Showing posts with label அஜபா நடனம். Show all posts
Showing posts with label அஜபா நடனம். Show all posts

Wednesday, February 19, 2020

திருப்பாத தரிசனம் - 9


சப்த விடங்க நடனங்களின் தாத்பர்யம்




இறைமையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை. இறைமை என்பது இயற்கையின் தாய். இயற்கை என்பது இறைவனின் தன்மைகளுள் ஒன்று.  இவ்வேழு திருத்தலங்களிலும், இறைவன், நிகழ்த்தும் ஏழு விதமான நடனங்களும் இயற்கையோடு இணைந்து தொடர்பு கொண்டிருப்பது இவற்றின்  தனிச்சிறப்பு,  ஒவ்வொரு  நடனமும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றது என்று பெரியோர்கள் கூறுவர்.


சப்தவிடங்கத்தலங்களில் இரண்டு கடற்கரையோரம் அமைந்துள்ளன அவை திருநாகைக்காரோணம் மற்றும் திருமறைக்காடு ஆகும், ஒன்று ஆரண்யத்தில் அமைந்த தலம், தர்ப்பாரண்யமான திருநள்ளாற்றுத்தலம் அது மற்ற நான்கு தலங்களும் மருத நிலத்தில் அமைந்துள்ளன.


நாம் தரிசிக்க இருக்கின்ற சப்தவிடங்க தலங்களில் அருள் பாலிக்கும் விடங்கர்கள் ஆஆடுகின்ற நடனங்கள் எவை  அவை எதைக் குறிக்கின்றன என்று காண்போம்


திருவாரூர்      வீதி விடங்கர்     அஜபா நடனம்         மௌன நடனம்

திருநாகை       சுந்தர விடங்கர்    தரங்க நடனம்         கடல் அலையோசை நடனம்

திருநள்ளாறு     நக விடங்கர்      உன்மத்த நடனம்       பித்த(ஆவேச) நடனம்

திருமறைக்காடு  புவனி விடங்கர்    ஹம்சபாத நடனம்     அன்னநடை நடனம்

திருக்காரவாசல்  ஆதி விடங்கர்     குக்குட நடனம்        கோழி நடனம்

திருவாய்மூர்     நீல விடங்கர்      கமல நடனம்          தாமரை நடனம்

திருக்கோளிலி    அவனி விடங்கர்   பிரம்ர நடனம்         வண்டு நடனம்



சப்த விடங்கத்தின் முதல் தலம் இம்மண்ணில் பிறந்தாலே முக்தி தரும் திருவாரூர். இத்தலத்தில் ஈசன் வீதி விடங்கராக   அஜபா நடனம் ஆடுகின்றார். இந்நடனத்தின் சிறப்பு, மனித உடலில் உள்ள அனைத்து சக்கரங்களிலும் மூச்சுக்காற்று சென்று, இயங்கி அசைவதை உணர்த்துகின்றது. அடியார்களின் உள்ளத்தில் தியான காலத்தில் ஆடும் நடனம்.


இரண்டாவது தலமான திருக்காறாயில், ஆதி விடங்கர் ஆடிய குக்குட நடனம். குக்குடம் என்றால் கோழி. தான் படைத்த உயிர்களை, இறைவன் தனது அருட்கரங்களால் காக்க ஆடிய நடனம் குக்குட நடனம்.

மூன்றாவதாக  திருநாகைக்காரோணம் கடற்பகுதி எனவே இத்தலத்தில் சுந்தரவிடங்கராக பாரவார  தரங்க  நடனத்தில் கடல் அலைகள்  ஆடுவது போல  ஆடுகின்றார். 


 நான்காவதாக திருநள்ளாறு தலத்தில் நக விடங்கராக உன்மத்த நடனம்  ஆடுகின்றார். இறைவனை அடைந்தவருக்கு குறைவில்லா ஆனந்தம் என்றும் உண்டு என்பதை  இந்நடனம்  உணர்த்துகின்றது.




