Sunday, January 19, 2020

திருப்பாத தரிசனம் - 3

விடங்கம்




அனைத்து தியாகத்தலங்களிலும் எம்பெருமான் விடங்கராக எழுந்தருளி நித்யப்படி அபிஷேகம் கண்டருளுகின்றார். வி+டங்கம் என்றால் உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள். டங்கம்என்றால் உளி. பொன், வெள்ளி உலோகச் சிற்பங்களைச் செதுக்கும் உளிக்கும் இப்பெயர் பொருந்தும்.  எனவே உருவமாக தோன்றியவர் என்பது ஐதீகம். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை என்று ஒரு  நம்பிக்கையும் உண்டு. சுயம்பு என்பது தானாகத் தோன்றுவது. விடங்கம் என்பது உருவாகக் கிடைப்பது.


எம்பெருமானை வில் ஆண்ட மேரு விடங்கன் அதாவது ‘மேருவை
வில்லாக  
 ஆண்ட அழகன்  என்று  ஆனந்த சேந்தனார் தமது திருப்பல்லாண்டிலும், ”கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி! கயிலை மலையானே போற்றி! போற்றி!அதாவது ” திருக்கரத்தில் அனல் ஏந்திய அழகனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல” என்று அப்பர் பெருமானும் பாடியபடி அழகர் என்றொரு பொருளும் உண்டு. மேலும் ஆண்மையுடையவர்;   காமம் மிக்கவர் என்ற பொருள்களிலும் இப்பெயர் வழங்கப்படுகிறது.


விடர் + அங்கம் விடங்கமானது. விடர் எனில் வெடிப்பு. பிளவில் வெளிப்பட்ட சுயம்பு என்றும் பொருள் கொள்ளலாம். பிளவென்றால் சலனப்பட்ட பிரம்ம பிளவில் தோன்றிய  திருமேனியாம்.

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோறு அமுதம்ஒத்து அவர்க்கே
தித்தியா இருக்கும், தேவர்காள்! இவர்தம் திருவுரு இருந்தவா காணீர்;
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்குஓர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலாவினாரே.


பொருள்: தேவர்களே! சிவபெருமானிடத்துப் பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந்தோறும் அமுதம் போல் அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளி வீசிக் கொண்டிருப்பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கலமாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார் என்று பகர்கிறது பூந்துருத்தி நம்பி காடவர் நம்பி திருவிசைப்பாவில் திருவாரூரைப் பற்றிப் பாடிய இப்பாடல்..

விடங்கர் என்பது திருவீதிகளில் பவனி வரும் திருமேனிகளாகும். வீதி விடங்கர் - தெருவில் உலா வரும் அழகர். இது திருவாரூர்  தியாகராசரின் திருநாமம். திருவாரூரில் புற்றிடம் கொண்டார் திருமூலட்டானத்தேயிருக்க, வீதியில் எழுந்தருளி வந்து காட்சி வழங்குபவராதலின், இப்பெயர் உடையராயினார். தஞ்சை கல்வெட்டுகளில் தெட்சிண மேரு விடங்கர் எனவும், திருவாரூர் அரநெறி கல்வெட்டில் தன்மவிடங்கதேவர் என்றும் சோமாஸ்கந்தர் திருமேனிகள் குறிப்பிடப்படுகின்றன. 


வீதி விடங்கர்  வீதியில் எழுந்தருளுங்கால் நடனம் புரிந்து வருதலும், அந்நடனம், அசபா நடனம் என்று போற்றப்படுதலும், அந்நடனத்தை இவர் முதற்கண் திருமாலின் இதயத்தில் இருந்து புரிந்தவராதலும் அறிந்து கொள்க. இவர் இங்கே வந்து நடமாடுவதற்கு  காரணம் இவருடைய  மாப்பெரும் கருணை. மனுநீதி சோழனுக்காக வீதியில் வந்து ஆடிய காரணத்தால் இவர் வீதிவிடங்கர்.





விடங்கர் எனப்படும் தியாகேசர் யோகத்தோடு தொடர்புடையவராக விளங்குகிறார்.  கடம்பூர் மேவிய விடங்கா போற்றி என்பது மாணிக்கவாசகர் வாக்கு. சிவயோகியின் முதுகுத்தண்டாகிய குலபதம் என்கிற ராஜவீதியில் வெற்றாகத் திரிகின்ற அன்னப்பறவை என்பது ஆன்றோர் விளக்கம். அஜபா மந்திர தீட்சை பெற்று சிவராஜயோகம் பயில்கின்ற யோகியர்க்கு,  பெருமானை தரிசிக்கும் போது தியாகேசர் தரிசனம் தருவார் என்பது ஐதீகம்.


நாம் தரிசிக்க இருக்கின்ற சப்தவிடங்க தலங்களில் அருள் பாலிக்கும் விடங்கர்கள் யார் என்று காண்போம்

திருவாரூர்      வீதி விடங்கர்     அஜபா டனம்         மௌன டனம்
திருநாகை       சுந்தர விடங்கர்    தரங்டனம்         கடல் அலையோசை டனம்
திருள்ளாறு     க விடங்கர்      உன்மத்த டனம்       பித்த(ஆவேச) டனம்
திருமறைக்காடு  புவனி விடங்கர்    ஹம்சபாத டனம்     அன்னடை டனம்
திருக்காரவாசல்  ஆதி விடங்கர்     குக்குட டனம்        கோழி டனம்
திருவாய்மூர்     நீல விடங்கர்      கமல டனம்          தாமரை டனம்
திருக்கோளிலி    அவனி விடங்கர்   பிரம்ர டனம்         வண்டு டனம்


பிற்காலத்தில் விடங்கர் தலங்கள் பெருகின. கொங்கு நாட்டில் கூடக்கொடுவாய், கடத்தூர் போன்ற தலங்களில் கொங்கு விடங்கீஸ்வரர் அருள் பாலிக்கின்றார். சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன்  இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் அருள் பாலிக்கும் எம்பெருமான் தட்சிண மேரு விடங்கர் எனப்பட்டார். இது வரை விடங்கம் என்றால் என்ன என்று கண்டோம் இனி தலங்களின் சிறப்பு என்று காணலாம் அன்பர்களே.

                                                                     தரிசனம் தொடரும் . . . . . .

4 comments:

கோமதி அரசு said...

விடங்கம் என்றால் என்ன என்று விளக்கமான பதிவு.
அருமை.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விளக்கம். உங்கள் வழியே விஷயங்கள் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா.