகின்றார். தண்ணீர் நிறைந்த குளத்தில் தாமரை மலர் தென்றல் வீசுவதற்கேற்ப ஆடுவதுபோல இவர் ஆடுதலின் இவருடைய நடனம் கமலநடனம்  எனப்பட்டது.  தினமும் மாலையில் சிறப்பு வழிபாடும் அவ்வேளையில் வடையும், புட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன. இவருடைய கோயில் பொற்கோயில் என்றழைக்கப்படுகிறது.

திருநாவுக்கரசர் திருவாரூரில் தியாகராஜப்பெருமான் பவனி வரும் அழகைக் கண்டு பரவசமடைந்து 'ஆதிரை நாளால்' அது வண்ணம் என்று பாடியது போலவே வாய்மூர் அடிகளான தியாகேசர் பவனி வந்த அழகையும் கண்டு களித்துப் 'பாட அடியார் பரவக்கண்டேன்' என்ற பதிகத்தினை அருளிச் செய்துள்ளார்.  அப்பதிகத்தில் மெல்லியலும்  விநாயகனும் தோன்றக்கண்டேன் என்று பாடியுள்ளதால், திருவாரூர் விழாவில் பக்தர்கள் பாடியாடி சித்தர்கள் சூழ்ந்து நிற்க, பதினெண் கணங்கள் உடன்வர, விநாயகரும், பார்வதியும் உடன்வர பக்தர்கள் கழல் வலங்கொண்டு உடன்வர, பெருமான் வலம் வந்தது போலவே இங்கும் வலம் வந்த அழகைக் கண்ணாரக் கண்டு களித்துவாய்மூர் அடிகளை நான் கண்டவாறேஎன்று பாடுவது படித்து இன்புறத்தக்கதாகும்.

தளிரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருணல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொருள் : தளிர்களோடு கூடிய இளங்கொம்பு போல , உமையம்மை அருகிருந்து பாடவும் , தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்ளை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திரு நீறுபூசி, முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். திருவாய்மூர் அடிகளாகிய அவர் வருவார் காணீர் என்று சம்பந்தப்பெருமான் தான் சிவ பெருமானை கண்ட கோலத்தை பதிகத்தில் பாடியுள்ள இத்தலத்தின் 

இறைவன்: வாய்மையர், வாய்மூர் நாதர், வாய்மூர் அடிகள்

அம்மை:   க்ஷீரோப வசனி  -  பாலின் ன்மொழியாள்

தல விருட்சம்: பலா

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்: பிரம்மன், சூரியன், தேவேந்திரன், நவகோள்கள், வால்மீகி முனிவர்.

தியாகேசர்: நீல விடங்கர்.

திருநடனம் : கமல நடனம்.

தேவாரப் பாடல்கள்: தளிரிள வளரென வுமைபாடத்- திருஞானசம்பந்தர்,  எங்கேயென்னை இருந்திடந்தேடி – அப்பர்.

இத்திருவாய்மூர்ப் பெருமானை பிரம்மனும், சூரியனும் ஒன்பது கிரகாதிபதிகளும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்கு வருடத்தில் கதிரவன் ஒளி சிவலிங்கத்தின் மீது விழுவதால் அப்போது சூரிய பூஜை நடை பெறுகிறது. சூரிய பூஜை செய்வதால் நேத்திர ஸ்தலமாக விளங்குகிறது. பிறவியிலேயே கண் தெரியாத இளைஞர் ஒருவர் நந்தியாவட்டை பூவை 48 நாட்கள் சிவன் மீது வைத்து பூஜை செய்து அதை அவர் கண் மீது வைத்துக் கொண்டதால் மூன்று மாதங்களில் கண் ஒளி பெற்றார். மூலவருக்கு இத்தலத்தில்  அபிஷேகம் உண்டு. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினாலும், வாய்மூர்நாதர் மேல் வைத்த சந்தனம், விபூதி இவற்றைப் பூசிக் கொண்டாலோ இவர் மருந்தாய்ப் பிணி தீர்க்கிறார். “ருத்ராட்ச பந்தலின் கீழ் அருளுகின்றார் திருவாய்மூர்நாதர்.

 

வடக்கு பிரகாரத்தில் அம்பாள் பாலின் நன் மொழியாள் சிவ பூசைக்காக மலரும்  ருத்ராட்ச மாலையும் தாங்கிய கோலத்தில் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். அம்மனுக்கு வாகனமாக நந்தி இருப்பது ஒரு சிறப்பு. அம்பாளை தேவேந்திரனும், தியாகேசப்பெருமானை வால்மீகி முனிவரும்  வழிபட்டுள்ளனர்.

 

சூரியன் - சாயா தேவியின் புதல்வர்களான யமனுக்கும்,  சனி பகவானுக்கும் இடையே ஒரு சமயத்தில் பகை உண்டானது. சனிக்கு யமன் சாபமளிக்கின்றார். தன் தாய் சாயாதேவியின் ஆலோசனையின் பேரில் சனி பகவான்,  கால பைரவாஷ்டமி தினமான கார்த்திகை மாத தேய் பிறை அஷ்டமியன்று  திருவாய்மூர் வந்து அஷ்ட பைரவரை வழிபடுகின்றார். எனவே அவருக்கு ஈசன் அருளால் கிரகப்பதவி கிட்டியது. எனவே இத்தலம் காசிக்கு இணையான தலமாக  கருதப்படுகின்றது.


அஷ்ட பைரவர்

ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர், ஸ்வர்ண பைரவர் என்று எட்டு பைரவர்கள் வீற்றருளும் தலமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. அஷ்ட பைரவர்களில் அகோர பைரவர் நல்ல பதவியைக் கொடுப்பார். ஆனந்த பைரவர் திருமணத்தடை நீக்குவார். பாதாள பைரவர் மனைக்கட்டு பிரச்சினைகள் தீர்த்து வைப்பார். கால பைரவர் வியாதிகள் தீர்ப்பார்; யம பயம் நீக்குவார். ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்தைக் கொடுப்பார். ஈஸ்வர பைரவர் எதிரிகள் நீக்குவார். உத்தண்ட பைரவரை வழிபட்டால் வழக்குகள் வெற்றி பெறும். பால பைரவர் மழலைச் செலவம் அருளுவார். இங்கு அஷ்ட பைரவரை வேண்டிக்கொண்டு நம்முடைய விண்ணப்பத்தை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அவரிடம் வைத்து விட்டால் நம் வேண்டுதல் நிறைவேறியவுடன் பால் அபிஷேகம் செய்து நம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தற்போது ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர் மற்றும் பால பைரவர் ஆகிய நான்கு மூர்த்தங்கள் மட்டுமே உள்ளன. மற்ற மூர்த்தங்களுக்கு பதிலாக சுக்குமா தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

பைரவரின் அருளால் சாபம் நீங்கப்பெற்ற இந்திரனின் மகன் ஜயந்தன் இத்தலத்தில் சித்திரை மாதம் முதல் வெள்ளியன்று வழிபடுகின்றார்களோ அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள் புரிந்தார். இன்றும் சித்திரை மாத முதல் வெள்ளியன்று ஜயந்தன் பூசை நடைபெறுகின்றது. ஞாயிற்று கிழமையன்று பைரவர்களுக்கு ருத்ராபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, தோஷங்களினால் தடைபட்ட திருமணம் கூடி வரும். வெள்ளிக் கிழமைகளில் வில்வ பத்திரத்தினால் அர்ச்சனை செய்ய வறுமை நீங்கி வளம் பெறலாம். சனிக்கிழமைகளில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி மூலம் வரும் தொல்லைகள் நீங்கும். மற்றும் இத்தல பைரவர்களை வழிபட இழந்த சொத்துக்களை திரும்பக் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்.

 

தோரண வாயிலுடன் அமைந்துள்ளது ஆலயம். எதிரே அழகு மிளிர, பரந்து விரிந்து காணப்படுகின்றது தல தீர்த்தமான பாவ விமோசன பிரசண்ட தீர்த்தம். பிரம்மா முதலான தேவர்கள், தாரகாசுரனுக்கு பயந்து பறவை வடிவெடுத்து சஞ்சரிக்கும் போது, இத்தலம் அடைந்து இத்தீர்த்தத்தில் நீராடி, திருவாய்மூர் நாதனை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்ற பெருமை உடையது. இக்குளக்கரையில் திருக்குள வினாயகர் சன்னதி அமைந்துள்ளது.  ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய தீர்த்தமும், இவ்வாலயத்திற்கு தெற்கே பாயும் அரிச்சந்திரா நதியும் தீர்த்தமாக திகழ்கின்றன.

இராஜகோபுரத்திற்கு வெளியே   வினாயகப்பெருமானுடன் கூடிய  பலிபீடம்,  கொடிமரம்,  நந்தி மண்டபம் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பு. ஒரு காலத்தில் இரண்டு பிரகாரங்கள் இருந்திருக்கலாம்.  அடுத்து  மூன்று நிலை இராஜ கோபுரம் ஐந்து  கலசங்களுடன் எழிலாக அமைந்துள்ளது

உள்ளே தென்புறம் மடப்பள்ளி, வடபுறம்   அஷ்ட பைரவர்கள் சன்னதி.  கிழக்கு நோக்கி தியாகர், திருவாய்மூர் நாதர்,  அப்பருக்கு காட்சியளித்த வேதாரண்யேஸ்வரர் என்று மூன்று  சன்னதிகள் மஹா மண்டபம் மற்றும் அந்தராளத்துடன் அமைந்துள்ளன. திருவாய்மூர் நாதர் சுயம்பு, சற்று இடப்புறம் சாய்ந்த வண்ணம் அருள் பாலிக்கின்றார். இவர் சன்னதியில் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். பங்குனி மாதம் 12, 13 நாட்களில் சூரியனின் கதிர்கள் சுவாமி, அம்பாள் திருமேனியைத் தழுவுகின்றன.

மூலவருக்கு தென்புறம்  நீலோற்பலாம்பாள் உடனுறை நீலவிடங்க தியாகேசர், அனைத்து சப்த விடங்கத்தலங்களைப் போலவே ஐயனுக்கு  முன்னே வீர, ஞான கட்கங்கள் மற்றும் நின்ற கோல செப்பு நந்தி அமைந்துள்ளது.  ஐயனுக்கு வலப்புறம் வேதாரண்யேஸ்வருக்கு தனி சன்னதி உள்ளது.  மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கி ஆடல் வல்லான்  புதுமையான உன்னத கோணத்தில் அட்டாணிக்கால் இட்டு சாந்தமே வடிவாக அருட்காட்சி அளிக்கின்றார். அருகே  தியாகேசப்பெருமானுக்கு கட்டுப்பட்டு வகிரகங்கள் ஒரே வரிசையில் காட்சி அருள்கின்றனர்.


                       

யோக தட்சிணாமூர்த்தி 

திருவாய்மூர்ப்பெருமானின் கருவறைச் சுவற்றில் நான்கு தூண் மண்டபத்தில் வேதமும் வேதப் பொருளும் உரைத்த  ஞான தட்சிணா மூர்த்தியும், தியாகேசர் கருவறைச் சுவற்றில் முழந்தாள் மீது கரம் வைத்து நந்தியின் மேல் அமர்ந்துள்ள  காம தகனராகிய யோக தட்சிணா மூர்த்தியும் காட்சி தருகின்றனர். முயலகன் மாறியுள்ளான். யோக தட்சிணா மூர்த்தி கூரை கூம்புக் கூரையாக அமைந்துள்ளது. திருவாய்மூர்ப் பெருமான்  கருவறைப் பின்புறச் சுவற்றில் அடிமுடி காண இயலா லிங்கோற்பவரும்,  தியாகர் கருவறைப் பின்புறச்  சுவற்றில் மகா விஷ்ணுவும் அருள் பாலிக்கின்றனர். தெற்கு கோஷ்டத்தில்  வினாயகர் இரு பக்கமும் அடியார்கள் வணங்ர்த்தன கோலத்தில் எழுந்தருளியுளார். வட கோஷ்டத்தில் துர்க்கை வித்தியாசமான கோலத்தில் திருக்கரத்தில் ஒலை சுவடி ஏந்தி, சிம்ம வாகனத்துடன் எழிலாக அருள் பாலிக்கின்றாள். பிரதான கணபதி சன்னதி தென்மேற்கிலும், மேற்கில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதியும், வடமேற்கில் கஜலக்ஷ்மி சன்னதியும் அமைந்துள்ளன. அம்பாள் சன்னதி ஐயனுக்கு இடப்புறம் அமைந்துள்ளது.

