Friday, January 31, 2020

திருப்பாத தரிசனம் - 5


சோமாஸ்கந்த மூர்த்தம்

திருமயிலை கபாலீஸ்வரர்

இறைவனின் உருவத்திருமேனிகள் மகேசுவர மூர்த்தங்கள் என்றழைக்கப்படுகின்றன. மகேசுவரத்திருமேனிகள் இருபத்தைந்தாகும். இவை வியத்தலிங்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.  வியத்த என்ற சொல்லுக்கு வெளிப்பட்டு விளங்குவது என்பது பொருள்.

இத்திருமேனிகள் போகவடிவம், யோகவடிவம், வேகவடிவம் என்று மூவகைப்படும். போகவடிவம் உயிர்களுக்கு உலக இன்பத்தை வழங்கும் பொருட்டு மணக்கோலம் கொண்டிருப்பது. யோகவடிவம் இறை இன்பம் வேண்டுபவர்களுக்கு ஞானத்தை வழங்கும் பொருட்டு ஞானாசிரியர் கோலம் கொண்டு இருப்பது. வேகவடிவம் என்பது இறைவனை நினைத்து வழிபடும் அன்பர்களின் துயரத்தை நீக்கும் பொருட்டு போர்க்கோலம் கொண்டு விளங்குவது.

இவற்றுள் சோமாஸ்கந்த மூர்த்தம் போக மூர்த்தம் ஆகும். அருட்குழவியும் அன்னை உமையும் அருகிருக்க  அருள் பாலிக்கும் கோலமாகும். இவரே தென்னக சிவாலயங்களின் பிரதான மூர்த்தம் ஆவார்.

சிவாலயங்களில் திருவிழாக்களின் போது பஞ்சமூர்த்திகள் (ஐந்து எழுந்தருளும் திருவுருவங்கள்) அருள் பாலிக்கின்றனர் கணேசர், வள்ளி தெய்வானை உடனுறை முருகர், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேசர். இவற்றுள் தத்துவச் சிறப்புமிகுந்த தனித்தன்மை வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்தர் வார்


திருமயிலை கபாலீஸ்வரர்

திருமாலுக்கு உமையவளாலல் ஏற்பட்ட சாபத்தைப் போக்க சிவபெருமானால் அளிக்கப்பட்ட திருமேனியே சோமாஸ்கந்த மூர்த்தி எனப்புராண நூல்கள் கூறுகின்றன. இவரை பள்ளிகொண்ட பெருமாள் தன் மார்பில் வைத்து பூசித்தார் எனவும், அதில் மகிழ்ந்த விரிசடை கடவுள் மகிழ்ந்து தன் தேவியுடன் தோன்றி சாப விமோசனம் அளித்தார். பின்னர் இப்புனித மூர்த்தியை இந்திரன் பெற்று வழிபட்டு வந்தான், பின் முசுகுந்தன் இவரை பூவுலகிற்கு கொண்டு வந்து திருவாரூரில் தாபித்தார் என புராண நூல்களும், பூசை முறைகளும். ஓவியங்களும், சிற்பங்களும் கூறுகின்றன.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது முதுமொழி. சிவம் நிலை ஆற்றல் என்றால், சக்தி இயங்கு ஆற்றல். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இவை இரண்டின் ஒத்திசைவு அவசியம். அதனால் இறைவன், சிவாலயங்களில் சிவபெருமான்  எப்போதும் தனியாக எழுந்தருளுவதில்லை. சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிரதோஷநாயகர் என்று எப்போதும் உமையம்மையுடன்தான் எழுந்தருளுகின்றார்.


சோமாஸ்கந்த மூர்த்தத்தில் உமையுடன் முருகரும் இணைந்து இல்லறத்தாராக, இனிய கணவராக பாசமிக்க தந்தையாக கவின்மிகு கருணை வடிவினராக அருள்பாலிக்கின்றார். எனவே குழந்தை நாயகர், இளமுருகு உடனுறையும் அம்மையப்பர், சச்சிதானந்தம், சிவனுமைமுருகு, அம்பிகா குக சம்யுக்தன், சோமாஸ்கந்த ஸ்வரூபன், உமா குமார சகிதன், ஸ்ரீசோமாஸ்கந்த வீதி விடங்க சாம்ப பரமேஸ்வரன் என்று பலவாறு அழைத்து மகிழ்கின்றனர் அன்பர்கள்.


