Tuesday, February 4, 2020

திருப்பாத தரிசனம் - 6


தியாகேசர் பூவுலகம் வரச் செய்த லீலை

இவ்வரலாறு தியாகராஜ லீலையில் உள்ளது. ஒரு சமயம் பரமேசுவரன் தேவதச்சனான விசுவகர்மாவை அழைத்துதாம் பூவுலகத்தில் நிலையாக தங்கியிருந்து  அன்பர்களுக்கு அருள் பாலிக்க விரும்புகிறோம்.  அதற்கு யாம் தேர்ந்தெடுத்த தலம் சோழ மண்டலத்திலுள்ள இயற்கையெழில் நிரம்பிய  திருவாரூர் ஆகும். அங்கு யாம் எழுந்தருள ஏற்றதொரு பெரிய கோயிலை அமைப்பாயாகஎன்றார்.

அதன்படியே விசுவகர்மாவும், காட்டை சீர்படுத்தி புதிய நகரம் அமைத்து அதன் நடுவில் அழகிய ஆலயத்தை அமைத்தான். இறைவன் எழுந்தருளப் போகின்றான் என்று முனிவர்கள், தேவர்கள், கந்தவர்கள், யக்ஷர்கள் மனிதர்கள் அனைவரும் திருவாரூரில் கூடினர். நகரத்தை அலங்கரித்தனர். ஆண்டு தொடக்கமான வசந்தகால பௌர்ணமியில், குரு சந்திரயோகம் கூடிய கடக லக்கின முகூர்த்தத்தில்  சிவபெருமான் வேத மேடையில் சோமாஸ்கந்தராக  தியாகராஜராகவும், அருகே வன்மீக நாதராக சுயம்பு லிங்க வடிவிலும் தோன்றியருளினார். அகத்தியர் முதலிய முனிவர்கள் பெருமானுக்கு புனித தீர்த்தங்களினால் நீராட்டி சிவாகம விதிப்படி பூசைகள் புரிந்தனர். எம்பெருமானும் அவர்கள் முன் தோன்றி வரங்கள் அருளினார். அன்று முதல் பூலோக கயிலாயமான திருவாரூரில் வீற்றிருந்து அருளாட்சி நடத்துகின்றார் ஸ்ரீதியாகராஜப் பெருமான்.


திருமால் தன் மார்பில் தியாகேசரை வைத்து வணங்கும் கோலம்


ந்தபுராணத்தில் தட்ச காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு இது. ஒரு சமயம் திருமால் மகப்பேறு வேண்டி சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். அத்தவத்திற்கு மகிழ்ந்த அம்மையப்பர் அவருக்கு காட்சியளித்தனர். சிவபெருமான் அவருக்கு சந்தான பாக்கியம் அருளினார். அவ்வரத்தை ஐயன் வழங்கும் போது திருமால் உமையம்மையை வணங்கத் தவறினார். தன்னை திருமால் மதிக்கவில்லை என்று சினந்த உமையம்மை, முகுந்தனை நோக்கி தமையனே! பெருமான் அளித்த வரத்தால் பிறக்கும் மகன் அவராலேயே அழிவான்  என்று சாபமிட்டாள்.  அதனால் கவலை கொண்ட திருமால் சிவபெருமானை வேண்ட அவரும் அம்மையுடனும் ஸ்கந்தனுடனுமான சோமாஸ்கந்த மூர்த்தியாக உடன் விடங்கரான லிங்கத்துடனும் தோன்றினார்.

சோமாஸ்கந்தரைக்  கண்டு ஆனந்தம் கொண்ட திருமால் தியாகேசர் திருமேனியை தன் திருமார்பில் சுமந்து வைகுண்டம் சென்று திருப்பாற்கடலில் ஆதிசேன்   மேல் பள்ளி கொண்டு   அஜபை மந்திரத்தின் ஆனந்தம் பெற்று  அரியதொரு பூசை செய்தார். இவ்வாறு திருமால் திருமகள் இருவருக்கும் புத்திரப்பேறு தந்தருள புற்றிடங்கொண்ட புனிதரை திருமால் பாற்கடல் எடுத்துச் சென்றார். அங்கு தன் இதயக்கமலமான மார்பில் வைத்து யோக நிலையில் பூசித்து வந்தார். அவர் மார்பில் எழுந்தருளியிருந்த தியாகேசப்பெருமான் முகுந்தன் விடும் மூச்சின் அசைவினாலும், பாற்கடலின் அலைகளின் அசைவினாலும் இடையறாது ஆடிக்கொண்டிருந்தார்.  பூசைக்கு மகிழ்ந்த அம்மையப்பர் மீண்டும் காட்சி தந்தருளினர்.

