Thursday, January 23, 2020

திருப்பாத தரிசனம் - 4


தலங்கள்

 




தலம் என்பதற்கு இடம், புனித இடம், க்ஷேத்திரம், பூமி, உலகம், உடலுறுப்பு        (கைத்தலம் முதலியன) நிலம் (நன்செய்), தலைநகரம் என்று பல பொருள் உண்டு. சப்தவிடங்க தலங்களில் இச்சொல் சிவபெருமான் தியாகேசப்பெருமானாக எழுந்தருளி அருள் பாலிக்கும் புனித இடத்தைக் குறிக்கின்றது.


தலம் என்பதை கோவில் என்றும் அழைக்கின்றோம். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி.  கோவில் கோ-அரசன்; இல்-இல்லம். ஆதி காலத்தில் அரசர்கள் வாழ்ந்த அரண்மனைக்கே கோவில் என்று பெயர். கோ என்பதற்கு தலைவன் என்று ஒரு பொருள் உண்டு. எனவே அனைத்து படைப்புகளுக்கும் தலைவனாக விளங்கும் இறைவனின் இல்லத்தைக் கோவில் என்று அழைக்கின்றோம்.


மேலும் கோட்டம் என்றும் ஆலயம் என்றும் பொருள் உண்டு. ஔவைப் பாட்டியும் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று அறிவுறுத்தினாள். ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியான இறைவன் தனது மாப்பெருங்கருணையினால் உலக உயிர்கள் இன்னலழிந்து இன்புற்றுய்ய, தன் மனமிரங்கி,   அருவ நிலையிலிருந்து இறங்கி பல தலங்களில் உருவத்திருமேனி கொண்டு அருள்பாலிக்கும் இடங்களே ஆலயங்கள்.
ஆலயம் – ஆ என்றால் ஆன்மா; லயம் என்றால் வயப்படுதல் அல்லது ஒன்று படுதல். ஜீவாத்மா ஆகிய மனிதர்களை பரமாத்மாவாகிய இறைவனுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஏற்ற இடமே ஆலயம்.

இருஞ்சுரபிக்கு எங்கும் உருக்கான ஒண்ணாத பால், முலைப்பால் விம்மி ஒழுகுவது போல வெளிப்பட்டு அருள்வன் அன்பர்க்கேஎன்று சிவஞான சித்தியார் பாடியபடி கோமாதாவின் மடியிலிருந்து எப்படி பால் சுரக்கின்றதோ அது போல, தெய்வீக அருளை தேக்கி வைத்து நமக்கு அருளும் தலங்கள் ஆலயங்கள் ஆகும். நமது அஞ்ஞான இருளை அகற்றி ஞான தீபத்தை ஏற்றி வைக்கும் தலங்கள் ஆலயங்கள் ஆகும்.


ஆலயந் தானும் அரனெனத் தொழுமே என்பது சிவஞானபோத சூத்திரமாக அமைந்துள்ளது.  ஆலயங்கள் ஆண்டவனைச் சிந்திக்க வைக்கும் இடங்கள் என்பதை வ்வடிகள் வலியுறுத்துகின்றன.

“ஆலயம் தொழுவது சாலவும் ன்று“, என்பது ஔவையின் கூற்று ஏனென்றால், இறைவன் குடி கொண்டுள்ள ஆலயங்களில் நிலவும் தெய்வீகத் தன்மை நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தொன்மைமிக்க ஆலயங்களின் அமைவிடம் கட்டுமானம் ஆகியவையும் அவற்றில் நிலவக்கூடிய விண்காந்த சக்தி,  மின் காந்த சக்தி ஆகியவை நமது மனம் தூய்மை அடையவும் வாழ்க்கை வளம் பெறவும் உதவுகிறது என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை.

திருக்கோவில்கள் நம் நாட்டின் எண்ணரிய சிறப்புக்கும் பெரும் புகழுக்கும் காரணமாக விளங்குகின்றன. இவை வரலாற்றினையும் அடியார் பெருமையினையும் பறை சாற்றுவதுடன் கலைக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.  ஆலயங்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல அவை அனைவரும் ஒன்றாகக் கூடும் சமுதாயக் கூடங்களாகவும் கல்விச்சாலைகளாகவும், நீதிபீடங்களாகவும் விளங்கின என்பதை அறிவோம். எனவே திருக்கோயில்களிடத்து மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்தனர். அளவற்ற கொடைகளை வழங்கி,  திருக்கோயில்களைச் சார்ந்த அறக்கட்டளைகளின் முதலீட்டைப் பெருக்கினர். முடியுடை அரசர்கள் நிவந்தங்கள் வழங்கினர்; இறையிலி நிலங்களை வழங்கினர். திருக்கோயில்கள்  பத்திமையின் விளைநிலம்! தமிழ்நாட்டின் வரலாற்றில் திருக்கோயில் ஏற்ற பங்கு அளவற்றது! காலத்தை வென்று நிற்கக்கூடியது ஆகும்.


அத்துடன் அன்றைய ஆலயங்கள் வரலாற்று பெட்டகங்களும் ஆகும். கலை வளர்க்கும் மையங்களாகவும், இடர்க் காலங்களில் மக்களுக்கு புகலிடம் வழங்கும் மையங்களாகவும் விளங்கியுள்ளன. விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் காவிரி உற்பத்தியாகும் குடகு மலையிலிருந்து அம்மாநதி கடலில் சங்கமமாகும்   இடம் வரையில் 108 ஆலயங்களை எடுப்பித்தான் என்று சரித்திரம் கூறுகின்றது. சாதாரண காலங்களில் இவ்வாலயங்கள் கடவுளை ஆராதிப்பதற்கு பயன்படுவது போலவே பெருவெள்ளம் வந்து உடைப்பெடுக்கும் காலத்தில் மக்கள் இவ்வாலயங்களின் மண்டபங்களில் மீது ஏறி தப்பித்துக்கொள்வதற்கு உதவும் என்பதற்காக ஆதித்தசோழன் இவ்வாறு அமைத்தானோ? 
போர் செய்யும் போது பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுகின்றது. ஆனால் இது போன்று ஆலயங்களை அமைக்கும் போது அவை கலை, கலாசாரம், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக  அமைகின்றன என்பதால் தானோ நமது தமிழ்நாட்து மன்னர்கள் பிரம்மாண்டமான பல ஆலயங்களை அமைத்தனர்.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஆலயங்களை ஒட்டி வளர்ந்தன, பிள்ளைத்தமிழ், உலா போன்றவை பக்தி இலக்கியங்கள் ஆகும். தேவாரமும் திருவாசகமும் மாற்று மத ஆதிக்கத்தினால் சைவம் தன்னிலை இழந்த போது புத்துயிரூட்டின, ஆலயங்கள் மூலமாக இன்றும் கலை, கலாசாரப் பண்பாடுகள்  வளர்க்கப்படுகின்றன. சமயநெறிகள்,  ஆன்மீக  சிந்தனைகள்  மக்களுக்கு  உணர்த்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன.


இன்றும் பலருக்கு வாழ்வாதாரமாக திருக்கோவில்கள் விளங்குகின்றன என்பது கண்கூடு. ஆலயங்கள் என்பவை மனிதர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய உருவத்தை நிறுத்தி வழிபடும் இடங்கள் அல்ல. எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள் பெருங்கருணையோடு தானே வெளிப்பட்டுத் தோன்றியும் வந்து வழிபட்ட மகாமுனிவர்கள், அருளாளர்கள், அடியார்கள் ஆகிய அனைவருக்கும் அருள் மழையைப் பொழிந்தும் பேரின்பம் அழித்த இடங்கள் ஆகும். மது பரதகண்டமெங்கும் அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்த ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றில் ஒரு சிலவற்றையாவது தரிசனம் செய்து மனிதப்பிறவியின் பயனை முழுமையாக அடைய வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்கள், அஷ்டவீரட்டத்தலங்கள், பஞ்சத் திருசபைத் திருத்தலங்கள், பஞ்சபூத்திருத்தலங்கள், பாடல் பெற்ற திருத்தலங்கள், சப்தவிடங்க திருத்தலங்கள் என்று பலவாறு வகுத்து வைத்தனர்.