சிறப்புப் பெற்ற சோமாஸ்கந்தர் மூர்த்தத்தை புராணங்கள் தியாகராஜரின் திருமேனி என்று குறிக்கின்றன. எனவே இம்மூர்த்தத்தின் சிறப்புக்களைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.

தியாகராஜரின் இரகசியத் திருமேனி சைவம் சாக்தம், காணபத்யம், ஸ்காந்தம் ஆகிய நான்கு மதங்களையும் சிறப்புற விளங்க செய்கின்ற வகையில் அமைந்துள்ளது. திருமால் தனது மார்பில் தியாகராஜரை வைத்து பூசிப்பது ஜீவாத்மா - பரமாத்மா அத்வைத உறவைக் குறிக்கின்ற ஹம்சவித்யா என்பதையும், அஜபா டனத்தையும் உணார்த்துவதாகும்.

சிதம்பரம் சிதாகாசத்தையும், காஞ்சிபுரம் பிலாகாசத்தையும் குறிப்பது போல திருவாரூர் அக்ஷராகாசத்தைக் குறிக்கிறது. திருவாரூர் பெருமான் சப்தகோடி மந்திரங்களின் மூச்சுக்காற்று. அனைத்து மந்திரங்களின் ஜீவ அக்ஷரம். ஸ்ரீதியாகராஜர் திருமாலின் பிராண நாடியாக எழுந்தருளுகின்றார். விஷ்ணு என்னும் புருஷரின் உச்சுவாச நிச்சுவாசங்களின் எழுச்சி-வீழ்ச்சிகளில் அவர் மார்பில் அமர்ந்திருக்கும் தியாகராஜர் ஆடுகின்றார்.

திருக்காரணி காரணீஸ்வரர்

உலகைக் காத்து உய்விப்பதற்காக சிவபெருமான் ராஜகம்பீர ராஜராஜேஸ்வர உருவம் எடுத்து திருவாரூரில் எழுந்தருளுகின்றார். இரத்தின சிம்மாசனமும் வீரவாளும் இவர் அருளரசர் என்பதை உணர்த்துகின்றன. 

சிவராஜமூர்த்தியின்   திருமுகத்தையும், கொண்டி அம்பாளின் திருமுகத்தையும், இரத்தின சிம்மாசனத்தையும், வீர வாட்களையும் மட்டுமே   தினமும் தரிசிக்க இயலும், மார்கழி திருவாதிரையன்று  இடது திருப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தன்று வலது  திருப்பாத தரிசனம் மற்றும் தரிசிக்கலாம். உடன் வைர கவசம் போர்த்தப்பட்ட  ஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஐயனின் திருமேனியே இரகசியம். எனவே இவரின் சில அம்சங்களை மட்டுமே நாம் உணரும் வண்ணம் தியாகேசரின் திருமேனி பொன்னாலும், மணியாலும் மணங்கமழ் மலர்களாலும் மறைக்கப்பட்டுள்ளது. திருமுகம் தவிர மற்ற அங்ங்கள் தியாக வண்ணம் என்னும் 21 பரிவட்டங்களால் சுற்றிச் சுற்றி  மறைக்கப்படுகின்றது. இவரது திருமேனியின் முன்பக்கம் இதயபாகத்தின் மேல் பட்டயம் அமைத்து அதில் ஸ்ரீவித்யா மந்திரத்தை விளங்கச் செய்திருப்பதை குறிக்கின்றது.


“பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐஐஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே” என்றும் “ஆரூரில் கண்டடியேன் அயர்ந்தவாரே” என்றும்  அப்பர் பெருமான் பாடியபடி மகேசுவர மூர்த்த இருபத்தைந்திற்குள் ஒன்றான சோமாஸ்கந்த மூர்த்தத்தை குறிக்காது என்பது ஒரு சிலரின் கருத்து.  இன்னும் சிலர் ஐஐஞ்சு என்பதை   பிருத்வி முதல் பிரக்ருதி வரையான 25 தத்துவங்களைக் கடந்து, தத்வாதீதனாக விளங்குகிறார் என்பர்.  இதை எம்பிரான் தோழர் சுந்தரர் ’இன்ன தன்மையன் என்றறியா யொண்ணா எம்மான்” என்று பாடுகின்றார்.


மீனாட்சி - சொக்கேசர் - கந்தன்

அஜபா மந்திர தீட்சை பெற்று, சிவராஜ யோகம் பயில்கின்ற யோகியர்களுக்கும் மற்றும் அவ்வகை உபாசகர்களுக்கும் தியாகேசப்பெருமான் என்றாவது தன்னுருவை காட்டுவார் என்பது ஐதீகம்.

ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமே சோமாஸ்கந்தர். அ - எம்பெருமான், உ- உமையம்மை ம- ஸ்கந்தர் எவ்வாறு அகார, உகார, மகாரத்தின்   சங்கமத்தால் ஓம் என்னும் பிரணவம் உருவாகின்றதோ அதுபோல ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமாக விளங்குகிறார் தியாகராஜர்.

மூலாதாரத்தில் காமகலை வடிவத்தில்  சித்சக்தி விளங்குகின்றாள். சிவசக்தியான குண்டலினி மேல் முகமாய் எழும்போது அது ஸ்கந்தன் என்றழைக்கப்படுகின்றது. கந்தன் எனில் ஒன்று சேரப்பெற்றவன் என்று பொருள். இதுவே சோமாஸ்கந்த மூர்த்தம். (ஸக+உமா+ஸ்கந்தர்).

வலப்புறத்தில் வீராசனத்தில் கையில் மானும் மழுவும் ஏந்தி ஐயனும், இடப்புறத்தில் சுகாசனத்தில் கையில் மலருடன் அம்மையும் இருவருக்கும் நடுவிலே நின்ற நிலையிலே அப்பன் முருகனும் விளங்க குடும்ப சகிதமாக ஐயன் காட்சி தரும் மூர்த்தமே தியாகராஜ மூர்த்தம் ஆகும்.

ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞாலமேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலையானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்
இரவு பகல் என்று இருந்தாலும் இரண்டும் சேர்ந்து நாள் என்று ஆவது போல பகலையும் இரவையும் இணைக்கும் மாலைப் பொழுதாக முருகன் இருக்கின்றான் என்று கச்சியப்பசிவாச்சாரியார் கந்தபுராணத்தில் பாடுகின்றார். ஆம் மூவரும் இணைந்து சிவமூர்த்தமாக ஒன்றாக அருள் பாலிக்கின்றனர். 

திருவான்மியூர் தியாகேசர்

ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தர் என்கிறார் காஞ்சி பரமாச்சாரியார்.  ஸத்-சித்-ஆனந்தம் என்று கூறுவார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து   சக்தியைக் காட்டுகின்ற சித் அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கின்றது. அந்த ஆனந்தமே சுப்பிரமணியர். சிவம் என்ற மங்களமும், அம்பாள் என்ற காருண்யமும், கலந்த பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் சுப்பிரமணியர்; ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகின்றோம். சப்தவிடங்க ஸ்தலங்களில்   தியாகராஜராக வணங்குகின்றோம் என்பது பெரியவா வாக்கு.

திருக்கச்சூர் தியாகேசர்

சத் என்னும் சிவனுக்கும் சித் என்னும் அம்மைக்கும் நடுவே ஆனந்தமே வடிவான கந்தனோடு அமைந்த சோமாஸ்கந்தர் ஈசான முகத்தில் தோன்றியவர் ஆவார்.

சிவன்+உமை+ஸ்கந்தன் = சத்+சித்+ஆனந்தம் = உண்மை+அறிவு+இன்பம் அதாவது உண்மையும் அறிவாகிய நன்மையும் இணைந்தால் கிடைப்பது இன்பம் என்பதை சோமாஸ்கந்த மூர்த்தம் உணர்த்துகின்றது.

சோமாஸ்கந்த மூர்த்தம் அருமை+எளிமை+அழகு,   இதை மாணிக்கவாசகர் அருமையில் எளிய அழகே போற்றி என்று திருவாசகத்தில் போற்றுகின்றார்.

இம்மூர்த்தத்தில் சிவபெருமான் கடந்த நிலையையும், உமையம்மை கலந்த நிலையையும் ஸ்கந்தன் கவர்ந்த நிலையையும் காட்டுகின்றனர். அதாவது கணவன், மனைவி, குழந்தை என்று இல்லறத்தின் முழுமையான வடிவம் என்பர். எனவே குழந்தையைப் பெற்றோர் நடுவில் வைத்து கொண்டாடும் கோலாகல மூர்த்தம் இது.


நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர்

திருவாரூர் நான்மணிமாலையில் குமரகுருபரசுவாமிகள்
தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கை திருநதியே – அம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவோம் தனித்து
என்று ஆழித்தேர் வித்தகரான தியாகராஜ சுவாமி, ஐயன் கங்கையாகவும், அம்மை யமுனையும், ஸ்கந்தன் சரஸ்வதியாகவும் விளங்கும் நாம் குடைந்து நீராடும் திரிவேணி சங்கமமாக அருள் பாலிக்கின்றனர் என்று பாடுகின்றார்.