திருமால் அம்பிகையிடம் தன் மகனுக்கு அவள் தந்த சாபத்தை நீக்கியருளும்படி வேண்டினார். முகுந்தனின் துதிகளால் மகிழ்ந்த உலகம்மை தமையனே! என் சாபம் தடையின்றி நடந்தே தீரும். உன் மகன் அழிவான். மீண்டும் நானே அவனை உயிர்த்தெழச் செய்வேன். அவன் உடலின்றி அநங்கனாய் எனது சேனையின் தலைவனாய் திகழ்வான். அவன் மன்மதன் என்று பெயரேற்று பொன் வசந்தப் பூச்சொரியும் அழகனாய், காதலின் கடவுளாய் திகழ்வான் என்று அருளினாள். பின்னர் மூவரும் அவர் பூசித்த ஸ்ரீதியாகராஜ மூர்த்தத்தில் கலந்தனர். பின்னர் இந்திரனின் அமரலோகத்தில் பூசைகளை ஏற்று மீண்டும் திருவாரூர் திருமூலட்டானம் அருகே தனிக்கோயிலில் பூச நட்சத்திரம் கூடிய குரு சந்திர யோகம் அமைந்த நன்னாளில் எழுந்தருளினார்.

திருமாலின் ஆணவத்தை ஒடுக்கி, பின் திருமகளின் தவத்திற்கு மகிழ்ந்து, அவளுக்கு திருமாலினை திருமணம் செய்தருளியதோடு புத்திரப்பேறு தந்தருள் செய்ததும் திருவாரூர் திருத்தலம் என்பதால், மகப்பேறு வேண்டுபவர்கள் இத்தலம் வந்து தியாகேசரை வணங்கி தங்கள் குறை நீங்கப்பெறுகின்றனர்.

எண்ணிலா உலகின் மிக்க எண்ணிலாப் பதியி ருப்ப
வண்ணவேல் மைந்த னோடும் மரகத வல்லி யோடும்
நண்ணிவீற் றிருப்ப ஞான நாயகன் விழைந்தான் எண்ணில்
அண்ணல் ஆரூர்முன் செய்த புண்ணியம் புகலற் பாற்றே என்று தலபுராணம் திருவாரூர் புகழ் பாடுகின்றது. இவ்வாறு சிவபெருமான் தானே உகந்து ந்து அமர்ந்த தலம் திருவாரூர் என்பது ஒரு வரலாறு.


“வான் பழித்து  இம்மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்; ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;ன்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியபடி தியாகேசர் வானுலகம் விடுத்து பூவுலகம் புகுந்த இன்னொரு வரலாறு, ஒரு சமயம் வாற்கை என்ற அசுரனால் தேவர்கள் கடுந்துயருக்கு ஆளாயினர். அப்போது அவர்கள் பிரமனிடம் முறையிட அவர் தேவர்களை திருப்பாற்கடலுக்கு அழைத்துச்சென்றார், அப்போது திருமால் தன் மார்பில் வைத்து பூசித்துக் கொண்டிருக்கும் ஹம்சமந்திர சொரூபம், தியாகசிந்தாமணி ஆகிய தியாகேசப்பெருமானையும் விடங்கரையும்  இந்திரனுக்கு அளித்தார். பெருமானை நீ ஆராதித்து வர உன் துன்பம் விலகும், நலம் பல பெருகும் என்றருளினார். பின்னர் திருமால், பாற்கடலை விட்டு நீங்கிச் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடும் தில்லையம்பதி அடைந்து, எம்பெருமானை  நான்கு மாதங்கள் வழிபட்டு, பின்னர் வாற்கலியை எதிர்த்து போரிட்டு அழித்தார்.     திருமால் அளித்த  தியாகருடன் இந்திர லோகம் அடைந்த  இந்திரன் கற்பக மலர்களாலும், பாரிஜாதத்தாலும் பெருமானை ஆராதித்து தன் துன்பம் நீங்கப்பெற்று தேவர் குழாத்துடன் இன்புற்றிருந்தான். இவரருளால் இந்திரன் ஜெயந்தன் மற்றும் ஜெயந்தி ஆகிய பிள்ளைகளைப் பெற்றான். 

தியாகராஜப்பெருமான் அமரருலகத்தை விடுத்து பூவுலகிற்கு எழுந்தருளி மாந்தர்களுக்கு தன் லீலைகள் மூலம் அருள் செய்ய திருவுளம் பற்றினார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி ஆவார்.

ஒரு சமயம் ஐயனின் வெள்ளிப்பனிமலையாம் கயிலை மலையிலே அம்மையும் ஐயனும் ஏகாந்தமாக ஒரு சோலையிலே வில்வ மரத்தடியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது அம்மரத்தின் மேலிருந்த ஒரு குரங்கு வில்வ இலைகளால் அம்மையப்பரை அர்ச்சனை செய்தது. அதனால் கோபமுற்ற உமையம்மை அக்குரங்கை சினந்தாள். கருணா மூர்த்தியாகிய பெருமான் “இன்று சிவராத்திரி என்று அறியாமலே அது நம்மை வில்வத்தால் அர்சித்துள்ளது. எனவே அதற்கு அருள்வோம்” என்று, அதன் பக்திக்கு மெச்சி க்குரங்கிற்கு மண்ணுலகில் சக்ரவர்த்தியாக பிறக்கும் வரம் அளித்தார். அவரும் மண்ணுலகில் முசுகுந்த சோழ சக்ரவர்த்தியாக பிறந்தார். மண்ணுலகிலும் தன் நிலை மாற வேண்டாம் என்று குரங்கு முகத்துடனே இருந்தார் சிவநெறியுடன் வாழ்ந்தார்.

சோழ மண்டலத்தில் அரிச்சந்திரன் மரபில் வந்த கருவூரைத் தலைநகராகக் கொண்ட சோழமன்னர் குலத்தில் பிறந்து முசுகுந்த சக்கரவர்த்தி அரசு புரிந்து வந்தான். வசிட்ட முனிவரிடம் சென்று, முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் சிறந்தது என்று வினவி, அவரது உபதேசப்படி வெள்ளிக்கிழமை விரதத்தை முறையாக பல காலம் அனுஷ்டித்து வந்தான். முருகப்பெருமானும் முசுகுந்தன் முன் தோன்றியருளினார். அரசனும், வீரபாகு முதலான நவ வீரர்களையும் தமக்கு துணையாக தந்தருள வரம் வேண்டினார். முருகப்பெருமானும் அவ்வாறே அருளினார். அவர்களும் பூவுலகில் பிறந்து முசுகுந்தன் சுற்றத்தராக விளங்கி அவருக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தனர்.

ஒரு சமயம் வலன் என்னும் அசுரன் இந்திரன் மேல் படையெடுத்து வந்தான். அஞ்சி டுங்கிய இந்திரன் திருமாலை சரண் அடைந்தான். திருமால், இந்திரனிடம், “அவ்வசுரன் மானுடரால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டும்” என்று வரம் பெற்றுள்ளான். எனவே நீ பூமண்டலத்தில் முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியை பெற்று அவனை வெல்வாயாக என்று ஆலோசனை கூறினார். இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் ஒரு தூதுவனை அனுப்பி அவரை அழைத்துவரக் கூறினான்.  முசுகுந்தரும் நவ வீரர்களுடன் இந்திர லோகம் சென்று, தேவ சேனாதிபதியாகத் தலைமை தாங்கி  அவுணர் சேனைகளையெல்லாம் அழித்தார். பின்னர் இந்திரனும் வலனை தன் குலிசாயுததால் கொன்றான். வலனைக் கொன்றததனால் இந்திரன் வலாரி எனப்பெயர் பெற்றான்.

ந்திரன், தனக்கு உதவிய  முசுகுந்த சக்கரவர்த்திக்கு தேவலோகத்தைச் சுற்றிக் காட்டி அக மகிழ்ந்தான். காமதேனு, கற்பக மரம், அமுதசுரபி முதலிய தேவலோக செல்வங்களை காண்பித்த பின், எழிலார்ந்த அமராவதியில் தியாகப்பெருமான் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை அடைந்தனர். முசுகுந்தன் தியாகேசரைக் கண்டவுடன் அவரருளால் அவர்பால் ஈர்க்கப்பட்டார். மகிழ்வுடன் ஐயனை வணங்கி நின்றார். சிவபெருமான் உமாதேவியாரும் சுப்பிரமணியரும் ஒரு பக்கத்தில் பொருந்தத் திருக்கயிலாயத்தில் எழுந்தருளியுள்ளதைப் போல இந்திரன் வழிபடும் தியாகேசப் பெருமான் அங்கு விளங்குவதைக் கண்டு முசுகுந்தன் பேருவகை கொண்டார். அச்சமயம் இந்திரனுக்கு கேட்காதவாறு முசுகுந்தனுக்கு மட்டுமே கேட்கும்படி தியாகேசர் பேசினார்.
வாசவன் கேளாவண்ணம் மன்னவன் தன்னை நோக்கி
தேசுறு செல்வ ஆரூர்த் திருநகர் கொடுபோய் எம்மை
பூசனை புரிதி என்றான் புகழ்மறை தந்த வாயால்
ஈசன் எம்பெருமான் ஞாலத்து எண்ணிலா உயிர்கள் உய்ய -
பூவுலகில் சோழமண்டலத்தில் திருவாரூர் என்னும் திருத்தலத்தில் தாம் எழுந்தருள திருவுள்ளம் பற்றியுள்ளதால், தம்மை இந்திரனிடம் கேட்டுப் பெற்று பூவுலகில் தம்மை நிலைபெறச் செய்யுமாறு பணித்தார்.

மறு நாள் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாட, இந்திரன் முசுகுந்தனை தேவசபையில் கௌரவித்து தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு மாலை அணிவித்து  பல்வேறு பரிசுகளை அளித்தான். பின்னர் முசுகுந்தனை நோக்கி, “ண்பனே! வேண்டிய வரத்தைக் கேள்; அதனை நீ செய்த உதவிக்கு உனக்கு நினைவுப் பரிசாக உனக்குத் தர வாக்களிக்கின்றேன்” என்றான்.


முசுகுந்தனும் இந்திரனும் தியாகராஜரை வணங்கும் காட்சி

எப்போதும் ஐயனின் திருவடிகளையே தன் நெஞ்சில் இறுத்தி வணங்கிக் கொண்டிருக்கும் முசுகுந்த சக்ரவர்த்தி, “ஐய நீ பூசை ஆற்றும் அமலனை தருதி” அதாவது  நீ வணங்கிக் கொண்டிருக்கும் தியாகராஜரை நான் மண்ணுலகில் சென்று எம் குடிமக்கள் உய்யும் பொருட்டு கோவில் கொள்ள செய்ய வேண்டும் எனவே நீ எனக்கு தியாகராஜரை கொடுத்து அருள வேண்டும்  என்றார்.

அதைகேட்ட தேவேந்திரன் அதிர்ச்சியுற்று, பசுவைப் பிரியும் கன்று போல் மனந்தளர்ந்து இரங்கி புலம்பி   தியாகராஜரை பிரிய மனமின்றி, இம்மூர்த்தி வைகுந்தத்தில் திருமால் பூசித்தவர், அவர் உத்தரவு இல்லாமல் தமக்கு வழங்க முடியாது என்று மறுதலித்தான். இருவரும் பாற்கடலில் அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று விண்ணப்பித்தனர்.  திருமால், எம்பெருமான் பூவுலகில் உள்ளவர்களுக்கு   அருளும் பொருட்டு எழுந்தருள திருவுள்ளம் பற்றியுள்ளதையும் முசுகுந்தனின் வரத்தின் மூலம் அவ்விருப்பத்தை நிறைவேற்ற உள்ளார் என்பதை தன் யோக சக்தியால் அறிந்தார்.

திருமால் இந்திரனை நோக்கி“,   அமரர்களின் வேந்தே! உதவி செய்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரத்தை விரும்பியவாறு அருள்வதே   முறையாகும், எனவே நீ தியாகேசரை முசுகுந்தனுக்கு அளித்துவிடு என்றருளினார். இந்திரன் தியாகப்பெருமானை பிரிய மனமில்லாமல், முசுகுந்தரை அன்றிரவு மட்டும் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டி சஞ்சலத்துடன் சென்றான்.

ந்திரன் பின்னர் தேவதச்சன் விச்வகர்மாவை அழைத்து தன்னிடமிருந்த தியாகராஜப்பெருமானின் திருமேனியைப் போலவே   மேலும் ஆறு திருமேனிகளை செய்து தருமாறு பணித்தான். மூலமூர்த்தியுடன் அவர்களையும் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தான்.

மறுநாள் முசுகுந்தனை தியாக மூர்த்தங்கள் உள்ள மணிமண்டபத்திற்கு அழைத்துச் சென்று, ண்பனே! இங்கிருக்கும் தியாகராஜ மூர்த்தங்களுள் விரும்பியதை எடுத்துக் கொள் என்றான்.  ஒன்றே போலிருந்த ஏழு மூர்த்திகளையும் ஒரு சேரக் கண்ட முசுகுந்தன் ஒரு கணம் திகைத்தான்.

பிறகு மனதை திடப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு மூர்த்தியின் முன் நின்று கைகூப்பி வணங்கினான். திருமால் வழிபட்ட தெய்வத்திருமேனியின் முன் சென்று வணங்கிய போது தம்மையே கேட்டுப் பெறுமாறு அவருக்கு திருவாக்கு ஒலித்தது. அம்மூலமூர்த்தியையே முசுகுந்தன் தேர்ந்தெடுக்க இந்திரனும் எம்பெருமான் திருவுள்ளக் குறிப்பின்படியே இவ்வாறு நிகழ்கின்றது என்பதை உணர்ந்தான். எனவே மூலமுர்த்தியுடன் மற்ற ஆறு மூர்த்திகளையும் முசுகுந்தனிடம் அளித்தான். பூஜா விதானங்களையும் ல்கி விடை கொடுத்தான்.

முசுகுந்தன் சப்த மூர்த்திகளையும் ஒரு பெரிய தேரில் வைத்து பூலோகம் கொண்டு வந்தான். முசுகுந்தரும் தியாகராஜரை பூலோகத்தில் பிரதிஷ்டை செய்ய ஒரு தலத்தை தேர்ந்தெடுக்க வேண்டி திருவாருரை ஒரு தட்டிலும் ஏனைய பூவுலகை ஒரு தட்டிலும் வைத்து நிறுக்க திருவாரூரே  எடை அதிகமாக இருக்க மூல மூர்த்தியை இங்கு பிரதிஷ்டை செய்ய தனது தலைமை விசுவகர்மாவை அழைத்து வன்மீகநாதரின் ஆலயத்தின் அருகில் ஒரு ஆலயம் அமைக்குமாறு பணித்தான். விசுவகர்மாவும் முசுகுந்தனின் ஆணைப்படி திருவாரூரில் ஒரு அழகிய கோவிலையும், அழகிய குளத்தையும் அமைத்தான். முசுகுந்தன் அக்கோவிலுக்கு குடமுழுக்கு செய்து திருவிழாக்களும் டக்க ஏற்பாடு செய்தான், பின்னர் இந்திரன், தேவர்கள் முனிவர்கள்   ஆகியோர்களை அழைத்து தியாகேசப்பெருமானுக்கு 1. திருமால் பூஜா விதானங்கள், 2. இந்திரன் பூஜா விதானங்கள் மற்றும் 3. முசுகுந்தன் பூஜா விதானங்கள் என்று மூன்று விதானங்களின்படி அனைத்து ஆராதனைகளும் முறைப்படி டக்க ஏற்பாடு செய்தான்.

முசுகுந்தன் ஏனைய மூர்த்திகளை தனியொரு மண்டபத்தில் வைத்து பலகாலம் ஆராதித்துப் பின்னர் அத்திருமேனிகளை முறையே திருநள்ளாறு, திருநாகைக் காரோணம், திருவாய்மூர், திருக்கோளிலி, திருக்காறாயில், திருமறைக்காடு ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.  இந்த ஏழு தலங்களும் சப்த விடங்க ஸ்தலங்கள் என போற்றப்படுகின்றன.

சீரார் திருவாரூர் தென்னாகை ள்ளாறு
காரார் மறைக்காடு காறாயில் – பேரான
ஏத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத்தலம் - என்ற பழம்பாடல் சிவபெருமான், விடங்கப்பெருமானாக தியாகராஜராக எழுந்தருளி அருள் பாலிக்கும் இத்தலங்களை பட்டியலிடுகின்றது.

கந்தபுராணத்தில் தட்சகாண்டத்தில் கச்சியப்பச் சிவாச்சாரியார்  முசுகுந்த சக்ரவர்த்தியால் தியாகராஜர் திருமேனி இந்திர லோகத்திலிருந்து  திருவாரூர் வந்த வரலாற்றைப் பாடியுள்ளார். இதுவரை தியாகேசர் விண்ணுலகம் விடுத்து எவ்வாறு திருவாரூரில் வந்து கோயில் கொண்டார் என்ற வரலாறுகளைக் கண்டோம் வாருங்கள் இனி சப்தவிடங்கத்தலங்களின் பொது சிறப்புகள் என்னவென்று காணலாம் அன்பர்களே.  


                                                                    தரிசனம் தொடரும் . . . . . .

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொடர்கிறேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி. தொடருங்கள் வெங்கட் ஐயா.