ஐந்தாவது தலமான திருக்கோளிலியில் பிரமர நடனத்தை அவனி விடங்கர் ஆடும் அழகே அலாதி. கோள் என்றால் கிரகம். கோளிலி என்றால் கிரகம் இல்லாதிருப்பது.  ஒன்பது கோள்களும் செயலற்று, திருக்கோளிலியில் ஆடிய சிறப்பு. ஆன்மாக்கள், ஈசனை அடைய, கடினமாக உழைத்து, பேறு அடைவதன் அமைதியை காட்டும் நடனம்.


ஆறாவது திருமறைக்காடு எனப்படும், வேதாரண்யம். இதில் புவனி விடங்கராக ஈசன்  ஆடிய ஹம்ஸபாத நடனத்தின்  சிறப்பு. பாலில் கலந்த நீரை பிரித்தெடுத்து அருந்தும் அன்னம். அதுபோல் உயிர்கள், நன்மை, தீமை புரிந்து, அறிந்து, உணர்ந்து வாழ வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.


ஏழாவதாக, திருவாய்மூர், கமல நடனம். நீலவிடங்கராக ஈசன் ஆடியதை, மருத நிலத்தில் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும். அத்தாமரை மலரைப் போல் உலகப் பற்றுக்களில் மூழ்கி விடாமல் நாம் மேலெழுந்து   இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்று சொல்லும் நடனம் இத்தலத்தின் கமல நடனம். இதுவரை சப்தவிடங்கதலங்களில் ஐயன் ஆடும் நடனத்தின் தாத்பர்யம் என்னவென்றும் அவை   இயற்கையோடு இணைந்துள்ளன என்று கண்டோம் வாருங்கள் இனி ஒவ்வொரு தலமாக சென்று அமர்ந்தாடும் அழகரைத் தரிசிக்கலாம்.

                                                                     தரிசனம் தொடரும் . . . . . .

Sunday, January 19, 2020

திருப்பாத தரிசனம் - 3

விடங்கம்




அனைத்து தியாகத்தலங்களிலும் எம்பெருமான் விடங்கராக எழுந்தருளி நித்யப்படி அபிஷேகம் கண்டருளுகின்றார். வி+டங்கம் என்றால் உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள். “டங்கம்” என்றால் உளி. பொன், வெள்ளி உலோகச் சிற்பங்களைச் செதுக்கும் உளிக்கும் இப்பெயர் பொருந்தும்.  எனவே உருவமாக தோன்றியவர் என்பது ஐதீகம். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை என்று ஒரு  நம்பிக்கையும் உண்டு. சுயம்பு என்பது தானாகத் தோன்றுவது. விடங்கம் என்பது உருவாகக் கிடைப்பது.


எம்பெருமானை ”வில் ஆண்ட மேரு விடங்கன்” அதாவது ‘மேருவை
வில்லாக  
 ஆண்ட அழகன்’  என்று  ஆனந்த சேந்தனார் தமது திருப்பல்லாண்டிலும், ”கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி! கயிலை மலையானே போற்றி! போற்றி!” அதாவது ” திருக்கரத்தில் அனல் ஏந்திய அழகனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல” என்று அப்பர் பெருமானும் பாடியபடி அழகர் என்றொரு பொருளும் உண்டு. மேலும் ஆண்மையுடையவர்;   காமம் மிக்கவர் என்ற பொருள்களிலும் இப்பெயர் வழங்கப்படுகிறது.


விடர் + அங்கம் விடங்கமானது. விடர் எனில் வெடிப்பு. பிளவில் வெளிப்பட்ட சுயம்பு என்றும் பொருள் கொள்ளலாம். பிளவென்றால் சலனப்பட்ட பிரம்ம பிளவில் தோன்றிய  திருமேனியாம்.

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோறு அமுதம்ஒத்து அவர்க்கே
தித்தியா இருக்கும், தேவர்காள்! இவர்தம் திருவுரு இருந்தவா காணீர்;
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்குஓர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலாவினாரே.


பொருள்: தேவர்களே! சிவபெருமானிடத்துப் பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந்தோறும் அமுதம் போல் அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளி வீசிக் கொண்டிருப்பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கலமாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அஜபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார் என்று பகர்கிறது பூந்துருத்தி நம்பி காடவர் நம்பி திருவிசைப்பாவில் திருவாரூரைப் பற்றிப் பாடிய இப்பாடல்..

விடங்கர் என்பது திருவீதிகளில் பவனி வரும் திருமேனிகளாகும். வீதி விடங்கர் - தெருவில் உலா வரும் அழகர். இது திருவாரூர்  தியாகராசரின் திருநாமம். திருவாரூரில் புற்றிடம் கொண்டார் திருமூலட்டானத்தேயிருக்க, வீதியில் எழுந்தருளி வந்து காட்சி வழங்குபவராதலின், இப்பெயர் உடையராயினார். தஞ்சை கல்வெட்டுகளில் தெட்சிண மேரு விடங்கர் எனவும், திருவாரூர் அரநெறி கல்வெட்டில் தன்மவிடங்கதேவர் என்றும் சோமாஸ்கந்தர் திருமேனிகள் குறிப்பிடப்படுகின்றன. 


வீதி விடங்கர்  வீதியில் எழுந்தருளுங்கால் நடனம் புரிந்து வருதலும், அந்நடனம், “அசபா நடனம்” என்று போற்றப்படுதலும், அந்நடனத்தை இவர் முதற்கண் திருமாலின் இதயத்தில் இருந்து புரிந்தவராதலும் அறிந்து கொள்க. இவர் இங்கே வந்து நடமாடுவதற்கு  காரணம் இவருடைய  மாப்பெரும் கருணை. மனுநீதி சோழனுக்காக வீதியில் வந்து ஆடிய காரணத்தால் இவர் வீதிவிடங்கர்.





விடங்கர் எனப்படும் தியாகேசர் யோகத்தோடு தொடர்புடையவராக விளங்குகிறார்.  “கடம்பூர் மேவிய விடங்கா போற்றி” என்பது மாணிக்கவாசகர் வாக்கு. சிவயோகியின் முதுகுத்தண்டாகிய குலபதம் என்கிற ராஜவீதியில் வெற்றாகத் திரிகின்ற அன்னப்பறவை என்பது ஆன்றோர் விளக்கம். அஜபா மந்திர தீட்சை பெற்று சிவராஜயோகம் பயில்கின்ற யோகியர்க்கு,  பெருமானை தரிசிக்கும் போது தியாகேசர் தரிசனம் தருவார் என்பது ஐதீகம்.


நாம் தரிசிக்க இருக்கின்ற சப்தவிடங்க தலங்களில் அருள் பாலிக்கும் விடங்கர்கள் யார் என்று காண்போம்

திருவாரூர்      வீதி விடங்கர்     அஜபா நடனம்         மௌன நடனம்
திருநாகை       சுந்தர விடங்கர்    தரங்க நடனம்         கடல் அலையோசை நடனம்
திருநள்ளாறு     நக விடங்கர்      உன்மத்த நடனம்       பித்த(ஆவேச) நடனம்
திருமறைக்காடு  புவனி விடங்கர்    ஹம்சபாத நடனம்     அன்னநடை நடனம்
திருக்காரவாசல்  ஆதி விடங்கர்     குக்குட நடனம்        கோழி நடனம்
திருவாய்மூர்     நீல விடங்கர்      கமல நடனம்          தாமரை நடனம்
திருக்கோளிலி    அவனி விடங்கர்   பிரம்ர நடனம்         வண்டு நடனம்


பிற்காலத்தில் விடங்கர் தலங்கள் பெருகின. கொங்கு நாட்டில் கூடக்கொடுவாய், கடத்தூர் போன்ற தலங்களில் கொங்கு விடங்கீஸ்வரர் அருள் பாலிக்கின்றார். சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன்  இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் அருள் பாலிக்கும் எம்பெருமான் தட்சிண மேரு விடங்கர் எனப்பட்டார். இது வரை விடங்கம் என்றால் என்ன என்று கண்டோம் இனி தலங்களின் சிறப்பு என்று காணலாம் அன்பர்களே.

                                                                     தரிசனம் தொடரும் . . . . . .