பல சித்தர்கள் வாய்மூரை வழிபட்டுப் பூசித்துள்ளனர். வாய்மூர்ப் பெருமானாகிய வாய்மூர் நாதரையும் நீல விடங்கரையும் வழிபட்ட வால்மீகிச் சித்தர் என்பவர் பிரதிட்டை செய்து பூசித்த லிங்க சன்னதி பிரகாரத்தில் உள்ளது. வால்மீகிச் சித்தர் சிவ பூசை செய்யும் காட்சி வாய்மூர் நாதர் கருவறைச் சுவற்றில் காணப்படுகிறது. சிவ பூசைக்காக சித்தர் உண்டாக்கிய கிணறு சித்தர் கூபம், சித்தர் தீர்த்தம் என்ற பெயரில் பிரகாரத்தில் உள்ளது.


திருவாய்மூருக்கு ஒன்றாக வந்து தீர்த்தம் உண்டாக்கி சிவ பூசை செய்த  சூரியன் முதல் கேது வரையிலான  கிரக தேவர்கள் பிரகாரத்தில் வரிசையாக உள்ளனர். இவர்கள் பிரதிட்டை செய்து தொழுது வழிபட்ட லிங்க மெய்ப் பொருள் பிரகாரத்தில் உள்ளது. அருகே சூரியனும் சந்திரனும் உள்ளனர். அப்பருக்கும் சம்பந்தருக்கும் காட்சி கொடுத்த ஆடல் வல்லான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இவரது வாசலில் வியாக்ரபாதர், பதஞ்சலி சுதை சிற்பங்கள் அருமை. வல்லப கணபதி, துவார கணபதி மற்றும் காட்சி கொடுத்தார்  வாயிலில் விரல் காட்டி விநாயகர் கணபதி அருளுகின்றார். நாராயணி வழிபட்ட லிங்கம் அருகில் சங்கு சக்கரத்துடன் நாராயணி அருளுகின்றாள். சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன, வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. 

அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே

பொருள்: அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ நள்ளிரவில் அனலேந்தி ஆடும் அவ்விறைவர் அம்மகளிரது பரவுதலை ஏற்றருளுபவர். வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒரு காதில் தோடணிந்து புலித்தோலுடுத்தி வருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர்  என்பதில்  மகா சங்கார தாண்டவத்தைப் பல்வேறு கூறுபாடுற்ற சத்திகள் ஒருங்கு சேர்ந்து காணும் உண்மை உணர்த்தியுள்ளார்  தம்முடைய பதிகத்தில் ஆளுடையபிள்ளையார். இனி அப்பர் பெருமானுக்கும், சம்பந்தப்பெருமானுக்கும் தமது தரிசனத்தை இறைவன் நல்கியதைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.


                                             

வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில், மறைக்காட்டு நாதர் ஆலயத்தின் அடைக்கப்பட்ட திருக்கதவங்களை தனது கெஞ்சு தமிழால் பாடித்திறக்க வைத்தார் திருநாவுக்கரசப் பெருமான்.  மீண்டும் அக்கதவங்கள் மூடித் திறக்கும் படியாக கொஞ்சு தமிழில் பாடினார் அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையான திருஞானசம்பந்தர்,  ஒரு பாடல் பாடியவுடனே கதவங்கள் அடைபட்டன.  வாகீசப்பெருமான் பத்து பாடல்களைப் பாடிய பின்னரே கதவுகள் திறந்தன. ஆனால் ஆளுடையப்பிள்ளை ஒரு பாடல் பாடிய உடனே கதவுகள் அடைபட்டன  இதை எண்ணி நெஞ்சுருகி  நின்றார் அப்பர் பெருமான். தனது பாடலில் இனிமை குறைந்ததோ என்று எண்ணிக் கலங்கி தமது திருமடத்தில் கண் மூடிப்படுத்திருந்த அப்பர் பெருமான் முன் தோன்றிய சிவபெருமான் “திருவாய்மூருக்கு  வா என்னோடு” என்று அழைத்துச்சென்றார்.  தமது பதிகத்தில் அப்பர் பெருமான் இத்திருவிளையாடலை இவ்வாறு பாடுகின்றார்

எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ.

பொருள்: தென்னை மரங்ள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டு கொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்ன?  மேலும்

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்

உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத்

தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி

என்னை வாவென்று போனார தென்கொலோ?