தற்போது தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோயில்கள் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்தவை.
பிள்ளையார்பட்டி, மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், நரசிங்கம் எனப்படும் மதுரை ஒத்தக்கடை, சிங்கபெருமாள் கோவில் முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே உள்ளன.
சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் எவ்வகைக் கோயில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் குறிப்பிட்டு, விரிவாக சொல்லப்பட்டுள்ளன.
அப்பர் பெருமான் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சமஸ்கிருதத்திலும்  ஆலயங்களைப் பற்றிய பல  அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பெருமான் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.
தொல்லியல் துறையின் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார். 'கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்' என்று விளக்குகிறார். அதாவது தெய்வத் திருமேனிகளைச் செய்ய இப்பத்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.


ஆதிகாலத்தில் ஆலயங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன? அவை மரம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், படையெடுப்புகளாலும் அழிக்கப்பட்டன. இன்றும் கூட கேரளம், கர்நாடகா  முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம். பல்லவர் காலத்தில் குடவரைக் கோவில்கள் அமைப்பது ஆரம்பம் ஆனது. அதற்கு பிறகு பிறகால சோழர்களின் காலத்தில் ஆலயம் முழுவதும் கற்றளியாக அமைப்பதாக வளர்ந்தது.
'பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்
 பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்
கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,
கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,
 இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்
இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,
தாழ்ந்து, றைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே'
என்று அப்பர் பெருமான், தேவார ஆறாம் திருமுறையில் விவரிக்கிறார். தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களைப் பாடிப் பரவியுள்ளனர்.
அப்பர் பெருமான் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய 'பிருஹத் சம்ஹிதாஎனும் சம்ஸ்கிருத நூலில், 20 வகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிரகம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.
ஆலயங்களில் ரிஷிகள் தங்களின் வ வலிமையை சேமித்து  வைத்திருக்கின்றனர்  அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிறோம். தெய்வ மூர்த்ங்களிடமிருந்து தெய்வாநுக்ரஹம் கிடைக்கின்றது. மந்திரபூர்வமான ஆராதனைகளால் நமக்கு ஆலயத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்மை நிறைய உண்டாகின்றது என்பது உண்மை.
ஆகவே  வள்ளலார் பெருமானும்

தலங்கள் தோறும் சென்று அவ்விடையமர்ந்த
தம்பிரான் திருத்தாளினை வணங்கி
வலங்கொளும்படி என்னையும் கூட
வா என்கின்றனை வாழி என் நெஞ்சே!  என்று பாடியுள்ளார்.


பாடல்பெற்ற தலங்கள் 274  அவற்றில் பொன்னி வடகரையதனில் அறுபதுடன் மூன்று  புகழ் பெறு தென்கரையதனில் நூற்றிபருத்தேழு என்று  190  தலங்கள் சோழ நாட்டில் அமைந்துள்ளன.  

சப்த என்னும் எண் ஏழின் சிறப்பினையும், விடங்கம் என்பதன் விளக்கத்தையும், தலங்களின் சிறப்புகளைப் பற்றியும் கண்டோம், வாருங்கள் இனி சப்த விடங்கத் தலங்களில் தியாகராஜராக எம்பெருமான் அருள்பாலிக்கும் சோமாஸ்கந்த மூர்த்தத்தின் சிறப்புகளைப் பற்றிக் காணலாம்.

                                                                     தரிசனம் தொடரும் . . . . . .

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான விளக்கம். தொடர்கிறேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா.