Friday, January 10, 2020

திருப்பாத தரிசனம் - 1

சப்த விடங்கத் தலங்கள் யாத்திரைத் தொடர்

முத்து விதானம் மணிப் பொற் கவரி முறையாலே
பக்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

என்று அப்பர் பெருமான் ஞானசம்பந்தருக்கு திருவாரூரில் அவர் தரிசித்த ஆருத்ரா தரிசனத்தை  விளக்குகிறார். அத்திருவாதிரைநாளில், எம்பெருமான் இன்று ஆனந்த நடராஜராக இன்று தரிசனம்  நாளில், திருவாரூரில் தியாகேசர் பாத தரிசனம் தந்தருளும் நாளில்  சப்தவிடங்க தலங்களின் யாத்திரைத் தொடரை அவனருளால் தொடங்குகிறேன். வந்து தரிசியுங்கள் அன்பர்களே.


 தியாகராஜர் - கமலாம்பாள்


அடியேனுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அடியேனது தந்தையார் தெய்வத்திரு. உ.சா.சுப்பிரமணியன் அவர்கள்.  ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் ஒரு புது  அனுபவத்தை பெறுகின்றோம் என்று அவர் கூறுவார்.  தாயார் தெய்வத்திரு. சு.சரவணம்மாள் அவர்கள் உணவு ஊட்டும் போது ஆன்மீக் கதைகளைக் கூறி ஆன்மீகத்தையும் சேர்த்து ஊட்டினார் என்றால் தந்தையார் சிறு வயதிலேயே எங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள பொது நூலகத்திற்கு அடியேனையும் மற்ற குழந்தைகளையும் அழைத்துச் சென்று சித்திரப்பட புத்தகங்களை எடுத்துக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். அப்போது படித்த பெலிக்கனின் கதை, ஓநாய் பையன் கதை முதலிய நூல்கள் இன்றும் பசுமரத்தாணிப் போல மனதில் பதிந்துள்ளது.

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது தன்னுடைய நூலக உறுப்பினர் கணக்கை, அடியேன் பெயரில் மாற்றிக் கொடுத்தார். பின்னர் பல புத்தகங்களைப் வாசிக்க ஆரம்பித்தேன். தந்தையார் மற்றும்  உடன் பிறந்தவர்கள் புத்தகங்களில் முழுவதும் மூழ்கியவர்கள்  என்பதால் அப்பழக்கம் அடியேனையும்  எளிதாகத் தொற்றிக் கொண்டது.  தமக்கைகள் வழிகாட்டியபடி சரித்திர புதினங்களை படிக்க ஆரம்பித்த போது கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒரு முறை படித்து விட்டு மறந்து விடக்கூடிய புதினமா அது?. இது வரை எத்தனை முறை படித்திருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கே இல்லை. அதில் வரும் ஒரு சம்பவம் இந்நூலை எழுதுவதற்கு ஒரு பொறி எனலாம்.  அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளாதா? இதோ சொல்லி விடுகிறேன்.

பொன்னியின் செல்வனில் ஒரு சம்பவம், அருள்மொழிவர்மர் திருவாரூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது அங்கிருந்த ஆலயத்தார்களைப் பார்த்துக்கோயிலின் இறைவருக்கு தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது”? என்று கேட்பார். தேவர்களுக்குள் மகாதேவரும் மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார்கள் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள் புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப் பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டு தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். எல்லா உலகங்களுக்கும் இறைவர் பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றி பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியதுப் பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள்

அத்தியாகராஜப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருவாரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்”,  என்று கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் எழுதியுள்ளார். அந்த பொன்னியின் செல்வன் புதினமே தியாகத்தை அடிப்படையாக கொண்டதுதானே. ஐந்தாம் பாகத்தின் தலைப்பும் தியாகச் சிகரம்தானே. 

அன்று முதலே அத்தியாகராஜ எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்று ஒரு ஆவல். மேலும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படம் பார்த்த போது திருவாரூர் தியாகராஜப்பெருமான் கோவிலைப் பற்றி கூறிய குறிப்புகள் அந்த ஆவலை அதிகப்படுத்தியது.  பல வருடங்கள் கழித்து  வேலை நிமித்தமாக காரைக்கால் வந்த போது அவ்வாசை அவனருளால் நிறைவேறியது.


கமலாலயத் திருக்குளம்

தியாகராஜப் பெருமானை திருவாரூரில் முதல் முறை தரிசித்த போது பாத தரிசனம் கிட்டவில்லையே என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது ஆருத்ரா தரிசனத்தன்றும், பங்குனி உத்திரத்தன்று மட்டுமே பாத தரிசனம் மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டும்தான் என்று கூறி ஆவலை இன்னும் அதிகப்படுத்தினர். ஆருத்ரா தரிசனத்திற்காக காத்திருந்து பாத தரிசனமும் பெற்றேன். அவரது அபிஷேகங்கள்,  திருநடனம், தேரோட்டம், தெப்போற்சவம் தரிசிக்கும் பாக்கியமும் கிட்டியது. சப்தவிடங்க தலங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

காரைக்கால் பகுதியில் பணி என்பதால் திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ள நகவிடங்க செண்பக தியாகேசரை பின்னர் பலமுறை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அவரது பிரம்மோற்சவத்தின் ஒரு சமயம் அன்பர்களுடன் ஒரு அடிமையாக அவரை எழுந்தருளப் பண்ணும் பாக்கியமும் கிட்டியது. இவரது அபிஷேத்தை பல முறை தரிசனம் செய்ய வைத்தார். குறிப்பாக ஆருத்ரா தரிசனத்தன்று இவருக்கும் நடராசப்பெருமானுக்கும் ஒரே காலத்தில் அபிஷேகம் நடப்பதை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.

அடியேனுடன் பணிபுரியும் ஒரு அன்பர் நாங்கள் ஒரே நாளில் சப்த விடங்கத்தலங்கள் ஏழினையும் தரிசனம் செய்வோம் என்று கூறினார்.  ங்கு வசித்த போது ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலவில்லை. அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும். பின்னர் பல வருடங்கள் கழித்து ஒரு புனித பயணத்தின் போது இவ்வேழு தலங்களையும் ஒரே சமயத்தில் தரிசிக்கும் பாக்கியம் சித்தித்தது.  யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்றபடி அவ்வனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்நூல்.  வாருங்கள் ஏழு தியாகராஜர்களையும் தரிசிப்போம்.

முசுகுந்த சக்கரவர்த்தியால் இந்திரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இம்மூர்த்திகள் எழுவரும் கொண்டு வரப்பட்டனர். இவர்களுள் திருவாரூர் வீதி விடங்கப்பெருமான் திருமால் தன் மார்பில் வைத்து பூஜித்த மூல மூர்த்தி ஆவார். மற்ற ஆறு மூர்த்திகள் திருநள்ளாறு, திருநாகை, திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருக்கறாயில் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ளனர். வாருங்கள் அன்பர்களே இவர்களை ஒவ்வொருவராக தரிசிக்கலாம்.

ஒவ்வொரு தலத்தைப் பற்றியும் எண்ணற்ற நூல்கள் தமிழிலும், வடமொழியிலும் உள்ளன. அவைகளை இந்த அவசர உலகத்தில் படிக்க யாருக்கு அவகாசம்  உள்ளது? எனவே இத்தலங்களைப் பற்றி அடியேன் படித்து பல அன்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட சில தகவல்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இந்நூல்.

தியாகராஜர் எப்போதும் முக தரிசனம் மட்டுமே தந்தருளுகின்றார். அவரின் பாத தரிசனத்திற்காக காத்துக்கிடக்க வேண்டும். அது கிடைப்பதே பெரும் பாக்கியமென்பதால் இத்தொடருக்கு  “திருப்பாத தரிசனம்” ன்று தலைப்பு.  

சப்தவிடங்கத்தலங்களுடன்,  திருவாரூர் போலவே தியாகேசர் சுந்தரருக்காக தூது சென்ற திருவொற்றியூர் தலம் மற்றும் தொண்டை மண்டலத்தின் உபய விடங்கத்தலங்களைப் பற்றிய தகவல்களும்   ந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இனி மேல் இந்த யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைவாக அடியோங்கள் சென்ற சப்தவிடங்க தல யாத்திரை பற்றி ஒரு சிறு குறிப்பையும் கொடுத்துள்ளேன்.

பல தடவை இவ்வாலயங்களுக்குச் செல்லும் போது அத்தலங்களின் சிறப்பை கூறுவதற்கு யாரும் இருப்பதில்லை, அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில் கிடைப்பது இல்லை என்பதால் அடியேன் படித்து, பலரிடம் பேசி சேர்த்த குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். அவற்றை எழுதிய அடியேனுக்கு உணர்த்திய அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக பட்டினத்தார்தாசன் திரு.காசி அவர்கள் திருவாரூர் பற்றிய பல அரிய தகவல்களை அளித்தார், தியாகராசரின் பங்குனி உத்திர பாத தரிசனத்திற்கும் அழைத்துச் சென்றார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி.  இந்நூல் வருங்காலத்தில் இத்தலங்களுக்கு செல்ல விழைகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று நம்புகிறேன். வாருங்கள் ஜகத்தீரே சிவானந்தத் தேன் கொட்டிக் கிடக்கின்றது அதில் ஒரு சிறு துளியை சுவைக்கலாம்.


குழலொலி யாலொழி  கூத்தொலி எங்கும் குலாம் பெருகி
விழவொலி விண்ணளவுங் சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவினை யாற்கு வழிவழி யானாய் மணஞ்செய் குடிபிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே

                                                                                            - ஆனந்த சேந்தனார்


தரிசனம் தொடரும் . . . . . .

8 comments:

கோமதி அரசு said...

தியாகராஜர் எப்போதும் முக தரிசனம் மட்டுமே தந்தருளுகின்றார். அவரின் பாத தரிசனத்திற்காக காத்துக்கிடக்க வேண்டும். அது கிடைப்பதே பெரும் பாக்கியமென்பதால் இத்தொடருக்கு “திருப்பாத தரிசனம்” என்று தலைப்பு.//


அருமையான தலைப்பும் பதிவும்.

திருபனந்தாள் மடத்து மடாதிபதி அவர்களுடன் சபதவிடங்க தலங்களை ஒரே நாளில் பார்க்கும் பாக்கியம் பெற்றோம்.
பாத தரிசனம் ஒரு முறை பார்த்தோம்.
மாயவரத்தில் இருந்த போது இவை எல்லாம் கிட்டியது.

கோமதி அரசு said...

பொன்னியின் செல்வனில் ஒரு சம்பவம்//
இந்த வரலாறை நீங்கள் சொன்ன பின் பொன்னியின் செல்வனை மீண்டும் படிக்க ஆவல் வந்து விட்டது.

கோமதி அரசு said...

//“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்றபடி அவ்வனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்நூல். வாருங்கள் ஏழு தியாகராஜர்களையும் தரிசிப்போம்.//

ஏழு தியாகராஜர்களையும் தரிசிக்க தோடர்கிறேன்.

S.Muruganandam said...

//திருபனந்தாள் மடத்து மடாதிபதி அவர்களுடன் சபதவிடங்க தலங்களை ஒரே நாளில் பார்க்கும் பாக்கியம் பெற்றோம்.
பாத தரிசனம் ஒரு முறை பார்த்தோம். மாயவரத்தில் இருந்த போது இவை எல்லாம் கிட்டியது.//


ஒம் நமசிவாய. அவன் அருளால் அனைத்தும் சித்திக்கின்றது. மிக்க நன்றி அம்மா.

S.Muruganandam said...

//இந்த வரலாறை நீங்கள் சொன்ன பின் பொன்னியின் செல்வனை மீண்டும் படிக்க ஆவல் வந்து விட்டது.//

அவசியம் சமயம் கிட்டினால் படியுங்கள். பல அரிய செய்திகளை அப்புதினத்தில் தந்துள்ளார் திரு.கல்கி அவர்கள்.

S.Muruganandam said...

//ஏழு தியாகராஜர்களையும் தரிசிக்க தொடர்கிறேன்.//

மிக்க நன்றி உடன் வாருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தொடக்கம்.

தரிசனம் செய்ய நானும் தொடர்கிறேன். நன்றி.

S.Muruganandam said...

தொடர்ந்து வாருங்கள் வெங்கட் ஐயா.