பொருள்: எம்பெருமானையே நினைந்து நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமையுடைய மறைக்காட்டுறையும் மணவாளர் தன்னை வாய்மூர் இறைவனும் ஆனதை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்ன? என்று வியந்து கனத்த இருட்பொழுதில் ஈசன் மின்னொளி காட்டி முன் செல்ல பின்னே சென்றார். அப்பரைக் காணாத சம்பந்தப்பெருமான் இருளில் அவர் அவர் தனியாகச் செல்வதை உணர்ந்து அவர் பின்னே தானும் சென்றார். வழிகாட்டிச் சென்ற ஒளிச்சுடர் திருவாய்மூர் பொற்கோவில் அருகில் சென்றவுடன் மறைந்து விட்டது. ஆளுடையப்பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். அப்போது வாகீசப்பெருமான்

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.

பொருள்: வேதங்களாற் பூசிக்கப் பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப் பாடலை உறுதியுடன் பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் தோ நின்றார்; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரேயாவர் காணீர் என்று பாடியவுடன் பரமன் உமையுடன் கூடி இடபத்தின் மேல்  திருடனமாடியபடி இருவருக்கும் திருக்காட்சி அளித்தார். அம்மையப்பரை தரிசனம் செய்த ஆனந்தத்தில் சம்பந்தப்பெருமான்  

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

 

பொருள்: பிறை சூடியவராய், சுடர் முடியவராய், திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றை மாலை சூடியவராய், பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி, தாருகாவன முனி ன்னியர் பலி பெய்யுமாறு பிரம்ம கபாலத்தை ஏந்தியவராய் திருவாய்மூர் இறைவர் வருவார் என்று பதிகம் பாடி அருளினார். அப்பர் பெருமானும்

பாட அடியார் பரவக் கண்டேன் பத்தர் கணம்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன் அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
கோடல் அரவார் சடையில் கண்டேன்கொக்கினிதழ் கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே!!

பொருள்: அடியார்கள் பாடிப் பரவவும் பத்தர் கணம் சூழ்ந்து நிற்கவும் பூத கணங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அழகிய திருக்கரத்தில் அனல் ஏந்தியவரும், காந்தட்பூவும்,   அரவமும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும், கொக்கிறகைச் சூடியவரும், கொன்றை மாலையை அணிந்தவரும்,  பிரம்மனின் உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்  என்று தான் கண்ட கோலத்தை அற்புதமாகப் பாடுகின்றார்.

                             

அப்பர் பெருமானுக்கு இறைவன் முதன் முதலாக தரிசனம் அளித்த தலம் என்பதால் மற்ற தலப்பதிகங்களிலும் க்ஷேத்திரக் கோவையிலும் திருவாய்மூரைப் போற்றிப் பாடியுள்ளார். திருவாய்மூர் பெருமானை “பரிந்தேத்தும் அன்பருக்குத் தக்க பரிசளிப்பார்” என்று அருளுகிறார். சம்பந்தப்பெருமானோ எத்துன்பத்தில் ஒருவர் இருந்தாலும் “திருவாய்மூர் நாதா என்று நினைத்தால், உடனே வந்து அருள் புரிவார் என்று அறுதியிடுகின்றார். பட்டினத்தாரும், இராமலிங்க வள்ளலாரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். வள்ளலார் தம் பாடலில் “காய்மூர்க்கரேனும் கருதிற் கதி கொடுக்கும் வாய்மூர்க் கமைந்த மறைக்கொழுந்தே” என்று போற்றுகிறார்.



நிதி பற்றாக்குறை காரணமாக பல வருடங்களாக  இங்கு பெருந்திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. வைகாசி பெருந்திருவிழா ஏகதின உற்சவமாகக் கொண்டாடப்படுகின்றது.  அன்று பகலில் சந்திரசேகரர் தீர்த்தம் கொடுப்பதும் இரவில் பஞ்சமூர்த்தி விழாவும் நடைபெறுகின்றன.  மார்கழித் திருவாதிரையன்று தியாகராஜர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்.

பல்லவ, சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இவ்வாலயத்தில் சோழர் கால முப்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பராந்தக சோழன் இத்தலத்தில் சதய ட்சத்திரத்தில் திருவாய்மூர் நாதருக்கு திருமஞ்சனம் நடத்திய பின்னரே மகுடம் சூட்டிக்கொண்டான். திருவாய்மூரில் நீல விடங்கரை தரிசித்த நாம் அடுத்து திருக்கோளிலியில் பிரம்ர நடன அவனி விடங்கரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.

திருப்பாத தரிசனம் தொடரும் . . . ..