ஐயனும் அம்மையும் சேர்ந்த ஐக்கிய ஆனந்த ஸ்வரூபத்தை. சிவ-சக்தி இணைந்த ஆனந்தத்தை அதிவீரராம பாண்டியர் இவ்வாறு பாடுகின்றார்,
'ஆரா அமுதம் உண்டவர் போல் அனந்தானந்தத் தகம்நெகிழ,
ஆரா இன்பம் அறிவித்தாய்; அறியேன் இதற்கோர் வரலாறே' .


சிவ-சக்தி ஐக்கியத்தைப் பற்றி கரிவலநல்லூர் அந்தாதியில் பாடும் போது பின்வருமாறு சொல்கிறார்.

உரகா பரணத் திருமார்பும் உமைஒப் பனையாள் இடப்புறமும்
சிரமா லிகையும், புரிசடையும் செய்ய வாயும், கறைமிடறும்
வரதா பயமும், மழுமானும் வயங்கு கரமும், மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக் காட்சி கொடுத்து நின்றானே.

அம்மையப்பர்

சிற்பரத்தினம் என் நூலில் இம்மூர்த்தி மூன்று வடிவங்களால் விளக்கப்படுகிறார். சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் இடக்காலை மடித்து வைத்து, வலக்காலைத் தொங்க அமைத்து விளங்குகிறார். புலித்தோலையும் பட்டினையும் உடுத்த இவர் நான்கு கரங்களுடையவர். வலக்கரங்கள் இரண்டிலும் பரசுவும் (மழு), அபயமும், இடக்கரங்கள் இரண்டிலும் மானும், வரதமும் அல்லது சிம்ஹகரணமுத்திரையும் அமைந்துள்ளன. இவர் வலது காதில் மகர குண்டலம் அணிந்திருப்பார். ஜடா மகுடமும், சர்ப்பக்கணங்களும், பற்பல அணிகலன்களும் இவர் பூண்டிருப்பார். சிவபெருமானுக்கு இடப்பக்கம் தேவி அமர்ந்திருப்பாள். அவளது இடக்கால் கீழே தொங்க, வலது காலை மடித்து அமர்ந்திருப்பாள். அவளது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலரையும் இடக்கரம் சிம்ஹகரணம் அல்லது ஆசனத்தில் வைத்த நிலையில் கொண்டிருக்கும்; சிவபெருமானுக்கும் உமைக்கும் நடுவே கந்தன் சிறுகுழந்தையாக நிற்கிறார். இவர் உமையின் மடியில் அமர்ந்தோ, நடனமாடிக் கொண்டோ இருத்தலும் கூடும். கரண்ட மகுடம் மகர குண்டலங்கள், சன்னவீரம் ஆகியவற்றை அணிந்திருப்பார். அவரது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலர் வைத்திருக்கலாம்; அல்லது இரு கரங்களிலும் தாமரை மலர் இருக்கலாம். தேவியின் வலக்கரத்தில் நீலோற்பல மலரும், இடக்கரம் வரதமும் கொண்டிருத்தலும் உண்டு. அம்பிகை பச்சை நிறத்தினளாகச் சிவப்பு பட்டாடை அணிந்து விளங்குவாள். கந்தன் நடனமாடும் கோலத்தில் இருப்பின் அவனது இடக்கரம் பழத்தையும், வலக்கரம் சூசி முத்திரையும் கொண்டிருக்கும். சில வடிவங்களில் இடக்கரம் தொங்க விடப்பட்ட நிலையில் அமைந்திருக்கும்.

  சோமாஸ்கந்தர் வடிவத்தைத் தொழுவார் இல்லறத்தில் நன்மக்களோடு நலம் பல துய்த்து மகிழ்வர் என்பது ஐதீகம். இதுவரை தியாகராஜர் என்று கொண்டாடப்படும் சோமாஸ்கந்த மூர்த்தத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். வாருங்கள் தேவலோகத்திலிருந்து தியாகேசர் பூலோகம் வரச் செய்த லீலையைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.

                                                                                               தரிசனம் தொடரும் . . . . . .

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

மிகச் சிறப்பான தகவல்கள்.

படங்கள் ரொம்பவே அழகு.

தொடரட்டும் பக்தி ரசம்.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா.